Skip to content
அத்தியாயம் 12
‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’
-பகவத் கீதை
“நான் தஞ்சாவூர் பெரிய கோவில்ல இருக்கேன், உங்களை உடனே பார்க்கணும்” என்ற தேன்யாழியின் குரலில் துள்ளலும் துடிப்புமின்றி துக்கமே பிரதானமாய் இருக்க
“என்னடா ராஜாத்தி? என்னாச்சு உனக்கு? வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு” என்றான் தென்னவன் கவலையாய்.
“நான் வெயிட் பண்றேன் வாங்க” என்றவள் அதற்கு மேல் பேசாது அழைப்பைத் துண்டித்து விட, தென்னவனுக்குள் தவிப்பு.
அன்று மழை பெய்த போது அவளை கண்டு களித்து பேசியது. அதன் பின் இவன் படிக்கிற பெண்ணைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அவளிடம் பேசுவதில்லை. அவளுக்கும் இவனைப் பிடித்திருக்கிறது என்ற நினைவே நினைத்து நினைத்து பார்த்து இவனுக்கு இனித்தது!
இத்தனை நாள் கழித்து இன்னும் சில நாட்களில் பரீட்சை வேறு இருக்க, அதுவும் தஞ்சாவூர் வரை தனியாய் சென்று, இந்த காலை நேரத்தில் தன்னைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, எதுவும் தெரியாத போதும் அவள் தனக்காகக் காத்திருக்கிறாள் என்ற நினைவே தென்னவனை விரைவாய் தஞ்சாவூர் நோக்கி போக வைத்தது.
பிரகாரத்தில் ஒரு படிக்கட்டில் அவள் ஒரு ஓரமாய் உட்கார்ந்திருக்க, இவன் விரைவாய் அவளை நோக்கி சென்றிட, அவனைக் கண்ட நொடி தேன்யாழியின் கன்னம் நனைந்தது.
அவளது உவர்நீர் இவனது உள்ளம் தொட,
“என்ன டா தேனு? என்னாச்சு உனக்கு ஏன் அழற?” என்று அவள் அருகே அமர்ந்து கேட்டான்.
“என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானே? அப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கங்க” என்று அழுகையோடு சொல்ல,
“என்ன ஆச்சு அழாம சொல்லு” என்றான் கனிவாக.
தேன்யாழியோ தேம்பிக் கொண்டே,
“எங்கண்ணன் உயிரை நான் எடுக்கிறேனாம், அவனுக்கு நான் வீட்ல இருக்கறதே பிடிக்கல, என்னை கல்யாணம் செய்ய யாரும் வர மாட்டாங்களாம், நான் திமிர் பிடிச்சவளாம், உங்களுக்கு என்னைப் பிடிக்கும் தானே? நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றபடி அவன் முகத்தை பார்த்தாள்.
“நான் யார் உயிரையும் எடுக்க விரும்பல” என்றவள் முகத்தைக் கைகளில் மூடிக் கொண்டு அழுதாள்.
‘என்னாச்சு இவளுக்கு? இவங்க அண்ணன் என்ன லூசா இப்படியா திட்டுவான். இடியட்!’ என்று மனம் நினைக்க, தேன்யாழியைப் பார்த்தால் அவளோ இன்னமும் அழ, ஏற்கனவே நிறைய அழுதிருப்பாள் போல, முகம் வாடி கண்கள் சிவந்திருந்தன.
“ஏய் அழாத சொன்னா கேளுடி! என் செல்ல ராஜாத்தில நீ” என்று அவள் கைப்பிடித்தவன்,
“உங்க அண்ணன் திட்டுறது புதுசா டா? அதையெல்லாம் பெருசா எடுத்துட்டு அழலாமா? என் தேனும்மா தைரியமான பொண்ணுன்னு நான் நினைச்சேன். இப்படியா அழுவாங்க உன் அண்ணன் தானே?” என்று பொறுமையாய்ப் பேசினான்.
“இல்ல அவன் என்னை அப்படி நினைக்கல! சின்ன வயசிலேர்ந்து அவனுக்கு என்னைப் பிடிக்காது! இப்பவும் பிடிக்காது, எனக்கு யாருமே இல்லை” என்று அவன் கைகளைப் பற்றி இன்னும் அழ,
“முதல்ல எழுந்திரு நீ! இங்க நிறைய பேர் வருவாங்க” என்றவன் அவளை கோவிலின் அருகே இருக்கும் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான்.
தேன்யாழி அழுது முகமே ஈரமாய் இருந்திட, தென்னவனுக்கு மனத்தில் பாரம் ஏறியது.
“உனக்கு யாருமில்லன்னு சொல்ல கூடாது! உங்க அண்ணன் அப்படி இப்படி இருந்தாலும் மாமாவும் அத்தையும் உன்னை நல்லா தானே டா பார்த்துகிறாங்க “என்று தென்னவன் அவளின் சோகம் துடைக்க சொல்ல
“இப்ப என்னைக் கல்யாணம் செஞ்சுப்பீங்களா மாட்டீங்களா?” என்று முகம் சிவக்க தேன்யாழி தீர்மானமாய்க் கேட்டாள்.
“இப்பவே செய்யனுமா?” என இவன் கேள்வியாய்ப் பார்க்க
“ஆமா” என்று தேன்யாழியும் பிடிவாதமாய் சொல்ல,
“சரி வா கோவில்ல போய் செஞ்சுக்கலாம்” என்று சொல்லி அவளை அழைத்து செல்ல, கோவிலின் வாயில் வரை சென்றவளுக்கு அதற்கு மேல் அடி வைக்க முடியவில்லை.
குடும்பத்தோடு அந்த கோவிலுக்கு வந்த நினைவுகள் அவளை குத்தின.
அடி நெஞ்சில் அன்பாய் வளர்த்த அன்னையும் தந்தையும் வந்து போக, அவர்களுக்குத் தெரியாமல் ஒரு திருமணமா? குந்தவை இருக்கும்போது எப்படி இவ்வளவு சுயநலமாய் என்னால் யோசிக்க முடிந்தது என்ற எண்ணம் தோன்ற கழிவிரக்கத்தில் இன்னுமாய்ப் பெருகியது காரிகையின் கண்ணீர்.
அப்படியே திரும்பி பூங்காவினுள் வந்து அமர்ந்தவளுக்குக் கண்ணீர் நிற்கவே இல்லை.
“இப்ப ஏன் டி அழற? அதான் கல்யாணம் செஞ்சுக்கலாம். சொன்னேனே” என தென்னவன் அதட்டலாய் சொல்ல
,
“வேண்டாம்! என்னால முடியாது! யாருக்கும் தெரியாம என்னால… எனக்கு என்ன செய்யன்னே தெரியல” என்றவளின் அழுகைப் பெருகியது.
“இப்படி உட்கார்ந்து அழுதா பார்க்கிறவங்க என்னையும் உன்னையும் என்ன நினைப்பாங்க? என்ன பிரச்சனைனாலும் தைரியமா இருக்கனும்! என்ன நடந்துச்சு சொல்லு முதல்ல” என்று கண்டிப்பாய் சொல்ல
நேற்று நடந்த அத்தனையும் சொன்னவள், அழுகை குறைந்த போதிலும் தேம்பல் குறையாமல் தென்னவனிடம் பேசினாள்.
“அவன் புதுசாவா பேசுறான் எப்பவுமே இப்படித்தானே அதுக்குப் போய் இப்படி அழுவியா நீ?” என்று திட்ட
“அவர் புதுசா திட்டல, ஆனா எனக்கு வலிக்குதே! உங்களுக்குத் தெரியுமா என்னோட மூணு வயசுல என்னைப் பெத்த அம்மா இறந்துட்டாங்க, அம்மா என்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தப்ப அண்ணனும் அக்காவும் எங்கிட்ட பேசவே மாட்டாங்க. ஏன் பேச மாட்டேங்கிறாங்கன்னு தெரியாது, அப்புறம் அக்கா கொஞ்சம் பேச ஆரம்பிச்சா ஆனா அண்ணா அக்கா கிட்ட பேசுவான்”
“எங்கிட்ட பேசவே மாட்டான் ஏன்னு தெரியாது, ஆனா கஷ்டமா இருக்கும். அண்ணா முன்னாடி அக்கா எங்கூட பேச மாட்டா” என்றவளுக்கு நின்ற அழுகை இப்போது தொடர அவள் பாட்டிற்கு பேசினாள்.
தென்னவனும் இடையூறு செய்யவில்லை. இதயத்தில் இத்தனை நாள் இவள் தேக்கி வைத்திருக்கும், வடுக்களும் வலிகளும் இவனிடம் அவள் பகிர்ந்து கொள்ளட்டும். அவள் வலிகள் பாதியாவது குறையட்டும் என்றெண்ணி அவள் கையை எடுத்துப் பொத்தி வைத்துக் கொண்டவன் அமைதியாய் அவள் பேச்சினைக் கேட்டான்.
“அப்பா அம்மா அக்கான்னு யாரு எங்கூட பேசினாலும் சண்டை போடுவான், பொருளையெல்லாம் போட்டு உடைப்பான். அவன் இருக்கும்போது அப்பா கிட்ட கூட போக மாட்டேன், ஸ்கூல் டைரில கூட கூடப்பொறந்தவங்க பெயர்ல அக்கா பெயர் மட்டும் தான் எழுதியிருப்பான். அக்கா என் பெயரை எழுதினா சண்டை போட்டு என் பெயரை அடிச்சு வைப்பான், ஆனா அக்கா முன்னாடி மாதிரி இல்லாம அண்ணன் சண்டை போட்டா கூட எங்கிட்ட பேசுவா. அண்ணன் அக்காவுக்கு எல்லாம் செய்வான்”
“ஆனா எனக்குன்னு ஒன்னும் செய்ய மாட்டான், விவரம் புரிஞ்சு அவங்கிட்ட சண்டை போட்டப்போ என்னைப் பெத்த அம்மாவை திட்டுவான். அவங்கதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் சொல்லுவான், என் பூங்கொடி அம்மா ரொம்ப நல்லவங்க, அம்மா சொல்லியிருக்காங்க அவங்க தான் குழந்தை இல்லன்னு கட்டி வச்சேன் சொன்னாங்க. இதுல என் தப்பு என்ன?” என்று தலை சாய்த்து, முகமே அவள் கண்ணீரின் ஈரம் பட்டு, அவள் கேட்ட நிலை இவனுக்குத் தாங்கவில்லை. அவள் தோளோடு சேர்த்தணைத்தவன்,
“உன் தப்பு ஒன்னுமே இல்லடா ராஜாத்தி! விடு அவனுக்கு உன் பாசத்தை அனுபவிக்க கொடுத்து வைக்கல” என்று சொல்லி சமாதானம் செய்தான்.
“இல்லங்க எனக்கு அண்ணாவை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? அதுவும் உங்களையும் குந்தவையும் பார்க்கும்போது நம்ம அண்ணன் நம்ம கிட்ட இப்படி இல்லையேன்னு நான் எவ்வளவு அழுதிருக்கேன் தெரியுமா? ஆனா இவருக்கு என்னைக் கண்டாலே பிடிக்கல, நானும் எங்கப்பா பொண்ணு தானே? அப்ப நான் என்ன இல்லீகல் சைல்டா? அவன் என்னை எப்பவுமே அப்படி தான் கீழா பார்க்கிறான்” என்று சொல்லி இன்னும் அழுது அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, இது எல்லாம் நேற்றைய பேச்சினால் மட்டும் விளைந்தவை அல்ல என்பது தெள்ளத்தெளிவாய் தென்னவனுக்குப் புரிந்தது.
அடிக்கடி செந்தூரன் இவளை சொற்களாலும், இவளை தள்ளி வைத்தும் காயப்படுத்திய ரணமே, இவளை இப்படி பேச வைக்கிறது என புரிந்து, அவளை ஆதுரமாய் அணைத்தான்.
“நோ இப்படி பேசாத யாழிம்மா! நீ உங்கப்பா பொண்ணு! அவன் உன்னைக் கீழா நினைச்சா நீ கீழாயிடுவியா? ம்ம் இல்லடி இப்ப கூட என் அண்ணன் என் அண்ணன்னு உருகிற, உன்னை மாதிரி தங்கச்சி பாசம் கிடைக்காத அவன் தான் அன்லக்கி ஃபெலோ! இதை நான் உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்லல டா ராஜாத்தி. நிஜம்மா தான் சொல்றேன்! கண்ணைத் துடை” என்று சொல்லி விலகினான்.
“இல்ல நான் தப்பு பண்ணிட்டேன், என்னை அன்பா வளர்த்த அம்மாவை மறந்துட்டு இப்படி வந்துட்டேன்” என்று அழுதாள்.
“என்னது தப்பு பண்ணியா? நீ என்னோட சமத்து சக்கரகட்டி நீயா தானே கல்யாணம் வேண்டாம் சொன்ன?அந்த நிமிஷம் கோபம், உனக்கு உங்கண்ணன் அப்படி சொன்னதால் உனக்கு நான் இருக்கேன்னு புரூவ் பண்ண நினைச்ச, அவ்வளவு தான் டா ராஜாத்தி!” என்று தன்னவள் கைப்பிடித்து தணிவாய் வருடினான்.
“நீங்க ஏன் எனக்கு அட்வைஸ் செய்யாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னீங்க?” என்று அவனை முறைத்த வண்ணம் கேட்டாள்.
‘இவ்வளவு நேரம் கட்டிக்கோன்னு சொல்லிட்டு இப்ப பேச்சைப் பாரேன்’ என கடுப்பான போதிலும்,
“அப்படி சொன்னதால தான் நீ அமைதியாய் யோசிச்சு, நீயே கல்யாணம் வேண்டாம் சொன்ன. நான் மறுத்திருந்தா இன்னும் உன் கோபம் ஜாஸ்தி ஆகியிருக்கும், எதிர்மறை உளவியல் டா”
“தாலியில்லாம மாலையில்லாம நம்ம எப்படி கல்யாணம் பண்றதாம்? நீ தெளிவா இருந்திருந்தா எல்லாம் யோசிச்சிருப்ப, உங்க அண்ணன் சாமியாடினதுல எல்லாமே மறந்துப்போச்சு. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் வேற வழியே இல்லன்னா உடனே கல்யாணம் செஞ்சிக்கலாம். எனக்குப் புரியுது நீ ரொம்ப ஹர்ட் ஆகியிருக்கேன்னு, பேசாம உங்கண்ணனை தூக்கி உள்ளே வச்சு லாடம் கட்டிடவா?” என்று சீரியசாய்க் கேட்டான்.
அப்போதுதான் தேன்யாழி முகத்தில் மின்னலாய் முறுவல் தோன்றியது.
“உன்னை எங்கண்ணனை உள்ளே வைப்பியா” என்று அவன் புஜத்தில் குத்த,
“ஹா ஹா பார்டா என் கொத்தமல்லி கொழுந்துக்கு கோவத்தை” என்றவனுக்கும் மனம் மட்டுப்பட்டிருந்தது. ஒரு இதம் பரவியது.
“ஆனா நீ என்னை ராச ராச சோழருன்னு சொல்லி சொல்லியே இன்னிக்கு ராஜ ராஜனை மீட் பண்ண கொண்டு வந்துட்ட, வா சாமி கும்பிட்டு ரிலாக்ஸா வீட்டுக்குப் போ! தூங்கி எழுந்திரு எல்லாம் சரியாயிரும்” என்று தென்னவன் கூப்பிட,
“உங்களுக்கு எப்படி தெரியும்?” என இவள் யோசனையாய்ப் பார்க்க,
“நீ மூச்சு விடுற சத்தம் கூட கேட்கற எனக்கு முணுமுணுத்தா கேட்காத? ம்ம் வா” என்றழைக்க,
புன்னகையோடு தேன்யாழியும் அவனோடு கிளம்ப எழுந்தாள்.
எழுந்தவளோ அப்படியே மயங்கி தென்னவன் மேலேயே சரிந்தாள். அவளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தான் தென்னவன்.
குந்தவையும் தாமரையும் தோழி வரவில்லையே என அவளுக்கு அழைத்துப் பார்க்க, தேன்யாழி தென்னவனிடம் பேசிய பின் ஸ்வீட்ச் ஆஃப் செய்துவிட, தாமரை செந்தூரனுக்கு அழைத்தாள்.
“சொல்லு தாமரை” என்று செந்தூரன் சொல்ல
“அண்ணா என்னாச்சு தேனுக்கு? ஏன் அவ வரல போனும் ஸ்வீட்ச் ஆஃப்” என்று கேட்க
செந்தூரன் அதிர்ந்தான். ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“அது நாங்க வெளியே வந்துருக்கோம், வீட்டுக்குப் போயிட்டு உங்கிட்ட பேச சொல்றேன்” என்று வைத்துவிட்டான்.
அவர்களிடம் தங்கையை காணும் என்று சொல்லி தங்கைப் பற்றி தப்பும் தவறுமாய் எதாவது பரவிவிட்டால்?? கண்டிப்பாக தேன்யாழி தவறாக எதுவும் செய்ய மாட்டாள்?
ஆனாலும்?
காலேஜ் போகாமல் எங்கு சென்றாள் இவள்? அதுவும் தோழிகளுக்கும் தெரியாமல் போனும் ஸ்விட்ச் ஆஃப்? தங்கை எங்கு சென்றிருப்பாள் அதுவும் தனியாக முதல் முறையாக அவளை நினைத்து அகம் முழவதிலும் ஒரு அச்சம் பரவிட, என்ன செய்வதென மூளை மரத்து போய்விட்ட நிலையில் அவனுக்கு அவளை தஞ்சாவூரில் மருத்துவமனையில் அனுமதித்த செய்தி வர, விரைந்து தஞ்சாவூர் சென்றான்.
ஆனால், தேன்யாழிக்கு என்னவாயிற்று என்று தெரியாமல் அவன் பயணித்த அந்த ஒரு மணி நேரம் உயிர்வலியை அனுபவித்தான்.
error: Content is protected !!