அன்பின் ஆலாபனை – 1 (2)

எந்த நேரம் என்றாலும் ஒருவரின் அழைப்பை புறக்கணிக்கக் கூடாது என்ற அப்பாவின் அறிவுரை நினைவில் வர, அலைபேசியை எடுத்து அழைப்பை ஏற்றாள்.

“சஹானா” கரகரத்த ஆழ்ந்த குரலில் கணவனின் அழைப்பு. கண்கள் பெருமூச்சுடன் தானாக மூட, அதைப் படக்கென்று திறந்தாள்.

“வீட்டுக்குப் போயாச்சா? எத்தனை மணிக்கு போனீங்க? பாப்பா தூங்குறாளா? அவளுக்கு டிராவல் பண்ணது ஓகேதானே?” கேள்விகளை வரிசையாக அடுக்கினான். அவள் கோபத்துடன் கிளம்பி வந்தது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்கள் மேல் அக்கறையும் இருக்கத்தான் செய்கிறது. அதில் துளி அன்பை கலந்தால்தான் என்ன சத்யமூர்த்தி?. வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கி, மௌனமாய் அமர்ந்திருந்தாள் சஹானா.

அந்த நிசப்த நொடிகள் இருவருக்கும் புதிதல்ல. ஆனால், இம்முறை அதைத் தாங்க இயலாமல் அதிசயமாய்க் கலைத்தது சத்யமூர்த்திதான்.

“சஹானா..” மீண்டும் அழுத்தமாய் அழைத்தான்.

“இருக்கேன்” என்று அவள் சொன்ன மறுநொடி, “பாப்பா” என்றான் கேள்வியாக.

“தூங்கறா”

“சரி. பார்த்துக்கோ” அதே இயந்திரக் குரல். ஒற்றை வரிப் பதில். அவ்வளவுதான், வைத்து விட்டான்.

அவனது இந்த விட்டேத்தியான பேச்சு அலைப்புறுதலையும், ஆத்திரத்தையும் தர, அலைபேசியைச் சுவரில் விசிறியடித்து உடைக்கப் போனாள் அவள். அந்நேரம் குழந்தை சிணுங்க, சட்டென நிதானம் பெற்று குழந்தையைக் கவனித்தாள்.

அவளின் பொங்கும் கோபத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பாலுக்கு அழுது, நீர்த் தெளித்து விடுவது அவளின் மகள்தான். அதற்கு முன்பு சஹானாவேதான் தெளித்துக் கொண்டாள்.

பிரார்த்தனா, சத்யமூர்த்தியை சிறிதேனும் சிரிக்க வைக்கும் ஒரே ஆள்.

அவனை அதிகம் பேச வைப்பதும், இன்னும் பேச்சே வராத அவர்களின் பிள்ளைதான். இப்போது அவர்கள் இருவரையும் இணைத்திருப்பதும் அவள்தான். இல்லையென்றால்? சில வினாக்களுக்கு விசித்திரமாக விடைகளே இருப்பதில்லை என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

சிந்தனைகளில் தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தவளை, நிமிடங்களில் நித்திரை நிறைத்துக் கொண்டது. விடியலை மகளின் அழுகை அவளுக்கு உணர்த்த, சட்டென விழித்துக் கொண்டாள் சஹானா.

மனத்தின் சுணக்கம் உறக்கம் போதா அவளின் விழிகளில் இன்னுமிருக்க, கண்ணை மூடி மூடித் திறந்தாள் அவள். ஆனால், மகளோ பொறுமையின்றி வீரிட்டு அழுது, அவளை முட்டி மோதி அல்லாட, சஹானாவின் இதழ்கள் புன்னகையில் பிரிந்தன.

“பொறுமை செல்லக்குட்டி. இரு அம்மா வரேன்” செல்ல அதட்டலாகச் சொன்னபடி, மகளைத் தூக்க, தாயின் அதட்டல் புரிந்து அழுகையில் உதடுப் பிதுங்க, லேசாகப் புருவங்கள் நெரிந்தன. அந்த நெரிந்த புருவத்தில் கணவனின் அப்பட்ட சாயல் தெரிய, அவனிடம் செய்வது போலவே ஒற்றை விரல் கொண்டு புருவத்தை நீவி விட்டாள் சஹானா. மகள் பொக்கை வாய் மலர புன்னகைக்க, இப்போது கணவனின் சிரிப்பு நினைவிற்கு வந்தது. கூடவே அவனும் அனுமதியில்லாமல் உடன் வந்தான்.

கடவுளின் சொந்த தேசமாம் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் வண்டிப் பெரியார்தான் அவள் பிறந்து, வளர்ந்தது எல்லாம். அம்மா புனிதா, அங்குள்ள அரசு மருத்துவமனையில் தலைமை செவிலி. அப்பா முரளிதரனுக்குச் சொந்தமாக மருந்தகம் இருக்கிறது. அப்போது சஹானா பார்மசி படிப்பு முடித்து, அப்பாவிற்குத் துணையாக அவரின் மெடிக்கல் ஷாப்பை கவனித்துக் கொண்டிருந்த நேரம். சொந்த தொழில் என்பதால், வேலை, விடுப்பு எல்லாம் அவள் விருப்பம்தான்.

ஒற்றை மகள் என்பதால் பாசம், கண்டிப்பு இரண்டையும் சரி விகிதத்தில் கலந்தே அவளை வளர்த்தனர் பெற்றோர். அவர்களை மீறி அவளும் எதையும் செய்ததில்லை.

சஹானாவிற்குப் பயணங்கள் மிகப் பிடித்தம். இயற்கை எழில் கொஞ்சும் ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும், புதிய புதிய இடங்களைப் பார்க்க அலாதி ஆவல் அவளுக்கு. கல்லூரியில் தொடங்கிய அந்தப் பழக்கம் ஒரே ரசனையுடைய தோழிகள் வாய்த்ததினால் இப்போது வழக்கமாகியிருந்தது. மாதம் ஒருமுறை கேரளாவில் அதிகப் பிரபலமடையாத ஏதாவது ஒரு சுற்றுலாத் தளத்தைத் தேர்ந்தெடுத்து இரண்டு மூன்று நாட்கள் அங்கே செலவழித்து விட்டு ஊர் திரும்பவது அவர்களின் வழக்கம். பிள்ளைகளின் பொழுது போக்கை ஆதரித்த பெற்றவர்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டதோடு சரி. மற்றபடி அவர்களைத் தடுக்க முனையவில்லை. அதனால், சஹானா தோழிகளுடன் கேரளாவை ரெக்கை முளைத்த பறவையாய் சுற்றி வந்தாள்.

அது ஜனவரி மாதம். தொடர்ச்சியாக மூன்று நாள்கள் அரசு விடுமுறை வர,

அந்த வார இறுதியை அவர்களின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, மாங்குளம் என்ற ஊரில் கழிக்கத் திட்டமிட்டனர் அவளின் தோழிகள் நால்வர். அவளுக்கும் அழைப்பு வர, நேராகப் பெற்றோரிடம் போய் நின்றாள். பயணச் செலவிற்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள் அவர்கள். இரண்டு நாட்களுக்குத் தேவையான உடைகளுடன் ஊர் சுற்றக் கிளம்பி விட்டாள் சஹானா.

எங்குத் திரும்பினாலும் அருவியும், தேயிலை தோட்டங்களும், காஃபி செடிகளும் நிறைந்திருக்க, பகலிலும் பனிப் படர்ந்து ஊரை மூடியிருந்ததைப், பார்க்கவே குளுமையாக அத்தனை அழகாக இருந்தது. இயற்கை அழகும், எழிலும் கொஞ்சிய மாங்குளம். பிரபல சுற்றுலா தளமான வண்டிப் பெரியாரில் பிறந்த அவளையே வாய் பிளக்க வைத்தது அந்த ஊரின் அதிகம் கால் படாத, கலைக்கப்படாத அழகு.

மாங்குளம் இன்னும் பிரபல சுற்றுலா தளமாக மாறாததினால், அத்தனை சுத்தமாக, பொலிவாக, இயற்கை இன்னமும் சீரழிக்கப்படாமல் இருந்தது.

தோழிகள் நால்வரும் இரண்டு நாள்கள் ஆடி, பாடி, இயற்கையை ரசித்துக் கொண்டாடி விடைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் அன்று அதிகாலையில் ஊர் திரும்ப வேண்டியது. தூங்கி எழுந்து கிளம்பியதே தாமதமாகத்தான். காலை உணவுடன் அரட்டை கச்சேரி ஆரம்பமாக நேரம் சென்றதே தெரியவில்லை. சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் பேருந்தில் ஏறினார்கள். மூன்று மணி நேரம் பயணம் செய்து, சஹானா மிகத் தாமதமாக மாலையில் வீடு வர, அவளின் வீட்டு வாயிலில் வேற்றுக் காலணிகள் வீற்றிருந்தது.

அவள் தாமதமாக வரும் தகவலை அப்பாவிற்கு அழைத்துத் தெரிவித்து இருந்தாள்தான். ஆனாலும், அம்மாவின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

“அம்மா..” என்று சத்தமாக அவள் அழைக்க, அவள் வாயில் கதவைத் திறந்த சத்தத்திலேயே அவளின் குரலை முந்திக் கொண்டு அங்கு வந்திருந்தார் அவளின் அம்மா புனிதா.

“ஏன் லேட் சஹா?” அவர் முறைத்தபடி கேட்க,

“யார் மா, வீட்டுக்கு வந்திருக்கா?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் மகள்.

“ம்ம். உன்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. உனக்காகத்தான் இவ்வளவு நேரமா காத்துட்டுருக்காங்க. உன்னைப் பார்த்தே ஆகணுமாம். அப்புறம்தான் கிளம்புவாங்களாம். நீ சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு வந்து, அவங்களுக்குத் தரிசனம் கொடு” புனிதா மகள் மேல் இருந்த அதிருப்தியுடன் படபடவெனப் பேச, அவளோ அதைப் புரிந்துக் கொள்ளவேயில்லை.

“வாவ், சொல்லவே இல்லம்மா நீங்க. நீங்க முன்னமே சொல்லி இருந்தா, நான் ஊர் சுத்த போய் இருக்க மாட்டேன். இப்ப மட்டும் என்ன, ஒரே நிமிஷத்தில் வர்றேன், இருங்க. தரிசனம் என்ன, கூடவே பட்ஷணமும் சேர்த்தே அவங்களுக்குக் கொடுப்போம்.” என்று அம்மாவின் காதில் கிசுகிசுத்து, சோஃபாவில் அமர்ந்திருந்தவர்களுக்கு முகம் காட்டாமல், மெல்ல நகர்ந்து தனது அறைக்குள் புகுந்துக் கொண்டாள் சஹானா. மகளைப் பார்த்து புன்னகைத்தப்படி சமையல் அறைக்குள் நுழைந்தார் புனிதா. அவரின் பேச்சுப் பாவம் அவளுக்குத்தான் புரியவில்லை.

சஹானா அவசர அவசரமாகத் தன்னைச் சீர் செய்து, சேலை உடுத்தி, மிதமான அலங்காரம் செய்து திருப்தியான பின்னர் வெளியில் வந்தாள். நேராகச் சமையல் அறையில் இருந்த அம்மாவிடம் போய் நின்று அவள் சுழன்று வட்டமடிக்க, “என்ன சஹா?” என்றார் அவர் விரிந்த சிரிப்புடன்.

“பொண்ணு ரெடி மா. டீ, பஜ்ஜி, சொஜ்ஜி கொடுங்க. மாப்பிள்ளையைப் பார்ப்போம்” அவளும் சிரித்துக் கொண்டே சொல்ல, “வாயை பாரு, வாயை. அப்பா கேட்டா…” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “புனிதா” என்று சத்தமாக அழைத்தார் முரளிதரன்.

அதற்கு அர்த்தம் வந்தவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு என்பதை அறிந்த புனிதா, மகளிடம் பேச்சைத் தொடராமல், “இதோ, வரேங்க” என்று பதில் குரல் கொடுத்தார்.

அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மகளின் கையில் தேநீர், சிற்றுண்டி நிறைந்த தட்டை வைத்து, “எடுத்துட்டுப் போய்க் கொடு சஹா. அம்மா, அப்பாக்கு காஃபி கலக்கறேன்” எனச் சொல்ல, “ஓகே மா” என்று விட்டுக் கூடத்தை நோக்கி நடந்தாள் சஹானா.

அவர்கள் குடும்பமாக வந்திருந்தார்கள். கணவன், மனைவி அவர்களுடன் நான்கைந்து வயது நிரம்பிய குழந்தை அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை. அனைவருக்கும் தேநீர் கொடுத்தவள், புதிதாய் முளைத்த ஆர்வத்துடன் மாப்பிள்ளை முகத்தை ஆராயும் விழிகளுடன் பார்த்துக் கொண்டே அவன் முன் தட்டை நீட்டினாள். அவனோ, அவளை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. தேநீரை மட்டும் எடுத்துக் கொண்டான். ஒரு நிமிடம் உதடு பிதுக்கி தயங்கி நின்றாள். பின், சமையல் அறை சென்று அப்பாவிற்குக் காஃபி வாங்கி வந்தாள்.

காஃபி கோப்பையை நீட்டிய மகளிடம் கண்ணால் என்னவென்று முரளிதரன் கேட்க, மாப்பிள்ளையைக் கண் காட்டினாள் அவள். மிதமாகப் புன்னகைத்து, அவர் தலையசைக்க, சஹானாவின் கண்கள் மீண்டும் அவனில் பதிந்தன. பத்திரிக்கை கதைப் பக்க ஓவியங்களில் இருக்கும் நாயகனை நினைவுப்படுத்தினான் அவன்.

“எனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குப்பா” அப்பாவிற்கு மட்டும் சொல்ல விரும்பி, குனிந்து அவரிடம் கிசுகிசுத்தாள் சஹானா. ஆனால், அது மேடை ரகசியம் போல அருகில் இருந்தவர்களின் காதிலும் விழுந்து விட, அதிர்ந்து நிமிர்ந்ததில் அவன் குடித்துக் கொண்டிருந்த தேநீர் வெளியில் வந்திருந்தது.

“சஹானா” முரளிதரன் மகளை அதட்ட, எதிரில் அமர்ந்திருந்த குடும்பம் சத்தமாகச் சிரித்த மறுநொடியே அமைதியாகி இருக்க, அவள் கண்கள் அவனில் கேள்வியாகப் பதிந்தன. வெடித்துச் சிதற காத்திருந்த சிரிப்பை, சிந்தி விடாமல் இருக்க அவன் சிரமப்படுவதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கும் சிரிப்பு வந்தது.

அங்கிருந்த அனைவர் முகத்திலும் சிரிப்பிருக்க, தான் தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம், தவறுதலாக எதையோ செய்து விட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து தர்ம சங்கடத்துடன் அப்பாவை பார்த்தாள் அவள்.

“நீ, அவரை ஏன் மாப்பிள்ளை சொல்ற? அவர் மாப்பிள்ளை இல்லை சஹா” அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார்.

அப்பாவின் விளக்கத்தில் தலையில் அடிக்கக் கையை ஓங்கியவள், அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து விட்டு, சட்டெனக் கையைக் கீழே போட்டிருந்தாள். வெட்கமும், சங்கடமுமாக, “சாரி” என்றாள். சிரித்தான். மெலிதான சத்தத்துடன், பற்கள் தெரிய, கண்கள் வரை நீண்டு, அவன் அகத்தை முகத்தில் காட்டிய சிரிப்பு. அது அப்போது அவளையும் தொற்றிக் கொண்டது.

அதே சிரிப்புடன் திரும்பி சமையல் அறைக்குள் நுழைந்து, வேலையாக இருந்த அம்மாவை கோபமாக உலுக்கினாள். அவள் நடந்ததைக் கடுங்கோபத்துடன் விளக்கமாகச் சொல்ல, புனிதா அவளின் தோளைப் பிடித்தபடி சத்தமில்லாமல் குலுங்கிக் குலுங்கி சிரிக்கத் தொடங்கியிருந்தார்.

“அவர் மாப்பிள்ளை இல்ல சஹா. உன் கல்யாணம் பத்தி இன்னும் நாங்க யோசிக்கவே இல்லையே. அதுக்குள்ள நீ. சரி, விடு. உனக்கு மாப்பிள்ளைதானே வேணும்? இனி மேல் பார்ப்போம். என்ன?” புனிதா சிரிப்பிற்கு நடுவில் கேலியாகச் சிரித்தபடி, கிண்டலாக மகளிடம் கேட்க, “அம்மா, எல்லாம் உங்களால வந்தது. நீங்கதானே என்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க சொன்னீங்க.? அசிங்கமா போச்சு மா” கோபத்தி

ல் பல்லைக் கடித்துக் கத்தினாள் சஹானா. புனிதா சிரிப்பை நிறுத்தவேயில்லை.

error: Content is protected !!
Scroll to Top