28 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 28 

“சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாயக்கிளியே சாஞ்சாடு

குத்து விளக்கே சாஞ்சாடு

கோயில் புறாவே சாஞ்சாடு

மானே மயிலே சாஞ்சாடு

மரகதக் கிளியே சாஞ்சாடு

கண்ணே மணியே சாஞ்சாடு…” 

பாட்டி முதுகில் குழந்தை சாய்ந்து ஆடிக் கொண்டே, இப்படி பாட்டை கேட்க மழலைக்கு என்ன ஆனந்தம் கிடைக்குமோ தெரியாது. ஆனால் பாட்டிமார்களுக்கு அது தரும் இன்பமே அலாதி. 

சங்கு பாப்பா ஒற்றைப் பல் தெரிய பாட்டி கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ப்ப.. ப்பா,” என்று செல்ல மிழற்றல். 

“கட்டிக் கரும்பே சாஞ்சாடு

மயிலே குயிலே சாஞ்சாடு

மடியில் வந்து சாஞ்சாடு”

பிள்ளையை இழுத்து மடியில் போட்டுக் கொள்ள, அப்படி ஒரு சிரிப்பு அவளிடம். சௌந்தர்யா முகத்தில் கொள்ளைப் பிரியமும்… அகமகிழ்ந்த சிரிப்பும்.

“என்னா பாட்டு அத்த… என்க்கும் சொல்லிக் குடுங்க…” கேட்டுக் கொண்டே அருகே வந்தமர்ந்தாள் அபி. 

மீண்டும் சௌந்தர்யா பாட்டு      படிக்க அம்மாவும் மகளும் தமிழைக் கொலை செய்து கொண்டே பாட்டைப் பாட, “அம்மா தாய்ங்களா… புண்ணியமாப் போகும், பாட்ட உயிரோட விட்டுடுங்க.” கூறிக் கொண்டே சித்தியின் அருகில் வந்து மாதவன் அமரவும், “டாடா… டாடா” சங்கு குட்டி அப்பா மேல் பாய்ந்தாள். 

“நீ போடா… அப்பனப் பாத்தா இவளுக்கு யாரும் கண்ணுக்குத் தெரிய மாட்டாங்க” அவர் ஆதங்கப்படுவதில் தவறில்லை. ஒரு வாரமாக மாதவன் குடும்பம் கடலூரில் இருக்க, குட்டி சங்கமித்ரா அனைவரிடமும் ஒன்றிப் போயிருந்தாலும், சின்னப் பாட்டி தான் அவளுக்கு அனைத்திற்கும் வேண்டும்! எல்லாம் அவள் அப்பாவைப் பார்க்கும் வரை தான். மாதவன் குரல் கேட்டாலே, முட்டி தேய்ந்து விடும், அவள் தவழும் வேகத்திற்கு. 

வைத்திய நாதனுக்கும், பாக்கியாவிற்கும் மகன் திருமணம் முடித்து வந்த மருமகளையும் ஏற்க முடியவில்லை, அவள் பெற்ற பிள்ளையையும் ஏற்க முடியவில்லை. “நீ எங்களுக்கு பிறக்கலன்னு நினைச்சுக்கிறோம். தயவு செஞ்சு எங்க கண்ணு முன்ன வராத,” என்று விட்டனர் மாதவனைப் பெற்றவர்கள்.

அபியின் சொத்துப் பிரச்சனையும் முடிந்திருக்க, மாதவன் விடுப்பும் முடியும் தருவாயிலிருக்க, “அண்ணா வீட்டுக்கு வா ண்ணா. நானும் யூ.எஸ். கிளம்பிட்டா… அப்புறம் எப்போ பார்ப்போமோ? ஒரு வாரம் இருந்துட்டுப் போ ண்ணா. நானும் லீவ் போடுறேன்,” என்ற அலர்விழி கோரிக்கையும் வர, இதோ ஒரு வாரமாக இங்கு தான் குடும்பமாய் வசிக்கிறான். 

“என் சங்கு பாப்புவுக்கு பாட்டி வேண்டாமா?” பாட்டி கேட்க, 

ஈஈஈஈ என பல் தெரியச் சிரித்து… அப்பா கழுத்தைக் கட்டிக் கொள்ள, “நீ உன் அப்பாட்ட போ. உன் அம்மா எனக்கு,” என்று அபியை அவர் அணைத்துக் கொள்ள, குட்டி சண்டி ராணி சண்டைக்குத் தயாரானாள். 

அம்மாவும், குட்டிப் பாப்புவும் செய்யும் அட்டகாசங்களை அருகே இருந்து நகு பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க, அந்த அழகிய தருணத்தை சிறிய கைப்பேசிக்குள் அடக்கிக் கொண்டிருந்தாள், அலர்விழி.

அண்ணனிடம் மனோ பற்றி கூற நா வரை வந்தாலும் பெண் வாய் திறக்கவில்லை. இப்பொழுது தான் அவன் வாழ்வில் ஏகபட்ட பிரச்சினைகளை எதிர் கொண்டான். இந்நிலையில் இவள் மனோ பற்றி கூற, அண்ணன் வீட்டில் கூறிவிட்டால், அமெரிக்கா போவது தான் எப்படி? அதனால் பெண் ஒருவரிடத்தும் வாய் திறந்தாளில்லை.

  “பாப்பா அந்த ஃபோன கீழ வச்சுட்டு பாட்டி சாப்பிடுறாங்களான்னு கேட்டுட்டு, சங்கு குட்டிக்கு பருப்பு சாதம் பிசஞ்சு எடுத்துட்டு வா. நீ என்ன வாய் பார்த்துட்டு இருக்க… போய் பாட்டிக்கு அப்பளம் போடு, பாப்பு சாப்பிட்டதும் நாமளும் உக்காருவோம்,” அலர்விழியையும் நகுவையும் ஏவிக் கொண்டிருந்தார் சௌந்தர்யா. 

“பேத்தி வந்ததும் வந்தா… இந்த அம்மா சீனப் பாத்தியா டி?” அக்கா கூற, “அது, அண்ணாவ மாதிரியே அம்மாவையும் அப்பிடி மயக்கி வச்சிருக்கு! என்ன பண்ண?” தங்கையும் ‘ஆமாம் சாமி’ போட்டுக் கொண்டே சென்றாள் அடுக்களைக்குள். 

சிறிது நாட்களாகவே சௌந்தர்யாவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள். காலம் ஒரு பாடப் புத்தகம். கிடைப்பதற்கரிய பொக்கிஷங்களைக் கொண்ட புத்தகம். சௌந்தர்யாவிற்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தது, உடலை உருக்கும் நோயின் அறிகுறிகள் கொண்டு.  

வேலையை விட்டார். பள்ளிக்கு ஓடி, கல்லூரிக்கு ஓடி, வேலை என்று ஓடி, கணவன்… பிள்ளைகள் என்பவர்களுக்காய் ஓடி, கடைசியில் அவர்களோடு இருக்கவில்லையோ என்று தோன்றவும் இளைப்பாற முடிவெடுத்தார். வாழப் போகும் கொஞ்ச காலமும் வாழ்ந்து பார்க்கும் எண்ணம் முளைத்ததன் காரணம்! 

அம்மா வேலையை விட்டது பெண்கள் இருவருக்கும் கொண்டாட்டமே. முன் போல் அம்மா சட்டென்று கோபப்படுவதில்லை. முன்பே பிள்ளைகளின் விருப்பங்களுக்குத் தடை போடாதவர் இப்பொழுது கேட்கவே வேண்டாம். ஒரு வாழ்க்கை… என்ன அவசரம்? பிள்ளைகளும் வாழ்ந்து தான் பார்க்கட்டுமே என்று நினைத்தார் போலும்.

அம்மாவின் புதுப் பரிமாணம் பெண்களுக்குப் புரியவில்லை என்றாலும் பிடித்தது. அம்மாவிற்கு ‘மினி ஸ்ட்ரோக்’ வந்தது பெண்களுக்குத் தெரியாது. அது கணவன் மனைவிக்குள் புதைந்து போனது. 

திடீர் என்று ஒரு நாள் அலுவலகத்தில் அமர்ந்திருந்த சௌந்தர்யாவின் வலது கன்னம் மெல்லச் சரிய ஆரம்பித்தது. அவரின் வலது பக்க இதழ் மட்டும் கீழே இறங்குவது போல் தோன்றி மறைந்தாலும் அவரோடு பேசிக் கொண்டிருந்தவர் கவனத்தில் பதிந்தது. சௌந்தர்யாவின் பேச்சு குழறி… அதை மற்றவர் கவனிக்கும் முன்னே சில வினாடிகளில் எல்லாம் சரியாகப் போனது. அவர் அறியாமலே இடது கை வலது தோளை நீவி விட்டுக் கொண்டிருந்தது. 

“மேடம் எங்க அப்பாக்கு இப்படி ஒரு தரம் ஆனத நாங்க கவனிக்காம விட்டதால அது பக்கவாதம் வரைக்கும் இழுத்து விட்டுடுச்சு. இது மினி ஸ்ட்ரோக் மாதிரி இருக்கு. செக் பண்ணிக்கோங்க,” என்ற அலுவலகத் தோழியின் அறிவுரைப் படி மருத்துவரிடம் செல்ல, அவரும் அதை ஊர்ஜிதப்படுத்தினார்.

ஆடித்தான் போயினர் தியாகுவும், சௌந்தர்யாவும். இரண்டு பெண் பிள்ளைகளைக் கரை சேர்க்கும் முன் கைகால் இழுத்துக் கொண்டு படுப்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இறப்பை விட கொடியதாகத் தோன்றியது பக்கவாதம்!

“பயப்பட ஒண்ணும் இல்ல மாமா. இப்போவே பார்த்துட்டோம். சோ.. ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன். ஸ்ட்ரெஸ், டென்ஷன் ஆகாம பார்த்துக்கணும். தேவ இல்லாத பிரஷர் தான் இதுக்கு முதல் எனிமி. சாப்பாட்டுல கவனம் காட்டணும். உடற்பயிற்சி… மருந்து எல்லாத்துலயும் கவனமா இருந்தாப் போதும். ஒண்ணும் ஆகாது மாமா… பார்த்துக்கலாம்” என்று இவர்களைத் தாங்கி நிறுத்தியதென்னவோ பிரவீனின் வார்த்தைகள் தான்.

மருந்தை எடுத்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் அழுத்தம் இருக்கதான் செய்தது, சங்கமித்ரா வரும் வரை.

“ம்மா.. இந்தாங்க கேரட் பருப்பு சாதம் உங்க பாப்புக்கு” கையை சுத்தம் செய்துவிட்டு வந்திருந்த சௌந்தர்யாவிடம் அலர்விழி உணவைக் கொடுக்க, அதைப் பார்த்ததுமே, குட்டி வாண்டு ஓடத் தயாரானது. 

“மேடம் தவழற ஸ்பீட பாரு. அவள பிடி பாப்பா…” 

குட்டியைத் தூக்க, கையையும் காலையும் ஆட்டி, நெளிந்து அங்கிருந்து தப்பிப்பதில் தான் முழு கவனமும். 

“நேநே பாபி” அவள் பிதற்றல் எடுபடவில்லை. சௌந்தரியா இரண்டு கால்களுக்கு நடுவே அணைப்பாய் அமர்த்தி, போராடி நான்கு வாய் உள்ளே அனுப்பவும் சங்கு பாப்பா தூங்கி விழ ஆரம்பித்தாள். 

“தூங்கற குழந்தையத் தூங்க விடேன் மா” தியாகு பரிந்து கொண்டு வர, “ச்சு… உங்களுக்கு இந்த மேடம் பத்தித் தெரியாது. அப்படி ஓரமா உக்கார்ந்து பாருங்க பத்து நிமிஷம்!” என்று கணவனை ஓரமாக அமரச்செய்தார்.

எப்படியோ எழுப்பி எழுப்பி அடுத்த நான்கு வாய் உள்ளே தள்ளி, வாய் துடைத்து, சௌந்தர்யா காலை நகர்த்தவும், ஸ்விச் போட்ட பல்பு போல் குட்டி மேடம் கண்கள் திறந்தன. 

“பாபி…”  என்று எழுந்து அப்பொழுது தான் பாட்டியைப் பார்ப்பது போல் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் குட்டி சங்கு. பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவிற்கு அப்படி ஒரு சிரிப்பு. 

“என் பட்டுக்குத் தூக்கம் போச்சா? வெளியில வெயில் இல்ல… நம்ம பத்து நிமிஷம் வீட்ட சுத்தி நடந்துட்டு வருவோமா,” குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு வாயிலை நோக்கிச் சென்றவரைப் பார்த்து அமர்ந்திருந்தார் சௌந்தர்யாவின் கணவன். 

இனம், குலம், கோத்திரம் என்று மற்ற இனத்தாரிடம் அதிகம் ஒட்ட மாட்டார் சௌந்தர்யா. இன்று அதெல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை. பைபிள் வாசிக்கும் அபிகேலும் அதே வீட்டில் அவர் பிள்ளைகளோடு சுற்றித் திரிகிறாள். அவளை மணந்த மாதவன் மேல் மனத் தாங்கல் இல்லை. அவர்கள் குட்டி மகள் அவர் வாழ்வின் அங்கமாய் போனாள். 

வாழ்க்கை ஒரு வினோதப் பயணம். யாருக்கு எப்பொழுது எதை ஏந்தி நிற்கும் என்று சொல்லுவதற்கில்லை. அது தொடங்குவதும் தெரிவதில்லை. அது முடிவதும் நமக்கு தெரிவதில்லை. பயணத்தில் பல திருப்பங்களும் தடைக் கற்களும் தோன்றி மறையும். இவ்வளவு தான் வாழ்க்கை. இது வெறும் தற்காலிகப் பயணம் என்ற புரிதல் வந்து விட்டாலே நம்மைச் சுற்றியிருக்கும் பல வலைகள் அறுந்து விடும்.   

இது பிடிக்கும், இது பிடிக்காது, இது சரி, இது தவறு, இது பாவம், இது புண்ணியம் என்று நாமே நமக்கு ஒரு எல்லை ஏற்படுத்திக் கொண்டு ஒரு பெட்டிக்குள் அடங்கிப் போகிறோம். 

மகனை விட, மற்றவர் பார்வையில் கிடைக்கும் கௌரவம் பெரிதாகப் போக அந்த எல்லைக்குள் தங்களை அடைத்துக் கொண்டனர் பாக்கியா-வைத்தியநாதன். 

அரைக் கோப்பை நீர் உள்ளதென்றும் கூறலாம்… அரை கோப்பை காலியாக உள்ளதென்றும் கூறலாம். எல்லாம் நம் பார்வையில். காலியானதைப் பார்க்காமல் மீதமுள்ளதைப் பார்க்கத் தன்னை சுற்றி இட்டிருந்த எல்லைகளை எல்லாம் தாண்டி வந்திருந்தார் சௌந்தர்யா.

அவர் மாற்றம் யாருக்குப் பிடித்ததோ இல்லையோ, அலர்விழிக்கு மிகுந்த நிம்மதியைத் தந்தது!

error: Content is protected !!
Scroll to Top