Skip to content
அத்தியாயம் 11(2)
செந்தூரன் உடை மட்டும் மாற்றி வர,
“உட்காருங்க செந்தூரன், எதாச்சும் சாப்பிட்டுப் போகலாம். தேனு நீ தான் நல்லா டீ போடுவியே, கொஞ்சம் நம்ம எல்லோருக்கும் போட முடியுமா? குந்தவை குளிச்சிட்டு வந்து உனக்கு ஹெல்ப் செய்வா” என்று உரிமையாய் சொல்ல, தேன்யாழி அப்படியே நின்றாள்.
குந்தவை, “தேனு ப்ளீஸ், எனக்கு சூடா உன்னோட இஞ்சி டீ போட்டு தா, நான் போய்ட்டு பத்து நிமிசத்துல வந்துடுறேன். அண்ணா இவளுக்கு எல்லாம் எங்க இருக்குன்னு பார்த்து எடுத்து தா” என்று சொல்லி அவளும் குளித்து உடை மாற்ற சென்றாள்.
‘என்னடா இதுங்க இரண்டும் எங்களை இப்படி மிரட்டுதுங்க’ என நினைத்த படி செந்தூரன் அமைதியாய், முதலில் தென்னவன் உட்கார்ந்திருந்த மர நாற்காலியில் அமர்ந்து பேப்பரை எடுத்துப் படித்தான்.
குந்தவை சொல்லிய பின் எப்படி அமைதியாய் இருப்பது என்றெண்ணி, தேன்யாழி சமையல் கட்டிற்குள் போக,
கழுத்தில் துண்டை சுற்றி இருந்த தென்னவன் தேன்யாழியைப் பார்த்து,
“சீக்கிரம் சீக்கிரம் டீ போடு தேனு, நான் பஜ்ஜி செய்ய ரெடி செய்றேன் மழைக்கு நல்லா இருக்கும்” என்று சொல்லி விட்டு வாழைக்காயை நறுக்கினான்.
டீக்குத் தேவையானதை செய்து அதைக் கொதிக்க விட்டவள்,
‘என்னமோ பொண்டாட்டிக்கு சொல்ற மாதிரி அதிகாரத்தைப் பாரு’ என முணுமுணுக்க,
“இப்பவும் எப்பவும் நான் ஒரே மாதிரிதான் தேனும்மா, அப்புறம் காதலிக்கும்போது அப்படி இருந்தீங்க, இப்ப என்னை அதிகாரம் பண்றீங்கனு நாளைக்கு நீ கம்ப்ளையண்ட் பண்ணக் கூடாது. பாரு அதான்” என்றான் தென்னவன்.
“ஆத்தாடியோ யார் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னா?” என்றாள் இவள் அவனைப் பார்த்து கிண்டலாய்.
“ஓ சரி காதலிக்கலயா? பரவாயில்ல நான் மட்டும் காதலிச்சுக்கிறேன்” என்றான் சட்டென.
“ஓ அப்போ கல்யாணமும் நீங்களே பண்ணிக்குவீங்களா?” என இவள் நக்கலாய்க் கேட்க,
“பின்ன நம்ம ஊர்ல பையன் தான் தாலி கட்டுவான், நீயா தாலி கட்ட போற நானே தாலிகட்டி கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று கண்சிமிட்டினான்.
“உங்களை” என்றவளுக்குச் சிரிப்பு வர, டீயை வடிகட்டியவள், அதனை ப்ளாஸ்கில் ஊற்றி வைத்தான்.
“குந்தவை மட்டும் நீங்க பேசறதைக் கேட்டா” என இவள் சொல்கையிலேயே
“வெயிட் வெயிட்! என் தேன்யாழி ஒரு அறிவு வாளின்னு நினைச்சேன் அது தப்பு போல, ஏன் டி குந்தவைக்கு எதுவும் தெரியாமையா என்னை உனக்கு ஹெல்ப் செய்ய சொல்லிட்டு போனா” என்று புருவம் உயர்த்திக் கேள்வியாய் நிறுத்தினான்.
“என்ன என்ன தெரியும் அவளுக்கு?” என்று அவசரமாய் தேன்யாழி கேட்க
“எனக்கு உன்னைப் பிடிக்கும்னு தெரியும், உனக்கும் என்னை பிடிக்கும்னு தெரியும், ஆனா நீ அதை சொல்ல மாட்டேன்னும் தெரியும். எனக்கு இருக்கிறது அவ தானே? அவ கிட்ட சொல்லாம எப்படி” என்றான்.
அதற்குள் குந்தவை குளித்து ஒரு ஸ்கர்ட்டும் லாங் டாப்புமாய் வர, தேன்யாழி பஜ்ஜியைப் போட்டுக் கொண்டிருக்க, இவள் டீயை எடுத்து வந்தாள். தென்னவனும் செந்தூரன் தனியாய் இருக்கிறான் என பெரிய மனதோடு அவனுக்குத் துணையாய் வந்து உட்கார, தேன்யாழி தான் டீ கொடுக்கிறாள் என நினைத்தவன் பின் ஸ்க்ர்ட்டைப் பார்த்து விட்டு,
‘யார் இந்த குட்டிப்பொண்ணு’ என்பதாய் எண்ணங்கள் ஓடி பார்வை பாவையை ஏறிட அவள் உடையைப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான்.
‘டிரஸை பாரு!’ என்று எண்ணம் ஓட, அதை சொல்லாது அமைதியாய் டீயை எடுத்துக் கொண்டான். தென்னவன் அன்று தான் டீயைக் கண்டவன் போல் அதை வெகுவாய் ரசித்து பருக, அதற்குள் பஜ்ஜியும் கொண்டு வந்து வைத்தாள் தேன்யாழி.
“கஷாயம் இருக்கு அடுப்புல வந்துடுறேன்” என்றபடி தேன்யாழி போனாள்.
“கஷாயமா?” என்றபடி குந்தவை பார்க்க
“வீசிங் இருக்குல்ல உனக்கு மழையில்ல நல்லா நனைஞ்சிட்ட, அதுக்கு தான் வெத்தலை கஷாயம் வடிகட்டி வைக்கிறேன் குடிச்சிடு” என்று சொல்லவும் அவள் முகம் போன போக்கைப் பார்த்தை செந்தூரனுக்கும் தென்னவனுக்கும் சிரிப்பு வந்தது.
தேன்யாழி உள்ளே செல்ல, தென்னவனும் போன் அடிக்குது போல என்று பொய் சொல்லி தேன்யாழியைப் பார்க்க போனான்.
தேன்யாழி கஷாயத்தை வடிகட்டி ஊற்றி வைக்கும் வரை பொறுத்தவன், கண் இமைக்கும் நேரத்தில் கன்னியவள் கைப்பிடித்து, தன் கழுத்தில் இருந்த துண்டினால் அவள் வதனத்தில் இருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தான்.
தென்னவன் செயலில் தேன்யாழியின் விழிகள் வியப்பில் விரிந்து கொள்ள, விரிந்த முறுவலோடு,
“என் ராஜாத்திக்கு எப்படி வேர்த்திடுச்சு பாரு அதான்” என்றவனின் மென்செய்கையில், மெல்லமாய் மலர்கிறது மங்கைக்குள் மென் உணர்வொன்று.
அவனின் கரிசனம் தொட்டது தேன் மனம்.
செந்தூரனோ தேன்யாழி கஷாயம் போட்டு தருவதாக சொல்ல, அதைக் கேட்டவனுக்கு,
‘சும்மா என் தளபதிடா என் நண்பண்டான்னு இந்த புள்ள குதிக்கும், இப்ப எங்கிட்ட எதாச்சும் சொல்லுவாளே’ என்றபடி பார்க்க, அவளோ அமைதியாய் இருந்தாள். குந்தவை பொதுவாகவே அமைதிதான். அவள் வீட்டுக்குள் மட்டுமே விளையாட்டு வால்தனமெல்லாம்.
செந்தூரனிடம் பேசியது கூட தேன்யாழி மேல் கொண்ட அன்பினால் மட்டுமே. . ஆனால், செந்தூரன் இனி இதை பேசாதே என்று வலியுறுத்தியபின் அவள் ஏன் பேசப்போகிறாள்.
அதனாலேயே எப்போதும் போல் இந்த அமைதி. இவனோடு பேசுவதற்கு என்ன இருக்கு என்று நினைத்தவள் உள்ளே போக,
அதற்குள் தென்னவன் செயலினால் உண்டான திகைத்தலும் தித்தித்தலுமாய் ஒரு உணர்வினில் திளைத்தவள் மௌனமாய் அவனை விட்டு விலகிட, நாயகன் செயலில் நாணுதல் நாயகி செயலாகியது.
மழை இன்னுமே பெய்து கொண்டிருக்க, தென்னவன் செந்தூரனோடு திண்ணையில் உட்கார்ந்து பொதுவான விசயங்கள் பேசி ஒரு நட்புணர்வு உண்டாக்கிட, தோழிகள் இருவரும் அசைன்மெண்ட் எழுதினர்.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கொட்டிய மழையினால், சிவந்திருந்த வானத்தில் வெள்ளி நதியாய் வெளிச்சம் தோன்றிட, ஒரு பக்கம் இன்னுமே இருட்டியிருக்க வானவில் தோன்றியது.
“சரி தென்னவன் நாங்க கிளம்புறோம், மழை லேசா தானே இருக்கு அப்புறம் இருக்க இருக்க இருட்டிடும்” என்று செந்தூரன் சொல்ல,
“குந்தவை” என தென்னவன் குரல் கொடுக்க, தோழிகள் இருவரும் வெளியே வந்தனர்.
“ஹைய் டேய் அண்ணா வானவில் டா” என்று குந்தவை உற்சாகமாய் சொல்ல, தென்னவனின் பார்வையும் வானத்தை நோக்கியது.
தேன்யாழியோ குந்தவையிடம்,
“காக்காக்கும் நரிக்கும் கல்யாணம்! இப்படி வெயிலும் மழையுமா இருக்கு” என்றதும் தென்னவன் அவளை அதிர்ந்து ஒரு பார்வை பார்த்து,
‘இவளுக்கும் எனக்கும் எப்போ கல்யாணம்னு நான் நினைச்சா இவ என்னடா காக்காக்கும் நரிக்கும் கல்யாணம்ன்றா” என கடுப்பாய் நினைத்தான்.
குந்தவையோ,
“எம்மா தாயே உன் பழமொழியெல்லாம் என்ட்ட டெலிவரி பண்ணாத” என்று சொல்லி சிரித்தாள். செந்தூரனுக்கும் இவர்கள் செயலில் முறுவல் மலர்ந்திட,
“வரேன் தென்னவன் கிளம்பு தேனு” என்றான்.
அண்ணனோடு உற்சாகமாய் அவனின் ஊர்தியில் போக போகிறோம் என உவகைக் கொண்டது தேன்யாழி மனம். ஆனாலும், தனக்கு முன் குந்தவை அவனின் வண்டியில் ஏறிவிட்டாள் என்ற குறுகுறுப்பு மட்டும் நீங்கிடவில்லை.
வண்டியில் போகும் போது, தேன்யாழி தனியே தென்னவனோடு வீட்டில் இருந்ததுக்கு விளக்கம் கொடுக்க எண்ணி,
“நான் போனப்ப குந்தவை இல்லண்ணா, மழை வந்துடுச்சுன்னு தான் அவங்க இருக்க சொன்னாங்க” என மெல்லமாய் சொல்ல
“நான் உன்னை ஒன்னுமே கேட்கலயே” என்றான் செந்தூரன்.
அவனுக்கு தன் தங்கை மீது எந்த சந்தேகமும் இல்லையே. ஆனாலும், கேட்டிருக்க வேண்டும் ஒரு அண்ணனாய் உரிமையாய் உடையவனாய் கேட்டிருக்க வேண்டும்.
தேன்யாழிக்கோ அவனின் பதில் தமையன் தன்னை தள்ளி வைப்பதாய்த் தோன்ற, கண்கள் கலங்கின. வழக்கம்போல் அதை தனக்குள்ளேயே புதைத்தாள்.
தென்னவன் வீட்டிலோ, தென்னவன் வைத்திருந்த துண்டை எடுத்த குந்தவை,
“என் ராஜாத்திக்கு எப்படி வேர்த்திடுச்சு பாரு” என்று கிண்டல் செய்தாள்.
“ஹே வாலு ஓவரா பண்ணாதடி பார்த்திட்டியா நீ? அவ கிட்ட போய் கேட்டு வைக்காத, அவ இன்னும் வாயால சொல்லல”
“டேய் அண்ணா!! சொல்லாமலே யார் பார்த்ததுங்கற ரேஞ்சுக்குத்தானே டா நீங்க பண்றீங்க” என்று மேலும் கேலி செய்தாள்.
“பேபி! அவளுக்குப் பிடிச்சிருக்கு ஆனா வாயால சொல்ல மாட்டேங்கிறா, நீ வர வரை அவளை உட்கார வைக்க நான் பட்ட கஷ்டம் இருக்கே, அவ டைம் எடுக்கிறா போல. அவளுக்கு என்னைப் பிடிக்குது அது போதும், நீ எதுவும் கேட்டு வைக்காதடா” என்று தங்கையிடம் சொல்ல
“நான் கேட்க மாட்டேன், உனக்கு ரொம்ப தைரியம் டா அண்ணா! அவங்க அம்மா ஏதோ சொன்னங்கறதுக்கே அந்த சீவலப்பேரி பாண்டி அவ்வளவு கோபமா அருவாளா மரத்துல வீசினார், அவர் மட்டும் நீ அவர் தங்கச்சியைக் கொஞ்சுறதைப் பார்த்தா கதம் கதம் கதை முடிஞ்சது” என்று வம்பு செய்தாள்.
“ஹா ஹா செந்தூரப் பாண்டி சீவலப்பேரியா?” என்று தென்னவன் சிரிக்க,
“எஸ் என்ன சீவு சீவுன்னார்” என்ற அண்ணனும் தங்கையும் சிரிப்பும் பேச்சுமாய்ப் பொழுதைக் கழித்தனர்.
இன்னும் ஒரு மாதத்தில் தேன்யாழிக்கு கடைசி செமஸ்டெர் தேர்வுகள். அமிர்தவள்ளி தேன்யாழிக்கு சொல்லாமலேயே பெரிய மகளுக்குப் பார்த்தது போல் சின்னவளுக்கும் வரன் பார்க்க எதுவும் அமைந்து வரவில்லை. செந்தூரனும் சில இடங்களில் விசாரித்துக் கொண்டுதான் இருந்தான்.
அன்று அப்படி தான் தேன்யாழி வீட்டில் செந்தூரன் இல்லையென்பதால் பாட்டு போட்டு நடுவீட்டில் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்க, செந்தூரன் தன் புல்லட்டை வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தான். அதனால் அவன் வந்த சத்தம் கேட்கவில்லை. அவள் ஆடுவதைப் பார்த்து
“பொம்புள புள்ள இப்படிதான் ஆடுறதா அடக்கம் ஒடுக்கம் ஒன்னுமில்ல” என்று கத்தினான்.
“ஏன் டா கத்துற சின்னப்பிள்ளை அப்படி தான் இருப்பா” என அமிர்தவள்ளி மகளுக்காய்ப் பேச,
“சும்மா அவளுக்கு வக்காலத்து வாங்காதம்மா! இவ திமிர் தான் நாலு ஊருக்குத் தெரிஞ்சிருக்கே, இன்னிக்கு கூட அந்த ஏனாதி காரங்க இவளை வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்றான் கோபத்துடன்.
ஏனாதியில் ஒரு வரன் வந்திருக்க, இப்போது அவர்களே போன் செய்து வேண்டாம் என்றுவிட்ட கோபம் செந்தூரனுக்கு. அதன் காரணம் மணிமொழி. மணிமொழியின் பெரியம்மா மகனுக்கு தான் தேன்யாழியைப் பார்க்க, அது தெரிந்தவள் ,
“அவ ரொம்ப திமிர் பிடிச்சவ பெரியம்மா வாய் ஜாஸ்தி…மதிக்க மாட்டா” என்று கண்டமேனிக்குப் போட்டு கொடுக்க, அவரும் மகள் சொல்வதை நம்பி தரகரிடம் ‘எங்களுக்கு இந்த பொண்ணு சரிப்டாது வேண்டாம்’ என்றுவிட்டார்.
அது எல்லாம் செந்தூரனுக்கு ஒரு கோபத்தைக் கொடுத்திருக்க, அதை அப்படியே இம்மி குறையாமல் இவளிடம் காட்டினான்.
“அவங்க வேண்டாம்னா என் பொண்ணுக்கு வேற வரனா அமையாது போடா வந்துட்டான்” என்று அமிர்தம் அவனை திட்ட
“இப்படியே அவளை ஏத்தி விடு, போடாவா? போறேன்! இனிமே இவளுக்கு மாப்பிள்ளை பாருன்னு எங்கிட்ட சொல்லாத, உன் பொண்ணை அப்படி கட்டிக்க க்யூல நிக்கிறானுங்க, திமிரைக் குறைச்சு வாயை அடக்கினாதானே? என் உயிரை எடுக்கனே இவளை வீட்டில வச்சிருக்க” என்று கத்தியவன் சென்றுவிட, தேன்யாழி அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.
அமிர்தவள்ளி, ”அவன் கிடக்குறான் விடு தேனு” என்று சொல்லியபோதும்,
‘என் உயிரை எடுக்கிறா’ என்ற வார்த்தைகள் அவளின் உயிர் வரை தீண்டி அவளை சுட்டது.
வார்த்தைகளும் சில சமயம் வஞ்சித்துவிடும். செந்தூரன் விதைத்து சென்ற வார்த்தைகள் தேன்யாழியை ஒரு விபரீத செயலுக்குத் தூண்டியது.
‘காயப்பட்ட சொந்ததுக்குக் கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு’
error: Content is protected !!