அன்பின் ஆலாபனை – 15 (1)

கணவனைப் பார்த்ததும் வலியையும் மீறி புன்னகைக்க முயன்றாள் சஹானா. கார் கதவை விரிய திறந்து வைத்து விட்டு, ஓடி மனைவியிடம் வந்தான் சத்யமூர்த்தி.

“வீட்ல யாரும் இல்ல?” அவன் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் சஹானா.

“உங்கம்மா எங்க?” என்ற அவனின் கேள்வியில் நிச்சயம் கோபமிருந்தது.

“சத்யா” வலியில் கத்தியவளால் அதற்கு மேல் வேறொன்றும் சொல்ல முடியவில்லை. மெல்ல நடத்தி அவளைக் காரில் ஏற்றினான் சத்யா. ஓட்டமும், நடையுமாக அந்நேரம் அங்கு வந்து நின்றார் முரளிதரன்.

“மாப்பிள்ளை, வாங்க” என்றவர், “சஹாக்கு வலி வந்துடுச்சுன்னு சொன்னாங்க. சஹா என்ன சொல்றா?” பதறி கேட்டபடி ஓடி அருகில் வந்தார் முரளிதரன். பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு, மருமகன் நீட்டிய கார் சாவியை வாங்கிக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பினார் முரளிதரன். சத்யா மனைவியுடன் பின்னால் அமர்ந்து விட்டான்.

“சஹானா”

“ஆஆ.. சத்யா, இப்படி வலிக்கும்னு தெரியாதே” பல்லைக் கடித்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தாள். புனிதா பலமுறை அவளுக்கு விளக்கி இருந்தார்தான். ஆனால், அனுபவிக்கும் போதுதான் வலியின் அளவு தெரிந்தது. “ம்ம்” ஒரு கரத்தால் அவள் கையை இறுக பற்றி, மறுகரத்தால் அவளின் முதுகை தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான் சத்யா. ஐந்தே நிமிடத்தில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள் அவர்கள். முரளிதரனுக்கு அங்கு அனைவரையும் தெரிந்திருந்தது. சஹானா நேராகப் பிரசவ அறைக்குக் கொண்டு போகப்பட்டாள்.

“சத்யா” வலியை மீறிய தேடல் அவள் குரலில். மௌனமாய் மனைவியின் கையைத் தன் கரங்களுக்குள் பொதிந்து அழுத்திக் கொடுத்தான் சத்யா. தொண்டைக்குழியை யாரோ நெரிக்கும் உணர்வில் பேச்சு வரவில்லை அவனுக்கு. அவனையே விழி எடுக்காமல் பார்த்தபடி அறைக்குள் போனாள் சஹானா. புனிதாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட, அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்தார் அவர். அப்போதும் வலியில் துடித்துக் கொண்டு தானிருந்தாள் சஹானா. பிரசவ அறைக்குள் சென்று மகளை ஒரு முறை பார்த்து, பரிசோதித்து விட்டு அவர் வெளியே வர, “என்னாச்சு அத்த?” என்று கேட்டான் சத்யமூர்த்தி.

“கொஞ்ச நேரத்துல டெலிவரி ஆகிடும் மாப்பிள்ளை. நான் இங்க பார்த்துக்கறேன். நீங்க, உங்க மாமா கூடப் போய் டீ, டிஃபன் சாப்பிட்டுட்டு வாங்க” என்றவர், கணவரிடம் திரும்பி, “கூப்பிட்டுட்டு போங்க சஹாப்பா” என்று சொல்ல,

“இல்ல. எனக்கு எதுவும் வேணாம்” என்று அழுத்தமாய் மறுத்து விட்டான் சத்யா. அந்தக் குரலை கேட்ட பின்பு, அவர்களுக்கும், அவனை வற்புறுத்தத் தயக்கமாக இருக்க, சரியென்று நகர்ந்தனர். மேலும், ஒரு மணி நேரம் கழிந்தும் கூட அவன் அங்கிருந்து நகரவேயில்லை. முன்தின இரவு மனைவி பேசியதுதான் அவனுக்கு மனதில் வலம் வந்தது. மாலை ஆறு மணிக்கு ஒருதரம், பின் இரவு பத்து மணி போல உறங்கச் செல்லும் முன் ஒருதரம் என்று தவறாமல் கணவனை அழைத்து விடுவாள் சஹானா. நேரம் மாறுமே தவிர, அழைக்காமல் இருந்தது இல்லை அவள். பட்டாசாய் படபடப்பாள் அவனிடம். அவனது வழக்கமாக, “ம்ம்” சொல்லிக் கொண்டிருப்பான் அவன்.

நேற்று மனைவியின் குரலில் லேசான மாற்றம் உணர்ந்து, “சஹானா” என்றான். அவள் வலியைப் பற்றிப் பேசவேயில்லை. “தூக்கம் வருது சத்யா. ஒரு மாதிரி டையர்டா இருக்கு. படுக்கப் போறேன்” என்றவளின் குரல் அவன் செவியில் நிறைய, மீண்டும், “சஹானா” என்றான்.

“நீங்களும் தூங்குங்க சத்யா. பை” என்று வைத்து விட்டாள் அவள். அவனும் படுக்கையில் சரிந்தான். ஆனால், உறக்கம்தான் வரவில்லை. அலுவலக வேலையைச் சிறிது நேரம் பார்த்து விட்டு, படுக்கச் சென்றான். இப்போது சஹானாவின் நினைவே அவனது தூக்கத்தைப் பறிக்க, உதட்டில் நெளிந்த குறுஞ்சிரிப்புடன் கண்ணை மூடினான்.

நள்ளிரவு நெருங்கும் போது தொண்டை வறண்டு உறக்கம் கலைய, பட்டென எழுந்து அமர்ந்து விட்டான் அவன். படுக்கைக்கு எதிரே இருந்த சுவரில் இருந்து, விடிவிளக்கு வெளிச்சத்தில் சஹானா சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களின் முதல் திருமண நாளின் போது எடுத்த புகைப்படம் அது. அவனை உரிமையும், காதலுமாய் ஒட்டிக் கொண்டு நின்றிருந்த சஹானா, “சிரிங்க, சத்யா. அதுக்கெல்லாம் காசு கேட்க மாட்டாங்க” என்று கேலியாகச் சொல்ல, அவனும் மெலிதாகச் சிரித்திருந்தான் அந்தப் புகைப்படத்தில்.

அடர் பீச் (Peach) நிற உடலும், காஃபி நிற பார்டரும் கொண்ட ஷிஃபான் சில்க் சேலையில் அத்தனை அம்சமாய் இருந்தாள் சஹானா. அவனும் அதே நிற சட்டை, பட்டு வேட்டியில் இருந்தான். இருவரின் சிரிப்பும், மகிழ்வும் இப்போது பார்க்கையிலும் அவனுக்கு அத்தனை இதமாய் இருந்தது. ஆனால், அந்த இதத்தைத் தாண்டி, மனதில் இனம் புரியா தவிப்பு சூழ, மனைவியிடம் பேச அலைபேசியைக் கையில் எடுத்தான் அவன். நேரம் அதிகாலை 2.30 என்றது அலைபேசி திரை. அந்நேரம் மனைவியை எழுப்ப மனமில்லை அவனுக்கு. ஆனாலும், ஏதோ உள்ளுணர்வில் சட்டென எழுந்து உடை மாற்றி, காரை எடுத்து விட்டான் சத்யமூர்த்தி.

ஐந்தே மணி நேரத்தில் வண்டிப் பெரியாரை தொட்டு விட்டான் அவன். சஹானாவின் வீடிருக்கும் பகுதியில் அவன் நுழையும் நேரம் அவளிடமிருந்தே அழைப்பு வர, காரின் வேகத்தைக் கூட்டினான். சரியாக அவன் காரை நிறுத்தும் நேரம் சஹானாவும் வெளியில் வந்தது அவன் எதிர்பாராதது. ஆனால், அந்தக் கணம் அவன் மனதில் வந்த அமைதியை அவனால் என்றுமே வார்த்தைகளில் வடித்திட முடியாது.

“அம்மா.. சத்யா.. அவரைக் கூப்பிடுங்க மா. பார்க்கணும் எனக்கு” உள்ளிருந்து வந்த மனைவியின் குரல் அவனைக் கலைக்க, தன் நடையை நிறுத்தி விட்டு நின்றான் அவன்.

“அவங்களை உள்ள விட மாட்டாங்க சஹா. கொஞ்சம் வலி பொறுத்துக்கோ மா. இதோ, இப்போ பிறந்திடுவா உன் பொண்ணு” புனிதா, “மகள்” என்று சொன்னதும், ஆச்சரியமாக அவரைப் பார்த்தாள் சஹானா. பல முறை அவளோடு ஸ்கேன் எடுக்கத் துணை வந்திருக்கிறார் புனிதா. அப்போது திரையைப் பார்த்தே அவரின் அனுபவத்தில் கணித்திருப்பார் என்பது அவளுக்குப் புரிய, “பொண்ணா மா?” மூச்சு வாங்க வினவினாள் சஹானா.

சன்னச் சிரிப்புடன், “அப்படித்தான் இருக்கும்னு நினைக்கறேன் சஹா. இப்போ புஷ் பண்ணு பார்ப்போம். ம்ம், நல்லா” என்று அவர் சொல்ல, அறைக்கு வெளியே நின்றிருந்த சத்யமூர்த்திக்கு அது அரைகுறையாகக் காதில் விழுந்தது. மேலும் சில மணி நேரம் கழிய, “அவரைக் கூப்பிடு மா, பிளீஸ். என்னால முடியல. சிசேரியன் பண்ண சொல்லு மா” கதறிக் கொண்டிருந்தாள் சஹானா.

“சஹா, பயப்படாத. ஒன்னுமில்ல டா. இங்க பாரு. அம்மா பாரு. பாப்பா இப்ப பொறந்திடுவா. இப்பதான் கர்ப்ப வாய்த் திறந்திருக்கு. நீ நல்லா புஷ் பண்ணா, பத்து நிமிஷம்தான். வலி பொறுத்துக்கோ சஹா” புனிதா, அதட்டலும், கெஞ்சலுமாகச் சொல்லிக் கொண்டிருக்க அவரைத் தொடர்ந்து ஒலித்தது பெண் மருத்துவரின் குரல்.

சத்யமூர்த்தித் தனது முப்பது வருட வாழ்க்கையில் எதற்கும் இப்படிப் பயந்தது கிடையாது. தவித்து, துடித்து, வியர்த்து, ஏதும் செய்ய இயலா பரிதவிப்பில் கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தான் அவன். மனம் அவனது இஷ்ட தெய்வங்கள் அனைவரிடமும் தன்னிச்சையாகப் பிரார்த்தனை செய்தது. மனதில் மனைவிக்காகவும், மகளுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தான் அவன்.

“டீ, குடிங்க மாப்பிள்ளை” முரளிதரன் நீட்டிய கோப்பையை மறுக்காமல் வாங்கிக் கொண்டான் அவன். நேரம் நண்பகலை தாண்டிக் கொண்டிருக்க, அவனுக்குப் பசியே மரத்திருந்தது. மனைவி முகம் பாராமல் உணவு தொண்டைக்குள் இறங்காது என்று தோன்றியது.

“அம்மா” என்ற மனைவியின் அலறல் அவன் காதை அறைய, “நாம அந்தப் பக்கம் போய் வெயிட் பண்ணுவோம், வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்தார் முரளிதரன். சத்தியமூர்த்தி நகரவேயில்லை. சஹானாவின் கதறல் கேட்க கேட்க, தலைக் கோதி கொண்டான். ஐந்து நிமிடம் தொடர்ந்தது அவள் குரல். ஆறாம் நிமிடம் அவனது தேவதையின் அழுகை, அவன் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.

“பொண்ணு சஹானா, உன்னை விட அழகா இருக்கா” மருத்துவரின் குரல் கேட்க, மலர்ந்து சிரித்தான் சத்யா.

“வாழ்த்துகள் மாப்பிள்ள” மருமகனின் தோளில் தட்டிச் சொன்னார் முரளிதரன். அவருக்குப் புன்னகையை நன்றியாகக் கொடுத்தான் அவன். அரைமணி நேரம் கழித்து அறைக்குள் அவனை அனுமதித்தனர்.

“சஹானா” மெல்ல அழைத்தான்.

“உங்க பொண்ணு சத்யா, பாருங்க. ஆனா, வாய் என்னைப் போல இருக்கு. எப்படிக் கத்தி அழுதா தெரியுமா? உங்களுக்கு வெளில கேட்டுச்சா?” அவன் விரல் பிடித்து அவள் கேட்க, புன்னகைத்தான் சத்யா. மனைவியின் படுக்கையில் அமர்ந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மகளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“அம்மா” சஹானா சத்தமாக அழைக்க, உள்ளே வந்தார் புனிதா.

“பாப்பாவை தூக்கி இவர்கிட்ட கொடுங்க மா” மகள் சொன்னதைச் செய்தார் புனிதா. ரோஜா நிறத்தில் கண் மூடியிருந்த அவனது தேவதையின் செப்பு வாயையும், மூக்கையும் ஒற்றை விரலால் மென்மையாய் வருடினான் சத்யா. அவன் முகத்தில் தெரிந்த மென்மையையும், மகிழ்ச்சியையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா. அன்று பிரார்த்தனா மட்டும் பிறக்கவில்லை. அவளோடு கூடவே சத்யமூர்த்தியும் புதிதாகப் பிறந்திருந்தான், அப்பாவாக.

சஹானா அதுவரை பார்க்காத ஒரு சத்யமூர்த்தியை அன்றிலிருந்து பார்க்கத் தொடங்கினாள்.

சுக பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீடு திரும்பி விட்டனர்.

சத்யமூர்த்தியின் குடும்பம் மொத்தமும், குழந்தை பிறந்த மறுநாளே வண்டிப் பெரியார் வந்து விட்டனர். ராதாவும் அவளது குடும்பமும் குழந்தையைப் பார்த்து விட்டு அன்று மாலையே கிளம்பி விட, தொழிலை பார்க்க வேண்டியிருந்ததால் அவர்களோடு கிளம்பி விட்டார் பாலகுமார். சுப்புலட்சுமி மட்டும் சஹானா வீடு திரும்பும் வரை அவளோடு இருந்தார்.

வீடு வந்த பின்னரும், இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டே கிளம்பினார் அவர். மருமகளுக்குக் கொடுக்க வேண்டிய பத்திய உணவுகள், குழந்தையைப் பராமரிக்கும் விதம் என அனைத்தை பற்றியும் புனிதாவிற்கு விளக்கி விட்டே சென்றார் அவர்.

சஹானாவின் கவனம் முழுவதும் கணவனின் மேல் தானிருந்தது. குழந்தை விழித்திருக்கும் போதெல்லாம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனை அதிசயம் போலப் பார்த்தாள் அவள்.

“ஹாஸ்பிட்டல்ல பிள்ளைதானே மாறிப் போகும். ஆனா, இங்க?” என்று கேலியாகச் சொல்லியபடி அவனைப் பார்க்க, அவன் எங்கே அவளைக் கவனித்தான்.

“பிரார்த்தனா குட்டி, அழகு செல்லம், அப்பா பாருங்க” என்று மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் அவன்.

“ஆ, உங்களுக்கு இப்படிக் கொஞ்ச எல்லாம் வருமா சத்யா? இந்தக் குரல் இதுக்கு முன்னாடி எங்க இருந்தது?” என்று ஆச்சரிய மிகுதியில் கத்தியவளை, தலையை மட்டும் உயர்த்திப் பார்த்து முறைத்தான் சத்யா.

“ம்க்கும், அதானே பார்த்தேன். எனக்கு எப்பவும் இந்த முறைப்புதான்” அவள் புலம்ப, சிரிப்பை மறைக்க உதட்டை கடித்தான் சத்யா.

“ஆமா சத்யா, அதென்ன பிரார்த்தனா சொல்லி கூப்பிடுறீங்க?” அவள் கேட்க,

“பொண்ணு பேரு” என்றான், மகளின் கன்னத்தை இரு விரலால் தொட்டு தொட்டு பார்த்தபடி. “ஆ, எண்ட அம்மே. என்னது? அதுக்குள்ள பேர் வச்சுட்டீங்களா? பேர் வைக்க என்னைக் கூப்பிடவே இல்ல.” அவள் அதிர்ந்து கத்த, புருவங்கள் நெரிய மனைவியை முறைத்தான் சத்யா.

“பார்வையைப் பாரு. எப்பவும் முறைப்புதான். ஆனா, பொண்ணைப் பார்த்தா மட்டும் கண்ணுல பாசம் கொட்டுது.” அவள் சலிக்க, கண்ணைச் சுருக்கி முறைத்தான்.

“டி மகளே. நீ கூட என்னைக் கூப்பிடல இல்ல?. அம்மா வராமலேயே உனக்குப் பேர் சூட்டும் விழா முடிஞ்சதா?” மகளைப் பார்த்தபடி சஹானா கேட்க, “வாய், வாய்” என்று முணுமுணுத்தான் சத்யமூர்த்தி.

“இந்த வாய் கூட இல்லனா, உங்க கூட நான் குடும்பம் நடத்த முடியுமா சொல்லுங்க?” என்றவளின் உதட்டில் கை வைத்து அவளின் பேச்சை நிறுத்தினான் சத்யமூர்த்தி.

அவன் கையைப் பிடித்து விரல் கோர்த்துக் கொண்டு, “பாப்பாக்கு உ வரிசையில் பேர் வைக்கதானே சொல்லியிருக்காங்க அவ ராசிப்படி? நீங்க பிரார்த்தனா சொல்றீங்க?” சஹானா கேட்க, “பிரார்த்தனாதான்” முடிவாக முடித்து விட்டான் சத்யமூர்த்தி. மகள் பிறந்து ஒரு வாரத்தில் பொள்ளாச்சி திரும்பி விட்டான் அவன்.

மகளுக்குப் பெயர் சூட்டும் விழாவிற்காக மீண்டும் வண்டிப் பெரியார் வந்தான் அவன். இம்முறையும் அவன் விருப்பம்தான் வென்றது. மகளுக்கு, “பிரார்த்தனா” என்றே பெயர் சூட்டினான்.

மகளுக்கு அவன் வைத்த பெயரை ஒட்டு மொத்த குடும்பமும் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டது.

சஹானா மகளில் மூழ்கிப் போனாலும் கணவனை அதிகம் தேடினாள். சத்யமூர்த்தி மீண்டும் பொள்ளாச்சிக்கும், வண்டிப் பெரியாருக்கும் நடுவில் பயணத் தூரத்தை கூட்டி, குறைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் கண்களுக்குப் புதிதாகத் தெரிந்தாள் அவன் மகள். அவளின் சிரிப்பும், அழுகையும், ஸ்பரிசமும், பால் மணம் வீசும் அவளின் பட்டு மேனியும், அவனுக்குச் சலிக்காமல் சிலிர்ப்பூட்டும். அவளை அதிசயம் போலத் தொட்டுத் தொட்டுப் பார்த்துப் புல்லரித்துப் போவான் அவன்.

“பிரார்த்தனா, தனா குட்டி” அவன் குரல் கேட்டதும் ஒரு மாதமேயான அவன் மகள் பொக்கை வாய் மலர, எச்சில் ஒழுக சிரித்து விட்டால் போதும், சத்யமூர்த்தி, சிரிப்புமூர்த்தியாகி விடுவான்.

“செல்லம் என்ன பண்றீங்க? பால் குடிச்சீங்களா? போர் அடிக்குதா உங்களுக்கு? விளையாட ஆள் வேணுமா? அப்பா பார்த்ததும் சிரிப்பு வருதா?” அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பிரார்த்தனா, “ங்ஙே” சொல்லி விட்டால் முடிந்தது. அவ்வளவுதான், அவனைக் கையில் பிடிக்க முடியாது. வாய் விட்டுச் சத்தமாகச் சிரித்து விடுவான்.

“ஆ, சத்யா? இது நீங்கதானா?” என்று அதிசயிப்பாள் சஹானா. விசித்திரமாக அப்பா, மகள் கொஞ்சல் அவளுக்குக் கடுப்பை கிளப்பி, காதில் புகை வரச் செய்தது.

“பொண்ணைப் பார்த்து பொறாமைப்படாத சஹா” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள் அவள். ஒவ்வொரு முறை சத்யா வண்டிப் பெரியார் வரும் போதும் மகளுக்குப் புதுப் புது உடைகளும், விளையாட்டுப் பொருட்களும் வாங்கி வர, சஹானா தாயாக மனம் குளிர்ந்தாலும், மனைவியாக மனம் தடுமாறினாள். கணவன் தன்னை இப்படித் தாங்கியதில்லை, தேடியதில்லை, கொண்டாடியதில்லை, கொஞ்சியதில்லை. பரிசு பொருட்களால் நிறைத்ததில்லை என்று மனம் சுணங்கினாள் அவள்.

“செல்லம் அப்பாவை தேடினீங்களா?” மகளைக் கையில் ஏந்தி அவன் கேட்க, “நான் தேடினேன்” என்றாள் சஹானா. சத்யா அவளைத் திரும்பிப் பார்க்க, “என்ன பார்க்கறீங்க? நான்தான் உங்க பொண்டாட்டி சஹானா. என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு? மிண்டா பிராணி, நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இப்பத்தான் தெரியும் எனக்கு” உதடு சுளித்து அவள் சொல்ல, உடல் குலுங்க சிரித்து, “போடி” என்று அசட்டையாகச் சொன்னவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் சஹானா.

அவனோ, மகளிடம் மழலை மொழியில் பேசிக் கொண்டிருந்தான்.

“அம்மா..” கத்திக் கொண்டே அறையை விட்டு வெளியில் போனாள் சஹானா. புனிதா விடுமுறையில் இருந்ததால் மகளையும், பேத்தியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார். பிரார்த்தனாவிற்கு மூன்றாம் மாதம் தொடங்கும் போது அவரது மூன்று மாத விடுமுறை முடிந்திருந்தது.

மகள், பேத்தி இருவருக்கும் துணையாக, அவர்களைப் பார்த்துக் கொள்ளப் பெண் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டு வேலையில் சேர்ந்து விட்டார் அவர். சத்யமூர்த்திக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது சஹானாவிற்குப் புரிந்தது.

“அம்மாக்கு மார்னிங் ஷிஃப்ட்தான் சத்யா. இவெனிங் வீட்டுக்கு வந்திடுவாங்க. அதுவரை பாப்பாவை நான் பார்த்துப்பேன். நீங்க டென்ஷன் ஆக வேணாம்” என்று அவள்தான் அவனைச் சமாதானப்படுத்தி, சமாளிக்க வேண்டியிருந்தது. மௌனமாய் அவள் பேச்சை கேட்டு, தன் விருப்பமின்மையை உறுதியாய் பதிவு செய்தவனை, இயலாமையுடன் பார்த்தாள் சஹானா. மகள் என்று வரும் போது எப்படி மாறிப் போனான் இவன் என்றுதான் அவள் மனம் யோசித்தது.

கணவன் மகள் மேல் பொழியும் அந்த எல்லையில்லா, நிபந்தனையற்ற அன்பை வேண்டி, விரும்பி, ஏங்கித் தவித்தது அவள் மனது. அவனோ அதை உணர்ந்து கொள்ளவே இல்லை. மனைவியை முழுவதுமாக மறந்து மகளில் மூழ்கிப் போனான் சத்யா.

“போய்ட்டு வர்றேன் சஹானா” அவளிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறியவனின் கண்கள் அவனைப் பார்த்துப் பொக்கை வாய் காட்டிய மகளின் மேலேயே இருக்க, “ம்ம், போய்ட்டு வாங்க. போய்ட்டு வாங்க. வரணும் இல்ல, வந்துதானே ஆகணும். என்னைக்கு இருந்தாலும், என்கிட்ட வந்துதானே ஆகணும். அப்போ கவனிச்சுக்கறேன்” என்றவளை அவன் முறைக்க, கை நீட்டி அவன் புருவத்தை நீவி விட்டாள் சஹானா.

“பார்த்துப் போங்க” சஹானா சொல்ல, அவளிடம் இருந்து மகளைக் கையில் வாங்கி, வாசம் பிடித்து, உச்சி முகர்ந்து, மென்மையாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு மனைவியிடம் நீட்டினான் அவன்.

“ஒரு முத்தத்துக்குக் கூட வழியில்ல” சத்தமாய்ப் புலம்பினாள் சஹானா. அதைக் கேட்டு சிரித்தபடி காரில் ஏறினான் சத்யமூர்த்தி. அடுத்த முறை அவன், மகளைப் பார்க்க வீடு வர, அவனை வரவேற்றது பிரார்த்தனாவின் அழுகுரல்தான். வீரிட்டு அழுது வீட்டையே குலுங்க செய்து கொண்டிருந்தாள் அவள்.

“செல்லமே, ஏன் அழறீங்க? அம்மா எங்க போனாங்க?” வேகமாய் மகளைக் கையில் அள்ளிக் கொண்டான் அவன்.

“அப்பா, வந்துட்டேன் தங்கம். அழக் கூடாது” அவனது சமாதானத்திற்கு எல்லாம் மசியவில்லை அவன் மகள். பசியில் உதடு பிதுக்கி அடித் தொண்டையில் இருந்து கத்தி, அழுதுக் கொண்டிருந்தாள் அவள்.

“வந்துட்டேன். வந்துட்டேன் குட்டி. ஒரு நிமிஷம்” சஹானா குளியல் அறைக்குள் இருந்து கத்தினாள். அடுத்த நிமிடமே சரியாகத் துடைக்கப்படாத ஈர உடலில் உடையை மாட்டியபடி அவள் கதவைத் திறக்க, கனல் விழிகளுடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி.

“சத்யா, எப்போ வந்தீங்க? வர்றேன்னு சொல்லவே இல்ல? பாப்பாவை என்கிட்ட குடுங்க” ஒரு கணம் தயங்கி பின் மகளை நீட்டினான் அவன்.

சஹானா சட்டென அமர்ந்து பாலூட்ட தொடங்க, “வீட்ல யாரும் இல்லையா? கேர் டேக்கர் எங்க?” என்று கேட்டான் சத்யா.

அவன் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்து, “இருங்க. ஃபீட் பண்ணிக்கிறேன்” என்றாள் சஹானா. ஆனால், மகள் பசியாறியதும் மனைவியைப் பேச கூட விடவில்லை சத்யமூர்த்தி.

“கிளம்பு” என்றான்.

“எங்க சத்யா?” குழப்பத்துடன் அவள் கேட்க, “நம்ம வீட்டுக்கு” என்ற சத்யா, மகளைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து, ஏப்பம் வரச் செய்து கொண்டிருந்தான்.

“இல்ல சத்யா. அம்மா வேலைக்குப் போய் இருக்காங்க. எப்பவும் வர்ற ஆண்ட்டி இன்னைக்கு ஏதோ வேலைன்னு…”

“கிளம்புன்னு சொன்னேன்” அந்தக் குரலை மீற அவளுக்குத் தைரியம் இருக்கவில்லை.

“சத்யா” அவள் மெதுவாக அழைக்க, மனைவியைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் மகளின் உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவன், “வா, அங்க போய்ப் புதுசு வாங்கிக்கலாம்” என்றான். அதிர்ந்துப் போனாள் சஹானா. ஆனால், அதுதான் நடந்தது. அவன் சொன்னதைதான் நடத்திக் காட்டினான். அவசர அவசரமாக அவர்களைக் கிளப்பிக் கொண்டு பொள்ளாச்சி வந்து விட்டான் அவன்.

சஹானா கைக்குக் கிடைத்ததை அள்ளி பையில் திணித்தாள். அம்மா, அப்பாவுக்கு அழைத்துத் தெரியப்படுத்த, இருவரும் அடித்துப் பிடித்து வீடு வந்தனர். சத்யமூர்த்தித் தன் முடிவில் உறுதியாய் நிற்க, “நல்ல நாள் பார்த்து பாப்பாவை கூட்டிட்டு போகலாம்..” என்று ஆரம்பித்த புனிதா கூட, மகளின் முகம் பார்த்து அமைதியானார்.

error: Content is protected !!
Scroll to Top