அன்பின் ஆலாபனை – 18 (3)

“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே வருவதை வியப்புடன் கவனித்தாள் சஹானா. கணவனும் அப்படித்தானே என்று யோசிக்க, சிரிப்பு வந்தது. சத்யமூர்த்தி மனைவியிடம் அன்பாக இருந்தாலும், மகள் மேலான அவன் பாசம் அலாதிதானே.

அதை நினைத்தபடியே அவள் காரில் சாய்ந்து கண்களை மூட, சில நொடிகளில் இயல்பாக வேகத்தைக் குறைத்தான் சத்யமூர்த்தி.

அவர்கள் வீடு சென்றதும், “வாம்மா” என்றார் மாமனார். சுப்புலட்சுமி அவளிடம் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டார்.

“நான் இவளை குளிக்க வைக்கறேன். நீங்க ரெண்டு பேரும் போய்க் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம்” என்றார் அவர். வீடு சாதாரணமாக அவர்களை வரவேற்றது. வாழ்க்கை அமைதியாக நகரத் தொடங்கியது.

மறுவாரத்தில் ராதா வீட்டுக் கிரகப் பிரவேசம் உறவுகள் சூழ, சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. அங்கு மகன், தங்கைக்குச் சீரை விமர்சையாகச் செய்ததைப் பார்த்து மனமகிழ்ந்து போனார் சுப்புலட்சுமி. நகை, பணம், அவர்கள் குடும்பத்திற்குப் புத்தாடைகள், பரிசு பொருட்கள் என மகன் வழங்கியதின் பண மதிப்பை கணக்கிட விரும்பவில்லை அவர். அத்தனை மனம் குளிர்ந்து போய் இருந்தார். அம்மாவின் பார்வைக்காக எதையும் செய்யவில்லை சத்யமூர்த்தி. தன் தங்கைக்காகச் செய்தான் அவன். இப்போது மனைவிக்காகச் செய்ய வேண்டிய கடமையும் அவனுக்கு இருக்க, வீடு திரும்பியதும் அவள் முன் சென்று நின்றான்.

கணவனை உணர்ந்து, “என்ன சத்யா?” என்று கேட்டாள் சஹானா.

அவன் கண்களில் சிரிப்பின் சாயல். “கோபம் போச்சா?” என்று கேட்டான் அவன்.

“ம்ஹூம்” என்றாள்.

“அப்படியா?” என்றான் மனைவியின் தோளில் கைப் போட்டு, “கையை எடுங்க” அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள் அவள். சிரிப்புடன் அப்படியே படுக்கையில் விழுந்தான் சத்யமூர்த்தி.

இரண்டு நாட்கள் கழித்து, மாலை வீட்டுக்கு வந்தவன், “சஹானா மூணு நாளைக்கு ட்ரெஸ் எடுத்து வச்சுட்டு, சீக்கிரம் கிளம்பு” என்று அவளை அவசரப்படுத்தினான். பிரார்த்தனா தரையில் நீச்சல் அடித்துத் தவழ முயற்சித்துக் கொண்டிருக்க, மகளுக்குத் துணையாகத் தானும் தரையில் படுத்திருந்த சஹானா, கணவனை விசித்திரமாகப் பார்த்தாள்.

“என்ன சத்யா திடீர்னு?” அவள் கேட்க, “உங்கம்மா வீட்டுக்கு போறோம்” என்றான் அவன்.

“ஃபேக்டரி?”

“எல்லாம் நான் பார்த்துப்பேன். நீ எழுந்திரு” என்றவன், குனிந்து மகளைத் தூக்கினான். அவன் மகளைக் கவனிக்க, சஹானா அவனிடம் சந்தேகத்துடன் கேள்விக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

“வாய், வாய். பேசாம கிளம்பு” அவன் குரலில் காரமிருக்க, குளிர்ந்தாள் சஹானா. ஒரு மணி நேரத்தில் வீட்டில் சொல்லி விட்டுப் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆறு மணி நேரத்தில் வண்டிப் பெரியார் சென்று அவளின் பெற்றோரையும் காரில் ஏற்றிக் கொண்டு மீண்டும் அவர்கள் பயணத்தைத் தொடர, சஹானா பெற்றோர் முன்பு கணவனிடம் கேள்விகள் கேட்க முடியாமல் திணறினாள். முகத்தைத் திருப்பிக் கண்களால் அவனிடம் விசாரித்தாள். அவன் கண்டு கொண்டால்தானே?

“ரொம்பத்தான்” முணுமுணுத்து இருக்கையில் சாய்ந்தவளின் முகத்தில் தென்றல் இதமாய் வருட, பயண அலுப்பில் கண்கள் சொருக உறக்கத்தில் ஆழ்ந்தாள் அவள்.

“சஹானா” கணவனின் அடர்த்தியான குரலில் மெல்ல விழித்து, “ப்ச், தூங்க விடுங்க சத்யா. தூங்கும் போது எழுப்பறதையே வேலையா வச்சுட்டு இருக்கீங்க” சிணுங்கினாள்.

“கண்ணைத் திற சஹானா” மீண்டும் கிசுகிசுத்தான் சத்யா.

“உங்களோட” என்று சலித்துக் கண்ணைத் திறந்தவளின் கண்களில் விழுந்தான் காதலும், கனிவுமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கணவன். அவள் இதழ்கள் தாமாகப் புன்னகையில் பிரிய, கண்கள் கணவனுக்குப் பின்னே பார்த்து, நொடியில் விரிந்தது.

“சத்யா” அதிர்ச்சியும், ஆச்சரியமும் போட்டி போட கத்தினாள் சஹானா.

எப்போதும் போல, “என்ன?” என்றான் கண்களால். ஆனந்த அதிர்ச்சியில் அவளுக்குப் பேச்சே வரவில்லை. மனைவியின் கைப் பிடித்துக் கீழிறக்கி விட்டான் சத்யமூர்த்தி. அவளோ, அவன் விரல்களுடன் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். அவர்களுக்கு முன்னே சஹானாவை விட அதிகமாக ஆர்ப்பரித்து, அவள் மனதின் மகிழ்ச்சியைப் போலவே குதித்து இறங்கி, அவளின் பேச்சை போலவே சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது மாங்குளத்தின் பிரம்மாண்ட அருவி.

“பாப்பா எங்க?”

இயற்கையின் அழகில் மயங்கினாலும், மகளை விசாரித்த மனைவியைச் சிரிப்புடன் பார்த்த சத்யா, “ரிசார்ட்டில் இருக்காங்க. பாப்பா நல்லா தூங்கறா. எழுந்தா கால் பண்ண சொல்லியிருக்கேன். பத்து நிமிஷ ட்ரைவ் தானே? போய்டலாம்” என்று அவன் சொல்லி முடிக்கவும், அவனை இழுத்துக் கொண்டு அருவியை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் சஹானா.

ஆள் அரவமற்ற காட்டில், பேரழகுடன் பெருகி ஓடி வந்து கொண்டிருந்தது அருவி. அங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அருவி கரையில் இருந்த சிறிய தேநீர் கடையில் பெண்ணொருவர் இருந்தார். அவரும் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தார்.

“நீ குளி. நான் இங்க நிக்கறேன்” என்றவனைக் கோபத்துடன் முறைத்தவள், தன் பலம் மொத்தத்தையும் திரட்டி ஒற்றை இழுப்பில் அவனை உள்ளே இழுத்துக் கொண்டாள். அருவி பாரபட்சமின்றி இருவரையும் நனைத்தது.

பயணங்களையும், இயற்கையையும் நேசிப்பவள், இப்பொழுது அதே தீரா காதலுடன் கணவனையும் நேசித்தாள்.

அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார்கள். மிளகு கொடிகள், காஃபி, தேயிலை தோட்டங்கள், கோகோ மரங்கள் என்று எங்கும் கண்ணை நிறைக்கும் இயற்கை வளம் செழித்திருந்தது.

“தேங்க்ஸ் சத்யா” என்றாள் கணவனிடம். புன்னகைத்தான் சத்யா.

சஹானாவிற்கு அடுத்து வந்த இரு நாட்களும் இயற்கை எழிலிலும், கணவனின் காதலிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போனது. பிரார்த்தனா அவளின் தாத்தா, பாட்டியுடன் பக்கத்து அறையில் இருந்தாள். தம்பதிகள் மாலை தேநீருடன் அறையை ஒட்டிய பால்கனியில் ஓய்வாக அமர்ந்திருந்தனர்.

சஹானா கணவனை மௌனமாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவனுக்குப் பின்னே எல்லையில்லாமல் நீண்டிருந்தது கண்ணுக்குக் குளிர்ச்சியாக இயற்கை. அவள் கண்களை நிறைத்தவனும் அந்த இயற்கையைப் போன்ற இயல்புடையவன். அவனுடனான வாழ்க்கையும் அப்படிப்பட்டதே. ஆழ்ந்த அமைதியும், சமயங்களில் சலசலப்பும், பெரும்பாலான நேரங்களில் எதிர்பாராத இனிமையும் கொண்டது.

அவள் ஆர்ப்பரிக்கும் அருவி என்றால், அவன் சலனமில்லா நதி. இரண்டும் இயற்கைதானே? இரண்டும் இயல்புதானே?

இரண்டும் ரசிக்கக் கூடியதுதானே? எல்லாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்துதானே?

“அழகென்பது பார்க்கும் கண்களில் இருக்கிறது” என்பார்கள். அழகு மட்டுமல்ல, வாழ்க்கையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தானே இருக்கிறது? சஹானா தன் எண்ணவோட்டத்தை மட்டுமல்ல, கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொண்டாள். கணவனுக்காக, தனக்காக, மகளுக்காக. தங்களின் குடும்பத்திற்காக.

வாழ்க்கையின் நிறைவென்பது நம் மகிழ்விலும், நமை சார்ந்தோரின் மகிழ்விலும்தானே இருக்கிறது?

“சஹானா” அழைத்தான் சத்யா. சிரித்தாள். மனைவியின் சிரிப்பில் நிறைந்தான் சத்யமூர்த்தி.

error: Content is protected !!
Scroll to Top