அத்தியாயம் 10
முன் நோக்கி செல்லும்போது கனிவாயிரு. ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
-பகவத் கீதை.
பாதி தூரம் வந்த பின் தான் காக்கி சட்டையிலேயே வந்துவிட்டோம் என்பது உரைக்க, போகும் வழியில் இருக்கும் வீட்டிற்குச் சென்று சட்டையை மட்டும் மாற்றிச் சென்றான் தென்னவன்.
கோவில் வாசல் சென்று தேன்யாழியைப் பார்க்கும் வரை பரவசத்தில் பறந்து கொண்டிருந்தான் அவன்.
அவனவளின் முகம் காண அகம் விழைய, விழிகள் சுற்றும் முற்றும் பார்த்திட, இவனை தான் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்யாழி.
அவள் இருக்கும் அந்த தூணின் அருகே சென்றவன், எதுவும் பேசாது அவளருகில் போய் நின்று, அவள் முகம் பார்த்தான்.
அவளைக் கண்டதே அவன் அகவோரங்களில் ஆனந்த காற்றினை வீசிச் செல்ல, காரிகையைக் கண்ணாரக் கண்டான், கனிந்தான் தென்னவன்.
தேன்யாழி அவன் விழிகளையைத் தன் புன்னகையால் தழுவியபடி, தன் கையில் இருந்த திருநீறை அவன் நெற்றியில் வைத்து விட்டு அப்படியே உட்கார்ந்து கொண்டாள்.
தென்னவன் கண்ணில் கார்காலம்.
ஓர் துளி நீர் தேன்யாழி தேகம் தீண்டிட, அவனிடம் மங்கை தன் மருதாணி விரல்களை நீட்டினாள். மைமல்(மாலை) நேரத்தில் மங்கை ஓரத்தில் இருக்க, ஆசையாய் ஒரு ஆவல் தூளி கட்டி அவனகத்தில் ஆடியது. பாந்தமாய் பாவை விரல்கள் பற்றி தன் கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
தலைவனும் தலைவியும் பேசா நொடிகளை, மெல்லமாய் கலைத்தாள் தேன்யாழி.
“ஹாப்பி பர்த்டே”
“தேங்க்ஸ் எனக்குப் பேச்சே வரல, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!! ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு மனசு ரொம்ப நிறைவா இருக்கு! அதை தந்த உனக்கு தேங்க்ஸ்” என்றவனின் கைகளுக்குள் தான் தேன்யாழியின் கைகள் இன்னமும் இருந்தன.
அவனும் விடவில்லை. இவளும் விலகவில்லை.
“டைம் ஆச்சு அம்மா தேடுவாங்க” என்றவளின் முகம் பார்த்தவன் ஏக்கம் பொதிந்த குரலில்,
“தென்னவன் கூட உன்னை ரொம்ப நாளா தேடுறான்” என்றவனின் பார்வை, துளியும் விலகாது தேன்யாழியைப் பார்த்தது.
“தேடல் தான் வாழ்க்கை” என்று தேன்யாழி தத்துவம் பேச
“அது என்னவோ உண்மைதான்! நான் தேடுறது என்னோட வாழ்க்கை” என்றான்.
தேன்யாழியோ அதைக் கண்டுகொள்ளாது “கையை விடுங்க” என அழுத்தி சொல்லவும், மிக மிக மென்மையாய் அவள் கைகளை விடுவித்தவன், ஒரு முறை அந்த செங்காந்தளாய் சிவந்திருந்த மருதாணி விரல்களை பார்த்துக் கொண்டான்.
தலைவனிடம் ஒரு தலையசைப்போடு தலைவி செல்ல, இவனும் அவளிடம் பிடித்திருக்கிறதா என்று கேட்கவில்லை அவளும் சொல்லவில்லை. இருவருக்குமான புரிதல் அங்கே தொடங்கியது. ஆனால், அவள் செயல் யாவும் அன்பின் வார்ப்புகளாய் ஆணத்தின்(affection) அர்த்தங்களாய் இருந்திட, இவனுக்கு வினாக்களே இல்லை அவள் விடையாகிய பின்.
********************
“இது நான் ஏலம் எடுத்த குளம்! என்ன வளர்க்கனும்னு நாங்க தான் முடிவு செய்யணும்” குணபாலன் திமிராய் சொல்ல,
“இந்த வருசம் நீ எடுத்த, ஆனா அடுத்த வருசம் நாங்க எடுத்தா நாங்களும் மீன் வளர்க்கனும்ல, மீன் வளர்க்க தானே ஏலம். உனக்கு அப்படியே நாங்க குளத்தை தூக்கிக் கொடுத்திடல” கபீரின் தந்தை கோபமாய்ப் பேசினார்.
“என்ன மாமா பேசறீங்க? இத்தனை வருசம் மத்தவங்க எடுத்தப்பவெல்லாம் ஒன்னும் பேசல நீங்க இப்ப மட்டும் வரீங்க?” என்ற குணபாலன் முகம் கோபத்தில் சிவந்தது.
“குணா நீங்க வளர்க்கிற மீன் உடம்புக்கும் சரி குளத்துக்கும் சரி கெடுதி. அதனால் தான் அண்ணன் சொல்றார்” என்று செந்தூரனின் தந்தை சிதம்பரம் பேச
“என்ன கெடுதி இது தான் நல்லா பெருகும், உங்களுக்கெல்லாம் பொறாமை மாமா”
“டேய் என்னயா பொறாமை?? முட்டாத்தனமா பேசற நீ? படிச்ச பசங்க சொல்றாங்க தானே? ஒழுங்கா இந்த மீன் வளர்க்கிறதை நிறுத்திடு” சிதம்பரம் கோபமாய் சொன்னார்.
“என்ன மாமா மிரட்டுறீங்க என் இஷ்டப்படி தான் நான் செய்வேன்” என குணபாலனும் எகிற, அந்த குளத்தின் அருகே குழப்பமும் கூச்சலுமாய் இருக்க, அது மெயின் ரோட்டில் இருக்கும் குளம் அதனால் வழியில் சென்ற யாரோ போலிஸுக்குத் தகவல் சொல்ல, தென்னவன் தன் காக்கி சட்டையில் வந்து இறங்கினான்.
வந்து பார்த்தால் அடிதடி மட்டும் தான் இல்லை. ரோட்டையையே மறைத்து அவ்வளவு சத்தமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
“என்ன பிரச்சனை எதுக்கு இப்படி கூடியிருக்கீங்க?” என்று தென்னவன் சத்தம் போட
“அது சும்மா தான் தம்பி, நாங்களே பேசி தீர்த்துக்கிறோம்” என்றார் ஒருவர்.
“நீங்க பேசி யாராயாவது தீர்த்திட்டா என்ன செய்யனு தான் ஐயா நான் வந்திருக்கேன்” என்று சொன்னவன் என்ன பிரச்சனை என்று கேட்டறிந்தான்.
“தம்பி வருசம் வருசம் குளத்தை ஏலம் விடுறது வழக்கம். . ஏலம் எடுக்கிறவங்க மீன் வளர்த்து, அதை அவங்க இஷ்டப்படி வித்துக்கலாம். ஆனா இந்த வருசம் ஏலம் எடுத்த இந்த குணபாலன் பைய ஆஃப்ரிக்கா கெளுத்தி மீனை வளர்க்கிறான். அது நல்லதில்லனு இந்த பயலுவோ சொல்றானுவோ, அதை இவன் கிட்ட சொன்னா இவன் கேட்காம குதிக்கிறான்” என்று கபீரின் தந்தை சொல்ல
“என்ன குணபாலன் நீங்க என்ன சொல்றீங்க?” என குணபாலனிடமும் கேட்டான்.
“சார் வழக்கமா அவங்க அவங்க இஷ்டப்படி தான் மீன் வளர்க்கிறது, நான் வளர்த்தா மட்டும் குறை சொல்லி என்னை நாட்டாமை செய்றது எப்படி சார் நியாயம்? இதுன்னா டக்குன்னு வளர்ந்திடும், நஷ்டமும் கிடையாது! நான் நல்ல லாபம் பார்த்துடுவேன்னு பொறாமைப்பட்டு பேசறாங்க சார் இவங்க” என்று அவன் பக்கம் நியாயத்தை சொல்ல
“சார் அது invasive species!! african catfish ஆக்கிரமிப்பு உயிரினம், அதுக்குக் கோழி ஆட்டோட இறைச்சியைப் போட்டா கூட நல்லா வளரும் அப்படி செஞ்சா குளமே மாசு படும்! அது வளர்ந்தா மட்டும் பரவாயில்ல கூட வளர்ற மத்த மீன், சின்ன உயிரினம் செடி ஒன்னையும் விட்டு வைக்காது சார்! மொத்தமா அழிச்சிட்டு அதோட வம்சம் மட்டும் தான் நிலைச்சு இருக்கும். நீர் வளமும் குறைஞ்சிடும் சார், இந்த அண்ணன் சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்” என்றான் அங்கிருந்த இளைஞன் ஒருவன்.
“நீங்க யாரு?” என்று தென்னவன் கேட்க
“நான் மாதவன் சார் பக்கத்து ஊர்ல சைன்ஸ் டீச்சரா இருக்கேன். இந்த அண்ணன் எங்க பங்காளி, எங்களுக்குள்ள ஒரு சின்ன தகராறு, அதனால் நான் சொல்றேன்ங்கறதுக்காகவே இவர் ஒத்துக்க மாட்டார்” என்றான் மாதவன்.
“ஒரு நிமிசம்” என்றவன் தன் செல்பேசியில் கொஞ்சம் நேரம் பார்வையை ஓட்டிய பின்,
“இங்க பாருங்க குணபாலன் உங்க பிரச்சனை எனக்குப் புரியுது. ஆனா மீன்வளத்துறையே இந்த மீனை வளர்க்க தடைப் போட்டிருக்காங்க, மீறி செஞ்சா உங்க மேல நடவடிக்கை தான் எடுக்கனும்! உலகம் முழுக்க இந்த மீன் நிறைய வளங்களை அழிச்சிருக்கு! உங்க வம்சத்துக்கு சொத்து சேர்த்து வச்சா மட்டும் போதுமா? ஆரோக்கியம் வேண்டாமா?” என்று கேட்டான் தென்னவன்.
“அதையெல்லாம் அனுபவிக்க, முடிஞ்சா நம்ம மண்ணோட மீனை வளர்க்கற வழியைப் பாருங்க! ஒரு இரண்டு நாள் டைம் தரேன், அதுக்குள்ள இதையெல்லாம் க்ளீன் பண்ணிடுங்க. இல்லன்னா நான் கம்ப்ளையண்ட் பண்ணி, உங்க மேல ஆக்ஷன் எடுக்க வைக்க வேண்டி வரும்”
“என்ன தம்பி மிரட்டுறீங்களா, நான் தான் ஏலம் எடுத்துருக்கேன் எனக்கு இல்லாத உரிமையா? எனக்கு எம். எல். ஏ நல்லா பழக்கம்” என்று குணபாலன் எகிற
“எனக்கு கூட சிஎம்மை நல்லா தெரியும் மிஸ்டர். குணபாலன் ஏலம் தான் எடுத்திருக்கீங்க, ஆனா நீங்க செய்றது சட்டப்படி தப்பு! நீங்களா இந்த மீனையெல்லாம் அப்புறப்படுத்தினா நல்லது, இல்ல அடம்பிடிச்சா நான் அப்புறப்படுத்த வைப்பேன்”
என்றான் தென்னவன்.
“பார்த்திங்களா சார் எப்படி பேசுறார்னு” என்று மாதவன் பேச வர,
“அவர் கிட்ட நான் பேசிக்கிறேன் மாதவன், ஊர்த்தலைவர் யாரோ இதை பாருங்க. மத்தவங்களாம் இதுல தலையீட்டு பெரிசாக்காம போங்க, உங்க விஏஓ கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன், முதல்ல கூட்டத்தைக் கலைச்சிட்டு போங்க” என்றவன் கூட்டத்தைக் கலைத்து, பிரச்சனையை ஒருவாறாக முடித்து அனுப்பி வைத்தான்.
கூட்டம் கலைந்து பின் பார்த்தால் சிதம்பரம் அங்கு இருக்க,
“நல்லா இருக்கீங்களா மாமா?” என்றான்.
“நல்லா இருக்கேன் தம்பி எப்படியோ நல்லபடியா விசயத்தை முடிச்சிட்டிய” என்று சிர்த்தார்.
புன்னகைத்தவன் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தேன்யாழி வீட்டில் இருப்பாள். அவளைப் பார்க்க எதாவது சாக்கிட்டு செல்லலாம் என யோசிக்க, அதற்குள் சிதம்பரம்,
“வாங்களேன் தம்பி காபி தண்ணி குடிச்சிட்டுப் போகலாம்.” என்று கூப்பிட
இவன் உடனே “சரிங்க மாமா” என்று சொல்லி அவர் பின்னே வீட்டிற்குச் சென்றான்.
புதிதாய் வண்டி சத்தம் கேட்டு தேன்யாழி வாசலுக்கு வந்த பார்க்க, தென்னவன் உள்ளத்தில் உயர எழும்பிய புன்னகையை உள்ளிழுத்தபடி, இவளை கண்ணில் குறும்போடு பார்த்தான்.
சிதம்பரம் , “தேனு தம்பிக்கு டீ போட்டு கொண்டா” என்று சொல்ல, மாடுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த செந்தூரன் வந்து,
“என்னப்பா என்ன ஆச்சு சார் வந்திருக்கார்?” என்று கேட்டான்.
“அது இந்த குணாப்பையா ஆஃபிரிக்கா கெளுத்தி மீனைக் கொண்டாந்து குளத்துல விட்டு, அழிச்சாட்டியம் பண்ணான். அவனுக்கும் மாதவனுக்கும் கைகலப்பு ஆகியிருக்கும், தம்பி வந்து சுமூகமா பேசி முடிச்சிட்டார்” என்றார் சிதம்பரம்.
தென்னவனோ செந்தூரனைப் பார்த்து “என்ன நீங்க சார்னு சொல்லிட்டு? சொந்தம்னு ஆகிப்போச்சு என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்று சொல்ல
செந்தூரனும், “சரிங்க” என்றான்.
“அத்தை இல்லையா?” என்று தென்னவன் கேட்க
“அவ எங்க வயல்ல களை எடுக்கிறாங்க, அங்க போயிருக்கா.” என்றார் சிதம்பரம்.
“ஏன் தம்பி சிஎம்மை நிசமா உங்களுக்குத் தெரியுமா குணா கிட்ட சொன்னீங்க?” என்று கேட்க
“ஹாஹா! மாமா சிஎம்மை எனக்குத் தெரியும், அவங்களுக்குத் தான் என்னை தெரியாது. அந்தாளு எம். எல். ஏவ தெரியும்னு சொன்னார்ல அதான் சும்மா அடிச்சுவிட்டேன்” என்று சொல்ல
“ஹா ஹா, நல்லா சொன்னீங்க போங்க” என்று சிரித்தார் அவர்.
அதற்குள் தேன்யாழி அப்பா, அண்ணன், தென்னவன் மூவருக்கும் டீ எடுத்து வந்து தர,
தேன்யாழியை விழியாலும் தேனீரை இதழாலும் பருகியவன் “டீ தேன் மாதிரி இருக்கு” என்று சொல்ல, தேன்யாழியோ திடுக்கிட்டாள்.
அவன் மீது கோபம் எழுந்தாலும் அதைக் காட்டாது உள்ளே சென்று விட்டாள். செந்தூரனோ,
“அது வெல்லம் போட்ட டீ அப்படி தான் இருக்கும்” என்று சொன்னவன் தங்கையை ஒரு பார்வை பார்க்க, அவள் தான் அப்போதே ஓடி விட்டாளே. தென்னவன் ஏதோ எதார்த்தமாய் சொல்கிறான் என விட்டுவிட்டான்.
டீயைக் குடித்தவன்,
“மாமா எனக்கு மருதாணி செடி வேணும் வீட்ல வைக்கறதுக்கு இருந்தா தரீங்களா?” என்றதும்
சிதம்பரம் செந்தூரனிடம்,
“தம்பிக்கு மருதாணி கண்ணு வெட்டிக் கொடுடா” என்றதும் அவனும் அவ்வாறே செய்தான்.
உள்ளே நின்றிருந்த தேன்யாழிக்கோ தென்னவன் செயலில் சிரிப்பு வர, தன் கைகளைப் பார்த்தாள்.
அவள் மருதாணி சிவப்பும் போகவில்லை. மன்னவனின் நினைப்பும் போகவில்லை.
*******************************************
குந்தவை அன்று டவுனிற்கு புத்தகமும், மற்ற பொருட்களும் வாங்க வேண்டி பேருந்தில் ஏறினாள். டிக்கெட் எடுக்கும்போது தான் பார்க்கிறாள் அவள் வைத்திருப்பது எல்லாம் ஐநூறு ரூபாய் நோட்டுகள்.
அவளுக்குத் தேவை என்னவோ பத்து ரூபாய் தான். ஏதோ ஒரு மறதியில் வந்து விட்டதை நினைத்தவள் சரி கொடுத்து பார்ப்போம் என ஐநூறு ரூபாயை நீட்டிட,
நடத்துனரோ,
“என்னம்மா அநியாயம் பண்ற? ஐநூறு ரூபாக்கு உனக்கு மொத்த சில்லரைக் கொடுத்திட்டா, மத்தவங்களுக்கு நான் என்ன செய்ய?” என கோபமாய்க் கேட்டார்.
“சில்லரை தா மா” என்று சென்று விட, இருந்தால் தானே தருவாள் அதற்குள் அடுத்த ஊர் வந்திருக்க, செந்தூரனும் பேருந்தில் ஏறினான். இவள் நடத்துனரோடு பேசியதைக் கண்டவன்,
“இரண்டு டிக்கெட் எடு” என்று அவனுக்கும் சேர்த்து அவளை எடுக்க சொல்ல,
‘தப்பிச்சோம்’ என நினைத்தவள் அவனை நன்றியோடு பார்த்து டிக்கெட் எடுத்தாள். அவனிடம்
“தேங்க்ஸ்” சொல்லி டிக்கெட்டை கொடுத்தவள் அவனை பார்த்து மென்னகை செய்ய, பதிலுக்கு அவனும் புன்னகைத்தான்.
பின் இருவரும் டவுனில் இறங்கிட, செந்தூரன் இறங்கி அவன் பாட்டிற்குப் போக, அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்து அவன் பின்னேயே போனாள்.
‘எப்போதும் உன் மேல் ஞாபகம்
என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்
அன்றாடம் உன்னைப் பார்க்கணும்
என் அன்பெல்லாம் கொட்டித் தீர்க்கனும்’