அன்பின் ஆலாபனை – 13 (2)

சஹானாவிற்கு அவர்கள் வீட்டுக் கதையெல்லாம் என்னவென்று கேட்க வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“ஹாய், சஹானாதானே?” என்றபடி இளம் பெண் ஒருத்தி வந்து அவள் அருகில் நின்றாள். அங்கிருந்த ஒருவரை கைக் காட்டி, “புஷ்பா அத்த மருமக நான். உங்களுக்கு நாத்தனார் முறை. வாங்க, அந்தப் பக்கம் போகலாம்” என்று அழைக்க, அவளைப் பகவதியை பார்ப்பது போலப் பயபக்தியுடன் பார்த்தாள் சஹானா. அந்தக் கூட்டத்தில் இருந்து தப்பித்ததும், “தேங்க்ஸ்” என்றாள், மனதார.

“எனக்கும் இந்த அனுபவம் இருக்கு” என்று கண்ணடித்துச் சிரிப்புடன் சொன்ன நித்யா, அவள் கணவனை அறிமுகப்படுத்தி, அவனிடம் இருந்த குழந்தையை வாங்கிச் சஹானா கைகளில் கொடுத்தாள். பஞ்சு பொதியை போன்ற குழந்தையைக் கையில் சுமக்கையில், மனதே லேசாகி போகச் சஹானாவிற்குக் குழந்தை ஆசை மேலெழுந்து நின்றது. சத்யா, சஹானா கலவையில் சாந்தமாய், சகலமுமாய் ஒரு குட்டி பூங்குவியல். அவளுக்குக் கற்பனையே இனித்தது என்னவோ உண்மைதான். ஆனால், கணவனின் மேலிருந்த கோபம் வீம்பை வளர்க்கச் சொன்னது. மாமியாருக்காக மகவா என்றே யோசித்தாள் அவள்.

அன்று மாலை வரை அவளை அழைக்கவில்லை சத்யமூர்த்தி. இத்தனை மாதங்களில் கணவனின் இந்தப் போக்கு அவளுக்குப் பழகியிருந்தது. அவனுக்கு ஏதேனும் சரியான காரணம் இருக்கும் என்பதும் அவளது ஆழ் மனதுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனாலும், கண்மூடித்தனமாகக் கணவன் மேல் கோபம் வளர்த்துக் கொண்டாள் சஹானா. அதற்குக் காரணங்களை அவனேதான் அள்ளிக் கொடுத்தான்.

அன்றிரவு நேரம் சென்று வீடு திரும்பிய சத்யமூர்த்தி, “கோபமா சஹானா?” ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் தோள் தொட்டு மெல்ல அசைத்து கேட்டான்.

“தொடாதீங்க” சீறினாள் மனைவி.

“சஹானா” ஆழ்ந்த அமைதியான குரல். எதற்கும் பதறாத அவன் குணத்தை நினைக்கையில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“சஹானாக்கு என்ன வச்சிருக்கீங்க?” சினந்து, எகிறிக் கொண்டு போனாள்.

அவள் கண்களை ஏறிட முடியாமல், தலை குனிந்தான் சத்யா.

“சத்யா” கோபமாக அழைத்தாள். மெல்ல நிமிர்ந்து மனைவியைப் பார்த்தவனின் கரங்கள் அனிச்சையாய் தலையைக் கலைத்துக் கோதியது.

“நீங்க சத்தியமாயிட்டு என்னைப் பிடிச்சுதான் கல்யாணம் பண்ணீங்களா?” என்ற அவளின் கேள்வியில் அதிர்ந்து போய் அவன் பார்க்க, “எனக்கு அம்மா வீட்டுக்கு போகணும். உங்களை விட்டுத் தூரமா போகணும். இந்த வீட்டை விட்டுத் தூரமா போகணும்” என்றாள் தீர்க்கமாக.

“உங்க பக்கத்தில் இருந்தாலும் தூரமா இருக்கப் போல இருக்கு. ஒருவேளை தூரம் போனா, நெருங்கி வருவோமோ, என்னவோ?” என்றவளை விசித்திரமாகப் பார்த்தான் சத்யா. அவர்களுக்குள் நெருக்கத்திற்கு எல்லாம் குறைவே இல்லை எனும் போது, மனைவியின் வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“என்ன பேசுற சஹானா?”

“தமிழ்தான். மலையாளமா பேசினேன்? அப்போ கூட உங்களுக்கு மலையாளமும் புரியுமே?” என்று அவள் முறைக்க,

“ஃபேக்டரியில் வேலை இருந்தது சஹானா” என்றான்.

“அப்புறம்..” அவள் நக்கலாகக் கேட்க, “ஜப்பான் ஷிப்மென்ட், மும்பையில் மாட்டிட்டு நிக்குது. என்னனு விசாரிச்சு க்ளியர் பண்ணுறதுக்குள்ள…” சொல்லிக் கொண்டே போனவன், மனைவியின் கண்களைப் பார்த்துப் பேச்சை நிறுத்தினான். அவள் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது அவன் மேலான கோபம்.

“நாளைக்கு நான் அம்மா வீட்டுக்கு போறேன் சத்யா. ஐ நீட் அ ப்ரேக். பிரிவு ஒருவேளை என்னோட அருமையை உங்களுக்கு உணர்த்தலாம். நீங்க,என்னைத் தேட மாட்டீங்க தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசை”

“நீயா எதையாவது நினைச்சுட்டு பேசாத” லேசாய் குரலில் கோபம் எட்டிப் பார்க்கச் சொன்னான் சத்யா. பிரிவு என்ற வார்த்தை அவனை மனதில் திடுக்கிட செய்தது. அதிர்ச்சியில் வார்த்தைகள் சுத்தமாய் மறந்து போனது அவனுக்கு.

“நானா, நினைச்சேனா? சொல்ல மாட்டீங்க பின்ன? நீங்களா என்னைக்காவது, ஏதாவது சொல்லி இருக்கீங்களா? எனக்காகப் பேசி இருக்கீங்களா? ஏதாவது ஏடாகூடமா செஞ்சு உங்கம்மாகிட்ட என்னை மாட்டிதான் விடுறீங்க. எனக்காக எப்பவாவது அவங்ககிட்ட பேசி இருப்பீங்களா நீங்க?” படபடவென்று அவள் பொரிய, அவனிடம் மௌனம் மட்டுமே.

“உங்க அம்மாக்கு கொஞ்ச நாள் நிம்மதியை தரலாம்னு இருக்கேன்.” அவள் உறுதியாகச் சொல்ல,

“இன்னைக்கு என்ன நடந்தது?” என்று அப்போதுதான் முக்கியக் கேள்வியைக் கேட்டான் சத்யமூர்த்தி.

“அதே பழைய கதைதான் மிஸ்டர் சத்யா.” என்று நக்கலாகச் சொன்னவள், “கேரளாவா? நம்ம இனம் இல்லையா? எப்படிப் பெண் எடுத்த? லவ் மேரேஜா? என்ன செஞ்சாங்க அவங்க வீட்ல? குழந்தை இல்லையா? டாக்டர் பார்த்தியா? ஏதாவது குறை இருக்கப் போகுது?” மூச்சைப் பிடித்துக் கொண்டு அவள் சொல்ல, “சஹானா, நான் அம்மாகிட்ட பேசுறேன்” அவள் கைப்பிடித்துச் சொன்னான் அவன்.

“ஒன்னும் வேணாம்” அவன் கையை மூர்க்கமாக உதறினாள் சஹானா.

“என் மேல என்ன வேணாலும் கோபம் இருக்கட்டும். குறைகள் சொல்லட்டும். ஆனா, எல்லாமே வீட்டுக்குள்ள இருக்க வரை சரி. எனக்குப் பிரச்சனையில்ல. நான் எதிர்த்து பேசினதில்ல. கோபப்பட்டது இல்ல. ஆனா, நாலு பேர் முன்னாடி, என்னை அத்தை விட்டுக் கொடுக்கலாமா? நான் உங்க வைஃப் இல்லையா? அவங்க மருமகள் இல்லையா? என்னைத் தலைகுனிய வைக்கலாமா, அவங்க? நாலு பேர் முன்னாடி என்னைத் தாழ்த்தி காட்டி, உங்களைதான் அசிங்கப்படுத்துறாங்க அத்த.” அவன் வார்த்தைகள் இன்றி அவள் கைப் பிடித்து வருட, அவளின் கோபத்தின் அளவு உயர்ந்து கொண்டே போனது.

“நான் இதுவரை இப்படி அசிங்கப்பட்டதே இல்ல சத்யா. நான் பேச வாயை திறந்தா முறைக்கறாங்க. ரொம்பப் பேசுறா சொல்றாங்க. நீங்க என் கூட இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது தானே?” அவள் ஆணித்தரமாகக் கேட்க, அவனிடம் பதிலில்லை. அவளை இம்முறை சமாதானப்படுத்த விடவும் இல்லை சஹானா. அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்திருக்கலாம் அவள். ஆனால், கோபத்தில் கொந்தளித்த மனதை குளிர விடவில்லை அவள். மறுநாள் மாலையில் கேரளா கிளம்ப மனதளவில் தயாராகி, கணவனிடம் காலையிலேயே சொல்லி விட்டாள் சஹானா.

“ம்ம். நான் வந்து ட்ராப் பண்றேன். பஸ்ல டிக்கெட் புக் பண்ணாத” என்றவனை, எரித்து விடுவது போல் பார்த்தாள் சஹானா.

‘போகாத. வீட்ல இரு. ஐ வில் மிஸ் யூ சாரி, இனி மேல் உன்னோட வருவேன்.’ இப்படி எத்தனையோ சமாதானங்களை எதிர்பார்த்த சஹானாவிற்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. கணவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தது, பார்த்தபடி நின்றிருந்தாள் அவள். அவளுக்கு வாழ்க்கை அதன் வண்ணங்களை இழந்து வெறுமையாகத் தெரிந்தது. அப்பாவின் பாசத்தை, அம்மாவின் கிண்டலை, நக்கல் பேச்சை, தோழமையைத் தேடியது அவள் மனது. எல்லாவற்றையும் விடப் பிறந்த ஊரை தேடியது அவளுக்கு. பொள்ளாச்சியில் பசுமைக்குக் குறைவில்லை என்றாலும், கேரளத்தின் அழகு தனிதானே? மனதை குளிர்விக்கும் அழகு அது. ஒருவித ஏக்கத்துடன் தாய் வீடு செல்ல விரும்பினாள் அவள். ஆனால், கணவனைப் பிரியவும் அவளுக்கு மனமில்லை என்பதை ஒத்துக் கொள்ளதான் வேண்டும்.

“நான் பஸ்ல போறேன். உங்களுக்கு ஃபேக்டரியில் நிறைய வேலை இருக்கும்” நக்கலாக, அசட்டையாக அவள் சொல்ல, சட்டெனக் கை நீட்டி, அவளை அருகில் இழுத்தான் சத்யமூர்த்தி. அவ்வளவுதான். கோபத்தில் கதகளி ஆடி விட்டே ஓய்ந்தாள் சஹானா. மனதில் இருந்த கோபம் எல்லாம் வார்த்தைகளாக வெளிவந்திருந்தது. அவளின் பேச்சை சத்தமின்றிக் கைக் கட்டி அமைதியாய் நின்று கேட்டுக் கொண்டான் சத்யா.

“சஹா, சஹானா..” அவர்களின் அறைக் கதவு பலமாகத் தட்டப்பட, புனிதாவின் குரலில், அதிர்ந்து போய், பதறி கணவனை விலக்கி தள்ளினாள் சஹானா.

“அம்மா…” என்றாள், அவனிடம் பதற்றத்துடன்.

“ம்ம். ஆமா. வா, வெளில போய் என்னனு பார்க்கலாம்” சத்யா சொல்லி விட்டு, கதவை திறக்க போக, “நீங்க.. நீங்க.. அம்மாவை வரச் சொன்னீங்களா?” சந்தேகத்துடன் அவள் கேட்க, அவளை முறைத்துக் கொண்டே போய்க் கதவை திறந்தான் சத்யமூர்த்தி. புனிதா மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். மருமகனிடம் நலம் விசாரித்தார். வீட்டில் சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்ததும், மகளைத் தனியாகப் பிடித்துக் கொண்டார் அவர்.

சத்யமூர்த்தி, அப்பாவுடன் தொழிற்சாலை சென்று விட, புனிதாவும், முரளிதரனும் மகளின் அறையில் இருந்தனர்.

“என்ன சஹா பிரச்சனை? மாப்பிள்ளை கூடச் சண்டைப் போட்டுட்டு இருந்த போல? இப்படியா வெளில கேட்கிற மாதிரி சத்தம் போடுவ? உங்க மாமியார், இதுக்கெல்லாம் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

புனிதா கேட்க, பதிலின்றிக் கையைப் பிசைந்துக் கொண்டிருந்தாள் சஹானா. அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்த புகார்களைப் படிக்க விரும்பவில்லை அவள். பெற்றோரை வருத்த விரும்பவில்லை அவள். புனிதா தனது நக்கல் நையாண்டியை விட்டுவிட்டு மகளுக்கு வண்டி வண்டியாய் அறிவுரை வழங்கி விட்டு, அன்று மாலை கிளம்பினார்.

அவரோடு பிறந்த வீடு செல்லவே விரும்பினாள் சஹானா. ஆனால், கணவனோடு சண்டை போட்டு வீடு வருகிறாள் என்று புனிதா எடுத்துக் கொள்வார் என்று தோன்ற ஆசையை அடக்கிக் கொண்டு நின்றாள்.

புனிதா கிளம்பும் முன் அவரை வழியனுப்ப வந்த சுப்புலட்சுமி, “கல்யாணமாகி ஒரு வருஷமாகப் போகுது. என்ன ஏதுன்னு, உங்க பொண்ணுக்கிட்ட விசாரீச்சிங்களா? உங்ககிட்டயாவது ஏதாவது சொன்னாளா? இந்தக் குடும்பக் கட்டுப்பாடு எல்லாம் சரி வராது. சீக்கிரம் குழந்தைப் பெத்துக்கறது நல்லதுனு அவளுக்குப் புத்தி வர்ற மாதிரி நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க.” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, அவரை ஆச்சரியமாகப் பார்த்தார் புனிதா.

“சம்மந்தி, நான் பேசுறேன் சஹாகிட்ட” என்று புனிதா சொல்ல, “நீங்க சொல்லி புத்தி வந்தா சரிதான்” என்றார் சுப்புலட்சுமி.

தனிமையில் மகளின் கன்னம் வருடி, “சஹாக்கு குழந்தையா?” என்று பெருமூச்சு விட்டார் புனிதா. அதில் ஆசுவாசப் பெருமூச்சு வந்தது சஹானாவிற்கு. அம்மாவுக்கு விடைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியவள், தான் வீடு செல்லும் எண்ணத்தைக் கை விட்டாள்.

சஹானா, சத்யா இருவருக்கும் நடுவில் மெல்லிய இடைவெளி விழுந்திருந்தது. அதைத் தாண்ட அவள் விடவில்லை. அவன் விரும்பினாலும், வழி கிடைக்கவில்லை. முழுதாய் மூன்று நாள்களைக் கடப்பதற்குள் தவித்துப் போனான் சத்யா.

“சஹானா” அவனுக்கு முதுகுக் காட்டி படுத்திருந்தவளை, வலுக்கட்டாயமாகப் புரட்டினான். முகத்தை அடமாக உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள் சஹானா. அவன் உதடுகள் சிரிப்பில் வளைய, முறைத்தாள் அவள்.

“கோபமா?”

“மிண்டா பிராணி. கையை எடுக்கு. இல்லெங்கில் கொன்னு களையும்” பல்லைக் கடித்துக்கொண்டு அவள் சொல்ல, பலமாகச் சிரித்தான் சத்யா.

“சிரிக்கண்டா” (சிரிக்க வேண்டாம்) மிரட்டியவளின் உதட்டில் நெளிந்தது அவள் மறைக்க முயன்றும் முடியா புன்னகை. கணவனின் சிரிப்பில் அது இன்னும் விரிய, சத்தமின்றி அதைத் திருடிக் கொண்டான் சத்யமூர்த்தி. சஹானாவின் கரங்கள் சம்மதத்துடன் சத்யாவை சுற்றி இறுக்கியது.

பிரிவை பற்றிப் பேசி அவனை அதிர செய்தவளை மனதால் கூடப் பிரிய மனமில்லாமல் இறுக்கினான் சத்யா. நெருக்கத்திலும், வார்த்தையால் நெருக்கம் காட்டாதவனை இன்னுமே எதிர்ப்பார்ப்போடு இறுக்கினாள் சஹானா.

செயலில் அன்பைக் காட்டியவனுக்குச் சொற்கள் தேவைப்படவில்லை. வார்த்தைகளில் வாழ்பவளை அது வருத்தம் கொள்ளச் செய்தது.

error: Content is protected !!
Scroll to Top