அன்பின் ஆலாபனை – 12 (2)

“முடியாது. நீ கேட்டாலும் முடியாதுதான்” அவள் கேள்வி கேட்கும் முன்னே பதில் சொன்ன கணவனை முறைத்து பார்த்தாள் சஹானா. அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் சத்யமூர்த்தி.

“சத்யா” மீண்டும் அழைத்தாள்.

“பேசாம படு”

“முடியாது” அடமாகச் சொன்னாள்.

“அதேதான்” என்றான் அவனும்.

“உங்களை…” என்று சிணுங்கி, அவனைப் பிடித்து அவள் திருப்ப, “என்ன வேணும் உனக்கு?” சீறினான்.

“எனக்கு ஒன்னும் வேணாம்” அவசரமாகச் சொன்னவளை புருவங்கள் நெரித்துப் பார்த்தான்.

“அப்புறம்?”

“அத்த சொல்ற மாதிரி..”

“ஏன் செய்யணும்?”

“ஏன் செய்யக் கூடாது?” கைகளைக் கட்டிக் கொண்டு அவள் தீர்க்கமாகக் கேட்க, “லிமிட் இருக்கு சஹானா” என்றான் சத்யா.

“ஓகே. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குதான். ஆனா, அது அம்மா, அப்பா, தங்கச்சிக்கும் கூடவா? ராதா அண்ணிக்காகத் தானே செய்யறோம். ஒருவேளை அவங்களுக்குப் பணம் தேவைப்படலாம் இல்லையா? உங்ககிட்ட கேட்க கூச்சப்பட்டுக் கூடக் கேட்காம இருக்கலாம், இல்ல?” அவள் நீளமாகப் பேச,

“அண்ணன்கிட்ட என்ன தயக்கம்?” என்று புருவம் உயர்த்தினான் அவன்.

“உங்ககிட்ட பேச முடியாது. போங்க” என்று அவனை இடித்துக் கொண்டு படுத்து விட்டாள் சஹானா. இதுவும் தன் தலையில்தான் விடியும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அவள் நினைத்தபடியேதான் நடக்கவும் செய்தது.

“அம்மா வீட்ல இருந்து கை வீசிட்டு வந்துட்டு, இங்க புருஷனை சொந்த தங்கச்சிக்கு குடுக்க விட மாட்டேங்கறா. ஒத்த பிள்ளையா பிறந்தா இப்படித்தான். கூடப் பிறந்தவங்க இருந்தால்ல, அவங்க அருமை தெரியும். பாசம்னா என்னன்னு புரியும். ஒத்தையா பிறந்துட்டு, புருஷனை தங்கச்சிக்குச் செய்ய விடாம தடுத்து…” பேசிக் கொண்டே போனவரை திரும்பி நேராகப் பார்த்தாள் சஹானா. கணவனுக்காகத் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் அடுப்பின் சூடு தெரிந்தது.

“என்ன முறைக்குற?” என்ற சத்தம் கூட்டினார் சுப்புலட்சுமி.

“உன் புருஷன் வீடு கட்டினா, உங்க வீட்ல இருந்து பத்து காசு கூடக் கொடுக்க மாட்டாங்க. இந்த லட்சணத்தில நீ, என் பிள்ளையை அடக்கிட்டு இருக்க?” எகத்தாளமாகக் கேட்டவரை ஏறெடுத்து பார்த்தாள் அவள்.

அப்பொழுது, “சஹானா” என்று மனைவியை அழைத்தபடி அங்கே வந்து நின்றிருந்தான் சத்யமூர்த்தி. அம்மாவையும், மனைவியையும் மாறி மாறி அவன் பார்க்க, “நமக்கு ஒரு வீடு கட்டுங்க. காசு எங்கப்பா என்ன, நானே தர்றேன். இன்னைக்கு உங்க தங்கச்சிக்கு எவ்ளோ கொடுத்தீங்க? முப்பது லட்சம் தானே? நான் நாப்பது லட்சம் தர்றேன்” குரலில் ஒருவித உறுதியுடன் தீர்க்கமாகக் கணவனைப் பார்த்துச் சொன்னவள், அவனுக்காகத் தேநீரை வடிக்கட்டி அவனிடம் நீட்டினாள். சுப்புலட்சுமி ஒரு கணம் நடப்பது புரியாமல் விழித்தார்.

“ஈவ்னிங் ராதா வீட்டுக்கு போனோம்” அம்மாவை அமைதியாய் பார்த்து சொல்லி விட்டு சத்யமூர்த்தி நகர, அவசர அவசரமாக மகளை அழைத்தார் சுப்புலட்சுமி.

“நான் உங்களுக்குக் கால் பண்ணேன். ஏன் மா எடுக்கல. அண்ணா, அண்ணி வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்களோட நீங்களும் வந்திருக்கலாம் இல்ல மா?” மகளின் பேச்சை ஒதுக்கி விட்டு, தலையைச் சுற்றாமல் நேரடியாக மூக்கைத் தொட்டார் சுப்புலட்சுமி.

“அண்ணா என்ன சொன்னான்? உன் வீட்டுக்கு எதுக்கு வந்தான்?”

“சும்மா பார்க்க வந்தேன் சொன்னாங்க மா. ஆனா, வீடு கட்ட வச்சுக்கோன்னு முப்பது லட்சத்துக்குச் செக் கொடுத்துச்சு மா சத்யாண்ணா.” மகளின் மகிழ்ச்சியான குரலை கேட்டதும் குளிர்ந்து போனது அவர் மனது. சஹானா அறையில் கோபத்துடன் அமர்ந்திருந்த கணவனைப் பார்த்தாள். அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவளுக்காக மட்டுமே செய்திருக்கிறான் அவன் என்பது அவளுக்குத் தெளிவாக விளங்கியது. அவளும் முதல் நாள் அவனிடம் கேட்டதோடு சரி, அதன் பிறகு அதைப் பற்றி அவனிடம் வாதிடவில்லை அவள். இன்றும் அவனாகத்தான் அவளை அழைத்துக் கொண்டு தங்கை வீடு சென்றான். அவள் கையாலேயே அந்தத் தொகைக்கான காசோலையைக் கொடுக்கச் செய்தான். இப்போது முகத்தைத் தூக்கியும் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.

“உங்களுக்கு இஷ்டம் இல்லைனா, ஏன் கொடுத்தீங்க?” அவளின் கேள்விக்குப் பதிலே சொல்லவில்லை அவன்.

“சத்யா..”

“கொடுத்தாச்சு. அவ்ளோதான்” அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை, முடிந்தது என்பது போலத் தோள் குலுக்கி விட்டு அவன் செல்ல, கணவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது. அடுத்து வந்த இரு நாட்கள் மாமியார் முகத்தில் புன்னகையைக் கூடப் பார்த்தாள் சஹானா. அதைச் சத்தமின்றி அழித்தான் சத்யமூர்த்தி.

“கோயம்புத்தூர்ல இடம் வாங்கப் போறேன். அட்வான்ஸ் கொடுத்துட்டேன். சஹானா பேர்ல” இரவு உணவை முடித்து விட்டு, ஓய்வாக அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் அவன் செய்தி சொல்ல, அப்பா முகத்தில் மகிழ்ச்சி ஒளிர, அம்மா முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி நிறைந்திருந்தது.

சஹானாவிற்கே அது செய்திதான். அன்று மாமியாருக்கு பதிலடி கொடுக்கத்தான் அவள் அப்படிச் சொன்னது. ஆனால், அதை மெய்ப்பிக்கும் வகையில் கணவன் இடம் வாங்குவான் என்று அவள் கற்பனையில் கூட நினைத்திருக்கவில்லை.

“நல்ல விஷயம் ப்பா. கோவையில் எங்க? இடம் எவ்வளவு பெருசு? என்ன விலை சொல்றாங்க?” அப்பா கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. சுப்புலட்சுமி மருமகளை மேலிருந்து கீழாக முறைத்து, எரித்துச் சாம்பலாக்கி விடுவது போலப் பார்த்தார்.

அப்பொழுது மகன் முன் பேசாமல் அமைதி காத்தவர், மறுநாளே மருமகளிடம் முகம் காட்டினார்.

“சொந்த தங்கச்சிக்குக் கொடுத்தது கூட உனக்குப் பொறுக்கலையா? அந்தப் பக்கம் அவனைக் கொடுக்க விட்டுட்டு, இந்தப் பக்கம் உனக்குச் செலவு பண்ண வைக்கிறியா?…” என்றவர் மேலும் மேலும் பேசிக் கொண்டே போக, அதைக் கேட்க விருப்பமின்றி அங்கிருந்து நகர்ந்து விட்டாள் சஹானா. அவள் அப்படிக் கண்டு கொள்ளாமல் போனது சுப்புலட்சுமியின் கோபத்தை இன்னுமே அதிகப்படுத்தியது.

மாமியாரிடம் பிரச்சனை செய்ய விரும்பாமல்தான் அவள் ஒதுங்கிக் கொண்டது. அதை யோசித்தபடியே இப்போது அவள் அமர்ந்திருக்க, மாலை கவிழ்ந்திருந்தது.

“சஹானா ம்மா” என்ற குரலில் அவள் கலைந்து நிமிர்ந்து பார்க்க, அந்த வீட்டை பராமரிக்கும் பெண்மணி அங்கு நின்றிருந்தார்.

“மாதவன் சார், இதெல்லாம் வாங்கி வைக்கச் சொன்னார். அடுப்படியில் வைக்கிறேன் மா. பால் இருக்கு, உங்களுக்கு டீ போட்டுத் தரவா? ஐயோ, நீங்க காஃபி தானே குடிப்பீங்க? காஃபி போடவா?” என்று கேட்டவரை புன்னகையுடன் பார்த்து, “காஃபி கொடுங்க கா. உங்களுக்கும் சேர்த்துப் போடுங்க” என்றாள். அவளின் கண்கள், அவர் கரங்களில் இருந்த பைகளை நோட்டம் விட்டது.

பால், காய்கறி, பழங்கள் என்று அதில் இருக்க, புன்னகைத்துக் கொண்டாள். அவள் பாதிக் காஃபி குடித்து முடித்திருக்கும் போது, அவளுக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தான் சத்யமூர்த்தி. அவன் கையில் இருந்த துணிப் பையை ஓரமாக வைக்க, உதடு வளைத்து குறும்பாகச் சிரித்தாள் சஹானா. அன்று அங்குதான் தங்கப் போகிறார்கள் என்பது கணவனைப் பார்த்ததும் அவளுக்குப் புரிய, “எல்லாரும் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போவாங்க. இங்க ஒருத்தர் அம்மா கூட டூ விட்டு, பொண்டாட்டியை கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு வந்திருக்கார்” என்றாள் கிண்டலாக. அவளைப் பார்த்துப் புருவங்களை நெரித்த சத்யமூர்த்தி, அவள் கையில் இருந்த காபியை வாங்கிக் குடிக்கத் தொடங்கினான்.

சஹானா மனதில் இதமாக உணர்ந்தாள். அவள் சில மணி நேர அமைதிக்காக இங்கு வர, அதைச் சில நாட்களாக மாற்றிய கணவனைக் கண்ணிமைக்காமல் பார்த்தாள் அவள்.

அவள் கண்களைப் பார்த்தே, அவள் விரும்பியதை செய்திருக்கிறான்தான். ஆனாலும், கோபத்தில் துரும்பை கூடத் தூணாக்குவது மனித இயல்புதானே? அதைத்தான் சஹானாவும் செய்தாள்.

          

error: Content is protected !!
Scroll to Top