“டேய் இதுதான் டைவர்ஸ் பேப்பரா டா? இல்லை ப்ராங் பண்றாளா உங்கக்கா?” கையில் இருந்த விவாகரத்து பத்திரத்தைத் திருப்பி திருப்பிப் பார்த்தான் பரசுராம்.
“சந்திரகுமார் திவ்யாக்குக் கொடுக்கும்போது கூட இந்த மணி ரத்னம் ZOOM வைக்கலடா, அதான் எனக்கு சரியா தெரியல…” என்றவன் எல்லா வரியையும் படித்தான். அவன் மனைவியின் கையெழுத்து அப்படியே இருக்க, எத்தனை முறை பார்த்தாலும் பத்திரம் பார்வையில் மாற அவன் என்ன பட்டணத்து பூதமா?
“மாமா, திருப்பி திருப்பி புரட்டினாலும் டிவோர்ஸ் பேப்பர் ‘தி இந்து’வா மாற வாய்ப்பில்ல, டிவோர்ஸ் டிவோர்ஸ் தான்!” என்றான் அவன் முன்னே இருந்த மாதவ் பரமேஷ்வர்.
“மாதவா, என்னடா இப்படி சொல்லிட்ட? நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்னு உங்கக்கா எனக்கு டிவோர்ஸ் விட்டிருக்கா?” பரசுராம் கோபமாகக் கேட்டான் மாதவனிடம்.
“பெருசோ சிறுசோ தப்பு செஞ்சதாலதானே விட்டிருக்கா, போ போ. நாங்க உன்னைக் கோர்ட்ல மீட் பண்றோம். கவலைப்படாத மாமா கண்டிப்பா ஜீவனாம்சம் தரோம். முடிஞ்சா வேற பொண்ணு கூட பார்த்து தரோம்” என்றான் மாதவ் கிண்டலாக.
“போடா இவனே” என்று திட்டிவிட்டு அந்த பத்திரத்தை எடுத்த பரசுராம் நாற்காலியை எட்டி உதைத்தபடி அந்த அறையை விட்டு வெளியேறினான். அந்த நேரம் எங்கும் போக விருப்பமில்லை, ஒரு ரெஸ்டாரெண்ட் சென்றவன் செல்வாவுக்குப் போன் செய்ய நினைத்தான்
மாதவனை விட செல்வா இவனிடம் நெருக்கமில்லைதான், ஆனால், அக்காவுக்கு ஒன்றென்றால் நொறுக்கி விடுவான் அவன், மாதவனே பயங்கரமாகப் பேசியிருக்க, செல்வாவை நினைத்தால் பயம் கூட வந்தது. என்ன ஒன்று நக்கலில்லாமல் சிக்கல் தீர்க்கும் வகையில் எதாவது சொல்ல வாய்ப்புண்டு, பேசினாலும் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தான்.
“சொல்லுய்யா” எடுத்தவுடன் செல்வா பேச்சு இப்படித்தான் வந்தது.
“உங்கக்கா கிட்ட இருந்து டிவோர்ஸ் பேப்பர் வந்திருக்கு செல்வா” மெல்ல பரசுராம் சொல்ல,
“என்ன பண்ண சொல்ற அதுக்கு?”
“பெரிய இவனாட்டாம் அவதான் லவ் லைஃப்னு பேசின, அத நம்பி கட்டிக் கொடுத்தா அவளை அழவைச்சு அனுப்பிட்ட நீ, இப்ப என்னயா வேணும் உனக்கு? டிவோர்ஸ் கொடுத்தா வாங்கிட்டு போ” என்றான் பட்டென்று.
‘இவனுங்க குடும்பத்துல வாக்கப்பட்டு நான் எல்லா பேச்சும் வாங்குறேன்’ புலம்பத்தான் முடிந்தது பரசுராமால்.
“இல்லை செல்வா” இவன் இழுப்பதற்குள் அவன் போனை வைத்தேவிட்டான். திருப்பி அழைத்தால் இதைவிட மோசமாக பேச்சு வரும் என்பதால் ‘எம்3’ என்று பதியப்பட்ட எண்ணுக்கு அழைத்தான். அவன் மச்சான்களில் இளையவன், அறிவாளி, இவனின் செல்லப்பிள்ளை எல்லாம் மூன்றாமவன்தான். அதனால் நம்பிக்கையாக அவனுக்கு அழைத்தான்.
“சொல்லுங்க மாம்ஸ் ” உரிமையாக வந்தது உதய் குரல்.
“உதய் கண்ணா, உங்கக்கா எனக்கு டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியிருக்காடா” என்று மறுபடியும் புலம்ப ஆரம்பித்தான் பரசுராம்.
“அக்காவை அழவைச்சீங்கதானே மாம்ஸ், அக்காவுக்கு நீங்க வேண்டாம்” உதய் சொல்ல, சீறினான் அவனிடம்.
“அழுகை வரும்னு வெங்காயம் கூட உரிக்க விட்டதில்லடா நான், அதைவிட உங்கக்காகவுக்கு அது வரவும் வராது. ஒரு நாள் பேசிட்டேன், அதுக்குத்தான் இத்தனை மாசம் என்னை தள்ளி வைச்சு டார்ச்சர் பண்றாளே, எங்க இருக்கானு கூட மூணு பேரும் சொல்ல மாட்டேங்கிறீங்க, பேசியாவது அவளை எங்கூட இருக்க வைப்பேன் உதய், ப்ளீஸ் சொல்லுடா” கெஞ்சினான் பரசு.
“நீதான் டா நல்லவன், அந்த இரண்டு பேரும் இரக்கமற்ற அரக்கனுங்கடா, என் பொண்டாட்டி எங்க போயிருக்கான்னு தெரிஞ்சும் தெரியாத மாதிரி பண்றானுங்கடா. மாமா உனக்கு என்னவெல்லாம் பண்ணியிருக்கேன், ப்ளீஸ் உதய் அக்கா எங்க இருக்கா சொல்லேன்” பரசுவின் கெஞ்சலில் இரங்கினான் உதய்குமார்.
உதய் இவனிடம் “அக்கா நா’கர்ல இருக்காங்க மாம்ஸ்” என்றதும்
அண்ணா நகரில் அவர்களின் வீடு ஒன்று இருப்பது இவனுக்குத் தெரியுமே “ஓஹ், அண்ணா நகர்ல இருக்காளா, இத்தனை மாசம் இது தெரியல எனக்கு” என்று ராம் தன் நெற்றியில் தட்டிகொள்ள,
“ஓஹ், மாம்ஸ்! அக்கா naggarல இருக்கா. ஹிமாச்சல் ப்ரதேஷ்!” என்றதும்
“ஏண்டா அவ்வளவு தூரம் போனா? அங்க அனுப்பிட்டுத்தான் இந்த மாதவன் எனக்குத் தெரியாதுனு ட்ராமா போட்டானா?” என்று பெரிய மச்சானைத் திட்டினான்.
“மாம்ஸ், ரெண்டு அண்ணாவுக்கும் தெரியும். கேடி பெலோஸ் என்ட்ட சொல்லவே இல்லை. நானே அவனுங்களை வாட்ச் பண்ணி கண்டுபிடிச்சேன்.” என்றான் உதய் பெருமையாக.
“அங்க போய் உட்கார்ந்திட்டு இங்க டைவர்ஸ் விடுறாளா அவ? கல்யாணமாகி என்னோட ஒரு ஹனிமூன் வர முடியல, தனியா ஏன் அங்க போயிருக்கா?” என்று பொறுமினான்.
“ஹ்ம்ம், நீங்க ஒருவேளை ரொம்ப கடுப்பேத்தியிருப்பீங்க, அதனால கூல் ஆகலாம் அங்க போயிருப்பாங்க”
“போ உதய்! நீ வேற ஏண்டா? ஒரு போன் போட்டா கூட எடுக்கிறதில்லை, இரண்டு மாசம் ஆகுதுடா அவளைப் பார்த்து பேசி, கஷ்டமாயிருக்குபா” என்று மனம் விட்டு புலம்ப, உதய்க்கும் வருத்தமாக இருந்தது. அக்கா என்றால் பரசுராமிற்கு எவ்வளவு பிடிக்கும் என்று உதய்க்கு நன்றாகவே தெரியுமே.
“மாம்ஸ், கூல்! பாருங்க உங்களுக்காகத்தான் நான் இடம் சொன்னேன். நீங்க அக்கா தங்கியிருக்க காட்டேஜ் போய் அவளை எப்படியாச்சும் கன்வீன்ஸ் பண்ணிட்டு அங்கேயே ஹனிமூன் கொண்டாடிடுங்க, இல்லையா அப்படியே மேல போனா காஷ்மீர்!”
“இன்னும் மேல உங்க அக்கா என்னை கைலாசம் அனுப்பாம இருந்தா சரிடா. உதய் செல்லம் உனக்காக மாமா செஞ்சதுக்கு எல்லாம் சேர்த்து பெரிய உதவி பண்ணிட்ட, தேங்க்ஸ்டா” என்றவன்
“இன்னிக்கே கிளம்புறேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டான். உதய்யிடம் பேசிய பின் பரசுவோ மனத்தில்
“உங்ககிட்ட என் பொண்டாட்டியைப் பேசவிடாம பண்ணனும்டா முதல்ல, ஒருத்தன் கூட சேர்ந்து வாழுங்கன்னு சொல்றானுங்களா, சேடிஸ்ட் பெல்லோஸ்!” என்று வசைப்பாடினான்.
தேவையான உடைகள், குளிருக்கு இதமான ஆடைகள் எல்லாம் எடுத்துவைத்தான். டிக்கெட் கூட போட்டுவிட்டான்.
எல்லாம் செய்தவன் மாதவனுக்கு அழைத்தான்.
“சொல்லு மாமா” என்று அவன் சொல்ல,
“எம். டி சார் எனக்கு ஒருவாரம் லீவ் வேணும்” என்றான்.
“எம். டி சாரா? ஓஹ்! சொல்லுங்க மிஸ்டர். பரசுராம் எதுக்கு லீவ்?” என்று அவனும் கெத்தை விடாது கேட்டான். அவர்கள் நிறுவனத்தின் மேனேஜராக இருக்கிறான் பரசுராமன். திருமணத்திற்குப் பின்னும் அங்குதான், எந்த சலுகையும் கிடையாது. எதிர்ப்பார்க்கவே மாட்டான். ஆனால், அவனுக்கா
மரியாதை எப்போதும் அங்கே உண்டு. இப்போது அவனாகவே மச்சானை எம்டி யாக்க அவனும் அப்படி நடந்தான்.
“பெர்சனல் ரீசன்ஸ் ஸர்” என்றான் ராம்.
“என்ன சார் உங்க பொண்டாட்டி விட்ட டைவர்ஸ் நோட்டிஸ் சம்மந்தமாவா? லாயர் பார்க்கனுமா? நானே நம்ம கம்பெர்னி லீகல் அட்வைஸர் அதிரன் இருக்காரே அவரை ரெஃபர் பண்ணவா?” என்று கேட்க கடுப்பானான் பரசுராம்.
“ஏன் ஸார்? லீவ் கேட்டா கொடுங்க, சும்மா ரீசன் கேட்காதீங்க” என்றான் எரிச்சலாக.
“அது எப்படி உங்களுக்கு லீவ் கொடுத்திட்டா உங்க வேலையை எல்லாம் யார் பார்ப்பா?” என்று மாதவ் விடாது கேட்டான்.
பரசுராமிற்கு அவனை சமாளிக்க முடியவில்லை “டேய் நைட் ஃப்ளைட் இருக்குடா மாதவா, ஆளை விடுப்பா” என்று கெஞ்சினான்.
“எங்க போறீங்க?”
“என் பொண்டாட்டியைப் பார்க்க போறேன்”
“அக்கா ரிலாக்ஸ் ஆகலாம்னு அங்க போயிருக்காங்க, நீங்க போனா சரியா இருக்காது” மாதவ் சொல்ல,
“எம்டி சார்ர்ர்! லீவ் கேட்டா கொடுங்க, சும்மா எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். அக்கறை இருக்க மாதிரி நடிக்காதீங்க, முதல்ல கேட்டப்ப சீன் போட்டுட்டு” என்றான் கடைசியில் முணுமுணுப்பாக.
“சாரி மிஸ்டர். பரசுராம். இஷ்யூஸ்லாம் வந்தா யார் பார்ப்பா? உங்களுக்கு ஒன் வீக் லிவெல்லாம் கிடையாது” அவன் கறாராகப் பேச,
“பாவி, பத்தாயிரம் கட்டியிருக்கேன் டா டிக்கெட்டுக்கு. சோதிக்காத மாதவா” என்று பரசு மீண்டும் புலம்பினான்.
“ஹாஹாஆ…! அதுக்கு என்ன செய்றது. அது உங்க பிரச்சனை. ஏற்கனவே கல்யாணம்னு ஒரு பத்து நாள் லீவ் எடுத்துட்டீங்களே. நோ சான்ஸ், வேணும்னா நீங்க செல்வா சாரை கேட்கிறீங்களா?” என்றதும்
“இதுக்கு வேலையை விட்டே அனுப்பிடலாம் நீ” என்ற பரசுராம்
“அவ இருக்க இடமும் சொல்லாம டார்ச்சர் பண்ணீனிங்க, இப்போ கண்டுபிடிச்ச அப்பறமும் இம்சை பண்ணாதீங்கடா, குடும்பத்தை கலைக்காதீங்கடா கொடூர பசங்களா” என்று திட்டியவன்
“நான் அவளைப் பார்க்க போறேன்னு அவகிட்ட சொல்லி வைக்காதடா மாதவா, அப்புறம் என்ன வேலைனாலும் நீயே பார்த்துக்கோ. இல்லைனாலும் இந்த வேலையை நீங்களே வைச்சிக்கோங்க, வேலை போனா வேற வேலை இருக்கு, ஆனா ஒரு வாழ்க்கைதான் இருக்கு. சோ உங்களுக்கும் ஒரு கும்பிடு உங்க வேலைக்கும் ஒரு கும்பிடு.” என்றவன் போனை வைத்துவிட்டான். அரைமணி நேரத்தில் மீண்டும் பரசுவிற்கு மாதவனிடமிருந்து அழைப்பு.