52.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 52

 

 

வாழ்க்கை விசித்திரமான ஒன்று. சுகமான பயணம் எப்பொழுது சூராவளிக்குள் மாட்டும் என்று ஒருவருக்கும் தெரியாது. எதுவுமே நிரந்தரமல்ல என்பதை அவ்வபோது அது எடுத்துக் காட்டத் தவறுவதில்லை. அது தான், அந்த நிரந்தரமின்மை தான் வாழ்வின் சுவாரசியமும் அழகும் கூட. 

மாதங்கள் பல மிக நிதானமாக ஆமை வேகத்தில், மனோ-அலர்விழியைச் சார்ந்த அனைவரையும் குத்திக் கிழித்து நகர்ந்திருந்தது.

“இப்படி நீங்க அலர்விழிய அடிக்கடி பார்க்க வந்தா, அவளால இழப்பில இருந்து மீள முடியாது. சின்னப் பொண்ணு… வேற வாழ்க்கை அமைச்சுக்கணுமே” என்று எபியின் பெற்றோரைத் தள்ளி நிறுத்திய அதே அலர்வியின் பெற்றோர், 

“மனோ மட்டும் தான் என் வாழ்க்கையில! நூறு வருஷம் வாழ்ந்தாலும் பலருக்கு கிடக்காத நிறைவான வாழ்க்கைய வாழ்ந்திருக்கோம். இப்பிடி வாழாமப் போயிட்டமேன்னு நினைச்சு ஏங்குற மாதிரி என்னை அவர் விடவே இல்ல. மனசு முழுசும் அவர் இருக்கார். அவர் நினைவோட அவர் வளர்ந்த வீட்டுல வாழ்ந்திடுவேன். என்னை என் வீட்டுல விட்டுடுங்க” என்று உறுதியாய் பேசியவளை, வேறு வழியில்லாமல் மனோ வீட்டில் விட்டுச் சென்றனர் அலர்விழியின் பெற்றோர். 

‘நேரம் காயங்களை குணமாக்கும் என்பதெல்லாம் சுத்தப் பொய்! பழைய நினைவுகளை புது நினைவுகள் மறைத்து விடும் என்பது மட்டுமே மெய்!’ 

கசிந்துருகிக் காதலித்தவன் விட்டுச் சென்ற காயம் அதிகம் என்பதால், கடந்து சென்ற காலத்தால், அலர்விழியின் வலியை எடுக்கவும் முடியவில்லை குறைக்கவும் முடியவில்லை.

புதிய நினைவுகள் பல, ஆனால் அது அனைத்துமே கனலாய் எரிந்துகொண்டிருந்த மனோவின் நினைவுகளின் மேல் பனித் துளியாய் கரைந்து போனதால் மனோவின் நினைவுகளோடே உலா வந்தாள் பெண்ணவள். அவன் நினைவில் இதழ் விரித்தாள், அவன் நினைவோடு கண் மூடி. கண் விழித்தாள், அவன் நினைவோடு கால் நனைய கடற்கரை மணலில் நடை பயின்றாள். ஊனோடும் உயிரோடும் கலந்து போனவனின் அழியா நினைவுகளோடும், அவன் தனக்காக விட்டுச் சென்ற கனவோடும் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அலர்விழியோடான புகைப்படங்களை அவ்வப்போது அம்மாவிற்கு அனுப்பி விடுவான் போலும். அவள் இருந்த அந்த பெரிய அறையின் ஒரு சுவர் முழுவதும் அவர்கள் வாழ்ந்த ஐந்து வருட வாழ்க்கை படமாக ஒட்டப்பட்டிருந்தது. 

வந்த அன்று எஸ்தர் தான் அறைக்கு கூட்டி வந்தார். “அவன் மூணு மாசமா இருக்கும் போது இங்க தான் தொட்டில் கட்டினேன், என்ன அழுதாலும் தொட்டில்ல போட்டதும் அமைதி ஆகிடுவான் என் மகன்.” முகம் கொள்ளா புன்னகையோடே கூறினார். 

“எட்டு மாசம் போது அவ்வளவு வேகமாத் தவழுவான். அவனுக்காகவே ரூம காலியா வச்சிருப்பேன்.” அறை முழுவதும் அவன் அடுக்கி வைத்திருந்த சாதனங்களை பார்த்துக் கொண்டே மகனின் லீலைகளைப் பகிர்ந்தார்.

“இங்க நீ நிக்கிற இடத்துல தான் முதல் முதலா அந்த பிஞ்சுக் கால் பதிய எழுந்து நின்னான் என் மகன். அந்த பால்கனில வச்சு நிலாச் சோறு ஊட்டுவாங்க அவன் பாட்டி. இந்த கூகிள் கோம்-ல தான் எந்நேரமும் பாட்டு கேப்பான். இதோ இந்த சுவர்ல தான் அவன் வாழ்க்கையோட முக்கியமான தருணத்த எல்லாம் ஃபோட்டோவா ஒட்டி வைப்பான். இதுல முக்கால் வாசியும் இந்த ரெண்டு வருஷமா, அவன் அனுப்பின போட்டோஸ்…” அதற்கு மேல் நிற்க முடியாமல் எஸ்தர் சென்று விட, சுவர் முழுவதும் காதல் விட்டுச் சென்ற இனிய சுவடுகள் அவளைத் தடுமாற வைத்தது. 

வழுவழு முடியோடு கருப்புக் கண்ணாடி அணிந்து ஹோட்டல் முன் கேமிரியில் சாய்ந்து நண்பர்களோடு நின்றிருந்தான். ஒட்ட வெட்டிய தலை முடியும், அரை சென்டிமீட்டர் நீளத் தாடியும், முறுக்கி விட்ட மீசையுமாக மரத்தடியில் வியர்வை சொட்ட நின்றிருந்தான். அவள் பீச் நிற ரவிக்கையில் அவனோடு நின்றிருந்தாள்… இன்னும் இன்னும் அனேக படங்கள்!

முன்பு பார்த்த புகைப்படங்கள் பல! மீண்டும் மீண்டும் பார்த்தாள். அன்று புரியாதது இன்று புரிந்தது. சுவர் முழுவதும் சித்திரமாய் ஒட்டப் பட்டிருந்தது, தன்னைப் பார்த்த நாளன்றும், தன்னோடும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுமே! 

அன்று போலவே மீண்டும் “ஏன் மனோ…” என்று குலுங்கினாள். ஆனால் ‘மிஸ் மீ’ என்று காதோரம் காதல் சொல்ல அவள் மனோ வரவே இல்லை. பாறையாகிய அவளுள் சிற்பமாய் ஒளிந்தே இருந்தான்.

வந்த புதிதில் அதிகம் பேச மாட்டாள். இருந்தாலும், அவள் சிந்தையோடு தனித்திருக்க எஸ்தர் விட மாட்டார். அவளுக்கும் சேர்த்து அவரே அதிகம் பேசினார். தலை வாரி யமுனா கட்டிக் கொடுக்கும் பூவை தினமும் சூட்டி விடுவார். அசோகா மரத்தடியில் பவழமல்லி வாசத்தில் தினமும் கதைப்பார்கள்.  

“உன் கிட்ட அவன் மனச சொல்லிட்டு அமெரிக்கா போன மறு நாளே, என் மனசுல யார் இருந்தாலும் எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்கல்லமா-ன்னு கேட்டவன், ‘அம்மா உங்க ஃப்ரெண்ட் தான் உங்க மருமக’ன்னு சொல்லி என்னை பயமுறுத்திட்டான்! என் மகனுக்கு கிழவி மேல ஆசையான்னு மனசு தாங்கல,      அவன் கூட ஒரே சண்டை! 

நீங்க பார்த்துட்டு சொல்லுங்க அப்புறம் உங்ககிட்ட பேசறேன்னு உன் ஃபோட்டோ அனுப்பிக் கொடுத்தான். உன்னப் பார்த்த போது எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா? அத்தன அழகா இருந்த அதுல. ஹோட்டல் பூல் கிட்ட நீயும் அவனும் சேர்ந்த மாதிரி ஒரு ஃபோட்டோ, டைனிங் ஹால்ல மாட்டிருக்கேனே அது தான்! உன் உதட்டுல சிரிப்பும், கண்ணுல ஒரு சோகமும்! அவனுக்கு அது அவ்வளவு பிடிக்குமாம்!

‘ஏன் டா பிள்ள முகத்துல இத்தன சோகம்? கேட்டத வாங்கிக் கொடுக்கலியா’ன்னு கேட்டேன்! அவன் கிட்ட அமெரிக்கா போகாதன்னு நீ ஒரு வார்த்த சொன்னா அவன் போக மாட்டான்னு தெரிஞ்சும் உன் ஆசை எல்லாம் உள்ள புதைச்சுகிட்டு ‘போய்ட்டு வாங்கன்னு’ சொன்னியாமே! ‘அன்னைக்கு எடுத்ததுமா’ன்னு சொன்னான். ‘இப்படி எல்லாம் கூட ஒரு பொண்ணு காதலிப்பாளாமா’ன்னு என் கிட்டயே கேட்டான்! ஏன் டா நீயும் அப்படி தானேன்னு சொன்னேன். சரிதானேமா?”

நிஜம் தானே. கண்ணுக்குள் வைத்து காதலித்தானே! மெலிதான புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

“அப்போவே உன் கூட சண்டை போடணும்… ஏன் எங்கிட்ட சொல்லலன்னு கேக்கணும்னு நினைச்சேன். ஆனா எனக்கே அது அபத்தமா தெரிஞ்சுது. அது எப்டி ‘உங்க மகன விரும்பறேன்னு’ என் கிட்ட உன்னால சொல்ல முடியும்? உங்க கல்யாணம் கூட எனக்கு முந்தின நாளே தெரியும். ‘ரொம்ப அவசரம் மா… விழிய நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிறேனே’ன்னு கேட்டவனுக்கு மனசார, ‘என் மருமகள கண் கலங்காம பார்த்துக்கோடா’ன்னு சொன்னேன். என் எபி என் பேச்ச மீறினதே இல்ல. ஆனா இந்த தரம் நான் சொன்னத அவன் கேக்கவே இல்ல பாரேன்.” அவர் புன்னகைக்க, அவளால் ஏனோ புன்னகைக்க முடியவில்லை! அவர் போல் உதட்டளவில் கூட அவளால் ஏனோ புன்னகைக்கவே முடியவில்லை!

முன்பெல்லாம் மகனைத் தவிர எல்லாவற்றையும் பற்றிப் பேசின தாயால் இப்பொழுதெல்லாம் அப்படி இருக்க முடியவில்லை. அவர் மூச்சுக் காற்று அவரை விட்டு சென்றிருக்க, அந்த தாய்க்கும் மூச்சு திணறியது!

“வா உன் ரூம் போகலாம்,” என்று மாடி அறைக்கு சென்றவர், “‘நான் அனுப்புற ஃபோட்டோவ பிரிண்ட் போட்டு என் ரூம் பூரா ஒட்டி வைங்க! அவ பார்க்கும் போது பிரமிப்பா இருக்கணும் அவளுக்கு. எங்க முழு வாழ்கையோட நினைவுச் சின்னமா இருக்கணும்’ன்னு ஒரே இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்” என்று கூறி கண்களைத் துடைத்துக் கொண்டே எஸ்தர் அந்த அறையில் அவளை விட்டுச் சென்ற பின் அவர் அந்த அறைப் பக்கம் வரவே இல்லை. ஒவ்வொரு புகைப்படமாக தடவினாள். மனோ… என்று ஏக்கத்தோடு அழைத்தாள். மனதை நிறைத்த மனோவின் நினைவுகள் உள்ளத்தைக் கீறி கிழித்தது உண்மை. பனியாய் இருந்த நிகழ்வுகள், கனலாய் மாறி சுட்டதும் உண்மை.

சுவரிலிருந்த ஒரு படத்திற்கேனும் உயிர் இருந்தால் வந்திருப்பானே… அவள் அடிவயிறு வலிக்க, தொண்டை கிழிய சுருண்டு அழுததை மனோ கண்டிருந்தால் வந்திருப்பானே. அவன் காணவில்லை, அதனால் வரவில்லை!

இன்றும், மனோவின் வாசம் கசியும் மனோவின் அறை. அவன் உறங்கிய மெத்தையில், அவன் போர்வைக்குள் சுருண்டிருந்தவளின் பார்வை எதிரே இருந்த நயாகரா நீர்விழ்ச்சிப் புகைப்படத்தின் மீது. இரவு வெளிச்சத்தில், வண்ண மயமான நீர்வீழ்ச்சி பின்னனியில், அவன் கன்னத்தில் அவள் இதழ் பதிக்கும் நிழற்படம் அது!

அன்று தானே… “அம்மா கூட இருந்து கம்பனி எப்பிடி ரன் பண்றதுன்னு ட்ரெய்னிங் எடுத்துக்கோ. உன்னால தனியா முடியும்ன்னு தோணும் போது அத உனதாக்கிக்கோ. ட்ரெயினிங் சென்டரா மட்டும் இல்லாம ஒரு முழு சாப்ட்வேர் கம்பனியா அத வளர வை! இது உனக்கான என் கனவு. முடியாதுன்னு சொல்லிடாத. உன்னால முடியும். உனக்குத் துணையா, உன் நிழலா எப்பவும் நான் இருப்பேன். நான் இல்லாட்டாலும் சாதிக்கிற திறன் உனக்கிருக்கு” என்று கூறினான்!

நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவளின் கண்கள் மூட மறுத்தன. மன பாரம் அழுத்தியது. தனிமை ஏன் இன்னும் பழகவில்லை என்று தெரியவில்லை. பழகாதோ?

“உங்க கனவ நிறைவேத்தறேன் மனோ. எப்பவும் போல, ‘தட்ஸ் மை கேர்ள்’ன்னு சொல்ல வாங்க மனோ…” காற்றோடு கலந்திருந்த அவன் சுவாசத்தோடு பேசினாள். 

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

வரிகள் இல்லா பியானோ இசை அறையை நிரப்பியது. சிவா கேட்டதால், தோழனுக்காக அவன் தான் வாசித்தானாம் எஸ்தர் கூறியிருந்தார். நெஞ்சோடு அணைத்திருந்த கணவன் சட்டைக்குள் முகம் புதைத்துக் கொண்டவள் சுவாசம் முழுவதும் மனோவின் வாசம்.

எப்பொழுது உறங்குவாள் என்று தெரியாது. நகர மறுத்த நாட்கள் ஏராளம், அதிலும் உறைந்து போன இரவுகள் கொடுக்கும் தனிமை, கொடுமையே. கண்கள் நித்திரைக்குள் பயணப்பட்டது. 

படுக்கையில் விழுந்து கிடந்தவளின் வயிற்றில் இதழ் கொண்டு ஒருவன் கோலம் போட்டான். “என்னை கவனி டி” என்று கொஞ்சினான். “கவனிக்கணும் தானே… குனியுங்க முதுகுல நாலு வைக்கிறேன்” என்றவள் முகம் முழுவதும் புன்னகையே. 

“நான் வீரத் தமிழன் டி. முதுது எதுக்கு? முகத்தையே காட்டுறேன், எங்க வேணுமோ ஆச தீரக் குடேன்” என இழுத்து மார்போடு போட்டுக் கொண்டவனை கட்டி அணைத்தாள். 

தொட்டதும் ஏன் அமுங்கிப் போகிறது மன்னவன் மேனி? தின்னிய மார்பெங்கே? புடைத்து நின்ற புஜம் எங்கே? ‘மனோ…’ என்றவள் மூடியிருந்த விழியோரம் நீர் கொட்டிக் கொண்டே இருந்தது. பத்து நாள் மனைவியாய் அவனுக்குள் புதைந்த நாட்கள் இன்று அலைக்கழித்தது. இப்படியும் கூட இனிக்குமா என்று நினைத்த நாட்கள் இன்று நெருப்பாய் சுட்டது. ‘வரவே மாட்டியா மனோ… எங்க மனோ போன? வந்து “மிஸ் மீ”ன்னு கேளு மனோ!’ கண் திறவாமலே படுத்திருந்தவளை மீண்டும் அவனே இழுத்து அணைத்துக் கொண்டான்.

என்றும் விடியும் முன் விழித்து விடுவாள். அமெரிக்காவில் இருக்கும் விஸ்கான்சினில் அவர்களது தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு தான் இலக்கியா வசிக்கிறாள். காலை நான்கு மணிக்கு எழுந்தமர்பவள், அமெரிக்கா அலுவலத்தில் அன்றைய வேலை நிலவரம் பற்றி இலக்கியாவிடம் கேட்டுக் கொள்வாள். 

இலக்கியா அங்குள்ள அலுவலகத்தை கவனித்துக் கொள்ள, இங்குள்ளதை இவள் தான் இயக்கிக் கொண்டிருக்கிறாள். அப்படி எல்லாம் பெரியளவில் இல்லை என்றாலும் ஏற்கனவே இருந்த கணினி மையத்தோடு சேர்த்து விட்டதால், சொல்லிக் கொள்ளுமளவு வேலை இருந்தது. மனோ விதைத்த விதையை இன்று இவள் நீர் ஊற்றி மரமாக்கிக் கொண்டிருக்கிறாள். 

இன்று, விடியலுக்கு சில மணி நேரம் முன்பே எழுப்பி விட்டான். காலைக் கடன்களை முடித்தாள். மனதை கட்டுப்பாடுக்குள் வைக்க, முடிந்த அளவு யோகா செய்தாள். இறைவனோடு கண் மூடி அமர்ந்தாள். மணி நேரம் சென்றது, அலுவலக மடிக்கணினியோடு அமர்ந்தாள். சிறிது நேரத்தில் இலக்கியாவை அழைக்க கைப்பேசியை எடுத்தாள். 

இலக்கியாவின் சுயவிவரப் படம் அலர்விழியை உள்ளே இழுத்தது. பெரிய ஒற்றை மலர் திரையை நிறைத்திருந்தது. இதழின் வெளியே அடர் பிங்கும் உள்ளே மென் பிங்குமாக அலர்விழியை எச்சில் விழுங்க வைத்தது.

“டிஸ்ப்ளே பிக் அழகா இருக்கு” என்று தட்டி விட்டாள்.

“அக்காட்ட இருந்து சுட்டேன்! அவ ஹாஸ்பிட்டல் தோட்டத்தில இருந்து எடுத்தது! இங்க இப்போ மாக்னோலியா சீசன் ஆரம்பிச்சிடுச்சு!” என்று பதில் அனுப்பினாள். 

error: Content is protected !!
Scroll to Top