அன்பின் ஆலாபனை – 2 (2)

அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டாள் சஹானா. வெட்கம், தர்ம சங்கடம், கோபம், எரிச்சல் என கலவையான உணர்வுகளுடன் அமர்ந்திருந்தாள் அவள். ஒருவித படபடப்புடன் புடைவையை உருவி எறிந்து விட்டு, சாதாரண உடைக்கு மாறினாள். ஆனாலும், மனம் அடங்க மறுத்தது. தான் பிடித்திருக்கிறது என்று சொன்னதும், அவன் சிரித்ததுமே நினைவில் வந்தது. மனதை திசைத் திருப்ப, கேமராவை கையில் எடுத்து, மாங்குளத்தில் எடுத்தப் புகைப்படங்களை பார்க்கத் தொடங்கினாள். 

அப்படியே கேமராவுடன் எழுந்துப் போய், கூடத்தில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் இணைத்து, அதில் வீடியோவையும், புகைப்படங்களையும் ஓட விட்டாள். 

மெல்லிய ஆறு சலசலத்து ஓட, அவள் மனம் அதில் லயிக்கத் தொடங்கியது. தேயிலை தோட்டங்கள், காஃபி செடிகள், கொக்கோ (coco) மரங்கள், ஏலக்காய் செடிகள் திரையை மட்டுமின்றி அவளின் மனத்தையும் பசுமையாய் நிறைத்தது. 

அந்த ஊரின் ஒதுக்குப் புறமாக, காட்டின் நடுவே அமைந்திருந்த அந்த பிரம்மாண்ட அருவியில் அவர்களைத் தவிர யாருமே இல்லை. அவர்களை அங்கு அழைத்துப் போன, ஜீப் டிரைவரும் அங்கிருந்த சின்னஞ்சிறிய தேநீர் கடையில் ஓய்வாக ஒதுங்கி அமர்ந்து விட, அருவியில் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்கள் தோழிகள். அந்த பெயரில்லா அருவி நான்கடுக்கில் தாவி ஓடி வந்து அவர்களைக் குளிர்விர்த்தது. 

அவர்களுக்கு மட்டுமேயான தனிப்பட்ட, பிரைவேட் பால்ஸ் (Private falls) என்று சொல்லி விடலாம் அதை. அங்கு அவர்களைத் தவிர, சிறு மீன்களும், மரங்களில் பறவைகளும் மட்டுமே இருந்தன. 

“வாவ், செம்ம அழகு. இல்லையா சஹா? சும்மாவா சொன்னாங்க, கேரளாவை கடவுளின் சொந்த தேசம்னு” என்று சொல்லிக் கொண்டே மகளின் அருகில் அமர்ந்தார் புனிதா. வண்டிப்பெரியார், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும், அங்கு கணிசமான தமிழ் குடும்பங்களே இருந்தன. 

தேயிலை, காஃபி தோட்டங்களில் நிறைய தமிழ் குடும்பங்களைப் பார்க்க முடியும். புனிதா, முரளிதரனின் குடும்பமும் அதில் ஒன்று. பல தலைமுறைகளாக அங்குதான் இருக்கிறார்கள் அவர்கள்.

“கொள்ளை அழகு தெரியுமா மா அந்த ஊர்? சான்ஸே இல்ல. என் கூட நீங்களும் வந்திருக்கலாம் மா.” என்று ஆதங்கத்துடன் சொன்ன சஹானா, “நெக்ஸ்ட் டைம் நாம ஃபேமிலியா போவோம். என்னம்மா?” என்றுக் கேட்க, அதற்கு வாய்ப்பு குறைவு, என்பதை அறிந்த புனிதா, மகளுக்காக, “கண்டிப்பா போவோம் சஹா” என்றார். 

அவருக்கு மருத்துவமனையில் தொடர்ச்சியாக விடுமுறை கிடைப்பது குதிரை கொம்பு. கணவர் அத்தனை எளிதில் மருந்தகத்தை மூடி விட மாட்டார். அவர்கள் ஊர் சுற்றுலா தளம் என்பதால், சுற்றுலா பயணிகளின் அவசர தேவைக்காக எப்போதும் திறந்தே வைத்திருப்பார் அவர். இரவு பத்து, பதினொரு மணிக்கு மேல்தான் கடையை அடைப்பார் முரளிதரன்.

“இப்படித்தான் வர்றேன்னு சொல்லுவீங்க. ஆனா, வர மாட்டீங்க” என்று சலித்துக் கொண்டாள் சஹானா. 

“ஆமா, இது ரோஹிணிதானே? அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல? அவ எப்படி உங்க கூட வந்தா?” பேச்சை மாற்றும் பொருட்டு புனிதா ஆச்சரியத்துடன் கேட்க,

“ம்மா, நான் போகும் போதே அவளும் எங்க கூட வர்றான்னு சொன்னேன் தானே? இப்போ தெரியாத மாதிரி கேட்கறீங்க?” மகள் முறைக்க,

“இல்ல சஹா. அப்போ அவளுக்கு கல்யாணமானது ஞாபகம் வரல. சரி நீ சொல்லு. அவளை எப்படி அவங்க வீட்ல உங்க கூட வர விட்டாங்க?”

அந்தக் கேள்விக்கு கிளுக்கி சிரித்தாள் சஹானா. 

“வேற எப்படி? அழுது, அடம் பிடிச்சு வந்தா போல மா. அவ ஹஸ்பன்ட் வேற கூட வர்றேன்னு சொல்லியிருக்கார். நாங்கதான், அவங்க ஹனிமூன் எங்க கூட வர வேண்டாம்னு சொல்லிட்டோம்” என்று அவள் வாய் மூடி சிரிக்க, “பேச்சைப் பாரு. சேட்டை உங்களுக்கு” என்றார் புனிதா சிரிப்புடன். அம்மாவும், மகளும் அப்படியே இயல்பான பேச்சில் சமாதானமாகி இருந்தனர். 

சஹானாவின் நாட்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தது. அப்பாவின் மருந்தகம், வீடு, என வேலை இழுத்துக் கொள்ள, மற்ற நேரங்களில் தோழிகளுடன் அரட்டை, அடுத்த பயணத்திற்கு இடம் தேர்வு செய்வது என அவளின் நாள்கள் விரைந்தோடிக் கொண்டிருந்தது. 

அன்று சந்தித்த அவனைப் பற்றி நெருங்கிய தோழியான ரோஹிணியிடம் சொல்லியிருந்தாள் அவள். அவள் நடந்ததைச் சொல்ல, ரோஹிணி கிண்டல் செய்ய, என சிரித்தே அந்நிகழ்வை சாதாரணமாக்கி இருந்தார்கள். அதற்கு பின்னும் கூட ஓரிரு முறை அவனை அல்ல, அந்த நிகழ்வை நினைத்து, தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியும், தன் மேலயே கோபப்பட்டும், சிரித்தும் கடந்திருந்தாள் சஹானா. 

அப்படியே முழுதாக இரண்டு மாதங்கள் முடிந்திருக்க, பயணத்திற்கு ஏங்கியது அவள் மனம். உடனேயே தோழிகளை அழைத்து விட்டாள் சஹானா. அலைபேசியில் அனைவரும் இணைந்து ஆளுக்கொரு ஊரைச் சொல்ல, இறுதியில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேகல் எனும் ஊருக்கு செல்வது என முடிவாகியிருந்தது. 

கடலும், காயலும் (உப்பங்கழி Backwaters), பழமைவாய்ந்த கோட்டையும் கொண்ட ஊரில் மூன்று நாட்களை கழிப்பது என முடிவு செய்திருந்தனர். 

இடுக்கியில் இருந்து பயண தூரமே பதினொரு மணி நேரம் என்று காட்ட, சற்றே யோசித்தனர் அவர்களின் பெற்றோர். உடனேயே பிள்ளைகளின் பயணத்தை ஒருங்கிணைப்பவரிடம் பேசினார்கள். 20 பேர் கொண்ட குழுவில் சஹானா மற்றும் அவளின் மூன்று தோழிகளும் இணைவதாக இருக்க, பிள்ளைகளின் தங்குமிடம், பாதுகாப்பு என அனைத்தையும் நன்றாக விசாரித்து திருப்தியான பின்னரே, அனுமதி வழங்கினார்கள். 

சஹானா சந்தோஷமாக ஆர்ப்பரித்து, “அடுத்த ஜென்மத்திலயும் எனக்கு நீங்கதான் அம்மா, அப்பாவா வரணும்” என்று கத்தி விட்டுப் பெட்டி அடுக்கப் போனாள். அவளின் பயண நாளுக்கு பத்து நாள்களுக்கு முன்பிருந்தே அவளின் பெற்றோர் அடிக்கடி தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொள்வதைப் பார்த்தாள் சஹானா. அவர்களாக எதுவும் சொல்லாமல், அவளும் என்னவென்று கேட்க விரும்பவில்லை. 

ஆனால், அவர்கள் பேசிக் கொள்ளும் விஷயம் அவளைப் பற்றி என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. அவளின் பயணத்திற்கு இரண்டு நாள்களே இருக்கும் போது, “ஏன் சஹா, இந்த ட்ரிப் போயே ஆகணுமா?” என்று கேட்டுத் தடைப் போட முயன்றார் புனிதா. 

“என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா” என்று அவள் புலம்பலாக கேட்க, சிரித்து விட்டார் புனிதா. 

“இல்ல, பேகல் ரொம்ப தூரமா இருக்கே. அதுனால..”

“ம்மா, கோவா என்ன கேரளாவுக்கு பக்கத்து ஊரா? அங்க எல்லாம் அனுப்பி வச்சீங்கதானே? இப்போ கேரளாக்குள்ள இருக்க பேகலுக்கு போக, ரொம்ப தூரம் சொல்றீங்க? என்னம்மா பிரச்சனை உங்களுக்கு” மகள் முறுக்கிக் கொள்ள, “இல்ல சஹா. அது வந்து.. ” என்று அவர் ஆரம்பிக்கும் போதே இடைப் புகுந்தார் முரளிதரன். மனைவியை ஒரு முறைப் பார்த்து விட்டு மகளிடம், “நீ போய்ட்டு வா சஹா. கவனம். பத்திரம், என்ன?” என்றும் சேர்த்துச் சொல்ல, “உங்க தங்க மக, ஒரு கிராம் எடை கூட குறையாம திரும்பி பத்திரமா வருவேன் ப்பா” என்று சிரியாமல் சொன்னாள் சஹானா. சட்டென சிரித்தனர் பெற்றோர். 

அவளின் திட்டமிட்ட பயண நாளும் வர, தோழிகள் ஒவ்வொருவராக வெவ்வேறு ஊர்களில் இருந்து இணைந்துக் கொள்ள, அனைவரும் ஒன்றாக பேகல் நோக்கி பயணித்தனர். இம்முறை ரோஹிணி வரவில்லை. ஆக, தோழிகள் நால்வராக சென்றார்கள். 

மூன்று நாள்கள் பல சுற்றுலாத் தளங்களை பார்ப்பதும், கடலில் குளிப்பதும் என இனிமையாக கழிய, மூன்றாம் நாள் இரவு அவரவர் ஊருக்கு பேருந்து ஏறி விட்டார்கள் தோழிகள். 

சஹானா மறுநாள் அதிகாலையில் இடுக்கியை அடைந்து, வண்டிப் பெரியாரில் இருக்க வேண்டும். ஆனால், கடந்த முறை போலவே இப்போதும் தாமதமாகத்தான் வீடு திரும்பினாள். 

இத்தனைக்கும் முன்தின இரவே முரளிதரன் அவளுக்கு அழைத்து அவளின் பயணத்தை உறுதி செய்துக் கொண்டார்‌. முடிந்த வரை விரைவாக வீடு வர வலியுறுத்தி இருந்தார். ஆனால், நள்ளிரவில் அவளின் பேருந்து ப்ரேக் டவுனாகி விட, தனியார் ஸ்லீப்பர் பேருந்து என்பதால், மாற்று பேருந்திற்காக அவளும், அவளோடு பயணித்த பயணிகளும் காத்திருந்து, வேறு பேருந்து வந்தப் பின்பு மீண்டும் பயணத்தை தொடங்கும் போதே அதிகாலையாகி இருந்தது. 

அப்பாவை அழைத்து தகவல் சொல்லி விட்டாள் அவள். இது போன்ற பயணங்களில் எதிர்பாரா தருணங்கள் இயல்புதான் என அவருக்கும் தெரிந்தேயிருந்தது. ஆனாலும், அவர் குரலில் சிறிய அதிருப்தியும், கோபமும் இருக்க, சஹானா நேரில் சென்று நிலைமையை விளக்கி விடலாம் என்று நினைத்தபடி வீடு சென்றாள். பயண தொலைவு குறைய குறைய, அப்பாவின் அழைப்பு அவளுக்கு அதிகமாகி கொண்டேயிருந்தது. அவள் பேருந்தில் இருந்து இறங்க, அங்கே அவளுக்காக காத்திருந்தார் முரளிதரன். அவரை ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள் சஹானா.

error: Content is protected !!
Scroll to Top