“சத்யா, பிளீஸ். இன்னும் கொஞ்சம்..” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் சஹானா. மூன்று இட்லிகளைச் சாப்பிடுவதற்கு அப்படி முகம் சுளித்தான் அவன். கணவனை உறுதியாக, எப்போதும் சுறுசுறுப்பாகப் பார்த்தே பழகியிருந்த சஹானாவிற்குக் கடந்த இரண்டு வாரங்களாக அவன் இப்படிச் சோர்ந்து இருப்பதைப் பார்க்கவே முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் இருந்து வீடு திரும்பும் போது அதிகச் சோர்வில் துவண்டிருந்தது அவன் முகம்.
“நீ ட்ரைவ் பண்ணு, சஹானா” என்று கார் சாவியை அவளிடம் கொடுத்து விட்டு, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடியவன், அசதியில் உறங்கியிருந்தான். வீட்டை அடைந்ததும், “சத்யா” என்று அவனைத் தொட்டு எழுப்பிய சஹானா, அவன் உடல் சூடு உணர்ந்து, “உங்களுக்கு ஃபீவர் அடிக்குது சத்யா. என்கிட்ட ஏன் சொல்லல நீங்க?” என்று பதறினாள்.
இரவு கஞ்சியும், காய்ச்சல் மாத்திரையும் போட்டு படுத்தவனுக்கு உடல் சூடு குறைய முழுதாக இரண்டு நாட்கள் ஆனது. அன்றே தொழிற்சாலை கிளம்பி விட்டான் அவன். சஹானா தடுத்தும் அவன் கேட்பதாக இல்லை. உடல் முழுதாக ஓய்வை கேட்டு மீண்டும் சுணங்கி, காய்ச்சலுடன் வீடு வந்தான். இம்முறை மருத்துவமனை போகும் அளவுக்குக் காய்ச்சலும், உடல் வலியும் அவனுக்குத் தீவிரமாகி இருந்தது. அப்போதும் வாய் திறந்து வலிகளைப் பகிராதவனை, கண்ணில் தேங்கி நின்ற வலியுடன் பார்த்தாள் சஹானா.
மருத்துவமனை வாசம் அவனை நன்றாக ஓய்வெடுக்கச் செய்தது. வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறை என்று வீட்டில் நில்லாமல் எப்போதும் தொழிலை பார்க்க ஓடியவன், இப்போது போதிய ஓய்வை எடுத்தான். மருத்துவர்கள் இரத்த பரிசோதனைகள் எடுத்துப் பார்த்தனர். ஆனால், ரத்ததில் எந்தத் தொற்றும் இல்லை. எல்லா அறிக்கையும் இயல்பாகவே இருந்தது. காய்ச்சலின் தீவிரம் மட்டும் அவனுக்குக் குறையவேயில்லை. சஹானாதான் பதறிப் போனாள். சதா கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்தி, அழுத்தமான பார்வையுடன் வலம் வரும் சத்யமூர்த்தியை இப்படிப் படுக்கையில் பார்க்கவே முடியவில்லை அவளால்.
“ஜஸ்ட் ஃபீவர்தான் சஹானா” அடர்த்தியான குரலில் அவளுக்கு ஆறுதல் சொன்னான் கணவன்.
“போங்க. உடம்பு மேல அக்கறையே இல்ல உங்களுக்கு”
“ம்ம்” என்றவனை முறைத்தாள் அவள். சிரிப்பில் பிரிந்தது அவன் உதடுகள். அதில் மயங்கி, “கள்ளன்” என்று முணுமுணுத்தாள். பற்கள் தெரிய சிரித்தான் சத்யா. அமர்ந்த வாக்கில் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் சஹானா. இருவரின் மோன நிலையையும் கலைத்தது சுப்புலட்சுமியின் வருகை.
“இப்போ எப்படிப் பா இருக்கு? எப்போ வீட்டுக்கு போகலாம்னு ஏதாவது சொன்னாங்களா? சும்மா, சாதாரணக் காய்ச்சலுக்கு உன்னை இப்படிப் படுக்க வச்சு காசு பார்க்கறானுங்க”
“அம்மா” என்று அதட்டி அவரின் புலம்பலை நிறுத்தினான் சத்யமூர்த்தி.
“சரி, நான் எதுவும் பேசல” முறைத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் அவர்.
“சஹானா, இங்க இருக்க லேடி டாக்டரும் நல்லா பார்ப்பாங்களாம். உனக்கு என்னனு பார்த்திடலாமா?” மகனையும், மருமகளையும் பார்த்தபடி அவர் கேட்க, எரிச்சலுடன் கண்ணை உருட்டினாள் சஹானா.
“அம்மா..” குரல் உயர்த்தாமலேயே அவரின் வாயை அடைத்தான் சத்யமூர்த்தி.
“ஏன், எப்பப் பாரு இதையே கேட்டுட்டு இருக்கீங்க அத்த? நானும் எத்தனை டைம் இதே கேள்விக்குப் பதில் சொல்றது?” சஹானா கோபத்துடன், ஆனால் பொறுமையாக நிதானமாகக் கேட்க, மகன் முன்பு அவளைப் பேச இயலா கோபத்துடன் வெறித்தார் சுப்புலட்சுமி.
“நான் நிறைய முறை உங்களுக்குப் பதில் சொல்லிட்டேன். எனக்கு உங்களை மாதிரி பேச தெரியாம இல்ல. உங்களைப் பதிலுக்குப் பதில் பேச விரும்பாம ஒதுங்கிப் போறேன். உங்களைப் பேசிட்டு, நாம எப்படி ஒரே வீட்ல இருக்கறது? நாளைக்கே நாம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க வேண்டாமா? உங்களைப் பேசிட்டு இவர்கிட்ட நான் என்ன பதில் சொல்றது? என்னை எப்பவும் இந்த மாதிரி டஃப் சிட்டுவேஷன்ல நிக்க வைக்காதீங்கத்த. குழந்தை என்ன டாய்ஸா? அமேசான்ல ஆர்டர் பண்ணி, நாளைக்கே டெலிவரி பண்ண? எங்களுக்கும் ஆசை இருக்கு. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றோம். முதல்ல உங்ககிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லப் போறோம்?” படபடத்து அவள் பொரிய,
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பேசுற நீ? நீயாவது, இவளை என்னனு கேட்கறியா தம்பி? எப்படிப் பேசுறா பாரு” மகனிடம் அவர் முறையிட,
“பேசாம இருங்க மா. உங்ககிட்ட, நான் இதை எதிர்பார்க்கல” உணர்ச்சிகள் இல்லா குரலில் சொல்லி விட்டு, கண்ணை மூடிக் கொண்டான் சத்யா. அதன் பின் சுப்புலட்சுமியின் கேள்விகளும், புலம்பலும் கொஞ்சம் குறைந்தது என்றே சொல்ல வேண்டும்.
அடுத்த மூன்றாம் நாள் சத்யமூர்த்திக் குணமாகி வீடு திரும்பியிருந்தான்.
அவனை வலுக்கட்டாயமாக வீட்டில் பிடித்து வைத்தாள் சஹானா. அவனது பணியை அவளும் கற்றுத் தேர்ந்திருந்ததினால், வீட்டில் இருந்தபடியே அனைத்தையும் கவனித்தாள் அவள். சமயங்களில் தேவை ஏற்பட்டால் தொழிற்சாலை சென்று வந்தாள்.
சத்யமூர்த்திக் கையெழுத்திட வேண்டிய கோப்புகள் வீடு தேடி வந்தன. காடே தனதெனச் சுற்றும் சிங்கத்தைச் சிறையில் அடைத்தது போல இருந்தது, சத்தியமூர்த்தியை பார்க்க. “சஹானா, ஃபேக்டரி போகணும்” என்று மிரட்டுபவனை ஒற்றைப் பார்வையால் அடக்கும் வித்தை தெரிந்திருந்தது அவளுக்கு.
“என்னடி?” பல்லைக் கடித்தான்.
“எந்தாடா?” இடுப்பில் கை வைத்துப் புருவங்கள் உயர்த்தினாள்.
“அடிப்பாவி. என்னடா சொல்ற?” முறைத்த முகத்தில் கண்கள் மட்டும் சிரிக்க, “சிரிக்கண்டா” சீறியவளை, பிடித்து இழுத்து சிணுங்க வைத்தான். அன்றிரவே மீண்டும் காய்ச்சலில் படுத்து விட்டான் அவன்.
இதோ, இன்றோடு இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
“போதும், சஹானா” அவள் கையில் இருந்த தட்டை மெல்ல விலக்கியபடி சொன்னான் சத்யா.
“ஓகே. எழுந்திருங்க. மாடியில கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்” சொன்ன சஹானா தட்டை சென்று சமையல் அறையில் வைத்து விட்டு வந்தாள். மனைவி நீட்டிய சுடுநீரை குடித்து விட்டு, அவளோடு மாடிப் படியேறினான் சத்யா. அவள் பேசிக் கொண்டே நடக்க, மௌனமாய் அவளுடன் இணைந்து நடந்தான் சத்யா. மறுநாளே இருவரும் ஒன்றாகத் தொழிற்சாலை செல்லத் தொடங்கினார்கள். இரண்டாம் நாள் சஹானா காய்ச்சலில் படுக்க, பதட்டமும், கோபமுமாகப் புருவங்கள் நெரித்து, தலைக் கோதினான் சத்யா. அன்றிரவே அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டான் அவன்.
மருத்துவர் சிறுநீர், ரத்த பரிசோதனைகளை எழுதிக் கொடுத்த கையோடு சஹானாவிடம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று ஏதோ தோன்ற, அவளிடம் சம்பிரதாயக் கேள்விகள் கேட்டு, அவர்களை அறையில் காத்திருக்கச் சொன்னார். இரண்டு மணி நேரங்கள் கழித்துப் பரிசோதனை அறிக்கை வர, அவளிடம் அதைக் கொடுத்து விட்டுச் சென்றார் செவிலி. மெல்ல பிரித்துப் பார்த்தவள், “சத்யா” அதிர்ந்து கத்தினாள் சஹானா. அலைபேசிக்கு காதைக் கொடுத்திருந்தவன், பட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான்.
அவன் அருகில் நெருங்கி வந்ததும், “சத்யா அச்சனாகான் தயாரானோ? (அப்பாவாக ரெடியா?)”, படுக்கையில் இருந்து எக்கி, நின்றிருந்தவனின் கழுத்தை வளைத்துக் காதில் அவள் கேட்க, மிரண்டு விழித்தான் சத்யா. கணத்தில் அவள் சொன்னதின் அர்த்தம் புரிய, மனைவியை இமைக்க மறந்துப் பார்த்தான்.
“சத்யா” என்றாள் கிசுகிசுப்பாக. சாதாரணமாகவே அவனுக்குப் பேச வராது. இப்போது சந்தோஷத்தில் சுத்தமாய் வார்த்தைகள் தீர்ந்து போனது அவனுக்கு. சஹானாவை அழுத்தமாய் அணைத்தான். அந்நிமிடம் அவனின் ஸ்பரிசமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.
கர்ப்பம் உறுதியானதும் அதற்கேற்ப மருந்துகளை அவளுக்குக் கொடுக்க, காய்ச்சல் முற்றிலுமாகக் குணமாகி, இரண்டு நாள்களில் வீடு திரும்பி விட்டார்கள் அவர்கள்.