அன்பின் ஆலாபனை – 2 (1)

மகளின் கோப முகத்தைப் பார்த்துச் சிரிப்பை நிறுத்திய புனிதா, “சாரி, சஹா” என்றார் கெஞ்சலாக. அவள் அப்படியே நிற்க, மகளின் கைப் பிடித்து அவர் அருகில் இழுக்க, அந்நேரம் மீண்டும், “புனிதா” என்று அழைத்தார் முரளிதரன். மகளைப் பார்த்துக் கொண்டே அவர் வெளியில் செல்ல, அடுப்படி மேடையில் சாய்ந்து நின்றாள் சஹானா. அவளுக்குத் தன் செய்கையே முழு முட்டாள்தனமாக இப்பொழுது தோன்றியது.

அம்மாவை நன்கு அறிந்தவள் அவள். புனிதா பல வருடங்களாகச் செவிலியாகப் பணியாற்றுகிறார். அதுவும், அரசு மருத்துவமனையில். அங்கே தினமும் பல வகையான மனிதர்களை, நோயாளிகளை, நோய்களை அவர் சந்திக்க நேரிடும். மக்களின் கேள்விகளும், செய்கைகளும் பெரும்பாலும் அவரை எரிச்சலும், கோபமும் அடையச் செய்யும். அப்போதெல்லாம் அவருக்குப் பொறுமை கிலோ கணக்கில் தேவைப்படும்.

கோபம் கண்ணை மறைக்கும் நேரங்களில், நக்கலும், நையாண்டியுமாக (Sarcasm) பேசியே மனிதர்களைச் சமாளிப்பார் அவர். போகப் போக அதுவே அவரின் இயல்பாகவும் மாறியிருந்தது. வீட்டிலும் கோபம் எல்லை மீறும் தருணங்களில், அவரின் நக்கலும் நையாண்டியும் அவரையும் மீறி எட்டிப் பார்த்து விடும்.

இன்றைக்கும் மகளிடம் அதையேதான் செய்தார் அவர். மகள் மேல் மிகுந்த நம்பிக்கை இருந்த காரணத்தினால்தான் அவளை, அவள் விருப்பத்தின்படி, தோழிகளுடன் பயணம் செய்ய அவர் அனுமதிப்பது. ஆனாலும், ஒரு தாயாக அவள் பத்திரமாக வீடு திரும்பும் வரை அவரின் ஆழ்மனம் பதறிக் கொண்டே தானிருக்கும். இத்தனைக்கும் மகளின் தோழிகளை, அவர்களின் குடும்பத்தைத் தனிப்பட்ட முறையில் நன்றாகவே அறிவார் அவர். அதனால்தான் அவளைத் துணிந்து தூர பயணங்களுக்கு அனுப்புவதும் கூட. சஹானாவும் பொறுப்பு உணர்ந்த மகளே. ஒரு நாளில் கிட்டத்தட்ட நான்கு முறையாவது பெற்றோரை அழைத்து விடுவாள் அவள்.

அன்றைக்கு எங்குப் போகிறோம், எந்த நேரத்தில் எங்கு இருக்கிறோம் என்று எல்லாத் தகவலையும் பகிர்ந்து விடுவாள். இரவில் அழைக்கையில் அன்றைய தினம் பார்த்து, ரசித்த இடங்களையும், மனிதர்களைப் பற்றியும் விலாவரியாக விளக்கியும் விடுவாள்.

அப்படி இருக்கையில் இந்த முறை காலையில் வருவேன் என்று சொன்ன மகள், மிகத் தாமதமாக மாலை வந்து நிற்க, மகளுக்காக அவ்வளவு நேரம் காத்திருந்த புனிதா, கோபத்தில் அப்படிப் பேசியிருந்தார். என்னதான் கணவர் அவரிடம், மகள் வர மாலையாகி விடும் என்று சொல்லி இருந்தாலும் கூட, புனிதா வேலை விட்டு வீடு வந்ததும் மகளைத்தான் முதலில் தேடினார். அவள் இன்னும் வீடு வந்திருக்கவில்லை என்றதும் கோபம் வந்தது அவருக்கு.

அவளோ, வந்ததும் வராததுமாக, “யார் வந்திருப்பது?” என்று கேட்க, “உன்னைப் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள்” என்று நக்கலாகச் சொல்லி விட்டார் புனிதா. இப்போது மகளின் முகத்தைப் பார்க்கையில் மிகுந்த வருத்தமாகிப் போனது அவருக்கு. மகளைச் சமாதானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனே கணவரிடம் போனார் அவர்.

“அப்ப, போய்ட்டு வர்றோம் மா. ரொம்பத் தேங்க்ஸ்” வந்தவர்கள் சொல்லிக் கொண்டு கிளம்பத் தயாராக, முரளிதரன் இப்போது மகளை அழைத்தார்.

“சஹானா, இங்க வாம்மா. அப்பாவோட போன் அங்க இருக்கும் பாரு. எடுத்துட்டு வா” என்று அவர் உரக்கச் சொல்ல, அவரின் அலைபேசியோடு வெளியில் வந்தாள் சஹானா. ஊதா நிற மல்மல் புடவையில் பளிச்சென்று இருந்தாள். ஒற்றையாகப் போடப்பட்டிருந்த முந்தானை வழிந்து அவள் கரத்தை தழுவி கொண்டிருந்தது. தோள் வரையே இருந்த தலை முடியை மொத்தமாகக் கிளிப்பில் அடைத்திருந்தாள். சில கற்றைகள் பிரிந்து அவளின் தோளில் உரசிக் கொண்டிருந்தன. காதில் நீண்ட சரமாகத் தோடும், வெற்றுக் கழுத்துமாக நின்றிருந்தவளை, இப்போது நிதானமாகப் பார்த்தான் அவன். ஆர்ப்பட்டமில்லாத நிறைந்த அழகு, அவன் கண்களை நிறைத்தது. இம்முறை சஹானா யாரையும் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“சரிங்க தம்பி. என் நம்பர் உங்ககிட்ட இருக்கில்லையா? எதுவும் சந்தேகம்னா கால் பண்ணுங்க. அப்படியே மேடம் நம்பரும் எடுத்துக்கோங்க. ஒருவேளை நான் போன் எடுக்கலன்னா, அவங்களுக்குக் கூப்பிடுங்க.” என்றவர், மனைவியின் எண்ணை அவர்களுக்குக் கொடுத்து விட்டு, “உங்க நம்பர் கொடுங்க.” என்று அவர்களின் தொடர்பு எண்ணையும் வாங்கி அலைபேசியில் சேமித்துக் கொண்டார். சஹானா அங்குக் காட்சிப் பொருளாக நிற்கப் பிடிக்காமல் அப்படியே நழுவி வீட்டிற்குள் சென்றிருந்தாள்.

பத்து நிமிடங்கள் கழித்து வீட்டிற்குள் வந்த முரளிதரன், நேராக மகளிடம்தான் வந்தார்.

“சாரி சஹா” என்றார் மகளின் கோபம் புரிந்து.

அவள்தான் அப்பாவிடம் கண்ணால் கேள்விக் கேட்டாளே. அவரும், “ஆம்” என்று தலையசைத்து அவளுக்குப் பதில் கொடுத்திருந்தார். பொது இடங்களில், உறவினர் வீடுகளில், விருந்தினர் வரும் போது அவர்கள் இப்படிக் கண்ணால் பேசிக் கொள்வது அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் ஒன்று. பெற்றோர் இருவருமே இந்த விஷயத்தில் அவளை நன்றாகப் புரிந்து கொள்வார்கள். ஏன், அவர்களுமே அப்படித்தான் பேசிக் கொள்வார்கள். அதைப் பார்த்துதான் அவளும் கற்றுக் கொண்டது.

இன்றும் சஹானா அதையே செய்ய, மிக மோசமான சொதப்பலாகி விட்டது அது.

“நான் அவர்கிட்ட பேசிட்டேன் சஹா. அந்தத் தம்பி தப்பா எதுவும் எடுத்துக்கல. நீயும் இதைப் பெருசு பண்ணாம. அப்படியே விட்டுடு. இந்த மாதிரி நடக்கறது…” அவரை இடைமறித்து, “அப்பா” என்றாள் சினத்துடன் சஹானா.

“சரி, சஹா. இப்படி எங்கேயும் நடக்காதுதான். அம்மா பண்ணது தப்புத்தான். சாரி. அப்பா பண்ணது அதை விடப் பெரிய தப்பு. நீ கண்ணு காட்டும் போது, நான் என்னனு கேட்டு இருக்கணும். டீ பத்தி கேட்கறன்னு நினைச்சு…” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, சஹானா சேலையை இழுத்து இடுப்பில் சொருகி விட்டு, இடுப்பில் கை வைத்து பல்லைக் கடிக்க, அவளை அருகில் இழுத்து, “சாரி சஹா” என்று கொஞ்சி கெஞ்சத் தொடங்கியிருந்தார் புனிதா.

அவள் அப்படியொன்றும் எளிதாக இறங்கி வரவில்லை. அவளுக்கிருந்த பயண அலுப்பையும் பொருட்படுத்தாமல் ஆடித் தீர்த்து விட்டே ஓய்ந்தாள். பெற்றோர் இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டுக் கொண்டேயிருந்தனர்.

“ஓகே. அப்போ நெக்ஸ்ட் மன்த் நான் ட்ரிப் போக இப்பவே பெர்மிஷன் கொடுங்க. அப்போதான் உங்க ரெண்டு பேரையும் மன்னிப்பேன்” என்று அவள் பேரம் பேச, புனிதா மகளின் தலையில் ஓங்கிக் கொட்டினார்.

“ம்மா, வலிக்குது” என்று அவள் கத்த, “சரி, சஹா. நீ கேட்டு, அப்பா போகக் கூடாது சொல்லி இருக்கேனா? தாராளமா போய்ட்டு வா” என்றார் முரளிதரன்.

“தேங்க்யூ ப்பா” என்று கத்தி விட்டு அவளின் அறைக்குள் ஓடினாள் அவள்.

சஹானா மாலை வீட்டுக்குள் வரும் போது முகுதுக் காட்டி சோஃபாவில் அமர்ந்து, அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தவர்களின் முகங்களைப் பார்த்திருக்கவில்லை. ஆனால், அவள் பேசியதை, அதற்கு அவளின் அம்மா பதில் கொடுத்ததை அவன் கேட்டுக் கொண்டு தானிருந்தான். சஹானாவின் அம்மாவின் பேச்சையும், அதில் ஒலித்த நக்கல் தொனியையும் கண்டு கொண்டவன் தனக்குள் சிரித்தபடிதான் அமர்ந்திருந்தான். அவனோடு வந்திருந்த உறவினருக்கு உதவி வேண்டியே முரளிதரனை சந்திக்க வந்திருந்தார்கள். மருந்தகம் ஒன்றை திறக்க விரும்பினார் அவனின் உறவினர். அதுவும் சஹானாவின் ஊரான வண்டிப் பெரியாரில். மிகுந்த தயக்கத்துடன் முரளிதரனிடம் அவர்கள் பேச, தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாக வாக்குறுதி தந்திருந்தார் அவர்.

இப்போது அவர்கள் நேரில் பார்த்து பேச வந்திருக்க, இப்படியொரு நிகழ்வை அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அம்மாவின் பேச்சை ஒரே ஒரு சதவீதம் அவள் நம்பினாலும், தன்னை அந்தக் கோணத்தில் பார்க்கக் கூடாது என்றே அவன் நிமிராமல் அமர்ந்திருந்தது. ஆனாலும், அவனைப் பிடித்திருக்கிறது என்று பகிரங்கமாகச் சொல்லி, அவனையே சிரிக்க வைத்து விட்டாள் சஹானா. வெட்கமும், சங்கடமுமாக அவள் மன்னிப்பு கேட்டது அவனுக்குத்தான் ஒரு மாதிரியாகிப் போனது. அப்பாவின் அருகில் நின்றவளை நன்றாகப் பார்த்து விட்டே சென்றான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top