அவன் முன்னே வந்து நின்று, “சாரி, மாப்பிள்ளை” என்றார் முரளிதரன்.
“இல்ல மாமா. அங்க நம்ம வீட்ல, எங்க அம்மா வீட்லதான் இருக்காங்க. அது போக வீட்டு வேலைக்கு ஆள் இருக்காங்க. அவங்களே சஹானாவையும், பாப்பாவையும் பார்த்துப்பாங்க. அதுக்குத்தான் கூட்டிட்டு போறேன். நீங்க தப்பா நினைக்க வேண்டாம்” என்று அவன் சொல்ல, புரிதலுடன் தலையசைத்தார் அவர். அவர்களுக்கு மகளையும், பேத்தியையும் இப்படி அவசரமாக அனுப்புவது பிடிக்கவில்லைதான். ஆனாலும், மருமகனை எதிர்த்து எதையும் செய்யத் தயங்கினர்.
சஹானாவிற்குக் கணவன் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அம்மா வீட்டில் எந்தவித அழுத்தமும், கவலையும் இன்றி இருக்கவே அவளுக்குப் பிடித்தது.
தாய்மை அவளுக்கும் புதிதுதானே. மகளைச் சரியாகக் கையாள அம்மாவின் உதவி அவளுக்கு அடிக்கடி தேவைப்பட்டது. அவள் உறக்கமின்றிச் சோர்ந்து அமரும் போதெல்லாம், புனிதாதான், அவளைத் தாங்கிக் கொண்டார். பிரார்த்தனா இரவு அழும் போதெல்லாம் அவளைத் தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நடையால் அளப்பார் முரளிதரன்.
“நீ தூங்கு சஹா” என்று அக்கறையாய் சொல்வார் தன் மகளிடம்.
இப்போது அவர்கள் இல்லாமல், எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று பயந்தாள் சஹானா. அதுவும் இப்படிச் சொல்லாமல், கொள்ளாமல் போய் அங்கு, நின்றால் மாமியார் எப்படிப் பேசுவார் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியுமே.
பொள்ளாச்சியில் முதல் சில வாரம் நன்றாகப் பார்த்துக் கொண்ட சுப்புலட்சுமி. பின்னர்த் தன் வேலையைச் செவ்வனே செய்தார். இத்தனைக்கும் சஹானாவின் பெற்றோர் பொள்ளாச்சி வந்து பேத்திக்கு சிறப்பாக நகை, உடை எனச் செய்து விட்டே போனார்கள். ஆனாலும், திருப்தி அடையவில்லை அவர். சஹானா அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. அவள் கண்கள் எல்லாம் கணவன் மேல்தான் இருந்தது. மகளைத் தாங்கும் அவனை முறைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. மகளிடம் குழையும் அவன் குரல் அவளுக்குப் புதிது.
ஆனால், அவளின் கோபத்தை எப்போதும், அதே மகள் தனித்ததுதான் ஆச்சரியமான அதிசயம்.
பணப் பிரச்சினையால் பாதியில் நின்ற ராதாவின் வீட்டு வேலை இப்போது துரித கதியில் நடந்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பே அப்பா, அண்ணன் என இருவரும் அவளுக்கு உதவியிருந்தனர். ஒரு கோடி என்று தொடங்கி, இரண்டு கோடிக்கும் மேல் செலவு வைத்த பிரம்மாண்ட வீட்டை அவர்கள் எழுப்பியதுதான் பிரச்சனையின் அடித்தளம் என்று ஆராய்ந்து அறிந்து கொண்ட சத்யமூர்த்தி, மனைவியுடன் விவாதித்து விட்டே தங்கைக்கு உதவினான்.
சில மாதங்களில் ராதாவின் வீடு அழகாக முழுதாகத் தயாராகி நின்றது. பெற்றோரை கிரகப்பிரவேசத்திற்கு அழைக்க வீடு வந்திருந்தாள் அவள்.
அன்றுதான் சஹானாவிற்கு அப்படியொரு கோபம் வந்திருந்தது. கல்யாணமான நாளில் இருந்து அடிமனதில் அழுத்தி, அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்து வெளிவந்திருந்தது. மாமியாருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டு, கணவனிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டாள் அவள். அவன் எப்படியும் தன்னைத் தேடப் போவதில்லை. மகளைத்தான் தேடுவான் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியுமே? பின் எதற்காகச் சொல்ல வேண்டும் என்றே நினைத்தாள் அவள்.
அன்று தங்கையின் தொடர் அலைபேசி அழைப்பை, முக்கியமான வேலைக்கு நடுவில் எரிச்சலுடன்தான் ஏற்றான் சத்யமூர்த்தி.
“அண்ணி, பாப்பா தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்கண்ணா” என்ற தங்கையின் வார்த்தையில் ஒரு நொடி உலகம் தன் சுழற்சியை நிறுத்தி பின் இயங்கியது அவனுக்கு.
“என்ன சொன்ன?” நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டான். அவனிடம் எல்லாவற்றையும் வரி வரியாக ஒப்பிக்கும் மனைவி, சொல்லிக் கொள்ளாமல் தாய் வீடு செல்வதெல்லாம், அவனைப் பொறுத்த வரை நடக்கவே நடக்காத ஒன்று. ஆனால், நடத்திக் காட்டினாள் அவனின் சஹானா. அவன் வீட்டில் நடந்ததை விசாரித்து, அம்மா, அப்பாவுடன் பேசி விட்டு, தொழிற்சாலையில் வேலை முடித்து, அடுத்தச் சில நாட்களுக்கு வேலைகளைச் சரியான கைகளில் ஒப்படைத்து விட்டு, காரில் ஏறியவன் நேராக மனைவியின் வீட்டின் முன் வந்துதான் நிறுத்தினான். இப்போது கண்ணைத் திறந்து, தலையைத் திருப்பி மனைவியைப் பார்த்தான்.
மகளுக்கு உடை மாற்றிக் கொண்டிருந்தாள் அவள்.
என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, எதுவுமே புரியவில்லை அவனுக்கு. மனைவியின் கோபம் புரிந்தது. ஆனால், அதனைப் போக்கும் வழிதான் அவனுக்குத் தெரியவில்லை.
“சஹானா” என்றான் மெல்ல. சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் மனைவி.