புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளைப் பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர், நேரிலும் அவளுக்கு நூறு அறிவுரைகள் சொன்னார். அவளுக்குத் தேவையான சத்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, மகளுக்குப் பிடித்த உணவு பொருட்களால் அவள் வீட்டை நிறைத்து விட்டுப் போனார் அவர்.
மருமகள் கர்ப்பம் என்றதும் சுப்புலட்சுமியின் முகத்தில் கூடச் சிரிப்பின் சாயல் வந்து போனது. மனதில் பூரித்து, மகிழவும் செய்தார் அவர்.
அவளோடு மருத்துவரை சந்தித்தார். நன்றாகவே பார்த்தும் கொண்டார். அவளுக்குப் பிடித்ததாக எல்லாம் சமைத்தும் கூடக் கொடுத்தார். ஆனால், பாடிய வாய் எப்படி நிற்கும்? சஹானா நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் போது, ராதாவின் வீட்டில் ஏதோ பணப் பிரச்சனை வர, மீண்டும் அவர்கள் வீட்டில் சூறாவெளி உருவாகியது.
“ராதா சொல்றா, கட்டிட்டுருக்க வீட்டை அப்படியே விடப் போறாங்களாம். இன்னும் ஒரு வருஷத்துக்கு வேலை நடக்காதுமான்னு, சொல்றா. கட்டிட்டு இருக்க வீட்டை இப்படிப் பாதியில் விடலாமா? நீயே சொல்லு தம்பி?” சுப்புலட்சுமி பேசுவதை அசையா பார்வையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சத்யா.
“ஏதோ பணப் பிரச்சனைன்னு அப்பா கேட்டதுக்குச் சொல்லியிருக்கா. அப்பாவும் கொடுக்கிறேன் சொல்லியிருக்கார். அதையும் வேணாம்னு சொல்றா. இந்தப் பொண்ணை வச்சுட்டு நான்” பாலகுமார் மனைவியை முறைத்து விட்டு, தொலைக்காட்சி செய்தியில் கவனம் பதிக்க, அனைவருக்கும் பாலோடு வந்து கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தாள் சஹானா.
“என்னப்பா, நான் பேசிட்டே இருக்கேன். நீ ஒன்னும் சொல்லாம இருக்க?”
“என்னம்மா?” அலுப்புடன் கேட்டபடி, மனைவியிடம் முதலில் பாலை எடுத்து நீட்டினான். அதைக் குடிக்கப் பிடிக்காமல், முகத்தைச் சுருக்கினாலும் கையில் வாங்கிக் கொண்டாள் சஹானா.
“நீ என்னனு ராதா புருஷன்கிட்ட கேட்கலாம் இல்லப்பா?”
“ஆல்ரெடி, கேட்டுட்டேன் மா”
“மாப்பிள்ளை என்ன சொன்னார்?” ஆர்வத்துடன் அவர் கேட்க, பெருமூச்சு விட்டான் சத்யமூர்த்தி.
“பிஸினஸ்ல கொஞ்சம் அடி போல. பணம் அதுல முடங்கி நிக்கிது சொன்னார்”
“எவ்வளவு தேவைனு கேட்டு இருக்கலாம் இல்லப்பா. நாமளே கொடுத்தா சரியா இருக்குமில்ல?” வயிற்று பிள்ளையை, வலியில்லாமல் தரையில் இறக்கினார் சுப்புலட்சுமி.
“சரி வராது” என்று முடித்துக் கொண்டான் சத்யா.
“இப்படிப் பொறுப்பே இல்லாம பேசினா எப்படிப்பா? உன் தங்கச்சி அவ. நீ செய்யாம யார் செய்வா?”
“என்கிட்ட பேசிதான் பில்டர் பார்த்தாங்க. பட்ஜெட் போடும் போதும் நான் கூடவேதான் இருந்தேன். ஒரு கோடிக்கு வீடு கட்ட நினைக்கிறது சரி. கையில் பாதியாவது அதுக்கான பணம் இருக்கணுமில்ல? அப்போ என்கிட்ட பணம் இருக்குனு சொன்னார் மாப்பிள்ளை. நானும் கால்வாசி அமௌன்ட் கொடுத்துருக்கேன். அதுக்கு மேல முடியாது மா. அவங்களுக்கு வசதி குறைவா என்ன? பார்த்துப்பாங்க” மேலே அம்மா பேச இடம் கொடுக்காமல் அவன் எழுந்து விட, அவனோடு இணைந்து நடந்தாள் சஹானா. இருவரும் அறைக்குள் வந்ததும், ஒற்றைப் பார்வையில், கட்டாயப்படுத்தி அவளைப் பாலை குடிக்க வைத்தான் சத்யா. மௌனமாய் அவன் முறைக்க, பேச்சின்றி ஒரே மூச்சில் குடித்து முடித்தாள் சஹானா.
“எனக்கு எதுவுமே பிடிக்கல. உங்களையும்தான்” என்று உதட்டை சுளித்தவள், பேச்சுக்கு மாறாக அவன் மார்பில் தஞ்சமானாள். அனிச்சையாய் அவளை ஆதூரத்துடன் சுற்றியது சத்யாவின் கரங்கள்.
பதினொரு மணி வரை உறக்கம் வராமல் பேசிக் கொண்டேயிருந்தாள் சஹானா. அவனுக்குக் கண்கள் சொருகினாலும் கூட, இமைகளைப் பிரித்து வைத்து அவளுக்கு, “ம்ம்” கொட்டி ஆலாபனை செய்து கொண்டிருந்தான்.
“வாந்தி வர மாதிரி இருக்கு சத்யா”
“நீ பேசாம இருந்தாதானே?”
“அது ரொம்பக் கஷ்டம். நான் என்ன சத்யமூர்த்திப் போல மிண்டா பிராணியா? நான் சஹானா” என்றவள் முகத்தை அஷ்ட கோணலாகச் சுளிக்க, அவளை இழுத்துக் கொண்டு போய்க் குளியல் அறைக்குள் விட்டான் சத்யா. அவள் தலையைத் தாங்கிப் பிடித்தான், வயிறு வாய் வழியே வெளியேறிய உணர்வில் சோர்ந்து, நின்ற வாக்கில் பின்னால் சாய்ந்தாள் சஹானா. அப்படியே அவளை அணைத்துப் பிடித்தான் சத்யா. கடந்த இரண்டு மாதங்களாக இதுதான் அவளுக்கு வாடிக்கையாகியிருந்தது. அவள் வாய் கொப்பளித்து, முகம் கழுவ உதவி, மீண்டும் படுக்கைக்கு வந்தனர்.
“கால் வலிக்கிற மாதிரி இருக்கு சத்யா”
“அம்மா இதெல்லாம் நார்மல் சொல்றாங்க”
“எந்தப் பக்கம் படுக்கணும் மறந்துப் போச்சு சத்யா. எப்படிப் படுத்தாலும் தூக்கம் வரல” எதையாவது சொல்லி சலித்துக் கொண்டேயிருந்தவளை நெருங்கி அணைத்துக் கொண்டான். வழக்கம் போலச் சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் சஹானா. மனைவியின் உறக்கம் அவனையும் தழுவியிருந்தது. காலையில் வழக்கமான, பழக்கமான நேரத்தில் சஹானாவால் எழுந்து கொள்ளவே முடியவில்லை. அப்படியும் எழுந்தால், தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. பல் துலக்க வாய் கொப்பளித்தால் கூட வாந்தி வந்தது. அதற்கு மேல் எப்படி உணவை குறித்து யோசிப்பாள் அவள்.
“சாப்பிடு, வாந்தி வந்தா பார்த்துக்கலாம்” என்று அடிக் குரலில் மிரட்டும் கணவனை அடித்து விடுவதைப் போலப் பார்ப்பாள் சஹானா.
“எல்லாம் உங்களாலதான். ஒழுங்கா நீங்க வாங்கிச் சுமங்க, உங்க பிள்ளையை” அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிரித்து விடுவான். அந்தச் சிரிப்பில் மயங்கினாலும், “கள்ளன்” என்று ரசனையுடன் முணுமுணுத்து, கடுமை காட்டுவாள் சஹானா. அன்று காலை உணவை இருவரும் உண்டு கொண்டிருக்க, அங்கு வந்து அமர்ந்தார் சுப்புலட்சுமி.
“சாப்பிட்டீங்களா மா?” கேட்டான் சத்யா.
“ம்ம். எனக்கென்ன? அப்பவே சாப்பிட்டுட்டேன்” என்று அலுத்தவர், “ராதா நேத்து கூட வீட்டுக்கு வந்தாப்பா” என்றார்.
“தெரியும். சஹானா சொன்னா” என்றவனை முறைத்தாள் சஹானா. “என்னை ஏன்யா கோர்த்து விடுற?” என்றது அவள் பார்வை.
“என்கிட்ட போன்ல பேசினா மா” அவன் சேர்த்து சொல்ல, “அவ வீட்டு வேலை அப்படியே நிக்குது தம்பி. நம்ம வீடு வளர்ற மாதிரி, அவ வீடும் வளரனும் இல்ல?” சஹானாவின் வயிறை கண்ணசைவில் சுட்டிக் காட்டி அவர் சொல்ல, ‘எண்ட அம்மே’ என்று மனதினுள் அலறினாள் சஹானா.
“பொள்ளாச்சி முழுக்கத் தேடி, நல்ல வசதியான வீட்ல கொடுத்து இருக்கோம். நம்ம அளவுக்கு அவங்ககிட்டயும் பணம் இருக்கு. ஒரு கோடி அவங்களுக்குப் பெரிய விஷயம் இல்ல. கட்டட்டும்” என்று எழுந்து கைக் கழுவிய சத்யா, அதன் பின் அந்தப் பிரச்சனையையும் கை கழுவி விட்டான்.
அவ்வளவுதான். சுப்புலட்சுமி அதுவரை நல்ல அம்மாவாக இருந்தவர், மீண்டும் மாமியார் அவதாரத்துக்கு மாறினார்.
“நீ மாசமா இருக்க, ஃபேக்டரி போகாம வீட்ல இரு”
“உங்க அம்மா உன்னைப் பார்க்க வரலையா? நான் எல்லாம் வாரா வாரம் போய் ராதாவை பார்ப்பேன்”
“உனக்கு நாலு மாசம் ஆச்சு, என்ன வயிறே வைக்கல”
“நீ சொன்னா, சத்யா கேட்பான். உன் நாத்தனாருக்கு ஹெல்ப் பண்ண சொல்லு உன் புருஷனை”
“அவனைக் காசு கொடுக்க வேணாம்னு நீதான் சொன்னியா?” மாற்றி மாற்றிப் பேசும் மாமியாருக்கு பயந்தே கணவனோடு தொழிற்சாலை சென்றாள் சஹானா. அவளுக்கு அது லேசாகச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும், வேலைப் பார்க்க, கூடுதலாகக் கணவனோடு எப்போதும் இருக்க அவளுக்குப் பிடித்தது. பார்வையில், கவனம் இல்லா கவனிப்பில், ஸ்பரிசத்தில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தான் சத்யா. அது சஹானாவிற்கு அத்தனை பிடித்தது. கல்யாணமான புதிதில் அவளின் தோழி ரோஹிணியிடம் கிண்டலாகக் கூடச் சொல்லியிருக்கிறாள் அவள்.
“எப்படிச் சஹா? லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா?” என்று ரோஹிணி கேலி செய்ய, “ம்ஹூம். எங்க கல்யாணம் வித்தியாசமானது” என்றாள் கண் சிமிட்டி, “எப்படி?” என ரோஹிணி கேட்க,
“அவருக்கு லவ் மேரேஜ். எனக்கு அரேஞ்ச்டு மேரேஜ்” கிண்டலாக நாக்கை துருத்திச் சொல்வாள் சஹானா. ஆனால், இப்போது கணவனின் மேல் காதல் வந்திருந்தது. அவனைப் பிடித்தது. அவனது அண்மை பிடித்தது. அவனது பிடித்தங்கள் பிடித்தது. அவளின் கண் பார்த்தே காரியங்கள் அனைத்தையும் செய்யும் அவன் மேல் நேசம் நெடுமரமாய் வளர்ந்து நின்றது. அவனையே விழிகளை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்து, கேள்வியாகப் புருவம் உயர்த்தினான் சத்யா. சுற்றிலும் பார்வையை ஓட்டி விட்டு, அவனது மீசை பிடித்து இழுத்து, உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு குறும்பாக உதடு கடித்தாள்.
“ஆபீஸ்ல இருக்கோம்” சினத்திற்குப் பதில் அரிதாகச் சிரிப்புத் துளிர்த்திருந்தது அவன் உதட்டில்.
“சிரிக்கண்டா” என்று அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே சொன்னாள் சஹானா. மறுநாள் அதிகாலையில் மகளைப் பார்க்க வந்து விட்டார் புனிதா. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தவறாமல் வந்து விடுவார் அவர். இம்முறை வளைக்காப்பு பற்றி அவர் பேச, “கணவனைப் பிரிய வேண்டுமா?” என்று மனதில் திடுக்கிட்டு விழித்தாள் சஹானா.
“இப்பவேவா வளைகாப்பு பண்ணுவாங்க மா?” என்று அப்பாவியாகக் கேட்ட மகளை, கன்னம் வழித்து நெட்டி முறித்தார் புனிதா.
“அஞ்சாவது மாசம் ஆகுது இல்ல சஹா? அஞ்சு, ஏழு, ஒன்பது இப்படிச் செய்வாங்க டா”
“தெரியும் மா. ஆனா…”
“சரி, விடு. ஏழாம் மாசம் செய்துக்கலாம்” என்றவர், அதையே சுப்புலட்சுமியிடமும் சொல்லி விட்டு கிளம்பினார். சத்யமூர்த்தித் துணை வர, அம்மாவோடு மருத்துவமனை சென்று திரும்பி வந்திருந்த சஹானாவிற்கு அன்றிரவு அம்மாவை அதிகம் தேடியது.
“சத்யா”
“ம்ம்”
“நான் ஊருக்கு போகட்டா”
“ஒன்பதாம் மாசம் போறேன் சொன்ன?”
“இப்பவே போகட்டா?” மெல்ல தலையைத் தூக்கி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“தூங்கு”
“முடியாது. பதில் சொல்லுங்க”
“தூங்கு” கட்டளையாய் வந்து விழுந்தது வார்த்தை.