“கெட்டி மேளம் கெட்டி மேளம்…” மேளம் கொட்ட, தாலி கட்டப்பட, செல்வி.அர்ச்சனா, திருமதி.அர்ச்சனாவாக மாறியிருந்தாள். அடுத்தடுத்து சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆரம்பித்தது. விழா எந்தக் குறையுமின்றி நடந்து கொண்டிருந்தது.
“டேய் மாதவா,” இரண்டு நிமிடம் அமர்வோம் என்று அமர்ந்த மகனைப் பிடித்துக் கொண்டார் பாக்கியா.
“என்ன மா?”
“அண்ணி ரூம்ல இத வச்சுடு. பத்திரம் தம்பி, பையில பணமிருக்கு. ரூம் சாவி இந்தா. பூட்டி சாவிய உன் அத்தட்ட குடுத்துட்டு அப்புறம் வந்து உக்காரு” என்று கிளப்பி விட்டார்.
கீழ் தளத்தில் உணவு அறை, முதல் மாடியில் திருமணம், இரண்டாம் மாடியில் தங்கிக் கொள்ளும் அறைகள் இருக்க… முன்னிரவு அம்பிகா தங்கியிருந்த அறையை நோக்கிச் சென்றான்.
“ச ரி க ம ப த நி நான் சொல்லி தரவா…
துடிக்குற ஆ…சைய நான் கொட்டி விடவா…
வருகிற ஆ…வணி நான் வீட்டில் சொல்லவா…
இடைவெளி ஏன் நீ வா ரெண்டு முத்தம் வைக்கவா…”
மண்டபத்தை நிறைத்து வழிந்தோடிக் கொண்டிருந்த பாடலை பாடிக் கொண்டே சாவியிட்டுப் பூட்டியிருந்த கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் வாய் மூடிக் கொண்டது.
வாடாமல்லி புடவை மாராப்பிற்குள்ளிருந்து வெண் மேகத்தை அப்பொழுது தான் வெளியே எடுத்தாள், அபி. நுழைந்தாயிற்று! அவளும் இவனைப் பார்த்தாயிற்று. கதவும் சாத்திக் கொண்டது. அடுத்து என்ன செய்ய? இருபுறமும் பூட்டவும் திறக்கவும் செய்லாம் என்ற பூட்டு! அதனால் வந்த வினை!
வாயிலிருந்து பால் வழிய பச்சிளம் குழந்தை மீண்டும் தொண்டை கிழிய வீறிட ஆரம்பித்தாள்.
“சாரி… உள்ள ஆளிருப்பாங்கன்னு நினைக்கல,” என்று அவன் ஆங்கிலத்தில் கூற, “பர்வால,” என்றாள் தமிழில்.
குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தாள். அழுகை இப்பொழுது ஆரம்பித்தது போல் இல்லை. விட்டு விட்டு அழுது கொண்டிருப்பதின் அறிகுறியாய் முகம் அடர் சிவப்பாய் மாறியிருக்க, இவளும் சலிக்காமல் ஒரு மணி நேரமாக இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறாள். சிறு குழந்தை என்றாலும் ஏந்துபவளுக்கு கையும் முதுகும் வலித்தது. இறக்கி வைக்க மகள் பாரமில்லையே… பத்து மாதங்கள் முடிந்தும் தானே சுமந்து திரிகிறாள்.
“பாப்பா அழறாளே…”
“ம்ம்… ஏன்னு தெரியல. இந்த ப்ளேஸ் ரொம்ப சூடு. அதுக்கு தாங்கல! அது தான் இங்க, பட் இன்னும் அழுது,” என்று அறையை ஸ்விஸ் ஆக்கியிருந்த ஏசியை நோக்கி முகம் உயர்த்திக் காட்டினாள்.
“பசிக்குதோ… பாதியில நான்… சாரி நான் எதிர்பார்க்காம…” திணறினான் வார்த்தை கிடைக்காமல். நம்மூரில் வளர்ந்தவள் என்றால் அவளும் திணறியிருப்பாள் நடந்த சம்பவத்திற்கு. ஆனால் இவளுக்கு அப்படி எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. அதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பதிலளித்தாள்.
“இப்போ தான் 20மினிட்ஸ் முன்ன நான் ஃபீட் பண்ணிச்சு. நிறுத்தாம அழுவுது! இப்போ குடுத்தா குடிக்கல! வயிறு ஃபுல். சோ பசியில்ல… என்கு தெரியல,” ஏதாவது செய்து அழுகையை நிறுத்த முடியாதா என்ற தவிப்பு அவளிடம்.
“நான் தூக்கட்டா,” என்று அருகில் சென்று கையை நீட்டி விட்டான்.
“அது யார் கிட்டயும் போவாது. ஆம்பள அதுக்கு சுத்தமாப் பிடிக்காது, எபி மட்டும் தான் தூக்க விடும்” என்றாள். பெண்ணின் முகத்தில் வலியின் சாயல். அவளும் எத்தனை மணி நேரம் தான் தனியே போராடுவாள். பிள்ளை உண்டானதிலிருந்தே தனி தானே… ஆனால் இன்று பாரம் அழுத்தியது. புது இடமும்… தூக்கமின்மையும்… தனிமையும்… குழந்தை பிறந்த அன்றிலிருந்தே அவள் மட்டும் தானே. அழாமல் இருப்பதே தெய்வச் செயல்.
மூச்சு முட்டும் தனிமை. எபி என்ற ஒருவன் இல்லாமல் போயிருந்தால் அவள் கண் மூடிய இடத்தில் புல் முளைத்திருக்கும்.
அவள் கூறி முடிக்கும் முன் குழந்தை அவன் விரலை பிடித்துக் கொண்டு அவன் பக்கம் புரண்டது. அவன் அதற்கு மேல் ஒன்றும் தயங்கவில்லை. தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.
“இத போட்டுக்கோ மேல, வாந்தி பண்ணும்,” என்று ஒரு துண்டை அவன் தோளில் போட்டு விட்டாள். அவன் தட்டிக் கொடுக்க, அடைத்து நின்ற பாலைக் கக்கியது குழந்தை. ஏப்பம் வரவும் வீறிட்ட அழுகை கொஞ்சம் கொஞ்சமாக நின்றது.
விசும்பல் மட்டும் நின்ற பாடில்லை. அவன் தட்டிக் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நடக்க, சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தவளின் கை மெல்ல பிடி தளர ஆரம்பித்தது. மாதவன் கழுத்தில் முகம் புதைத்து தூங்க ஆரம்பித்தாள் சங்கமித்ரா.
அவன் ஏதோ ஆங்கிலப் பெயர் எதிர்பார்க்க, சங்கமித்ரா என்றாள் அபிகேல். “அம்மா நேம். அவங்க க்ராண்ட் பேபிக்கு” என்றாள்.
வெள்ளைக்காரி ஏன் பட்டுப் புடவையில்… சென்னையில் என்று கொஞ்சம் விளங்கியது. உறங்கிய மித்ராவை படுக்க வைக்க தாயிடம் கொடுக்கப் பார்க்க, அவளும் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தாள். தலை பின்னோக்கி தொங்கிக் கொண்டிருக்க வாய் குட்டியாய் திறந்திருந்தது. ‘ம்ப்ச்! எவ்வளவு அசதி!’ என்று நினைத்தான்.
நான்கு நாட்களில் இன்று தான் நிம்மதியான உறக்கம் என்பதும் அவனுக்குத் தெரியாது. குழந்தையை படுக்க வைத்தவன், சுற்றி தலையணை வைத்து, மெல்ல அதன் தலையை வருடி, நெற்றியில் பட்டும் படாமலும் முத்தம் பதித்தான். புதிதாய் பூத்த ரோஜா இதழை இதழால் வருடியது போன்ற உணர்வு.
அங்கிருந்த பட்டுப் புடவை ஒன்றை சுருட்டித் தொங்கிக் கொண்டிருந்த இவள் தலைக்கடியில் வைத்து விட்டு வந்த வேலையை முடித்து, வந்த வழியே சத்தம் எழுப்பாமல் கதவைப் பூட்டிச் சென்று விட்டான்.
சென்றவன் மனம் முழுவதும் பால் மணம். சங்கமித்ரா! மனம் ஆர்ப்பரித்தது. அப்படி எல்லாம் எளிதில் சங்கமித்ராவை மறக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த எச்சில் வாயும், பொக்கை சிரிப்பும், ரோஜா இதழ் மென்மையும்… கடலில் மிதக்கும் நீல மீன் போன்ற விழியும் ஆயுசுக்கும் மறக்க முடியாது!
கீழே வரவும் கூட்டம் கலைந்திருந்தது. மேடையில் மணமக்கள் நின்றிருக்க… புகைப்பட வல்லுநர், “இப்படி நில்லுங்க… அப்பிடி நில்லுங்க… இல்ல கைய இடுப்புல குடுங்க…” என்று இருவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.
சிலர் அடுத்த பந்திக்காக மேடை முன் கிடந்த நாற்காலியில் காத்திருந்தனர். அபியோடு வந்த பெண்மணி, அம்பிகாவோடு பேசிக் கொண்டிருந்தார். அபியின் ஒன்றுவிட்ட பெரியம்மா போலும்! பெண் ஏதோ சொத்து விஷயமாய் வந்திருப்பதாக பேசிக் கொண்டிருந்தார். இவன் கவனம் அதில் இல்லை. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. சாவியைக் கொடுத்து விட்டால் சென்று விடுவான்.
“யாரோ ஃப்ரெண்டு அமெரிக்கால இருக்கானாம். இங்க அவன் வீட்டுல தான் மூணு வாரமா இருக்கா. இவளுக்கு யாருமில்லன்னு நூறு ஏக்கர் சொத்த ஏமாத்தப் பாத்தாங்க. அந்த பையன் அப்பா தான் இவளுக்கு வக்கீல் வச்சு பார்த்துக் கொடுக்குறார். கோர்ட்டுக்கு போகாம முடிச்சுடலாம்ன்னு சொன்னாங்களாம்!
நாலு நாளா தான் எங்க கூட இருக்கா. அந்தம்மா வெளியூர் போயிருக்காங்கன்னு பத்து நாளுக்கு இருக்க வந்திருக்கா.”
“சொந்தம் யாரும் இல்லியாக்கா?”
“இருந்தா இப்டி தனியா சீரழியுமா? பொண்ணு இந்த சின்ன வயசுலேயே பட்ட மரமா, நாதியத்து தன்னந்தனியா அமெரிக்கால பாடாப் படுது!
என் மருமக கூட நான் இருக்கறதே பெரிய விஷயம், அதுனால ‘இங்கேயே இருடி நான் பாத்துக்கிறேன்’னு சொல்ல முடியல! மருமகளோட இவள தனியா விட்டுட்டு வர முடியாது அம்பிகா… ஏதாவது சொல்லி பொண்ண நோகடிச்சுடுவா. அதுதான் போற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டே அலையறேன். பாவம் சின்னப் பிள்ளைக்கு எதுவும் ஒத்துக்கல. சட்டுனு அதுவும் துவண்டு போயிடுது. வந்த வேலையும் இவளுக்கு முடிய மாட்டேங்குது.
கட்டுனவனும் இல்ல அப்பன் ஆத்தாவும் இல்லாத பொண்ணு என்ன பண்ணப் போதோ? அந்த சின்னதும் அவள உக்கார விட மாட்டேங்குது. எந்நேரமும் ஒரே அழுக, இந்த நாலு நாளா நானும் பாக்கிறேன்… அபிப் பொண்ணு ஒழுங்கா நாலு வாய் சாப்பிட மாட்டேங்குது. சாப்பாட விடு அம்பிகா… அந்தப் பொண்ணு நிம்மதியா என்னைக்கு தூங்கிச்சோ?
நான் சாப்பிட்டுட்டு அவள சாப்பிடக் கீழ அனுப்பணும் அம்பிகா! கிளம்பட்டா? என்னவோ போ… ஆண்டவன் என்ன இதுங்க ரெண்டத்துக்கும் எழுதி வச்சிருக்கானோ? பெத்ததும் பொம்பள பிள்ளையாப் போச்சு! ரெண்டும் அழகு பொம்ம மாதிரி இருக்குங்க… அனாதையா நிக்கணும்ன்னு தலையில எழுதி இருக்கு போல! கண்டவன் கையில மாட்டி ரெண்டும் சீரழியாம இருந்தா சரி.”
அவர் புலம்ப, மாதவன் அப்படியே அமர்ந்து விட்டான். குழந்தையை மட்டுமே மனதில் பதித்திருந்தவன் கண்கள் மூட, வாடாமல்லி நிறப் பட்டில், கைகளில் குட்டி தேவதையை ஏந்தியிருந்த அபிகேல் மங்கலாய் தெரிந்தாள். அபியின் வலிகூடிய விழிகள் இவனை ஏதோ செய்தது.
‘அப்பா இல்லையா என் தங்கத்துக்கு?’ பிள்ளையின் பால் மணமும்… எச்சில் ஒழுகும் பொக்கை வாய் சிரிப்பும்… மனதைத் தாக்கியது. ‘கண்டவன் கையில மாட்டி ரெண்டும் சீரழியாம இருந்தா சரி’ உள்ளுக்குள் பிசைந்தது.
“மாதவா… சாப்டியா டா?” பாக்கியா வந்தார். அம்மாவைப் பார்த்தவனின் சிந்தனை தடைப்பட்டது, நீண்ட பெருமூச்சொன்றை விட்டான்.
வாழ்க்கை ஓர் வினோதப் பயணம். பயணப்படும் பாதை எவருக்கும் தெரிவதில்லை. ஏதோ ஒன்று பின்னோடு துரத்தும்… இல்லையேல் ஏதோ ஒன்று முன்னே தெரியும்… அதனால் நம் ஓட்டம் தடைப்படுவதில்லை. ஓட காரணங்கள் இருக்கும் வரை ஓடிவிடும் மனம், ஓட காரணம் இல்லாமல் போகும் போது கண்கள் மூட துணிந்து விடுகிறது.