அன்பின் ஆலாபனை – 2 (3)

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்து, சில மாதங்களுக்கு முன்பு நடந்தது போலவே அவசர அவசரமாக உடை மாற்றி, இப்போது முழு அலங்காரத்துடன் பெண் பார்க்கும் படலத்திற்காக போய் நின்றாள் சஹானா. அம்மா, அப்பா, மகன் மற்றும் தங்கை, தங்கை கணவர், அவர்களின் குழந்தை சகிதம் குடும்பமாக வந்திருந்தார்கள்.

அங்கிருந்த அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி கொடுத்து விட்டு கடைசியாக, அவன் முன் தேநீரை நீட்டினாள். அவன் இதழ் பிரியா புன்னகையுடன் அவளைப் பார்த்து விட்டு தேநீரை எடுத்துக் கொள்ள, அவளுக்கு தேஜா வு (Deja vu) போலிருந்தது. முன்பே நடந்த நிகழ்வை நினைவுப்படுத்தியது, இன்றைய நிகழ்வு. மெல்ல நகர்ந்து அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தாள் சஹானா. 

இன்றைக்கு பட்டு புடவையில், மிதமான அலங்காரத்துடன், பாந்தமாக இருந்தாள். ஆனால், முகத்தில் பயண களைப்பும், சோர்வும் அப்பட்டமாக தெரிந்தது. அதை ஒப்பனை செய்து மறைக்க முயன்றிருந்தாள் அவள். ஆனாலும், கண்களில் சோர்வு தெரியத்தான் செய்தது. 

இரண்டு குடும்ப பெரியவர்களும் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். புனிதா மகளுக்கு கண் காட்ட, உள்ளே எழுந்துப் போனாள் சஹானா. 

பயணங்கள் எப்போதும் அவளை புதுப்பிக்கும் ஒன்று. இப்போதும் புத்துணர்ச்சியுடன்தான் திரும்பியிருந்தாள். ஆனால், அவனைப் பார்த்ததும் ஏனோ படபடத்தது மனம். வீணாக எந்த கற்பனைகளையும் வளர்த்துக் கொள்ளவில்லை அவள். சாவி கொடுத்த பொம்மை போல பெற்றோர் சொன்னதை அப்படியே செய்தாள் சஹானா. 

அவள் ஏற்கனவே அந்த மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருக்க, மீண்டும் அதே கேள்வி அவசியமற்றது என்று அவளின் பெற்றோர் நினைக்கவில்லை. மகளை தனியாக அழைத்து, “என்ன சஹா? உனக்கு இப்போ கல்யாணம் ஓகேவா? இந்த மாப்பிள்ளை ஓகேவா?” என்று கேட்டார்கள். 

“எப்படிப்பா?” என்று ஆரம்பித்த சஹானா, “அவர்.. என்ன பண்றாங்க?” என்று கேள்வியை முடித்தாள். 

மகளுக்கு நெருக்கமாக நகர்ந்து அமர்ந்தார் புனிதா. “பையன் பேரு சத்யமூர்த்தி. ஊரு பொள்ளாச்சி. பரம்பரையா தேங்காய் சம்மந்தப்பட்ட தொழில் பண்றாங்க. தேங்காய் எண்ணெய், இளநீர், தேங்காய், தேங்காய் நார், காயர் பித், கோகோ பித்னு தென்னை சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் உள்ளூர், வெளியூர், வெளிநாடு ஏற்றுமதின்னு நிறைய பிசினஸ் இருக்கு சஹா.” முரளிதரன் சொல்ல மௌனமாக கேட்டுக் கொண்டாள்.

“உன்னை விரும்பி கேட்டு வந்திருக்கார். ஒரு மாசமா என்கிட்ட பேசிட்டு இருந்தார். நானும் அவரைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். நல்ல பையன். நல்ல குடும்பம். எந்தக் குறையும் இல்ல. பத்து நாளைக்கு முன்னாடிதான் அவங்க வீட்டு பெரியவங்க பேசினாங்க. இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றதா சொன்னாங்க” அப்பா சொல்லச் சொல்ல, அன்று அம்மா, அவளின் பயணத்திற்கு தடைப் போட்டதின் காரணம் இப்போது புரிந்தது அவளுக்கு. 

“நாங்க இன்னும் எதுவும் சொல்லல சஹா. நீ யோசிச்சு சொல்லு. உனக்கு அவரைப் பிடிச்சுருக்கா?” புனிதா கேட்க, சிறிது நேர யோசனைக்குப் பின், ஆமென்று தலையசைத்தாள் சஹானா. அதன் பின்னர் எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்து முடிந்திருந்தது. அவளை அழைத்து நடுவில் அமர வைத்தார்கள். அவன் தங்கை அவளுக்கு பூ வைத்து விட, தாய் கழுத்தில் ஆரம் ஒன்றை போட்டு விட்டார். 

ஒரே நாளில், சில மணி நேரத்திலேயே அவளின் வாழ்வு முடிவு செய்யப்பட்டிருக்க ஒருவித படபடப்புடன் அமர்ந்திருந்த சஹானாவிற்கு மனம் வண்ணங்கள் துடைக்கப்பட்ட வானம் போல எண்ணங்கள் துடைக்கப்பட்டு நிர்மலமாகி இருந்தது. அவர்கள் விடைப் பெற்று சென்று சில மணி நேரங்கள் கழிந்த பின்னரே சுய உணர்வு பெற்றாள் அவள். 

“ஏன் மா, பொண்ணு பார்க்க வந்தா தனியா பேச விடுவாங்கதானே?” சஹானா அப்பாவியாக கேட்க, சிரித்தார் புனிதா. 

“ஆமா சஹா. தனியா பேச விடுவாங்கதான். ஏன் கேட்கற?” என்று அவர் கேட்க, “அப்போ எங்களை ஏன் தனியா பேச விடல?” என்று அவள் கவலையுடன் கேட்க, “இந்தா மாப்பிள்ளை நம்பர் அவர்கிட்ட இப்போ உட்கார்ந்து மணிக் கணக்கா பேசு. யாரும் உன்னை கேள்வி கேட்கப் போறதில்ல” என்றார் புனிதா.   

சத்யமூர்த்தி அவளிடம் தனியாக பேச விருப்பம் காட்டியிருந்தால், அவன் கேட்டிருந்தால் பெரியவர்கள் பேச அனுமதித்திருப்பார்கள் என்பது நிச்சயம். அவனோ, அவளை அடிக்கடி கண்களால் தேடி தொட்டான். அவ்வளவுதான். அதுவும் பெண் பார்த்து பேசி முடித்து, பூ வைத்து, கிட்டத்தட்ட நிச்சயித்து செல்லும் போதும் கூட மெலிதான சிரிப்பை அவளைப் பார்த்து சிந்தி விடை பெற்றான். அதற்கு மேல் ஒன்றும் கிடையாது. 

அதன் பின் வந்த நாள்களில் சஹானா, அவனோடு பேசுவதா, வேண்டாமா என்று விரல்களை நீட்டி இங்கி பிங்கி பாங்கி போட்டுக் கொண்டிருந்தாள்.

மூன்றாம் நாள் அவன் வீட்டினர் திருமணத் தேதியை குறித்து அனுப்பி விட, அவளின் பெற்றோரும் தங்களுக்குத் தோதான ஒரு நாளை தேர்ந்தெடுத்துப் பதில் அனுப்பியிருந்தனர். நாற்பது நாள் கழித்துத் திருமணத் தேதி குறிக்கப்பட்டிருந்தது.

“இவ்வளவு சீக்கிரமா?” என்று அலறிய சஹானா, உடனே அவனை அழைக்கவும் செய்திருந்தாள்.

“ஹலோ” என்றான் எடுத்ததும். கரகரத்த கம்பீரமான குரல். அவள் பதில் பேசாமல் அப்படியே நிற்க, “சஹானா” என்றான் இப்போது.

“ஹா.. ஹாய்” என்றாள் சஹானா பதட்டத்தில் திக்கியபடி.

“ஹாய், சொல்லுங்க” என்றவன், தொண்டையைச் செருமி, “சொல்லு” என்றான் அழுத்தமாக.

“அது.. நல்லா இருக்கீங்களா?” அவளைப் பொறுத்தவரை இது பெற்றோர் பார்த்து, முடிவெடுத்து, அவளுக்குச் செய்து வைக்கும் திருமணம். அவன் பெயர், ஊர், தொழில் தவிர அவளுக்கு, அவனைப் பற்றி வேறொன்றும் தெரியாது எனும் போது, அவனோடு பேச சிறு தயக்கம் எட்டிப் பார்க்கவே செய்தது.

“நல்லா இருக்கேன். நீ?” அவள் கேள்விக்கு அவன் பதில் சொல்ல,

“ம்ம். நானும் நல்லா இருக்கேன்” என்றாள் சஹானா.

“வீட்ல?”

“வீட்ல? ஓ, அம்மா, அப்பாவா? நல்லாருக்காங்க. உங்க வீட்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?”

“ம்ம், நல்லாருக்காங்க.”

“ஓகே. அப்புறம், வந்து..” என்று இழுத்தவளுக்கு, அவளையும் அறியாமல் சிரிப்பு வந்தது. மெலிதாகச் சிரித்துக் கொண்டே, “எனக்கு உங்க கூடப் பேசணும்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் சஹானா.

“இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?” என்ற அவனின் பதில் கேள்வியில் சட்டென அமைதியாகி விட்டாள் அவள். அவன் கேள்வி புரிய, சிரிப்பும் வந்தது.

“இல்ல…”

“என்ன கேட்கணும். கேளு, சஹானா”

“என்னை.. என்னை உங்களுக்குப் பிடிக்குமா?” கேள்வியைக் கேட்டப் பின்னரே, அதைக் கேட்டிருக்க வேண்டாம் என்று நினைத்தாள் சஹானா. அவன் பதிலும் அதையே உறுதிப்படுத்தியது.

“உங்கப்பா, உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என்று தன் பதிலையும், கேள்வியாகவே தந்தான் அவன்.

“சொன்னாங்க. ஆனா, நீங்க சொன்னா..”

“பிடிச்சுதான் கல்யாணம் பண்ணுவாங்க சஹானா” என்று அவன் சொல்ல, இதற்கு மேல் இவனிடம் என்ன கேட்க? எப்படிக் கேட்க? என்று நொந்து கொண்டாள் சஹானா.

“கல்யாண தேதி உனக்கு ஓகேதானே?”

“உனக்கு ப்ரெண்ட்ஸிக்குக் கொடுக்கத் தனியா பத்திரிக்கை அடிக்கணுமா?”

“உனக்கு எத்தனை பத்திரிக்கை வேணும்?” அடுத்தடுத்து அவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுத்த சஹானாவிற்கு, அவள் கேட்க நினைத்திருந்த கேள்விகள் அனைத்தும் மறந்து போனது.

“சரி, வைக்கவா?” என்று அவன் கேட்க, “ம்ம். ஓகே” என்று சொல்லியிருந்தாள் அவள்.

“பை” என்று வைத்தும் விட்டிருந்தான் சத்யமூர்த்தி. அப்படியே அலைபேசியைப் பார்த்தபடி அமர்ந்து விட்டாள் சஹானா. ஆனாலும், அத்தனை எளிதாக முயற்சியைக் கை விடவில்லை அவள். இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவளாகவே, அவனுக்கு அழைத்தாள். சத்யமூர்த்தியோ அழைப்பை ஏற்கவில்லை. இரண்டு முறை முழுதாக அழைப்பு சென்று நிற்க, மூன்றாம் முறை அழைப்புத் துண்டிக்கப்பட்டது. இறுதியில் அவனது குறுஞ்செய்தியும் வந்து விழுந்தது.

“பிஸி” (BUSY) என்ற ஒற்றை வார்த்தை, ஆங்கிலக் கொட்டை எழுத்துக்களில் செய்தியாக வர, அதை அப்படியே வெறித்துப் பார்த்தாள் சஹானா. இதற்கு அர்த்தம் தெரிந்துதான் இவன் அனுப்பினானா என்று யோசித்தாள் அவள். ஆங்கிலக் கேப்பிடல் லெட்டர்களை உபயோகப்படுத்தி ஒருவர் செய்தி அனுப்பினால், அதற்கு அர்த்தம் அவர் கத்துகிறார். கோபத்தில் திட்டுகிறார் என்பதை அறிந்தவளுக்கு அவனது செய்தியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அலைபேசியைக் கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக யோசனையுடன் நடந்து கொண்டேயிருந்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில், “ச்சே, அவர் இப்படியெல்லாம் என்னை மாதிரி யோசித்திருக்க மாட்டார். நார்மலாதான் அனுப்பி இருப்பார்” என்ற முடிவுக்கு வந்திருந்தாள் சஹானா. அவனாக அழைப்பான் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். ஆனால், நள்ளிரவு தாண்டியும் கூட அவளை அழைக்கவில்லை சத்யமூர்த்தி.

error: Content is protected !!
Scroll to Top