தென்னவனும் தேன்யாழியும் 13

அத்தியாயம் 13

‘எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்’

-பகவத் கீதை

“தென்னவன்! தேனுக்கு என்னாச்சு அவ எப்படி இருக்கா?” என மருத்துவமனை வாசலிலேயே நின்று கொண்டு இருந்த தென்னவனிடம், செந்தூரன் பதற்றமாய்க் கேட்டான். 

வியர்த்துக் கொட்டி தவிப்பாய் நின்றவனைக் கண்ட தென்னவன் கோபமாய், 

“எதுக்காக இப்படி பதற்றமாகுறீங்க? பாசம் இல்லாத தங்கச்சி மேல” இரக்கமில்லாமல்  கேட்டான்.

“தென்னவன் தேனு எங்க அதை சொல்லு முதல்ல”

“ம்ம் !அவங்க அண்ணன் உயிரை எடுக்கிறான்னு சொன்னாராம் அதனால்” என்று நக்கலாய் சொன்னவன் வார்த்தைகளுக்கு இடைவெளி விட செந்தூரனின் இதயமோ வெளியே வந்துவிடும் அளவு துடிக்க, 

கோபமும் பயமுமாய், 

“தென்னவா!” என்று தென்னவனின் சட்டையைப் பிடித்தான்.

அவன் கையை விலக்கியவன் அமைதியாய் நிற்க, 

“நானே உள்ள போய் தெரிஞ்சிக்கிறேன்” என்று அவனை விட்டு செல்ல பார்த்த செந்தூரனைத் தடுத்தான் தென்னவன். 

“அவளுக்கு ஒன்னுமில்ல, சாதாரண மயக்கம். ஆனால், . . ஒருவேளை நீ சொன்ன மாதிரி உன் உயிரை எடுக்க கூடாதுன்னு அவ உயிரை விட்டிருந்தா??” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு. மரியாதையெல்லாம் பறந்தும் மறந்தும் போயிருந்தது. 

தேன்யாழி தீடீரென மயங்கி விழுந்த போது இவன் துடித்ததும், தவித்ததும் இவன் தானே அறிவான். இரவிலும் காலையிலும் உண்ணாமல், இரவெல்லாம் உறங்காமல் கண்ணீர் விட்டு மன உளைச்சலின் காரணமாய் அவள் மயங்கியிருக்க, அவளை மருத்துவர் பரிசோதித்து சொல்லும் வரையில் இவன் நிலையல்லவா பரிதாபம். அந்த கோபத்தை அப்படியே செந்தூரனிடம் காட்டினான். 

‘ஆனால்,  ஒருவேளை நீ சொன்ன மாதிரி உன் உயிரை எடுக்க கூடாதுன்னு அவ உயிரை விட்டிருந்தா’ என்ற தென்னவனின் வார்த்தைகள் தேள் கொடுக்காய் செந்தூரனைத் தீண்டிட, வார்த்தையின் வெப்பம் அவனை சுட்டுப் பொசுக்கியது. 

கண்கள் கலங்க நின்றவனைப் பார்த்த தென்னவனுக்கும் இதயம் இளகிப் போக, 

“க்ரவுண்ட் ஃப்ளோர்ல கடைசி ரூம்” என்றான் அமைதியாய். 

செந்தூரன் வேகமாய் தேன்யாழி இருந்த அறைக்குள் போக, அவள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்க, டிரிப்ஸ் ஒரு பக்கம் ஏறியது. 

அவள் முகத்தை சில நொடிகள் அமைதியாய்ப் பார்த்தவன், மெதுவாய் அறையை விட்டு வெளியேறினான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவனது அகம் அப்போதுதான் ஆசுவாசப்பட்டது. 

“உலகத்திலேயே ரொம்ப கூர்மையான ஆயுதம் எதுன்னு தெரியுமா செந்தூரன்?” என்ற தென்னவனின் குரலில் செந்தூரன் நிமிர, அவனருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் தென்னவன். 

“நம்ம நாக்கு! சொல்லால ஆரம்பிச்சு வில்லால முடிஞ்ச போர் பலது இருக்கு”

“எனக்கு ஒன்னு புரியவே இல்லை மிஸ்டர். சிதம்பரத்தின் மகனா மட்டும் இருக்க முடியுது, ஆனா அதே சிதம்பரத்தோட மக தேனுக்கு அண்ணனா இருக்க முடியல. ஏன்?” 

இந்த வார்த்தைகள் செந்தூரனை சாட்டையாய்த் தாக்கிட, அதிர்ந்து தென்னவன் முகம் பார்க்க, அவனோ சட்டை செய்யாமல் பேசினான். 

இதுவரையில் அவன் இதை பெரிதாய் எடுக்கவில்லை. ஆனால்,  தேன்யாழி இதே தன்னைத் தேடி வராமல், வேறு தவறான முடிவு எடுத்திருந்தால்? இல்லை அவன் முன் மயங்கி விழாமல் வேறு எங்காவது விழுந்திருந்தால்? நாடு இருக்கும் நிலையில் நினைத்த கூட பார்க்க முடியாத வண்ணம் அவளுக்கு எதேனும் நிகழ்ந்திருந்தால்? சத்தியமாய் தென்னவனால் தாங்கியிருக்க முடியாது. 

அதனாலேயே இன்றோடு இதற்கு முடிவு கட்டி, அவனவளின் அவர்த்தியெல்லாம்(துன்பம்)  நிவர்த்தி செய்திட  நினைத்தான். 

“குந்தவை சொல்லித்தான் உங்க வீட்டு விசயமே எனக்குத் தெரியும், இது நாள் வரை உங்க பெர்சனல்னு நான் தலையீட்டதில்லை. ஆனால்,  இன்னிக்கு  எனக்கு யாருமே இல்லை, எங்கண்ணனுக்கு என்னைப் பிடிக்கலன்னு என் தேனு  வந்து நிக்கிறா. இப்பவும் என்னால பேசாம இருக்க முடியாது”

‘என் தேனு’ என்ற வார்த்தைகளில் செந்தூரன் தென்னவனை கேள்வியாய்ப் பார்க்க, 

“ஆமா! தேனை நான் கட்டிக்க ஆசைப்படுறேன்! அது அவளுக்கும் தெரியும், அவளுக்கு என்னைப் பிடிச்சிருந்தும் கூட, அவ வாயைத் திறந்து ஒரு வார்த்தை என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதில்லை. அப்படி இருக்க உன் வீட்டுப்பொண்ணை இன்னிக்கு யாரும் தனக்கில்லனு நினைக்க வச்சு என்னைத் தேடி வர வச்சிட்ட செந்தூரன் நீ” என்று குற்றம் சாட்டினான். 

“என் தேனு நான் யார் உயிரையும் எடுக்க விரும்பல, நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சிக்கங்கன்னு வந்து நின்னா” என்று சொல்லவும் செந்தூரனின் மனத்தில் பாரம் ஏறிக்கொண்டது. 

அவன் வார்த்தைகள்,  அவளை ஆழமாய் சென்று தாக்கிடும் என அவன் எண்ணவில்லையே!!

“என் தங்கச்சியை ஒருத்தங்க வேண்டாம்னு சொன்ன கோபத்துல,  நேத்து அப்படி பேசினேனே ஒழிய, மனசார  நான் அப்படி  நினைக்கவோ, சொல்லவோ இல்லை” என்று செந்தூரன்  வலியோடு சொல்ல

“நேத்து சொன்ன வார்த்தை மட்டுமில்ல, சின்ன வயசிலேர்ந்து அவளுக்குத் தன்னோட அண்ணன், ஏன் தன் கிட்ட மட்டும் நல்லா நடக்க மாட்டேங்கிறான்? பேச மாட்டேங்கிறான்ற ஏக்கம் அவ மனசுல இருந்துட்டே இருக்கு. அவ சொல்றா நான் என்ன தப்பான குழந்தையா? என்னை எங்கண்ணன் கீழா பார்க்கிறான்னு கதறி அழுதா” என்ற தென்னவனின் குரல் கமறிட, அதை சரி செய்தான். 

“முணு வயசுல நமக்கு என்ன தெரிஞ்சிருக்கும்? சொல்லு! அந்த  வயசில அம்மாவை இழந்த குழந்தை அவ! அப்போ இருந்து இப்ப வரை அவளை நீ உறவா மதிக்கவே இல்லை. சொல்லு செந்தூரன்ஏன் இப்படி இருக்க நீ” என்று தென்னவன் ஆத்திரத்தோடு கேட்டான்.

செந்தூரனுக்குத் தாளவில்லை. அவள் அவனிடம் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாய் எதிர்த்துப் பேசிட, அவள் மனத்தில் இப்படியான ஏக்கங்கள் இருக்குமென தெரியவே இல்லை! அவன் தெரிந்து கொள்ள முயலவே இல்லையே?!

“அவ கிட்ட நான் பாசம் காட்டாம இருக்கலாம், ஆனா நான் அவளை வெறுத்ததில்லை தென்னவன்” என்றான் உண்மையாய். 

“இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை! காட்டாத அன்பு இல்லாத மாதிரிதான்! பாசம் இருக்கப்போய் தானே இப்படி பதறியடிச்சுட்டு ஓடியாந்த, ஆனா அதைக் காட்டுறதுல என்ன தடை உனக்கு?”

 

“தேன்யாழிக்காக மட்டும் பேசறேன்னு நினைக்காதீங்க…யாரா இருந்தாலும், ஏன் எனக்கே எங்கப்பாவுக்கு இன்னொரு குடும்பம் இருக்குன்னு தெரிஞ்சா தாங்க முடியாதுதான்! ஆனால்,  இது எல்லாமே எல்லார்க்கும் தெரிஞ்சு தானே நடந்துச்சு சொல்லு? குழந்தை இல்லன்னு ஒருத்தங்களை கல்யாணம் செஞ்சு, திரும்பி குழந்தை வந்த பின்னாடி அவங்களை தூக்கிப் போடுறது எந்தவித நியாயம்? அவங்களும் உயிரும் உணர்வுமுள்ள மனுஷி தானே?” என்றான் பொறுமையாய். 

“அப்படி தப்புன்னா சுயநலமா நடந்துகிட்ட உன் அப்பா, அம்மா தான் தப்பு! இதுல தேனு மேல எந்த தப்புமே இல்லை.” என்றதும் அப்பா, அம்மாவை பேசியதும் செந்தூரனுக்குக் கஷ்டமாக இருந்தது. 

இதுவரையில் செந்தூரனிடம் யாரும் இத்தனை பொறுமையாய் பேசியதில்லை, அவனும் பேச விட்டதில்லை என்பது உண்மை! தேன்யாழி இப்படி மயங்கி இருக்க அந்த குற்றவுணர்வு அவனை அமைதியாக்கியது. தென்னவன் செந்தூரனின் நிலையில் இருந்தும் யோசித்துப் பேச, செந்தூரனும் வாய்த் திறந்தான். 

“எங்கம்மாவோட வாழ்க்கையில் இடையில அவ அம்மா வந்துட்டாங்கன்னு தான் எனக்கு கோபம்! சின்ன வயசுல தேனு அம்மா வீட்டுக்கு, எங்கப்பா போறதை என்னால ஏத்துக்க முடியல! அதுவும் நானும் என் தங்கையும் இருந்தப்போ, எங்கப்பாவுக்கு இன்னொரு மக வந்ததை என்னால தாங்கிக்கவே முடியல” என்றவனுக்கு அந்த நாளின் நினைவுகள். 

சின்னஞ்சிறுவனாய் அவனை மிகவும் வருத்திய நாட்கள் அவை.

அமிர்தவள்ளியின் அம்மா பாக்கியம் முதலில் மகளுக்குக் குழந்தை இல்லையென, ஏழைப்பெண்ணான பூங்கொடியை மருமகனுக்கு கட்டிவைத்தார். குழந்தைகள் வந்த பின் அவரை வெட்டி விடவே எண்ணினார். ஆனால்,  அமிர்தவள்ளியும் சிதம்பரமும் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் அந்த கோபத்தை பேரனிடம் அப்படியே கடத்தி விடுவார். அவன் பாட்டியிடம் கேட்ட சிறு வயது போதனைகளே பூங்கொடியைப் பற்றி தவறாய் நினைக்க வைத்தது.

வெகு வருடங்கள் கழித்து, அதுவும் குடும்பத்தின் முதல் வாரிசாய் வந்த செந்தூரனுக்கு அனைவரிடமும் அளவற்ற பாசமும் அதிக செல்லமும் கிடைத்திட, அடுத்து வந்த பொன்முகலியைக்  கூட தன்  தங்கை என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடிந்தவனுக்கு,  தேன்யாழியை ஏற்கவே முடியவில்லை. பள்ளியில் தன் தந்தைக்கு  இரண்டு மனைவி என்ற கேலிப்பேச்செல்லாம், அவனை இன்னும் இன்னும் தேன்யாழியின் மேல்  கோபத்தைக் கொட்ட வைத்தது. 

“எனக்கு உன்னோட நிலை புரியுது செந்தூரன்…ஆனா உன்னோட தங்கையைக் காப்பாத்த போய் தானே தேனு அம்மா இறந்தாங்க! உலகத்துல பெத்த தாயைத் தவிர யாரும் தன்னோட உயிரைக் கொடுத்து, இன்னொரு உயிரைக் காப்பாத்த மாட்டாங்க! பிரசவமே ஒவ்வொரு பொண்ணுக்கும் வாழ்வா சாவா போராட்டம்தான்! அப்படி இருக்கும்போது தனக்கு ஒரு பொண்ணு இருக்கான்ற நினைப்பு கூட மறந்து, சட்டுன்னு ஒரு பொண்ணோட உயிரைக் காப்பாத்தனும்னா, அதுக்கு அளவற்ற அன்பு இருந்தா தான் முடியும்ங்க்” என்றான் அமைதியாய். 

செந்தூரன் இது நாள் வரையில் இதற்கு இப்படி ஒரு கோணம் இருந்ததை யோசிக்கவில்லை. பூங்கொடி இறந்த போது அவன் பாட்டி , 

‘இனிமே என் பொண்ணு நிம்மதியா இருப்பா’ என்று சொன்ன வார்த்தைகள் தான் அவனுக்கு நினைவில் இருக்கிறது. 

‘இனிமே அம்மா சந்தோசமா இருப்பாங்க, அப்பா அந்த வீட்டுக்குப் போக மாட்டார்’ என்றுதான் சிறுவனான அவனின் மன நிலை! அப்போது அவனுக்கும் எட்டு ஒன்பது வயது தானே?

“தேனுவுக்கு வேணும்னா அம்மா இல்லாம இருக்கலாம். ஆனா அவ  கிட்ட என்னோட அம்மாவை  நான் பார்த்தேன்”என்று கலங்கிய குரலில் சொன்னான் தென்னவன். பின் பெருமூச்சுடன், 

“இதையெல்லாம் உங்களை கஷ்டப்படுத்த நான் சொல்லல, குந்தவையும் நானும் அன்பா இருக்கறது பெரிய விசயம் இல்லை, ராமரும் லஷ்மணனும் மாற்றந்தாய் பிள்ளைங்க தானே? ஆனா எல்லோரும் அவங்களை தான் ஒற்றுமையான அண்ணன் தம்பிக்கு இலக்கணமா சொல்றாங்க. அன்பு காட்ட உறவு முக்கியமில்ல, மனசு தான் முக்கியம்.” என்றான் அழுத்தமாக.

 

“முதல்ல என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னவ,  என் அம்மா அப்பா இல்லாம யாருக்கும் தெரியாம என்னால பண்ண முடியாது. நான் தப்பு பண்ணிட்டேன் அப்படின்னு அதையும் நினைச்சு அழறா, வார்த்தைக்கு வார்த்தை என் அண்ணன் அண்ணன்னு உருகுறா, அப்படிப்பட்டவளை தயவு செஞ்சு கஷ்டப்படுத்தாதீங்க”

“உங்களை  நான் குற்றம் சொல்ல  நினைக்கல, நீங்க நல்லவர்னு எனக்குத் தெரியும், ஆனா உங்க நல்லத்தனத்தை கொஞ்சம் அவகிட்டையும் காட்டுங்க. உங்களோட வறட்டு பிடிவாதத்தையும் ஈகோவையும் தூக்கிப் போடுங்க” என்றான் தென்னவன். 

தென்னவனின் வார்த்தைகள் ஊசியாய் செந்தூரனின் உள்ளத்தைக் குத்தின. 

ஆம்! செந்தூரனுக்கே தெரிந்தது, அவன் கொண்டுள்ளது வறட்டு வீம்பும் பிடிவாதமுமென ஒரு கட்டத்திற்கு மேல், அவன் தேன்யாழியை வெறுக்கவில்லையென்றாலும் விலக்கி வைத்தான். அவள் மீது அன்பிருந்தும் அதைக் காட்ட அவன் ஈகோ விடவில்லை.  

அதற்குள் தேன்யாழி கண்விழித்துவிட்டாள் என செவிலியர் வந்து சொல்ல, செந்தூரன் வேகமாய் எழ, 

“ஒரு நிமிசம் கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேன், என்னோட அம்மா அப்பாவை முதல் நாள் இராத்திரி பார்த்தேன்,  அடுத்த ஆறு மணி நேரத்தில அவங்க இல்லாம போயிட்டாங்க. வாழ்க்கையில அடுத்த நிமிசம் நிரந்தரமில்லாத ஒன்னு! போன எதுவுமே திரும்ப வராது புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்” என்று கனத்த குரலில் தென்னவன் சொல்ல, அவன் வலி செந்தூரனுக்கும் புரிய, தலையசைத்து உள்ளே சென்றான். 

செந்தூரனைக் கண்டு தேன்யாழிக்கு அதிர்ச்சியும் பயமும் ஒருசேர கண்ணில் இருந்து மீண்டும் நீர் இறங்கியது. அவள் அருகில் சென்றவன், 

“அழாத தேனு” என்று சொல்ல

அந்த வார்த்தைகளே அவளுக்குப் போதுமானதாய் இருந்தன. 

அன்பின் ஆகச்சிறந்த செயல் யாவும் சிறியது தானே? தமையனிடம் அவள் என்ன தங்கமும் வைரமுமா எதிர்ப்பார்த்தாள்? தன்மையான பேச்சும் வாஞ்சையான செயலும் தானே?

ஆனாலும்,  அவள் செயல் அவளுக்கு மிகுந்த குற்றவுணர்வைத் தர, 

“மன்னிச்சிடுண்ணா” என்றாள் குரல் கம்ம.

“இல்ல டா நான் தான் உன்னைப் புரிஞ்சிக்கல, நீதான் என்னை மன்னிக்கனும்” என்று சொல்ல

“நீ எங்கூட பேசினாவே போதும்ணா, மன்னிப்பெல்லாம் வேண்டாம்! யாருக்கா இருந்தாலும் அவங்கப்பாவோட இன்னொரு பெண்ணை ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும்” என்று வலியோடு வஞ்சி சொன்னாள்.

அவள் வாய் மீது விரல் வைத்தவன், 

“இப்படி இனி பேசாதம்மா” என்றவன் அமைதியாய், 

 

டிரப்ஸ் ஏறிய கையைப் பிடித்து மிருதுவாய் வருடினான். அவள் அடி நெஞ்சினில் அன்பின் ஊற்று. அவன் மனத்தில் பாசம் புலர்ந்திட அவள் மனத்தில் அமைதி மலர்ந்தது. 

அதுவரையில் அமைதியாய் அண்ணன் தங்கையினைப் பார்த்தவன், அவர்களுக்கு எதிரில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, அதில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான் தென்னவன். 

“இப்போ நான் கொஞ்சம் பேசலாமா?” என்றதும் அண்ணன் முன் என்ன பேசிட போகிறான் என பயத்தோடு பாவை பார்வை இருக்க, 

“அது என்ன தேனு என்னை கல்யாணம் செய்ய யாரும் வரமாட்டாங்களாம், நீங்க என்னைக் கல்யாணம் செஞ்சிப்பீங்களான்னு ஒரு கேள்வி? ஹ்ம்ம் யாரும் வரலன்னா தான் நான் உன்னைக் கல்யாணம் செய்யனுமா? அண்ணன் திட்டினா நான் தென்னவனோட தேன்யாழி! எனக்கு வேற மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லி, இவர்கிட்ட என் தேனு சண்டை போட்டிருக்கனும்.  அதை விட்டு அழுதுட்டு வருவியா நீ?” என்றான் அதட்டலாய். 

‘முதலில் அப்படி சமாதானம் செய்தவன், இப்போது என்ன முருங்கை மரம் ஏறுகிறான்’ என்பதாக தேன்யாழி பார்த்தாள்.

“என்ன பார்வை? என் தேனுகிட்ட பிடிச்சதே தைரியம்தான்! அப்போ ரொம்ப அழுதியேன்னு தான் சமாதானம் பண்ணினேன், எதுனாலும் இனி  வீட்லயே தான் சண்டை போடனும். இதுவே உனக்கு முதலும் கடைசியுமா இருக்கனும், நான் உன்னோட ஆன்சரா இருக்கனும் தேனு ஆப்ஷனா இல்லை!” என்று பல்லைக் கடித்தான். 

மனதினுள் , 

‘எல்லா பொண்ணுங்களும் லவ்வரை நினைச்சு தூங்காம இருக்கும்னா, எனக்கு வாய்ச்சது அண்ணனை நினைச்சு தூங்காம இருக்கு’ என்று காய்ந்தான். 

அவளுக்குக் கல்லூரி முடியட்டும் என்று இவன் காத்திருக்க, அவர்கள் மாப்பிள்ளை பார்த்தது உள்ளத்தின் ஒரு ஓரத்தை உரசி சென்றிருக்க, முதலில் அவள் அப்படி அழ, பின் தீடீரென மயங்கி விழ என்று கோபத்தைக் காட்டவியலாமல் இருந்தவன், இப்போது அண்ணன் தங்கை இருவரையும் காய்ச்சி எடுத்தான். 

 “அது என்ன சாப்பிடாம தூங்காம இருந்து உடம்பைக் கெடுத்துக்கிற கெட்ட பழக்கம்? இங்க மயங்கி விழுந்த சரி வெளியே ரோட்லையோ இல்ல பஸ்லையோ விழுந்திருந்தா தொலச்சிடுவேன் உன்னை” என்றான் மிகுதியான கோபத்தோடு. 

கேட்டிருந்த இருவருக்குமே அவனின் மிகுதியான காதலும் மிகுதியான கோபமும் புரிந்தது. தேன்யாழிக்கும் தன் தவறின் வீரியம் இன்னும் நன்றாய் உரைக்க ஆரம்பித்தது. செந்தூரனுக்கோ தங்கைக்கு எதாவது ஆகியிருந்தால் என்ற எண்ணமே அவனை வாட்டிட, இவன் பேசுவதற்குப் பதில் பேசிடும் நிலையில் இல்லை. 

அதற்குள் அவனது ஸ்டேஷனிலிருந்து அழைப்பு வர, 

“ஒன் ஹவர்ல வந்துடுறேன்” என்று இருக்கையிலிருந்து வேகமாய் எழுந்தவன், 

“செந்தூரன் இவ இந்த தென்னவனோட தேன்யாழி! இந்த மாப்பிள்ளை பார்க்கிற வேலையெல்லாம் வேண்டாம்” என்று கடினக்குரலில் சொன்னான்.

“நான் வரேன் அவளைப் பார்த்துக்கோங்க செந்தூரன்” என்றவன் ஊருக்குக் கிளம்பினான். 

error: Content is protected !!
Scroll to Top