அன்பின் ஆலாபனை – 1 (1)

           “அம்மா” என்று அந்த நொடி காரணம் பிரித்தறிய முடியா பயத்தில், பதட்டத்தில் சத்தமாகக் கத்தியிருந்தாள் சஹானா.

அவளை அடிக்க ஓங்கிய மாமியாரின் கைகளை, “என்னம்மா பண்ற?” என்று தடுத்து மறுப்பக்கமாக இழுத்துப் பிடித்திருந்தாள் அவளின் நாத்தனார் ராதா.

அவள் தடுக்கா விட்டால், என்னவாகி இருக்கும்? மாமியார் தன்னை அடித்திருப்பாரா? எப்படி முடியும்? இத்தனை நாட்கள் இந்த வீட்டில்தான் வாழ்ந்த வாழ்விற்கு என்ன அர்த்தம்? “மகனின் மனைவி இவள்” என்ற குறைந்தபட்ச மரியாதை கூடக் கொடுக்க வேண்டாமா? தன் மகளின் வயதே உள்ள பெண் என்ற இரக்கம்? ம்ஹூம், எதுவும் இல்லையே. அவர் பேசவும்தானே அவளும் பேசினாள்? முதலில் அவர் தொடங்கி இருக்கா விட்டால், அவள் தொடர்ந்திருக்க மாட்டாள்தானே?.

அவர் அடிக்கக் கை ஓங்கியதே ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியாக இருக்க, மாமியார் சுப்புலட்சுமியின் மேல் நிலைத்து நின்றன சஹானாவின் கண்கள்.

அந்தச் சூழலின் கனத்தைக் குறைக்க, “என்னம்மா பண்ண இருந்த? அண்ணனுக்குத் தெரிஞ்சா, என்னாகும்? அவ்ளோதான், செத்தோம்” நாத்தனார் ராதாவின் பேச்சை கேட்டதும்தான் சுய உணர்வுப் பெற்றாள் சஹானா. இப்போது எதிரில் நின்றவர்களின் முகம் பார்க்கவே எரிச்சலும், கோபமும், அவமானமுமாக இருக்க, சட்டெனத் திரும்பி நடந்து தங்களின் அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள்.

அறையின் கதவை அடைக்க முடிந்தவளால் மனத்தின் கதவை அடைக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் சில நிமிடங்களுக்கு முன் நடந்த வாக்குவாதமும், காரசாரமான பேச்சும், அதற்கு அவள் பதிலடி கொடுத்ததும், மாமியார் அடிக்கக் கை ஓங்கியதும் மட்டுமே மனத்தில் படமாக ஓடியது. உடலில் தன்னிச்சையாக வந்திருந்த பதட்டம் அவளை நடுக்கம் கொள்ளச் செய்ய, பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள்.

“அண்ணனுக்குத் தெரிஞ்சா..” என்ற நாத்தனாரின் பேச்சு இப்போதும் அவளின் காதில் எதிரொலித்தபடியே இருந்தது.

“கணவன் என்ன செய்வான்? ஒன்றும் செய்ய மாட்டான். நியாயம்தான் பேசுவான். அது, இன்னைக்கு எனக்குச் சாதகம் கிடையாது” சத்தமாகத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். அவள் குரலில் இருந்த கசப்பும், கோபமும் அவளாலே தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்க, தன் மண வாழ்க்கையை நினைத்துப் பார்க்க பார்க்க மனது நொறுங்கி கண்ணீர் தளும்பி நின்றது. அவளுக்கு அவளே அந்நியமாகத் தெரிந்தாள்.

அந்நேரம் பார்த்து சிணுங்கி தன் இருப்பைக் காட்டினாள் அவளின் தற்போதைய பிடிப்பும், எப்போதைக்குமான ஆறுதலுமான அவளின் மகளெனும் தேவதை.

தன் ஆறு மாத மகளைப் பார்க்கையில் சஹானாவின் மனம் அந்தக் கணம் தானாக அமைதியடைந்து, கனிந்தது.

நல்ல உறக்கத்தில் படுக்கையை நனைத்து விட்டு மகள் சிணுங்க, ஈரப் படுக்கையை நீக்கி, மகளைக் கையில் அள்ளி எடுத்து, துடைத்துச் சுத்தம் செய்து வேறு உடையை அணிவித்து விட்டாள். அதற்குள் பசி தாள முடியாமல் ஊரையே கூட்டுவது போல அழத் தொடங்கியிருந்தாள் பிரார்த்தனா.

“இரு செல்லம் வர்றேன். உங்கப்பாக்கு இருக்க ஆகாச பொறுமையில் ஒரு துளி கூட உனக்கு இல்ல.” புலம்பிக் கொண்டே மகளை அள்ளி, வாகாக மடியில் கிடத்தி பாலூட்டத் தொடங்கினாள்.

சட்டென ஓர் அமைதி மனத்தை நிறைக்க, மெல்ல நகர்ந்து கட்டிலின் ஓரத்திற்குச் சென்று சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் சஹானா.

மகளுக்குப் பாலூட்டும் போது மனத்தை எப்போதும் நிர்மலமாக வைத்துக் கொள்வாள் சஹானா. அந்த நிமிடம் மனம் உலைக்களம் போலக் கொதித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் சாந்தமாகச் சிந்தனைகளை ஒதுக்கி அமர்ந்திருந்தாள். பதினைந்து நிமிடங்களில் வயிறு நிறைந்து குழந்தை உறங்கி விட, முதுகில் தட்டிக் கொடுத்துப் படுக்கையில் கிடத்தினாள். மனம் மீண்டும் சண்டையிலேயே போய்ச் சுழன்று நின்றது.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுத் திருமண வாழ்க்கை. எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை சமாளிப்புகள், எத்தனை கோப தாபங்கள், எத்தனை சண்டைகள், எத்தனை, எத்தனையைதான் பொறுத்துப் போவது? இன்று அவளும் அதிகமாகப் பேசித்தான் விட்டாள். தவறு இருவரின் மேலும் இருந்தது. அதற்காக மாமியார் அவளை அடிக்கக் கை ஓங்கும் அளவிற்குப் போன பின்பு, எப்படி இனி மேலும் இந்த வீட்டில் இருப்பது?

அதை யோசித்த நொடியே விடையும் கிடைத்து விட, பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து விட்டாள் சஹானா. சரியாகப் பத்தே நிமிடம்தான். அவளுக்கும், குழந்தைக்கும் தேவையான துணிகளை, குழந்தைக்குத் தேவையான பொருட்களைத் தேடி எடுத்து அவளின் பெட்டியில் அடுக்கிக் கொண்டாள். உறங்கும் குழந்தையை வாரி அணைத்தபடி அறையை விட்டு அவள் வெளியில் வர, வீட்டின் கூடத்தில் யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை. அவரவர் அறையில் முடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்தவள், யாரையும் அழைக்கவுமில்லை. யாரிடமும் சொல்லிக் கொள்ளவுமில்லை. அதைக் குறித்துக் கவலைக் கொள்ளவும் இல்லை அவள். காலை எட்டிப் போட்டு விறுவிறுவென்று வாயிலை நோக்கி நடந்தாள்.

மனத்தின் கொந்தளிப்பு அவளின் நடையில் வெளிப்பட, இரண்டே நிமிடத்தில் அவர்களின் பகுதியில் இருந்த பிரதான சாலைக்கு வந்திருந்தாள். கண்ணில் எதிர்ப்பட்ட ஆட்டோவை நிறுத்தி ஏறியவள், “பஸ் ஸ்டாண்டு போங்கண்ணா” என்றாள் வேகமாக.

அவள் அமர்ந்த வேகத்தில் ஆட்டோவும் விரைய, அவளின் எண்ணங்களும் விரைந்தது. மாமியார், நாத்தனார் இன்னும் சற்று நேரத்தில் அவளைக் காணாமல் வீடு முழுவதும் தேடுவார்கள். கடைசியில் கணவனுக்குச் செய்தி போகும். என்ன செய்வான்? பதறுவானா? அவளுக்கு அழைப்பானா? மாட்டான் என்றே தோன்றியது. மனைவி என்றால் அப்படியொரு அலட்சியம்.

அவனை மீறி எதையும் செய்யத் துணிய மாட்டாள் எனும் கண் மூடித்தனமான நம்பிக்கை.

அந்த நம்பிக்கையைக் கலைத்துப் பார்ப்பதில் ஏனோ அலாதி ஆர்வம் பிறக்க, அதற்கு மேல் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை அவள்.

பொள்ளாச்சி பேருந்து நிலையம் சென்று நேராகத் தாய் வீடான கேரளாவின் வண்டிப் பெரியாருக்கு பேருந்து ஏறி விட்டாள். அவளது நல்ல நேரம், ஸ்லீப்பர் பஸ் ஒன்று கிளம்பத் தயாராக நின்றதும், தாமதிக்கவே இல்லை அவள்.

பயண வழியெங்கும் அலைப் பாய்ந்தது அவள் மனம். என்ன இருந்தாலும் வீட்டினரிடம் தகவல் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும் என்று எச்சரித்த அவளின் நியாயப் புத்தியை கழுத்தை நெரித்துப் பேச விடாமல் செய்தாள்.

வானமே இடிந்து வீழ்ந்தாலும் கணவன், அவனுக்குத் தோன்றினால் மட்டுமே அழைப்பான் என்று தெரிந்தும் கூட, அவனது அழைப்பை எதிர்பார்த்து அவ்வப்போது அலைபேசியை எடுத்துப் பார்த்துக் கொண்டாள் சஹானா. ம்ஹூம், அவளின் எதிர்பார்ப்பே தவறு. அவன் சூரியனைப் போல, எப்போதும் ஒரே திசையில்தான் உதிப்பான். எதிர் திசையில்தான் மறைவான். எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாத சத்யமூர்த்தி.

அவனது பெயரைப் போலவே அவனது பேச்சு, செயல் அனைத்திலும் சத்யம் இருக்கும். ஆனால், அதை வைத்து அவள் என்ன செய்வது? அந்தச் சத்யம் சக்கரைப் பொங்கலுக்குக் கூட உதவாதே.

மனைவியாய் அவன் வாழ்வில் நுழைந்த சஹானாவிற்காகக் கூடச் சிறிதும் மாறாத சத்யமூர்த்தியை, சமீபமாகச் சத்தியமாய் வெறுக்கத் தொடங்கியிருந்தாள் சஹானா. வெறுப்பு என்றால் அது அவன் மேல் அல்ல. அவனது குணத்தில் மேல். தாமரை இலைத் தண்ணீர் போன்ற அவனின் இயல்பின் மேல். எதற்கும் அலட்டிக் கொள்ளாத அவனின் சுபாவத்தின் மேல். இதெல்லாம் வெறும் சாக்குப் போக்குகள்தான். நிஜத்தில் அவனை நித்தம் நித்தம் அதிகம் நேசித்தாலே ஒழிய, வெறுப்பின் விளிம்பைக் கூடத் தொடவில்லை சஹானா. விரும்பியே அவனை வெறுக்க விரும்பினாள்.

அவனிடம், அவளின் எதிர்பார்ப்புதான் என்ன? இப்போது அவளுக்கே மறந்துப் போனதுதான் காலக் கொடுமை.

ஆறு மணி நேர பயணம். வித்தியாசமான விதத்தில் விரைவாக முடிந்தது போல உணர்ந்தாள் சஹானா. கணவன் குடும்பத்திடம் சொல்லிக் கொள்ளாமல் கோபாவேஷத்தில் கிளம்பி வந்தவளுக்கு, இப்போதுதான், தன் பெற்றோரின் ஞாபகம் வந்தது. மனம் பதறியது.

பொள்ளாச்சியில் இருந்து கிளம்பும் போது சூரியன் இருந்தான். இப்போது சந்திரன் வந்ததோடு சேர்த்து இருளையும் அழைத்து வந்திருந்தான். அந்தகாரம் அச்சமூட்டுவதாக இருக்க, உறங்கும் மகளை அணைவாகத் தோளில் போட்டுப் பிடித்துக் கொண்டு, மறுகையில் பையுடன் பேருந்தில் இருந்து இறங்கினாள்.

பெற்றோரை எப்படியாவது சமாளித்து விடலாம் என்று நினைத்தவளுக்கு‌ அந்த எண்ணத்தில் மட்டுமல்ல, அதனால் உடலில் கூடத் தடுமாற்றம் வர, ஒரு நொடி நின்று தன்னைச் சமாளித்து வெளியில் வந்தாள். அப்பாவுக்குத் தகவல் சொல்லியிருந்தால், வந்து காத்துக் கொண்டு நின்றிருப்பார்தான். ஆனால், அவள் சத்யமூர்த்திச் சஹானாவான பின்பு அதற்கு இதுவரை அவசியமே நேர்ந்தது இல்லை. இந்தத் தொடக்கம் எங்குப் போய் முடியும் என்று யோசிக்க விரும்பாமல், வீடு செல்ல ஆட்டோ தேடினாள் அவள்.

சுற்றுலா தளமான அவளின் பிறந்த ஊர், ஒன்பது மணிக்கே உறங்கச் சென்றிருந்தது. பேருந்து நிலைய வாசலில் அமர்ந்திருந்த ஆட்டோவை, அமர்த்திக் கொண்டாள். அரை மணிக்கும் குறைவான நேரத்தில், அவள் வீடு போய் இறங்கும் போது பெற்றோர் நடுக் கூடத்தில் தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தது, வீதியில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது. வழக்கமாக அவளைப் புன்னகைக்க வைக்கும் காட்சி, இப்போதும் இதழ் பிரிய வைத்தது.

மிகுந்த தயக்கத்துடன்தான் வீட்டின் கேட்டில் கை வைத்தாள் சஹானா. பெற்றோர் இந்நேரத்தில் அதுவும் தனியாக அவளையும், மகளையும் பார்த்தால் மிரண்டு போவார்கள் என்று நினைக்கையில் வந்த குற்ற உணர்ச்சியை அப்படியே விழுங்கி விட்டு, “அப்பா” என்று சத்தமாக அழைத்தாள். சட்டெனப் பதறி திரும்பியவர்,

“சஹா, இதோ வந்துட்டேன் மா” என்று அப்பா எழுந்து ஓடி வர, பின்னேயே அம்மாவும் பரபரப்பாக ஓடி வந்தார்.

அம்மா பேத்தி பிரார்த்தனாவை கையில் வாங்கிக் கொள்ள, அப்பா அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துப் போனார்.

அவர்கள் முகத்தில் அதிர்ச்சியின் அறிகுறியையே காணவில்லை அவள். அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தது போலதான் இருந்தது, அவர்கள் கொடுத்த வரவேற்பு. ஆயிரம் கேள்விக் கணைகள் வரும் என்று எதிர்பார்த்து, பதிலை பல விதமாகத் தயாரித்து அவள் நிற்க, “ஊர்ல இருந்து அவ்ளோ தூரம் பஸ்ல டிராவல் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்கும். ஹீட்டர் ஆன் பண்ணியிருக்கு. குளிச்சுட்டு வாடா” என்று அப்பா சொல்ல, கேள்வியுடன் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் சஹானா. இப்போது அவளுக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது.

“அம்மாக்கு இன்னைக்கு மார்னிங் ஷிஃப்ட். மதியமே வீட்டுக்கு வந்துட்டா. அதான், நானும் மெடிக்கல் ஷாப்பை சீக்கிரம் அடைச்சிட்டு வந்துட்டேன் சஹா” அப்பா சொல்ல, தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.

எதிர்பார்த்து நிற்கும் கேள்விகள் கேட்கப்படாத போது வரும் ஏமாற்றம்தான் எவ்வளவு எட்டியாய்க் கசக்கிறது. நடுக் கூடத்தில் போர்வை விரித்து அதில் பேத்தியை படுக்க வைத்து விட்டு, அடுப்படியில் அவளுக்குச் சுடுநீர் வைத்துக் கொண்டிருந்த அம்மாவை இப்போது பார்த்தாள் சஹானா.

“குட்டிக்கு அலுப்புப் போக அம்மா உடம்பு துடைச்சு விடுவா. நீ போய்க் குளிச்சுட்டு வாடா” அப்பா மீண்டும் அழுத்திச் சொல்ல, அவளது அறையை நோக்கி நடந்தாள். ஒரு மணி நேரம் கழிந்திருந்தது. சாப்பிட்டார்கள், பேசினார்கள், சிரிக்க முயன்றார்கள். ஆனால், கேள்விகள் கேட்கப்படாமல் அவர்கள் மூவருக்கும் நடுவில் மிகக் கனமாக அமர்ந்திருந்தது.

அவள் குற்றம் சாட்டி, அழுது புலம்பும் ரகமல்ல. ஆனாலும், மனம் ரணமாய் இருக்கையில் ஆறுதல்கள் அவசியமாகிறதுதானே? அதிலும், தவறு அவள் மேலும் இருக்கையில் குறுகுறுத்தது மனம்.

பெற்றோர் எதையெதையோ பேசினார்களே ஒழிய, பேச வேண்டியதை பேசவில்லை. அவளுக்கும் சொல்ல மனத்தில்லை என்பதை விட, பெற்றோருக்கு அதைத் தாங்கும் திடம் இருக்கிறதா என்ற பயத்திலேயே சொல்லாமல் தள்ளிப் போட்டாள் சஹானா. ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியாமல் எழுந்து விட்டாள் அவள்.

“நேரமாச்சு, போய்த் தூங்கு டா. பாப்பா தனியா இருக்கா இல்ல. நாம காலையில பேசலாம்” என்றார் அப்பா, பூடகமாக.

“அம்மாவும் உன் கூட வர்றேன் சஹா.” அம்மா சொல்ல, “வேணாம் மா. பாப்பா நடுவுல அழ மாட்டா. டிராவல் பண்ண அசதியில தூங்கிடுவா. நான் பார்த்துக்கறேன்” என்று சமாளித்து அறைக்குள் நுழைந்தாள்.

குழந்தை ஒருக்களித்துப் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அந்த நிர்மலமான முகத்தைப் பார்த்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள் சஹானா.

அவளுள் அனிச்சையாய் கணவனின் நினைவு வர, கோபமும் சேர்ந்தே வந்தது. அவளைத் தேடவேயில்லையே அவன். அவளின் தேவை அவனுக்கு அதிகம் இருந்திருக்கிறது. ஆனால், தேடல்? எப்போதுமில்லை.

நீண்ட பயணம் செய்த அசதியில் உடல் ஓய்விற்குக் கெஞ்ச, மகளுக்குப் பக்கத்தில் படுத்துக் கண்களை மூடினாள். அந்நேரம் அவளின் அலைபேசி அழைத்தது.

கணவனின் அழைப்பு. ஏனோ, எடுக்கத் தோன்றவில்லை. எத்தனை மணி நேரக் காத்திருப்பு. கிட்டத்தட்ட எட்டு மணி நேரங்கள் கடந்து விட்டிருந்தது. அவளின் கோபம் கூடச் சற்றே நீர்த்துப் போன நேரத்தில் வரும் அவனின் அழைப்பு, அவளு

க்கான எந்த ஆறுதலையும் தரப் போவதில்லை என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும்.

error: Content is protected !!
Scroll to Top