Skip to content
அத்தியாயம் 25
நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை – கூறியவர் ஞானி!
நேற்று மட்டுமா… இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இருப்பதில்லை. அது தான் உண்மை.
மாதவன், ஒரு தனித்துவம் படைத்த தனி பிறவி எல்லாம் இல்லை. நம்மைப் போல் ஒருவர். வயதிற்கேற்ற துள்ளலோடு சுற்றும் வாலிபன். மூன்று தங்கைளுக்கு தமையன். அவர்களைக் கரை சேர்க்கும் பொறுப்பெல்லாம் இல்லாத சாதாரண அண்ணன். இப்படி பெண்கள் அவனைச் சுற்றி இருப்பதாலோ என்னவோ அவன் பார்வை இன்று வரை அத்து மீறியதில்லை. அதுவும் மாற்றான் மனைவியை எல்லாம்? அவன் சைட் லிஸ்டில் கூட சேராது.
அபிகேல் தனியாகத் தெரிந்தாள். வெண்மேனி மோகம் கொண்ட ஜனம் நடுவே அவள் தனியே தான் தெரிந்தாள். தாய்மை அவள் பொலிவைக் கூட்டிக் காட்டியது. இது எதுவுமே அவனைக் கவரவில்லை. அவன் கவனிக்கவும் இல்லை எனலாம். கையில் குழந்தையோடு இருப்பவளை ஆசைக் கண்ணோடு பார்க்கவில்லை மாதவன். ஆனால் பிள்ளை அவனை இழுத்தாள். இந்தப் பிஞ்சு தளிர் கரம் அவனைக் கட்டிப் போட்டது உண்மை.
அபிகேலின் பெரியம்மா பேசியதைக் கேட்டபின் மனம் ஏதோ செய்தது. ‘விதவையா இவள்? தாய் தகப்பன் என்ற எந்த உறவுமே இல்லையா இவளுக்கு? பட்ட மரம்! அனாதை! இன்னும் என்னவெல்லாம் பெயர் இவளுக்கு?’ என்னவென்று உணரத் தெரியவில்லை அந்த இளம் ஆண்மகனுக்கு. அந்த குட்டி மகளுக்குத் தகப்பன் இல்லாதது இவனுக்கு குறையாகப் போனது. ‘சங்கமித்ரா’ இழுத்து மூச்சை விட்டுக் கொண்டான்.
“மாதவா… சாப்டியா டா?” பாக்கியா வந்து கேட்கவும் சிந்தனை கலைந்தது. வயிறு தன் இருப்பைக் காட்டியது.
“இல்ல மா…”
“இன்னுமா சாப்பிடல? போடா போய் சாப்பிடு. பணத்த பத்திரமா வச்சுட்டியா? சாவிய அண்ணிட்ட குடுத்துட்டியா?”
நினைவு வந்தவனாய், “அதுக்கு தான் வந்தேன். மறந்துட்டேன். இந்தாங்க நீங்களே குடுத்துடுங்க,” என்று சாவியைக் கொடுத்தவன் எழுந்து கொண்டான்.
கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. மண்டபத்தில் வீட்டார் மட்டுமே. பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் ஏதோ விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. சுற்றியிருந்த அவன் வீட்டாட்களை கடந்து சென்றான்.
வழியில், மாடிப்படிக்குப் பின், “ஐயோ வழி விடுங்கத்தான். அண்ணா தம்மடிக்கிற கெட்ட பையனோட எல்லாம் சேரக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க…” நகுநா கிசுகிசுக்கும் சத்தம் கேட்டது.
“ரொம்ப பிகு பண்ணாத டி வெல்லகட்டி. நேத்து மாதிரி ரொம்ப சீன் காட்டின, தம்மடிச்ச வாய்ல சரக்க ஊத்தி விட்டுடுவேன்.”
“அதுவாது நல்ல பிராண்டா அத்தான்?”
வினோத்தின் கொஞ்சலோடு கூடிய மிரட்டல் சத்தமும், கூடவே அவள் பதில் பேச்சும், இவன் நடக்க நடக்க மெலிந்து கொண்டே போனது. ‘குட்டிப் பிசாசு இவனையே முழுங்கிடுவா போல… ரெண்டும் ஜாடிக்கேத்த மூடி தான்!’. மெல்ல சிரித்துக் கொண்டான்.
முன்னிரவு வினோத்தோடு இவன் பேசும் முன்னமே, “டேய் அவ உனக்கு தங்கன்னா எனக்கு மாமன் மக டா. டைம் பாசுக்கு எனக்கு ஆளா இல்ல? என் கூட ஆயுசுக்கும் என் வாழ்க்கை துணையா வருவான்னு ஆசையா இருக்கேன். நீ பூந்து கெடுத்துடாத. அலர் கல்யாணம் முடியட்டும் வீட்டுல பேசுறேன். எனக்கும் அவ சின்னப் பொண்ணுன்னு தெரியும், லிமிட்ட எல்லாம் தாண்ட மாட்டேன். நீ சும்மா டென்ஷன் ஆகி வில்லன் மாதிரி குறுக்க வராத. அப்புறம் அவ மேல கை வைக்காத சொல்லிட்டேன். இன்னொரு தரம் அவ மேல கை நீட்டின, அவ அண்ணன்னு பாக்க மாட்டேன், தூக்கிப் போட்டு உன்ன மிதிப்பேன்… ஞாபகம் வச்சுக்கோ,” என்று மிரட்டி விட்டு சென்றிருந்தான்.
உணவு உண்ணும் இடத்தில் பத்திருபது பேர் உண்டு கொண்டிருந்தனர். ஒரு ஓரத்தில் அபிகேல் தனியே அமர்ந்திருக்க மகள், அம்மாவைப் பிச்சு பிடுங்கிக் கொண்டிருந்தாள். புடவையை இழுப்பதும்… முடியை இழுப்பதும்… இலையை இழுப்பதும் என்று ஐந்து மாதமே ஆன அந்த குட்டி வால், அபியை உண்ண விடுவதாகத் தெரியவில்லை.
“குட்டித் தங்கம்…”
சத்தம் கேட்டு தலை நிமிர்ந்தனர் அம்மாவும் மகளும். இம்முறை மாதவன் பார்வை மகளோடு நிற்கவில்லை. சினேகப் புன்னகை இவன் செலுத்தும் முன் அவள் செலுத்தியிருந்தாள்.
மாதவனைப் பார்க்கவும் மகள் தாவிக் கொள்ள, “உன் பெரியம்மாட்ட மேடம் போகலியா?” எனவும், “ப்ச்… ப்ச்…” கண்கள் சிமிட்டி சிரித்தாள்.
பிள்ளையை அவன் அணைக்க, அவனுள் அடங்கிக் கொண்டாள் மகள். அபிகெயிலின் பார்வை முழுவதும் மகள் மேல். ஆண் வாடை மகளுக்குப் பிடித்தமில்லை, ஒருவனைத் தவிர! எபியைத் தவிர ஆண்களிடம் போகவே மாட்டாள். இன்று இவனைக் கண்டதும் மகள் தாவிச் செல்கிறாள். இவனும் அவனைப் போன்ற தோற்றமுடையதால் இவனை எபி என்று எண்ணிக் கொண்டாளா? தெரியவில்லை.
மாதவனைப் பார்த்தாலே பொக்கை வாய் எச்சில் ஒழுக சிரித்தது.
“அம்மா சாப்பிட வேண்டாமா? என் தங்கம் டம்மி ஃபுல்லானாப் போதுமா?” இரு கைகளாலும் அந்தரத்தில் மகளை உயர்த்தி அந்த குட்டி வயிற்றில் மூக்கை கொண்டு தேய்த்து அவன் கொஞ்ச, மகள் கெக்கப் பிக்க என சிரிக்க… அபி முகத்திலும் ஒளி! இந்த ஒரு மாதத்தில் இன்று தான் பார்க்கிறாள் மகள் சத்தம் போட்டுச் சிரிப்பதை!
பிள்ளையைத் தோளில் போட்டுக் கொண்டே, “நான் மாதவன், அபிகேல். எங்க வீட்டுக் கல்யாணம் தான் இது,” தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.
“எனக்குப் புரியுது. நீ சுத்துது ரெஸ்ட் இல்லாம. சாப்டாச்சா… சாப்பிடாட்டி, நான் பேபிய வச்சுகிது. நீ சாப்பிடு” என்றாள், ஆங்கிலத்தை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து.
“நீங்க பொறுமையா சாப்பிட்டுட்டு வாங்க. நாங்க மேடை கிட்ட இருக்கோம்.”
“ம்ம்” என்றாள். மகளைக் கொடுக்க பயம் தான்.
“எதுக்கும் என் நம்பர் தரேன். உங்க கண்ணுல நான் படலன்னா ஒரு கால் போடுங்க வந்திடுறேன்”. கைப்பேசி எண்ணைக் கேட்டு ஒரு மிஸ்ட் கால் கொடுத்தான். “அவ அழுதா தூக்கிட்டு வரேன். பொறுமையா நிம்மதியா சாப்பிடுங்க.”
அவன் முதுகை அபிகேலின் பார்வை துளைப்பது தெரிந்தது. திரும்பினானில்லை. குட்டிப் பெண்ணோடு முதல் தளத்திற்குச் சென்று அமர்ந்தான். அவன் பேச. மகளுக்கு என்ன புரிந்ததோ கண், காது, மூக்கு, முடி என்று அனைத்தையும் பிச்சு பிராய்ந்து கொண்டிருந்தாள்.
குழந்தை என்றால் பிடிக்கும் தான். ஆனால் தள்ளி நின்று கன்னம் தடவிச் செல்லும் அளவு தான் பிடிக்கும். அவனுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கே பிடிபடவில்லை. குட்டி பஞ்சுப் பொதியோடு விளையாட மிகவும் பிடித்தது. அவ்வப்போது அவனையறியாமலே உச்சி முகர்ந்து முத்தமிட்டான். ஆசை தீர அணைத்துக் கொண்டான். ஆனால் இது தீரும் ஆசை போல் தோன்றவில்லை. நீல விழிகளில் விழுந்து மூழ்கிப் போனான்.
அவன் கொஞ்ச, மித்து கெக்கபிக்க என சிரிக்க, அவர்கள் மேல் பார்ப்பவர் கண் பட்டுவிடும்!
“பாப்பு குட்டி… சங்கு பேபி,” அலர்விழி அண்ணன் அருகில் வந்தமர்ந்தாள்.
“உனக்கு தெரிஞ்ச பொண்ணு தானே அலர் அவ? கொஞ்சம் கவனிச்சுக்க மாட்டியா? தனியா சின்னக் குழந்தையோட கஷ்டப்படுறா!”
“இந்த குட்டி என் கிட்ட வரவே மாட்டேங்குது ண்ணா. அப்புறம் நான் என்ன செய்ய முடியும்? அந்த அத்த கூட நாலு நாளா இருக்கு… அவங்களையே தூக்க விட மாட்டேங்கிறா!”
“ம்…”
“உன் கிட்ட எப்பிடிண்ணா இப்படி ஒட்டிகிட்டா? நான் தூக்கறேனே,” கேட்டுக்கொண்டே குழந்தையை வாங்கவும், குட்டி மகள் மாதவனைப் பார்த்து உதடு பிதுக்கினாள்.
“குழந்தைய அழ விடாத” வாங்கிக் கொண்டான். அவளும் கழுத்தைக் கட்டிக் கொள்ள, அலர்விழி நம்பாத பார்வை பார்த்தாள்.
“என்ன டி?”
“அவ எந்த ஆம்பிளைங்க கிட்டயும் போக மாட்டான்னு மனோ சொல்லுவார்,” கூறிய பின் நாக்கை கடித்தால் என்ன, கடிக்காமல் போனால் என்ன? செத்த அலர்… நினைத்துக் கொண்டாள்.
ஆனால் மாதவன் வேறு கேட்டான். “அபிகேல் பத்தி சொல்லு,” என்று கேட்க… தப்பித்தோம் பிழைத்தோம் என்று தனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினாள்.
“… ஒரு நாள் இவங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கும் போது அந்த ஸ்டீவ எதிர் வீட்டுல பார்த்திருக்காங்க, அவன் பொண்டாட்டி பிள்ளைங்களோட!
பாவம் ண்ணா… சின்னப் பொண்ணு! உன் வயசு தான்! நம்பி ஏமாந்துட்டா! ‘டிவொர்ஸ் போயிட்டு இருக்கு. டிவொர்ஸ் ஆனதும் கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுவரைக்கும் வெளியில சொல்ல வேண்டாம் பிரச்சனை ஆகிடும்’ன்னு கேட்டான் போல. அவன் பொறுமையா டிவொர்ஸ் ஆகி இவங்கட்ட வந்ததும் ‘நீ உன் மனைவிக்கும் உண்மையா இல்ல… உன்ன காதலிச்சவளுக்கும் உண்மையா இல்ல. இப்போ எனக்கு உன் மேல காதலும் இல்ல! நீ எனக்கும், என் வயித்தில் இருக்கற குழந்தைக்கும் வேண்டாம்’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.”
“அப்போ டெலிவரி எல்லாம்?”
“அவங்களுக்கு எல்லாமே அவங்க ஃப்ரெண்ட் எபி தான். அவர் தான் ப்ரெக்னென்சி பூரா அவங்கள பாத்துகிட்டது. நடுவுல ஒரு மாசம் இண்டியா வந்தார். அப்போ அவரோட ஒரு ஃப்ரெண்ட அபி கூட தங்க வச்சுட்டு வந்தார். அவர் தான் இவங்க ரெண்டு பேருக்கும் கார்டியன்.”
“அவங்க ரெண்டு பேருக்கும்…?”
“ஐயோ அண்ணா… அவங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அவங்க ரெண்டு பேரும் கூடப் பிறக்கல அவ்வளவு தான். வேற ஒண்ணும் இல்லண்ணா.” மனோக்கும் அவளுக்குமான உறவைக் கூற வாய் வரை வந்தாலும் ஏனோ கூற முடியவில்லை. விடயம் அம்மா காதிற்கு சென்றால், அவள் வெளிநாட்டுக் கனவை கனவில் தான் காண வேண்டும்!
அபிகேல் வந்தாள். மகளுக்காக கரம் நீட்டினாள். மகளை கொடுப்பதற்குப் பதில் நீட்டிய கரத்தைப் பிடிக்கத் தோன்றியது மாதவனுக்கு. காலை மண்டபத்திற்குள் நுழைந்ததிலிருந்தே பார்ப்பவளை முதல் முறை பார்ப்பது போல்ப் பார்த்தான். அழகாக இருந்தாள். மகளின் சிரிப்பைப் போலவே இவளின் புன்னகையும் அவன் மனதை நிறைத்தது.
மாதவன் இதழ் அழகாக விரிந்தது, ஒரு குழந்தையின் தாயைக் கண்டு!
error: Content is protected !!