Skip to content
அத்தியாயம் 24
உரிமைகள் பலவிதம்! சிலரிடம் சட்டென்று அதிக உரிமை வந்து விடுகிறது. அதனால் அவர்களோடு பேசத் திக்கவோ திணறுவதோ இல்லை. சிலரிடம் உரிமை இருக்கும், ஆனால் பேச்சு வாராது.
“என்ன டி பண்ணிட்டு இருக்க இந்த இருட்டுல நின்னு?” பார்க்கும் காட்சியை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை மாதவனால்.
“…ண்…ணா,” ஒற்றை வார்த்தை வெளிவரத் திக்கியது நகுநாவிற்கு!
எந்த அண்ணனுக்குத் தான் சகிக்கும் ஒதுக்குப் புறத்தில் நின்று தங்கை புகைபிடிக்கப் பழகுவது? “நகுநா!?” அப்படி ஒரு கோபம் மாதவன் உச்சரிப்பில்.
“அவங்க தான் ண்ணா,” பெண் பயத்தில் உளறிக் கொட்டினாள்.
மாதவன் என்று தெரிந்து தான் வினோ நகுவோடு விளையாடினான். ஆனால் பெண் இப்படி அவனைக் கோர்த்து விடுவாள் என்று நினைத்தானில்லை.
“அவங்கன்னா? யாரு டி?” பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்பினான் அதன் இடுக்கின் வழியே.
“ண்ணா,” பெண்ணிற்குத் தவறு செய்து பழக்கமில்லை. பழகி இருந்தால் இருட்டில் அத்தானைத் தேடி வந்திருக்க மாட்டாள்.
கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி கீழே போட்டு நசுக்கும் வேகமே பெண்ணுக்குக் கிலி பரப்பியது.
“யாருடி அந்த கொழுப்பெடுத்தவன்?”
“நான் விரும்பறேன்னா. அதுதான்…”
பட்டார் என்று பின்னந்தலையில் ஒன்று விழுந்தது. நகுநாவின் கண்கள் குளமானது.
“வயசுப் பொண்ணாச்சேன்னு பாக்கறேன்… எனக்கு வர்ற கோபத்துக்கு! எந்த கழிசடை அவன்? சின்னப் பொண்ணுக்கு சிகரெட்டப் பழக்கறவன்? எவன் அவன்?” பல்லைக் கடித்தான் தமையன்.
“இல்ல ண்ணா. சும்மா விளையாட்டுக்குத் தான்…” பயத்தில் விசும்பினாள்.
“இது ஒரு விளையாட்டா? பொறுக்கி! யாரு அவன்னு நான் கேட்டுட்டு இருக்கேன்! நீ வாயத் திறக்கப் போறியா இல்ல என் கோவத்த கிளறிட்டே இருக்கப் போறியா?” இப்படி எல்லாம் கூட அண்ணனுக்குக் கோபம் வருமா? இன்று தான் பார்க்கிறாள்! தங்கை என்றால் பாசமும் வரும் கோபமும் வரும் பெண்ணே!
“அத்தான்! அத்தான் ண்ணா… ப்ளீஸ் ண்ணா அவங்கள ஒண்ணும் சொல்லாத…”
ஒரு நிமிட அமைதி. “எந்த அத்தான்?” புருவம் வளைந்து நெளிந்தது.
“வினோ த்தான்!”
ஒரு ஓரத்தில் நிம்மதி! இருந்தும் அவனிடம் கேட்க வேண்டும். இது விளையாட்டா இல்லை உண்மையிலுமே காதலா என்று.
“அவன் சொன்னானா உன்ன விரும்பறதா?”
“ம்ம்” மண்டை படு வேகமாக ஆடியது.
“அவன் ஊருக்கு வந்தே மூணு நாள் தான் ஆகுது. நீ எப்போ பார்த்த?”
“நிச்சயம் போதே சொல்லிட்டாங்க!” அழகாக ஒப்பித்தாள்.
“ஓ…”
“ண்ணா…”
“ம்ம்?”
“அம்மாட்ட மாட்டி விடப் போறியா?”
சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஏன் சொன்னா என்ன?”
“ண்ணா..? அன்னைக்கு, ‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வீட்டுல கேக்கவா’ன்னு கேட்டாங்க. அப்புறம் இன்னைக்கு தான் பேசினாங்க. நீ அவங்கட்ட கேளு. அம்மாட்ட வேண்டாம் ண்ணா…”
“இவ்வளவு பயத்த வச்சுகிட்டு இது உனக்குத் தேவையா? போடி.. நேரா ரூமுக்கு போ! நீ இங்க சுத்தறது சித்திக்கு தெரியணும், கால உடச்சு கையில குடுத்துடுவாங்க”
“ண்ணா..”
“உன்ன அவனோட பாத்தேன்… ஜாக்கறத!”
“நல்லவர்ண்ணா. நானும் அவர விரும்பறேன் ண்ணா”
“தெரியும். அதனால தான் ரெண்டு பேரையும் சும்மா விடுறேன். இது வாழ்க்கை, விளையாட்டில்ல புரியுதா? அவன்ட்ட நான் பேசறேன். அவன் உண்மையிலுமே உன்ன கல்யாணம் பண்ண விரும்பினா நானே வீட்டுல பேசி முடிக்கிறேன். அதுக்கு முன்ன அலர் கல்யாணம் முடியட்டும். அதுவரைக்கும் இந்த மாதிரி திருட்டுத்தனம் பண்ணாம ஒழுங்கு மரியாதையா இரு. புரியுதா?”
“ம்ம்… அம்மாட்ட சொல்ல மாட்டியே?”
“நீ ஒழுங்கு மரியாதையா போய்டு. இல்ல இப்போவே சொல்லிடுவேன்.”
பெண் ஓட்டம் பிடித்தாள். ஆனால் அண்ணன் பேசியதெல்லாம் காதில் விழுந்தாலும் புத்தியில் ஏறியதாகத் தெரியவில்லை. ஏறியிருந்தால், அறைக்கு சென்றதும் முதல் வேலையாக வினோவிற்கு அண்ணனிடம் ஒப்பித்ததை தெரிவித்திருக்க மாட்டாளே!
அர்ச்சனா வெட்ஸ் சுரேந்தர்:
மணமேடையில் மாப்பிள்ளை மட்டுமே அமர்ந்திருந்தார், மந்திரத்தை ஐயரோடு கூறிக்கொண்டு. பெண் புடவை மாற்றச் சென்றிருந்தாள். எப்பொழுதும் போல் வசந்தியும் நகுநாவும் அர்ச்சனாவோடு. அண்ணன் கண்களில் தென்படாத போது நகுவின் விழிகள் வினோத்தைத் தேடின. அவன் அவளைப் பார்க்கும் வேளை மட்டும் மறக்காமல் முறைத்தாள்.
வரவேற்பில் அம்பிகாவின் சொந்தத்திலிருந்த இரண்டு பெண்களோடு அலர்விழியும் நின்றிருந்தாள். அங்கு வந்த அண்ணனைக் கண்டவள், “ண்ணா, இங்க வாயேன்” என்று மாதவனை அழைத்தாள்.
“என்ன அலர்…” வந்து வரவேற்பு மேசை முன் நின்றவனின் சட்டையின் முகுதுப் பகுதியைத் தளிர் கரம் ஒன்று இழுத்தது.
“அலர் இங்க வாயேன்” சத்தம் கேட்ட திசை நோக்கி, “நீ போண்ணா, அப்புறம் பேசறேன்.” என்று அலர்விழி சென்றுவிட, மாதவன் மெல்லத் திரும்பிப் பார்த்தான். குட்டி தேவதை ஒன்று பொக்கை வாய் காட்டி சிரித்தது. தேவதையே தான்.. அம்மாவின் பளிங்கு தோளில் ஜொள்ளை ஊற்றிக் கொண்டு ஐந்து மாதமே ஆன புத்தம் புது இளம் சிவப்பு ரோஜாவாய், குட்டி தேவதை. ஒற்றைக் கை முஷ்டி வாய்க்குள் போய் வர, மற்றது காற்றில் அலைந்தது… எதிரில் இருப்பவனைத் தொட.
யாருக்கு ஆசை வராது அந்த பட்டு ரோஜாவைப் பார்த்து? கை நீட்டினான் மாதவன். விரலைப் பிடித்துக் கொண்டாள் குழந்தை. ஏதோ அவனுக்குள் ஒரு தாக்கம். விரலை விட்டுக் கொடுத்தான்… பட்டென்று இழுத்து வாயிலிட்டு சூப்பவும் இனம் தெரியாத உணர்வு. சிரித்தாள் குட்டி ரோஜா. அவன் விரல் வழி எச்சில் பாய்ந்தது. “கை அழுக்கு டா தங்கம்,” என்று மெல்ல உருவ, அந்த குட்டி செவ்விதழ் பிதுங்க ஆரம்பித்தது.
அதற்குள் அவனுக்கு முதுகைக் காட்டி நின்றவள் திரும்பினாள். குழந்தை ஏன் குட்டி தேவதையாகத் தெரிந்தாள் என்பது புரிந்தது. தாயை உரித்து வைத்திருந்தாள் மகள்.
“அபிகேல்?” வாடாமல்லி நிறப் பட்டில், வாடா அழகோடு மிளிர்ந்தவளைக் கண்டதும் அலர்விழியின் வாய் முணுமுணுத்தது.
“ஹாய்… அலர்விலி…” வெண்முத்துகள் பளிச்சிட அழகாய் சிரித்தாள் பெண்.
“ப்ளசன்ட் சர்ப்ரைஸ். பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா நீங்க?”
“டோன்ட் நோ…” உதடு பிதுக்கினாள் அபி.
அவர்கள் இரண்டு வார்த்தைகள் பேசிக் கொள்ளும் முன், “வா மா அபி, உள்ள போலாம்,” என்றார் கூட்டி வந்த பெண்மணி.
“ஹாய் பாப்பு குட்டி…” குழந்தைக்கு மாதவன் மட்டும் தான் கண்களில் தெரிந்தான் போலும்! அலர்விழியின் அழைப்பைக் காதில் வாங்கினாள் இல்லை.
“நீங்க உள்ள போய் உக்காருங்க, கொஞ்ச நேரத்தில வரேன்,” என்று அலர்விழி அபிகேலை அனுப்பி வைத்தாள்.
அம்மா எந்தப் பக்கம் திரும்பினாலும் ரோஜாக் குட்டியின் முகம் மாதவன் பக்கமே திரும்பியது. அபி நடந்து போக, மாதவன் பார்வை முழுவதும் நீல விழியோடு இவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த பௌர்ணமி நிலா முகத்தின் மேல் தான்.
“யாரு அலர் அது? வெள்ளைக்காரி மாதிரி இருக்கா? உனக்கு எப்டி பழக்கம்?”
மனோவைப் பற்றி இன்னும் அண்ணனிடம் கூறவில்லையே… என்னவென்று கூறுவாள்? “ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு ண்ணா…” எனவும் அதற்கு மேல் மாதவன் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
மருத்துவன் வந்தான். நிச்சயத்தன்று பார்த்தது. அதன் பின் இன்று தான் பார்க்கிறாள். கண்ணிற்குத் தெரியாத சிறு சிறு வெள்ளை நிறக் கோடுகள் நிறைந்த ஆகாய நீல லினன் சட்டை அவன் நிறத்தை இன்னும் கூட்டிக் காட்டியதா இல்லை அவன் தான் மிளிர்கின்றானா? முப்பதை நெருங்க நெருங்க ஆண்களுக்கு வனப்பு கூடும் போலும்! வாட்ட சாட்டமாக ஆறடிக்கு ஓங்கி உயர்ந்து ஆளை அசத்தும் தோற்றம்.
அவள் விரிந்த புன்னகையளித்து பன்னீர் தெளிக்க, மெலிதான புன்னகையோடு தலையசைத்து உள்ளே சென்றான்.
சற்று நேரத்திற்கெல்லாம் மணப்பெண் மேடைக்கு வர, வரவேற்பில் நின்ற பெண்களும் உள்ளே சென்று விட்டனர்.
தேன் நிறத்தாள் தேன் நிறப் பட்டில் சுற்றி கொண்டிருக்க, ஒருவன் பார்வை அலர்விழியை அவள் அனுமதியில்லாமலே மேய்ந்தது.
“ஹலோ மாமா.. எப்படி இருக்கீங்க,” என்று அவன் அமர்ந்ததோ தியாகராஜன் அருகில்.
“எப்படி அத்த இருக்கீங்க?” அளந்து பேசினான். ஆனால் கொள்ளையடித்தான் அவன் இயல்பான நடத்தையால். அத்தை-மாமாவிற்கு இவனைப் பிடிக்காமல் போனால் அவர்களுக்குக் கண்ணில்லை என்று அர்த்தம்.
வயது வித்தியாசம் இல்லாமல் பலர் அவனைத் தேடி வந்து பேச, எழுந்து நின்று கைக்குலுக்கினான். அம்பிகா பிரவீனைப் பற்றி அதிகம் பேசியிருந்தார். அன்று மனதில் பதியாதது இன்று காதில் எதிரொலித்தது.
“ரொம்ப திறமசாலி டாக்டராம். ஒழுக்கமான பையனாம். கெட்ட பழக்கம் ஒண்ணும் இல்ல போல. ரொம்ப தங்கமான பிள்ள, சத்தமா கூட பேச மாட்டானாம்…” சௌந்தர்யாவிற்கு தெரிந்ததெல்லாம் கணவன் காதிற்கு இடம் பெயர்ந்தது.
“கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குறாங்க போல. டாக்டர் பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம். தூரத்து சொந்தமா இருந்தா பெட்டரா இருக்கும்ன்னு யோசிக்கிறாராம், அம்பிகா அண்ணி சொன்னாங்க. அலர்விழிக்கு பாக்கலாம்ன்னா சொல்லுங்கன்னு சொன்னாங்க.” கணவன் காதைக் கடித்தார்.
“கை நிறைய சம்பாதிக்கிறான், நல்ல பிள்ளை இல்ல… நம்ம பாப்பாக்கு கேட்டுப் பாப்போமாங்க?”
“என்ன அவசரம் சௌந்தர்யா? படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் முடியல, சின்னப் பொண்ணு அதுக்குள்ள கல்யாணமா? போதாதுக்கு அவளே அமெரிக்கா போற வாய்ப்பு கிடைக்குற மாதிரி இருக்குன்னு குஷில சுத்திட்டு இருக்கா. இப்போ கல்யாணம்ன்னு ஆரம்பிச்சா ஒத்துப்பாளா? போகட்டும் ஒரு வருஷம்”
error: Content is protected !!