அவர்களுக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க, இன்னமும் தேனிலவு கூடச் சென்றிருக்கவில்லை அவர்கள். சஹானா பயணங்களின் காதலி. அவளுக்குக் கணவன் கைப் பிடித்து ஊர் சுற்றும் கனவுகள் எக்கச்சக்கமாக இருந்தது. ஆனால், அவளாக, ஆவலாக எதையும் கணவனிடம் கேட்கவில்லை அவள். அதற்குத் தயக்கம், கூச்சம் எனப் பல காரணங்களைக் கற்பித்துக் கொண்டாள் அவள். இப்போதும் அவனின்றி எங்கும் சொல்ல அவளுக்கு மனமில்லை. அதனாலேயே மறுத்திருந்தாள். மனைவியைப் புருவங்கள் நெரித்துப் பார்த்து விட்டு, “சஹானா” என்றழைத்தான். “நான் போகல சத்யா” முடிவாக அவள் சொல்ல, முறைத்து விட்டுக் குளிக்கப் போனான் சத்யமூர்த்தி.
மறுவாரம் சஹானாவை சந்திக்க நேரில் வந்து நின்றாள் அவளின் தோழி ரோஹிணி.
“நீதான் எங்கேயும் வர மாட்டேங்கற. அதான், நான் உன்னைப் பார்க்க வந்துட்டேன்” என்று கணவனோடு வந்து நின்ற தோழியை மலர்ந்த சிரிப்புடன் பார்த்தாள் சஹானா. அவர்களை வரவேற்று உபசரித்து இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. அவர்கள் வீட்டில் காலை உணவை முடித்ததும், சஹானாவுடன், அவளின் தோழியையும், அவள் கணவரையும் தொழிற்சாலையை ஒட்டியிருந்த அவர்களின் வீட்டுக்கு அழைத்துப் போனான்.
அங்குப் போன பின்பும் ரோஹிணியின் கணவனுக்குத் தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பிக்க, அவரைக் கையோடு கூட்டிக் கொண்டு போய் விட்டான். மனைவியை அவளின் தோழியோடு தனியாக விட்டுச் சென்றான் அவன்.
அந்தத் தனிமை தோழிகளுக்குத் தேவையாகவும் இருந்தது. ஆறு மாத கதையை அரை நாளில் பேசி முடித்திடும் முனைப்பில் இருந்தார்கள் அவர்கள் இருவரும். பேச்சும், சிரிப்புமாகச் சென்றது பொழுது.
திடீரென்று, “அருவியா ஆர்ப்பரிச்சு கொட்டின சஹானாவா இது? இந்த அமைதி எங்கருந்து வந்தது சஹா? உன் சத்யாகிட்ட இருந்தா?” ரோஹிணி கேட்க, தோழியை முறைத்தாள் சஹானா.
“அவர், நம்மள விட ஆறு வயசு பெரியவர். பேர் சொல்லாத” என்ற தோழியைப் பார்த்து, “சாரி” என்ற ரோஹிணி. “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு சஹா” என்று அழுத்தம் கொடுத்தாள்.
“எப்பவும் புதுப் புது ஊரைச் சுற்றின எங்க சஹானா பறவை, சிறகை தொலைச்சுடுச்சுப் போலவே?” ரோஹிணி கேட்க,
“சிறகு எல்லாம் அப்படியேதான் இருக்கு. அது சத்யாகிட்ட மட்டும்தான் விரியுது இப்போ” வெட்கச் சிரிப்புடன் சொன்ன சஹானா, “நாம புதுப் புது ஊரை எதுக்குப் பார்க்க போனோம்? பயண அனுபவங்கள் தாண்டி, மனுஷங்களை, சுவாரசியங்களைத் தேடித்தானே போனோம் ரோஹி?” சஹானா கேட்க, “எஸ்” என்றாள் ரோஹிணி.
“எனக்குச் சத்யாவோட இந்த வாழ்க்கையே இதுவரையில் இல்லாத அளவு அவ்வளவு சுவாரசியமா இருக்கு. அவரை, எங்களை, எங்களோட இந்த உறவை ரசிச்சு பயணிக்க, இந்த ஒரு வாழ்க்கை போதாதுனு தோணுது” எதிரில் இருந்த நீச்சல் குளத்தில் பார்வைப் பதித்து, சஹானா சொல்ல,
“இதான் சஹா கேட்க வந்தேன். ஒரு சின்ன விஷயத்துக்குப் பதில் கூடக் கவிதையா சொல்ற நீ. ஆனா, சாதாரணமான பேச்சே இல்லாத உன்னோட சத்யமூர்த்தி. எப்படிச் சஹானா? எனக்கு ஆச்சரியமா இருக்கு?”
“லூசு மாதிரி பேசாத ரோஹி.” என்றவள், “ஃபர்ஸ்ட் டைம் பார்க்கிற உன்கிட்ட என்ன பேசுவார் அவர்? அதான் உன்னோட ஹஸ்பண்ட்கிட்ட நல்லாதானே பேசினார். அவர் கூடவே ஃபேக்டரிக்கு கூட்டிட்டு போய்ட்டார்தானே?” என்று கேட்க, “ம்ம். ஆனாலும், பேச காசு கேட்கிற ஆள் மாதிரி இருக்காரு. அதான் கேட்டேன்” தயக்கத்துடன் சொன்னாள் ரோஹிணி.
“என்கிட்ட நல்லாதான் பேசுவார் ரோஹி” தோழியிடம் கூடக் கணவனை விட்டுத் தர அவளுக்கு மனமில்லை. அன்றைக்கு மழையையும், நிலவையும் கூட உதாரணமாகக் காட்டி, எவருக்காகவும் பொழியும் மழை. உலகிற்கே ஒளிரும் நிலவு. ஆனால், அன்பை மட்டும் எதிர்பார்ப்பின்றி மனிதர்கள் கொடுப்பதேயில்லை என்று தத்துவங்கள் எல்லாம் பேசியது இப்பொழுது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஆரம்பக் காலத்தில் நல்ல புரிதலுடன்தான் இருந்திருக்கிறோம். இன்று அந்தப் புரிதல் எங்குப் போனது என்று யோசித்தாள் சஹானா. மாமியார் சுப்புலட்சுமி அவளின் மனக் கண்ணெதிரே வந்து நின்றார்.
மகனுக்குத் திருமணம் முடிந்து புது மருமகள் வீட்டுக்கு வந்ததும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சில விஷயங்கள் நடந்தேறியே ஆக வேண்டும் என்று மாமியார்கள் நினைப்பார்கள் போலும். அவர்கள் கையில் தயாராகக் கால அட்டவணையும் வைத்திருப்பார்களோ, என்னவோ? மற்றவர்களைப் பற்றிச் சஹானாவிற்குத் தெரியவில்லை. ஆனால், சுப்புலட்சுமி வசம் அப்படியொன்று தயாராக இருந்ததுதான் அவளது துரதிஷ்டம். அவளுக்குத் திருமணமாகி நான்காம் மாத தொடக்கத்திலேயே விசாரணையைத் தொடங்கி விட்டார் அவர்.
“என்னம்மா, ஏதும் நல்ல செய்தி இல்லையா?”
“இந்த மாசமும் குளிச்சுட்டியா?”
“கல்யாணமாகி இத்தனை மாசம் ஆச்சு. ஒன்னுமே சொல்லாம இருக்க. உங்கம்மா நர்ஸ் தானே? அவங்ககிட்ட என்னனு கேட்கலாம், இல்ல?”
“நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய், என்ன ஏதுன்னு டாக்டர் பார்த்திட்டு வருவோமா?” அவரின் கேள்விகளில் மாற்றம் இருந்தாலும், சாராம்சம் ஒன்றுதான். சஹானாதான் பதிலின்றி விழி பிதுங்கிப் போனாள்.
மாமியாரிடம், “ஒரு வருடத்திற்குக் குழந்தை வேண்டாம் என்று இருக்கிறோம்” என்று சொல்வதற்கு அவளுக்குக் கூச்சமும், சங்கடமுமாக இருக்க, அவரின் கேள்விகளை ஒரு மழுப்பலான சிரிப்புடன் தவிர்த்து விட்டு நகர்ந்து விடுவாள் அவள். கணவனிடமும், மாமியாரின் கேள்விகளைச் சொல்ல நினைத்தாள்தான். ஆனால், அதைச் சொல்லவும் எதுவோ ஒன்று அவளைத் தடுத்தது.
ஒரு வருடத்திற்குக் குழந்தையைத் தள்ளிப் போடுவது சத்யமூர்த்தியின் முடிவாக இருக்க, அதைப் பற்றி அவனிடமும் பேச யோசித்தாள் சஹானா.
சுப்புலட்சுமி ஏழாம் மாத முடிவில் எரிச்சலுறத் தொடங்கியிருந்தார்.
“என்ன நான் கேட்டுட்டே இருக்கேன். எது மேலயே மழை பெஞ்சா மாதிரி, கண்டுக்காம பதில் சொல்லாம போற? உனக்கு, மாமியார் மேல கொஞ்சமாவது மரியாதை இருக்கா? உங்கம்மா இதான் சொல்லிக் கொடுத்து, உன்னை வளர்த்தாங்களா?” என்று அவர் கோபத்துடன் கேட்க, “இல்லத்த. அது, சாரி.” என்று விட்டு அறைக்குள் நுழைந்து விட்டாள் சஹானா.
“பாரு, எப்படிப் பதில் சொல்லாம போறான்னு. மரியாதை, பயம் எதுவும் கிடையாது. இந்தச் சாரிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. அது மட்டும் வந்துடும் எப்பவும். சாரி” என்று நக்கலாகச் சொன்னவர், “கல்யாணமாகி இத்தனை மாசமாச்சு. இப்படிக் கண்டுக்காம இருந்தா எப்படி? இதுக்கும் இவங்க அம்மா நர்ஸ் வேற? மக மேல அக்கறை இருக்கா பாரு? பேரன், பேத்தி பார்க்கணும்னு ஆசை இருக்கா பாரு. என்ன மனுஷங்களோ?” கோபத்துடன் அலுத்துக் கொண்டார் அவர்.
“எங்க ராதா கல்யாணமாகி மூணாம் மாசமே நல்ல செய்தி சொல்லிட்டா. இதுவே எங்க சொந்தத்தில் கட்டியிருந்தா, நான்… ” அதற்கு மேல் கேட்க முடியாமல், சட்டென எழுந்து கதவை மூடி விட்டாள் சஹானா.
மனம் மாமியாரின் வார்த்தைகளே அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அன்றிரவு கணவனிடம் மாமியாரின் பேச்சை சொல்லி விட்டாள் சஹானா. கண்டிப்பாக, குற்றச்சாட்டாக அல்ல. அவரின் எதிர்ப்பார்ப்பை எடுத்துச் சொன்னாள். அவ்வளவே.
“சத்யா..”
“ம்ம்..”
“அத்த..”
“அம்மாவுக்கு என்ன?” படுக்கையில் திரும்பி, அவள் முகம் பார்த்தான்.
“பேரன், பேத்தி வேணுமாம்”
“கொடுத்திடலாமே” மீசைக்கடியில் சிரிப்பை மறைத்து அவன் சொல்ல, “ப்ச், நான் சீரியஸா சொல்றேன் சத்யா” என்று சிணுங்கினாள் சஹானா.
“நானும்தான்” என்றவனின் கரங்கள் மனைவியிடம் பேசத் தொடங்கியிருந்தது.
“சத்யா..” அவனுக்குத் தடைப் போட முயன்றாள். அவளின் தடை போடும் எண்ணத்தையே நொடியில் மறக்கச் செய்திருந்தான் சத்யமூர்த்தி. இரண்டு நாளில் மாமியார் மீண்டும் தன் கேள்வி கணைகளை ஆரம்பிக்க, சஹானா தன்னையே நொந்துக் கொண்டாள்.
அன்றிரவு நெருங்கி வந்த கணவனிடம் கத்தியே விட்டாள் அவள். காரணம் புரியாமல் விழித்தான் அவன்.
“என்னைக் கொஞ்சமாவது பேச விடுறீங்களா? உங்கம்மா, உங்ககிட்ட எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாங்களா?”
“எல்லாத்துக்கும் இளிச்ச வாய் நான் தானா?”
“உங்களை நிக்க வச்சுக் கேள்வி கேட்க வேண்டியது தானே? நீங்கதானே அவங்க புள்ள? உங்கிட்ட கேட்க மட்டும் அவங்களுக்குத் தைரியம் இல்லையோ?” சஹானா வரிசையாகக் கேள்விகளை அடுக்க, அயர்ந்து போனான் சத்யமூர்த்தி.
“என்ன சொல்ற சஹானா? புரியல?” அவன் அமைதியாய், அழுத்தமாகக் கேட்க, “என்ன புரியல? நான் தெளிவாதானே பேசுறேன்” என்று மேலும் எகிறினாள். தலையை உலுக்கி, பதற்றத்துடன் தலைமுடியை கலைத்து, மீண்டும் விரல்களால் கோதிக் கொண்டான் அவன். அதையும் கோபத்துடன் பார்த்தாள் சஹானா.
“நான் பேசுறது உங்களுக்கு எரிச்சலா இருக்கா?”
“சஹானா” கண்டிப்புடன் அவன் அழைக்க, “என்னை மட்டுமில்லாம, எப்போ பார்த்தாலும் இதுல என் அம்மா, அப்பாவையும் தேவையில்லாம இழுக்கறாங்க.” பல்லைக் கடித்துக்கொண்டு அவள் சொல்ல, “எதுல?” என்ற அவனின் கேள்வி, அவளின் கோபத்திற்கு மேலும் தூபம் இட்டிருந்தது.
“நிங்களுக்குச் சத்தியமூர்த்தின்னு பேரு வச்சதுன்னு பகரம் சைலண்ட் மூர்த்தின்னு பேரு வைக்காமாயிருன்னு” அவளுக்குக் கோபத்தில் மலையாளம் எட்டிப் பார்த்திருந்தது.
“என்ன சொன்ன?” மனைவியின் மலையாளம், எப்போதும் அவனுக்கு மழலை மொழிதான். ரசித்துச் சிரித்துக் கொண்டு அர்த்தம் கேட்டான் அவன்.
“ம்ம். உங்களுக்குச் சத்யமூர்த்தின்னு பேர் வச்சதுக்குப் பதிலா, சைலண்ட் மூர்த்தின்னு பேர் வச்சுருக்கலாம்னு சொன்னேன்” அவள் சொல்லி முடிக்கும் முன்பே சத்தமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தான் சத்யமூர்த்தி.
“கொழுப்பு..” சிரிப்பினூடே சொன்னவன், முறைக்கும் மனைவியைத் தன்னை நோக்கி இழுத்தான்.
“விடுங்க சத்யா” கோபத்தில் சீறியவளுக்கு, மோகத்தைக் கொடுக்க முயன்றான். அவனை மூர்க்கமாக விலக்கி தள்ளி, “என்ன பண்றீங்க? உங்கம்மாவுக்குப் பதில் சொல்லாம, அவங்க கேட்டதை, எனக்குக் கொடுக்க டிரை பண்றீங்களா? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?” அவள் தள்ளியதில் அதிர்ந்தவனுக்கு அவளின் வார்த்தைகளின் அர்த்தமே அப்போதுதான் விளங்கியது.
“அம்மா, என்ன கேட்டாங்க?” முதலில் இருந்து அவன் தொடங்க, முறுக்கிக் கொண்டாள் சஹானா.
“சஹானா..”
“பேசாதீங்க..”
“சரி. பேசல. நீ பதில் சொல்லு” அவன் அசராமல் கேட்க, “சொல்ல முடியாது” என்றாள் கோபத்துடன். அவளை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் திருப்பி, “என்ன?” என்றான்.
“குழந்தைப் பத்தி ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்காங்க. இப்போ அதிகமாயிடுச்சு. எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியல. அவங்ககிட்ட தள்ளி போட்டு இருக்கோம்னு சொல்ல பயமாருக்கு” என்ற மனைவியைப் பார்த்துப் புருவம் உயர்த்தினான் சத்யா.
“என்ன பார்வை? எங்கம்மாகிட்ட சொல்லவே கூச்சமா இருக்கு. இதுல அத்தை கிட்ட நோ வே” என்றாள் சஹானா.
“ம்ம். விடு பார்த்துக்கலாம்” என்றிருந்தான் சத்யமூர்த்தி. ஆனால், அவன் பார்ப்பதற்கு முன் நிலைமை அவன் கையை மீறிச் சென்றிருந்தது. அடுத்து வந்த ஒருநாளில் வீட்டில் இருந்த சஹானாவிடம் பேச ஆரம்பித்திருந்தார் சுப்புலட்சுமி.
“எங்க ராதாக்கு பார்த்த டாக்டர் ரொம்ப ஃபேமஸ். பொள்ளாச்சியிலயே பேரு போன, நல்ல கை ராசியான டாக்டர். ஒருமுறை பார்த்ததும் என்ன பிரச்சினைன்னு சொல்லிடுவாங்க. நீ கிளம்பு. இன்னைக்குப் போய், உனக்கு என்னன்னு செக் பண்ணிட்டு வந்திடலாம்.” மாமியார் பேச பேச பதிலின்றி அவரைப் பார்த்தாள் சஹானா. பயம், பதற்றம், அதிர்ச்சி என அனைத்தும் அவளை அழுத்த, அவசர அவசரமாகச் சத்யமூர்த்தியை அலைபேசியில் அழைத்தாள். மூன்று, நான்கு, ஐந்து என அவளின் அழைப்புகள் ஏற்கப்படாமல் அடித்து ஓய்ந்தது.