அன்பின் ஆலாபனை – 18 (2)

அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தைத் தந்தது. அந்நேரம் அறைக்குள் நுழைந்த சத்யமூர்த்தி நேராக மனைவியிடம் வந்தான். அவன் இடுப்பின் ஒரு புறமும் கைக் கோர்த்து கட்டிக் கொண்டு, அவன் வயிற்றில் முகம் புதைத்தாள் சஹானா.

அந்தக் கணம் அவர்களைச் சூழ்ந்திருந்த அமைதி, அவளுக்குத் தேவையாய் இருந்தது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, “சஹானா” என்றான் சத்யமூர்த்தி. வெளியில் மகளின் அழுகையும் சேர்ந்து கேட்க, சட்டெனக் கணவனிடம் இருந்து விலகி எழுந்துக் கொண்டாள் சஹானா. இரண்டு குடும்பங்களும் நடந்ததை ஒட்டு மொத்தமாக மறந்து விட்டு இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் அடி மனதில் வருத்தம் இருந்தாலும் யாரும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

அவர்களோடு சஹானாவும் சேர்ந்து கொள்ள நேரம் பறந்திருந்தது. அவர்கள் அனைவரும் இரவு உணவை முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தனர்.

“அப்போ நாங்க கிளம்பறோம். இப்ப ஸ்டார்ட் பண்ணாதான் காலையில வீடு போக சரியா இருக்கும்” பாலகுமார் சொல்லிக் கொண்டே எழ, அவரைப் பின் தொடர்ந்து மற்றவர்களும் எழுந்தனர்.

“நாளைக்குப் போகலாம் இல்லையா சம்மந்தி” முரளிதரன் கேட்க,

“ஃபேக்டரி, செக்கு, தென்னந்தோப்பு வேலைகள்ன்னு எக்கச்சக்கமா இருக்கே. எல்லாம் நாம போய்த் தானே பார்க்கணும். மாப்பிள்ளைக்கு வீடு கிரகப் பிரவேச வேலைகள் வேற இருக்கு. அவங்க போய் அதைப் பார்க்கணும். அதனால, இன்னொரு முறை நிதானமா வர்றோம். நீங்க தப்பா எடுத்துக்க வேணாம்” அவர் சொல்ல, “அதுவும் சரிதான். பார்த்துக் கவனமா போங்க” என்றார் முரளிதரன்.

“சத்யா, நீங்க பொறுமையா ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க பா” பாலகுமார் மகனிடம் சொல்ல, சிறிய தலையசைப்பை பதிலாகத் தந்தான் அவன்.

“டிரைவர் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லப்பா?” அவன் கேட்க, “ஆறு மணி நேரம் தானே மச்சான். நான் மேனேஜ் பண்ணிப்பேன்” என்றான் மோகன்.

“உன் குடும்பத்தைக் கூட்டிட்டுச் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு தம்பி” மகனின் பக்கத்தில் வந்து சொன்னார் சுப்புலட்சுமி.

“தங்கச்சி வீட்டு பால் காச்சு வேற இருக்கு. அதான் சொன்னேன்” என்று அவர் சொல்ல, “சரிம்மா” என்று முடித்துக் கொண்டான் சத்யமூர்த்தி.

சஹானா அனைவரிடமும் இயல்பாகப் பேசி விடைக் கொடுத்தாள். பிரார்த்தனாவிற்கு எந்தவித கோபமும், வருத்தமும் இல்லாத காரணத்தினால் எல்லோருக்கும் சிரிப்பை தாராளமாக வழங்கி, ஒவ்வொரு கையாகத் தாவிக் கொண்டிருந்தாள். சத்யமூர்த்திக் குடும்பம் கிளம்பி விட, அவர்கள் வீட்டிற்குள் வந்தனர். சஹானாவின் பெற்றோர் மகளிடமும், மருமகனிடமும் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றனர்.

சஹானா முதலில் மகளோடு அறைக்குள் வந்திருந்தாள். மகளுக்குப் பசியாற்றி, உடல் துடைத்து, உடை மாற்றித் தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் அவள். பிரார்த்தனா, அம்மாவை பார்த்துச் சிரிப்பதும், படுக்கையில் உருள்வதும், தவழ முயற்சிப்பதும் பின்னர் எழுந்து அமர்வதுமாக வித்தைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

“அம்மாவுக்குத் தூக்கம் வருது தங்கமே. இப்படி ஆட்டம் காட்டிட்டு இருக்கியே உனக்கே நல்லா இருக்கா?” சஹானா புலம்பலாகக் கேட்க, வாயில் வண்டி ஓட்டி சிரித்தாள் மகள். அனிச்சையாக மகளின் சிரிப்பு அவளையும் தொற்ற, சிரித்து, மகளை இறுக்கி கன்னத்தில் முத்தமிட்டாள் சஹானா.

“இப்ப செல்லக் குட்டி சமத்தா தூங்குவீங்களாம்” என்றபடி அவள் பாலூட்ட முயற்சிக்க, மார்பில் முட்டி மறுப்பைத் தெரிவித்து வெளியில் எட்டிப் பார்த்தாள் குழந்தை. குளியல் அறையைத் திறந்து கொண்டு அப்பா வருவதைப் பார்த்ததும், சீழ்க்கை அடித்து எச்சில் ஒழுக சிரித்தாள் அவள்.

மனைவியைப் பார்த்துக் கொண்டே ஈர துண்டை, பால்கனியில் சென்று போட்டு விட்டு வந்த சத்யமூர்த்தி இரவு உடையை அணிந்து கொண்டு, மகளைத் தூக்கினான்.

“ம்ம்” என்று சலித்து உதடு சுழித்தாள் சஹானா.

“என்ன?” என்று கண்களால் வினவி, அவளைப் பார்த்தான் சத்யா.

“எப்பவும் பொண்ணுதான் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி” கோபத்துடன் முணுமுணுத்தாள். அவளின் சிறுபிள்ளை தனத்தில் சத்தமில்லாமல் சிரித்தான் சத்யா. அதைக் கண்டு கொண்டவள், முகத்தைத் திருப்பிக் கொண்டு படுக்கையில் சரிந்தாள். அவனுக்கு முதுகு காட்டி அவள் படுத்திருக்க, மனைவியைக் கண்டு கொள்ளாமல் மகளிடம் திரும்பினான் சத்யமூர்த்தி.

“செல்லத்துக்குத் தூக்கம் வரலையா? தனு குட்டிக்கு விளையாடணுமா?” அவன் மகளைக் கொஞ்ச, இங்கே மிஞ்சிக் கொண்டிருந்தாள் மனைவி.

“எனக்குத் தூக்கம் வருது” மனதில் சொல்லிக் கொண்டு கண்களை மூடினாள். கடந்த இரு நாட்களின் சம்பவங்கள் அவள் மனதில் வரிசையாக வலம் வரத் தொடங்கியது.

சஹானா ஒற்றை மகளாக, பெற்றோருக்கு செல்ல மகளாக வளர்ந்தவள்.

அதீத கவனிப்பு இருந்த அதே நேரத்தில் கண்டிப்பு, கண்காணிப்பு என்று எல்லாப் பெற்றோரையும் போலதான் அவள் பெற்றோரும் அவளை நடத்தினார்கள். அவள் விருப்பத்தை நிறைவேற்றும் நேரம், தேவையில்லாததை மறுக்கவும் தவறியதில்லை அவர்கள். அவளுக்குப் பிடித்த படிப்பு, பயணம் என இருந்தவளின் வாழ்க்கையையும் அவளுக்குப் பிடித்த விதமாகவே அமைத்துக் கொடுத்தார்கள் அவர்கள்.

சஹானா முதலில் சத்யமூர்த்தியின் தோற்றத்தில், கம்பீரத்தில்தான் ஈர்க்கப்பட்டாள். அவனைப் பற்றிய மற்ற தகவல்கள் எல்லாம் பின்னால் பெற்றோர் சொல்லி அறிந்து கொண்டாள். அவ்வளவே.

அவன் தன்னை விரும்பி மணக்க கேட்டான், தன் முன்னிருந்த தடைகளை உடைத்துத் தன்னை மணந்தான் என்பதில் அவளுக்கு அதீத கர்வம் இருக்கத்தான் செய்தது. பெற்றோரை பிரிந்து அவனோடு வாழ்க்கையைத் தொடங்கியவளுக்குக் கணவனின் மேலான எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம்தான். அந்த எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறிய போது கோபத்தில் கொஞ்சம் இல்லை அதிகமாவே எதிர்வினையாற்றி விட்டாள் அவள். இப்போது அவனது சமாதானத்தில் குளிர்ந்தும், நெகிழ்ந்தும் இருந்தாள்.

பொள்ளாச்சி செல்வதற்கு மனதளவில் தயாரானாள். மாமியாரை மட்டுமல்ல, வாழ்க்கையைக் கூடச் சரியாகக் கையாள முடியும் என்ற ஞானோதயமும், பக்குவமும், முதிர்ச்சியும் அவளுக்கு இப்போது வந்திருந்தது. எல்லாம் காலம் கற்றுத் தந்த பாடம். நினைவுகளில் உழன்ற அவளின் சிந்தையை உறக்கம் மெல்ல மெல்ல நெருக்கத் தொடங்கியது. அவளின் மகளும் அப்பாவின் கையில் கண்ணயர்ந்திருந்தாள்‌. மகளைத் தொட்டிலில் இட்டு, போர்வை போர்த்தி விட்டு தானும் படுக்கைக்கு வந்தான் சத்யமூர்த்தி.

“சஹானா” மென்மையாய் அழைத்தான். அதில் சஹானாவின் உறக்கம் விலகியோடி விட, அப்படியே படுத்திருந்தாள் அவள்.

“சஹானா” ம்ஹூம், சற்றும் அசையவில்லை அவள்.

“சஹானா” ஐந்தாவது முறையாக அழைத்தான்.

“சஹானா, அப்படியே நீட்டி முழக்குங்க” எரிச்சலுடன் கத்தினாள்.

“பேரை சொல்லி தானே கூப்பிட முடியும்?”

“ஏன் சஹா சொன்னா ஆகாதா?” அவள் கடுப்புடன் கேட்க, “எல்லோரும் சொல்றதை நானும் ஏன் சொல்லணும்?” என்று சரியாகக் கேள்விக் கேட்டான் சத்யா.

“உங்களை..” பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் திரும்பிப் படுத்தாள் அவள்.

“சஹானா” இம்முறை பத்து முறைக்கும் மேலே அழைத்து விட்டான். அவள் துளி கூட மதிக்கவில்லை. உடல் இறுக, வீம்பாக முதுகு காட்டி படுத்திருந்தாள்.

“சஹானா” ஒரே இழுப்பில் அவளைத் தன் மார்புக்குக் கொண்டு வந்திருந்தான் சத்யமூர்த்தி.

“பேசலைன்னா எப்படியிருக்கும்னு உங்களுக்கு இப்போ புரியுதா?” கண்ணை விரித்து, தலையை ஆட்டியபடி கேட்ட மனைவியை ரசனையுடன் பார்த்தான் சத்யமூர்த்தி.

“அப்போ, நான் பேசல சொல்றியா?”

“இல்லையா, பின்ன? மிண்டா பிராணி. அப்படியே பக்கம் பக்கமா பேசினது போலதான் கேட்கறீங்க”

“பக்கம் பக்கமா இல்ல. ஆனா, பக்கத்தில் இருந்துதான் பேசினேன். உனக்குப் புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது. இல்லையா?” அவன் கேட்க, கணவனைக் கண்ணைச் சுருக்கி சந்தேகமாகப் பார்த்தாள் சஹானா.

“புரிய வைக்கவா?” கிசுகிசுத்தான். அந்தக் குரலில் உடலும், மனமும் சிலிர்க்க கணவனின் மார்பில் குத்தினாள் சஹானா.

“தள்ளிப் போங்க.” கோபமாகச் சொன்னவளை புருவங்கள் நெரித்துப் பார்த்தான் சத்யா. அவன் மேல் சட்டமாகத் தான்தான் படுத்திருக்கிறோம் என்பதை அவள் உணர்ந்து விலகப் போகும் நேரம், மனைவியை இறுக்கி அணைத்தான் சத்யமூர்த்தி.

“விடுங்க சத்யா” என்ற சஹானா, தன் பேச்சிற்கு மாறாகக் கணவனின் காதலில் கரைந்துக் கொண்டிருந்தாள்.

“பேசுறதே கிடையாது. எப்பவும்” அவன் கண்களைப் பார்த்து அவள் சொல்ல பேசினான் அவன்.

அவன் விழிகள் பேசியது, விரல்கள் பேசியது.

இமைகள் பேசியது. இதழ்கள் பேசியது.

மூர்க்கம் தொலைத்தவனின் மூச்சுக் காற்றும் பேசியது.

இரவு பேசாமலேயே இனிமை சேர்த்தது.

அவனுக்கு நேர்எதிராகச் சஹானா பேசிக் கொண்டேயிருந்தாள்.

“சத்யா” என்று சிணுங்கினாள், சிலிர்த்தாள், உயிர்த்தாள்.

மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டி, எழுந்து சென்றான் அவன். குளியல் அறையில் இருந்து வெளியில் வந்து, தொட்டிலில் உறங்கும் மகளை ஒரு முறை பார்த்து விட்டு வந்து படுக்கையில் சரிந்தான் சத்யமூர்த்தி. அவனிடம் நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டி விட்டு திரும்பிப் படுத்தாள் சஹானா. மென்நகையுடன் மனைவியையும், உறக்கத்தையும் சேர்த்தே தழுவினான் சத்யமூர்த்தி.

மறுநாள் காலை உணவின் போது, “உன்னை இப்படிப் பார்க்க சந்தோஷமா இருக்கு சஹா” என்றார் புனிதா.

“கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா, நம்ம பொண்ணு, மாமியார் வீட்ல சந்தோஷமா இருக்கான்னு தெரிஞ்சாலே மனசு நிம்மதியாகிடுது. இல்ல, புனிதா?” முரளிதரன் கேட்க, “ம்ம். ஆமாங்க.” என்றார் புனிதா.

உலகின் பெரும்பான்மை பெற்றோரை போலதான் தாங்களும் எனச் சொல்லாமல் சொன்ன பெற்றோரை புன்னகையுடன் பார்த்தாள் சஹானா. புகுந்த வீட்டின் அத்தனை சோதனைகளையும் பெண்கள் பொறுத்து போவது இதற்காகத்தானே. பெற்றோருக்கு வருத்தம் தரக் கூடாது. அவர்களுக்குப் பாரமாக வீட்டில் வந்து அமர்ந்து விடக் கூடாது. சமூகத்தின் முன் பெற்றோரை தலை குனிய விடக் கூடாது என்று எத்தனை எத்தனை காரணங்கள். அத்தனையும் மீறிதான் வாழ்ந்து காட்ட வேண்டியிருக்கிறது. புகுந்த வீட்டில் தனக்குத் துடுப்பாகக் கிடைப்பதை, பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்கிறாள் பெண் என்று நினைத்தாள் சஹானா.

கணவனின் அன்பும், துணையும் அவளுக்கு இருக்க, தான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்று திடமாக நம்பினாள். மேலும், பிரச்சனைகளைச் சந்திக்க, அவளுக்கு வாழ்க்கை இப்பொழுது வாழ்க்கை பாடம் எடுத்திருந்ததே. அவள் திடமாக நிமிர்ந்து அமர, அந்நேரம் குழந்தையுடன் உணவு மேஜைக்கு வந்தான் சத்யமூர்த்தி.

“தனு குட்டி தவழ டிரை பண்றா. அதான் கையில தூக்கினா அழுறா” அனைவருக்கும் பொதுவாகச் சொல்லியபடி மகளைப் பார்த்துச் சிரித்தான் சத்யா. கணவனைக் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா.

அன்று மாலை, “நாம ஊருக்குக் கிளம்பலாம் சத்யா. ராதா அண்ணி வீட்டு விசேஷத்துக்குப் போகணும் இல்ல? உங்களுக்கு ஃபேக்டரி வேலை இருக்கும்” என்று சொன்னாள் சஹானா.

“நாளைக்குப் போகலாம்” என்றவன், “இன்னும் கோபமா இருக்கியா?” என்று சேர்த்துக் கேட்டான்.

“ம்ம், கோபமாதான் இருக்கேன்” என்றாள் அவனைப் பாராமல்.

“என்ன பண்ண சமாதானமாவ?”

“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்” இப்போது அவன் கண்களைப் பார்த்துச் சொன்னாள். அவன் கண்களில் குழப்ப ரேகைகள்.

“ஓகே” என்றான் அசட்டையாக.

“அதானே பார்த்தேன். சத்யமூர்த்தி, சஹானாவை சமாதானம் பண்ணிட்டாலும்..” சத்தமாகச் சலித்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் அவள். அன்றிரவே பெற்றோருக்கு பிரியா விடை கொடுத்து, கணவனுடன் பொள்ளாச்சி திரும்பினாள் சஹானா.

error: Content is protected !!
Scroll to Top