அன்பின் ஆலாபனை – 10 (1)

ஒரு வீட்டின் சமையல் அறைதான் பெண் ராஜ்ஜியம் நடத்தும் இடமாக இருக்கும். அவள் முடிசூடா அரசியாக வலம் வரும் இடமது. அத்தனை எளிதில் அதை யாருக்கும் விட்டுத் தர அவர்களுக்கு மனம் வராது. மகன் வீட்டு சமையலுக்குப் பொருத்தமான ஆள் பார்த்து அனுப்பி விட, சுப்புலட்சுமி பார்ப்பதற்கு அந்த வீட்டில் வேலைகளே இல்லாது போனது. ஆக, மருமகளை மெல்லுவதை மட்டுமே முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டார் அவர். தினமும் காலையில் கணவரும், மகனும் தொழிற்சாலைக்குச் சென்றிட, அவர்களோடு சேர்ந்து சென்ற மருமகளை முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது. வீட்டில் இருக்கும் நேரங்களில் சஹானா சமையல் அறைக்குள் நுழையும் பொழுதெல்லாம் ஜாடை மாடையாக அவளை ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பார் அவர்.

அதே பழைய பாட்டு என்பதால் சஹானா பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால், தற்போது அந்தப் பழைய பாட்டில் புதுப் பல்லவி வந்து சேர்ந்திருந்தது அவளைத் தாக்கியது.

“வீட்டு பொம்பளைங்க ஒன்னுக்கு ரெண்டு பேர் இங்கருக்கும் போது, யாராவது வெளில இருந்து சமைக்க ஆள் கூட்டிட்டு வருவாங்களா?” என்று அவர் தொடங்க, “மதியம் ஒரு நேரத்துக்குதானே அத்த. காலைலயும், நைட்டும் நாமதானே செய்யறோம்.” என்ற சஹானா, “உங்களுக்கு அவங்க சமையல் பிடிக்கலைன்னா சொல்லுங்க அத்த. அவங்களை நிப்பாட்டிட்டு, மதிய சமையலை நாமளே பார்த்துக்கலாம்.” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே,

“ஓஹோ. வேலைக்கு வச்ச ஆளை நிப்பாட்டிடலாம்னு இப்ப வந்து சொல்ற, இதை உன் புருஷன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்றதுக்கு முன்னாடியில்ல நீ யோசிச்சுருக்கணும்? பெரியவங்க ரெண்டு பேர் இருக்காங்களே, அவங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா.. அதெல்லாம் உன் புத்தியில உரைக்கல போல?”

“வீட்டு கிட்சனுக்குள்ள வெளி ஆளுங்களை எந்த நல்ல குடும்பத்து பொண்ணாவது விடுவாளா? என்ன வசதி இருந்தாலும், அவளே நின்னு புருஷனுக்குப் பிடிச்சது பார்த்து, பார்த்து சமைச்சு தன் கையாலதான் பரிமாறுவா. ம்ம், இதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது. உங்கம்மாவை பார்த்துதானே வளர்ந்துருப்ப? உங்கம்மாவே வேலை வேலைன்னு ஓடிட்டு உனக்குச் சமைச்சே போட்டுருக்க மாட்டா..” என்று அவர் சொல்லிக் கொண்டே போக, சட்டென்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள் சஹானா.

அம்மாவை குறை சொல்வது, அது யாராக இருந்தாலும் அவளால் சூடாகப் பதில் கொடுக்காமல் இருக்க முடியாது. அதைத் தவிர்க்கவே மேலே மாமியார் பேசுவதைக் கேட்க பிடிக்காமல் அவள் அறைக்குள் வர, லேசாகத் திறந்திருந்த கதவின் வழியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டே உடை மாற்றிக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. அப்போது மனைவியிடம் எதையும் கேட்கவில்லை அவன். ஆனால், விரைவில் ஒரு முடிவிற்கு வந்திருந்தான். அவனும் அவ்வப்போது கவனித்துக் கொண்டுதானே இருக்கிறான். அம்மாவின் விசித்திரமான பேச்சை, விநோத புலம்பலை, சஹானாவிடம் மட்டும் சாட்டையாய் சொடுக்கும் அவரின் வார்த்தைகளை.

சஹானாவை மருமகளாக முதலில் ஏற்றுக் கொள்வது அவருக்குச் சுலபமாக இருக்காது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். சஹானா வேறு இனம் என்பது மட்டுமே அவருக்கு உறுத்தலாக இருக்கும். மற்றபடி அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வார் என்று அவன் நினைத்திருக்க, ஆறு மாதம் ஆனப் பின்னும் அவரின் இது போன்ற செயல்களை அவனால் எளிதில் புறந்தள்ள முடியவில்லை. அந்த வீட்டில் இருந்த அனைவரின் நலம் கருதியும்தான், தனியாகச் செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். உறவுகள் எங்கிருந்தால் என்ன? அவர்கள் சுமுகமான உறவில் இருக்க வேண்டும் என்று தொழிலைப் போலவே வாழ்க்கையையும் கணக்கிட்டான் அவன். அதனால் தன் முடிவை மனைவியிடம் கேள்வியாகக் கேட்டான் அவன். கணவனின் கேள்வியில் வாய் பிளந்த சஹானா, அதிர்ச்சியுடன் அவனை விழி விரித்துப் பார்த்தாள்.

“வேணாம் சத்யா” என்றாள்.

“ஏன்?”

“என்ன ஏன்? இப்போ எதுக்கு நாம தனியா போகணும்? இங்க என்ன பிரச்சினை நமக்கு? காலைல கிளம்பி வேலைக்குப் போய்ட்டு, திரும்ப நைட்தான் வீட்டுக்கு வர்றோம். என்னமோ தூங்க மட்டுமே வீட்டுக்கு வர்ற மாதிரி ஃபீல் ஆகுது இல்ல? அதை வேற வீட்டுக்குப் போய்ச் செய்யறதுக்கு, நம்ம வீட்லயே இருந்துட்டு போகலாமே?”

“இல்ல, சஹானா..”

“பெரியவங்க பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது சத்யா” அவனின் முடிவிற்கான காரணத்தைத் தோராயமாக யூகித்துச் சொன்னாள் அவள்.

“அதுவுமில்லாம, மாமா, அத்தைக்கு வயசாகுது. நாம அவங்க கூட இருக்கறதுதான் சரி. ஒரு அவசரம்னா அடிச்சு பிடிச்சு ஓடி வர்றதுக்கு, நாம் அவங்க கூடவே இருந்திடலாம். எல்லோருக்கும் நிம்மதி” மனைவி பேசப் பேச, அவன் பார்வை மாறவேயில்லை.

“ஒரே ஊர்ல இருந்துட்டு நாம தனியா போனா நல்லா இருக்காது சத்யா” இப்போது அவனைப் போலவே சுருக்கமாக முடித்து விட்டாள் சஹானா.

அமைதியாய் அவளையே பார்த்தபடி, காரணக் காரியங்களைச் சிந்தித்தபடி அங்கேயே அமர்ந்திருந்தான் சத்யமூர்த்தி.

“உங்களுக்கு என் பதில் பிடிக்கல தெரியுது. ஆனா, நீங்க எனக்கு யோசிக்க எவ்வளவு டைம் கொடுத்தாலும், என்கிட்ட இருந்து இதே பதில்தான் வரும்.” அவள் உறுதியாகச் சொல்ல, மௌனமாய் முறைத்து விட்டு எழுந்து போனான். சஹானா அவனது கோபத்தைக் கண்டுக்கொள்ளாமல் தன் வேலையை முடித்து விட்டே உறங்கப் போனாள். அன்றைக்கு வற்புறுத்தி எதையேனும் பேசி, மனைவியின் முடிவை மாற்றியிருக்க வேண்டுமோ என்று இப்பொழுது யோசித்தான் சத்யமூர்த்தி.

அன்றைக்கே அவர்கள் தனியாகப் போய் இருந்தால், எத்தனையோ பிரச்சனைகளைத் தவிர்த்திருக்கலாம் என்ற ஞானோதயம் அவனுக்குக் காலம் கடந்துதானே வந்திருக்கிறது. இன்றைக்கு இருக்கும் சங்கடமான சூழலிலும் மனைவி தன்னோடு தனிக்குடித்தனம் வர சம்மதிக்க மாட்டாள் என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும். அம்மாவையும், மனைவியையும் என்ன செய்து சமாதானப்படுத்த என்று யோசித்து யோசித்தே சோர்ந்து போய், கணினியை வெறித்துக் கொண்டிருந்த கண்களை எரிச்சலோடு மூடினான் சத்யமூர்த்தி.

சஹானா படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அந்தப் படுக்கையையே வட்டமடித்துச் சுற்றி வந்து கொண்டிருந்த மகளையே இமைக்காமல் பார்த்திருந்தாள் அவள். பிரார்த்தனா, அவள் வாழ்க்கையில் வரும் வரையில், மாமியாரிடம் அவள் வாங்கிய பேச்சுக்களை அவளால் என்றைக்கும் மறக்கவே முடியாது. மாமியாரின் மேல் மெலிதான கோபமும், கசப்பும் துளிர்த்த நாட்கள் அவைதான். முன்தின இரவு அம்மா சொன்னது போல, மாமியாரின் மேல் உள்ள கோபத்தைக் கணவனின் மேல் காட்டுகிறேனா, நான்? என்று சரியாகச் சிந்திக்கத் தொடங்கினாள் அவள்.

கடந்த காலம் அவள் கண்களுக்குள் படமாக ஓடத் தொடங்கியது. அவர்களின் திருமணம் நிச்சயமான பிறகு சத்யாவுடனான முதல் சந்திப்பை நினைவுப்படுத்திக் கொண்டாள் சஹானா. அடிக்கடி அலைபேசியில் பேசுவான்தான். அவன் பேச்சு அளந்து வைத்தது போலவே இருக்கும். அதைத் திருமணத்திற்கு முன்னான தயக்கம், ஒதுக்கம் என நினைத்துக் கொண்டாள் சஹானா. ஆனால், அவன் இயல்பே அதுதான் என்பதைப் பொள்ளாச்சி சென்று நேரில்தான் அறிந்துக் கொண்டாள். ஒரு முழு நாள் அவனோடு இருந்தும் கூட, அவன் பேசிய பேச்சுகள் விரல் விட்டு எண்ணி விடலாம் எனும் அளவிற்கே இருந்தது.

இத்தனைக்கும் சத்யா இயல்பாகதான் இருந்தான். சிரித்துதான் பேசினான். அவளைத் தனியாகக் கோவில், தொழிற்சாலை, சேலை நெய்யும் தறி என வரிசையாகப் பல இடங்களுக்கு அழைத்துக் கொண்டுதான் போனான். ஆனாலும், அவர்களுக்கு நடுவில் ஒரு இடைவெளியை அவளால் உணர முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு அதை நிரப்பி விடலாம், கணவன் நிரப்பி விடுவான் என்றே நினைத்தாள் சஹானா. அவனுக்கு அதிகம் பேச வராது என்பதை மட்டும் தன் மனதில் ஆழப் பதிய வைத்துக் கொண்டாள் அவள். அது ஆழப் பதிந்தாலும், அவளுக்குப் பழக்கமாகவில்லை. எதிர்பார்ப்புகள் மனித இயல்புதானே?

அன்றைக்கு வீடு திரும்பிய பின், அம்மாவிடம் கேட்கவும் செய்தாள்.

“இந்த எதிரெதிர் துருவங்கள் ஏன் மா, இப்படி ஈர்க்குது?” குட்டி இரும்பு சட்டியில் லாவகமாய் ஆப்ப மாவு ஊற்றி வட்டமாகச் சுழற்றிய புனிதாவின் கண்கள், சுழன்று மகளைப் பார்த்தது.

“என்ன சஹாக்கு திடீர் சந்தேகம்?” புனிதா கேட்க, “சும்மா கேட்டேன் மா. பொது அறிவுக்கு” சிரித்துக் கொண்டே அவள் சொல்ல, நமுட்டு சிரிப்புடன் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்தார் புனிதா.

“ம்மா..” சஹானா சிணுங்க, “அது எப்பவும் அப்படித்தான் சஹா. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி குணமும், ரசனையும் இருந்தா, வாழ்க்கை அத்தனை ரசிக்காதோ என்னமோ. முரண்கள் எப்பவும் சுவாரஸ்யம்தானே?” என்றபடி அவர் வேலையைத் தொடர, மனதில் சத்யாவை தொடந்தாள் அவள்.

அவன் மேல் ஈர்ப்பும், புரிதலும் துளிர்க்கத் தொடங்கிய நாட்கள் அவை. அப்படியேதான் தொடரவும் செய்தது. திருமணமாகி ஆறு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் கூட, சத்யமூர்த்தியின் மௌனமும், அமைதியும் அவளை அதிகம் பாதிக்கவில்லை. இருவருக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் வந்தாலும், மனைவியைச் சமாதானம் செய்யும் வழிகள் சத்யமூர்த்திக்குத் தெரிந்திருந்தது.

அன்று தொழிற்சாலையில் சத்யாவுக்கு வேலைகள் அதிகம் இருக்க, சஹானா முன்னரே வீடு திரும்பியிருந்தாள். அதிசயமாகக் கிடைத்த நேரத்தை வீணாக்க விரும்பாமல் பயணக் கட்டுரைகள் எழுத அமர்ந்து விட்டாள் அவள். ஆனால், அவளை அலைபேசியில் பிடித்தது அவளின் தோழிகள் கூட்டம்.

அரை மணி நேர பொதுவான பேச்சிற்குப் பின், “அந்தமான் போறோம் சஹா. வீ மிஸ் யூ” என்றனர்.

“ஹேய், செம்ம. என்னைக்குப் போறீங்க? எத்தனை நாள் ஸ்டே? என்ன பட்ஜெட்?” என்று கேள்விகளை அடுக்கிய சஹானா, “நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க கேர்ள்ஸ்” என்றாள் மகிழ்ச்சியுடன்.

“நீயும் வர்றியா சஹா?” என்று ஒருத்தி கேட்க, “நானா? ம்ஹூம், முடியாது பா” என்று விட்டாள் சஹானா.

“ஏன் முடியாது? நம்ம ரோஹிணி எல்லாம் கல்யாணம் முடிஞ்சு கூட நம்மோட வந்தாதானே? உன்னோட அவர்கிட்ட கேளேன். உன்னைத் தனியா போக விட மாட்டாரா என்ன?” வம்புக்கென்று கேள்விகளைத் தோழிகள் கேட்க, “நான் வரல பா. அவ்ளோதான். ஆளை விடுங்க” முடிவாக முடித்து விட்டாள் சஹானா. அலைபேசியை ஓரமாக வைத்து விட்டு, அவள் தலையை இருக்கையில் சாய்க்க, “போய்ட்டு வாயேன், சஹானா” என்ற சத்யமூர்த்தியின் குரல் அவளைத் திடுக்கிட்டு தலையைத் திருப்பிப் பார்க்கச் செய்தது.

“எப்போ வந்தீங்க சத்யா? கான்ஃபரன்ஸ் கால்ல இருந்தேன். ஆளாக்கு கத்தவும், நீங்க வந்தது கவனிக்கலை” என்றபடி எழுந்து அவனுக்கு அருகில் சென்றாள் சஹானா. மனைவியின் இடையில் கை கோர்த்து அவளை நெருக்கமாக இழுத்து, “அந்தமான் போய்ட்டு வா சொன்னேன்” என்றான். அவனை மென்மையாக ஒதுக்கி விட்டு, தன் இருக்கையில் சென்று அமர்ந்து விட்ட இடத்தில் இருந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் சஹானா.

error: Content is protected !!
Scroll to Top