Skip to content
அத்தியாயம் 23
அர்ச்சனாவின் திருமண வரவேற்பிற்கு வீட்டுப் பெண்கள் எல்லாம் அழகுப் பதுமைகளாய் உலாவர, மணமகளோடு நின்றிருந்த நகுநாவின் கண்களோ கட்டிளம் காளை ஒருவன் மேல்.
‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்ற கதை போல் சும்மா இருந்த பெண் மனதில் சலனம் ஏற்படுத்தியவனுக்கு அது நினைவில் இருந்ததா என்றே தெரியவில்லை. இன்று வரை வினோத் நகுநாவோடு பேச முற்படவில்லை. நேற்று வரை பெண் அதைப் பெரிதாய் நினைக்கவில்லை என்றாலும் இன்று மனம் அவன் பார்வைக்காக ஏங்கித் தவித்தது. மண்டபத்தைத் தான் இருவரும் சுற்றி சுற்றி வருகின்றனர். ஆனால் அவன் பார்வை அவள் மேல் ஏனோ விழவில்லை. நிற்க நேரமில்லாமல் சுழன்று கொண்டிருப்பவனுக்குக் காதலிக்க நேரமில்லை.
திருமண வரவேற்பு ஆரம்பமாகியது… நகுநாவும் வசுவும் அர்ச்சனாவிற்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்தனர், கிடைக்கும் பரிசுப் பொருட்களை எல்லாம் அவளிடமிருந்து வாங்கி பின்னால் அடுக்கிக் கொண்டு.
அவ்வப்போது வினோத் நண்பர்களுடனோ, சொந்தங்களுடனோ மேடை வந்து போனான். தங்கையின் பின்னாலிருந்து ஒரு ஜீவன் தன்னைப் பார்ப்பது கூடவா தெரியாது? திரும்பினான் இல்லை. பார்த்துக் கொண்டிருந்த நகுநா கண்களில் தீப்பொறி!
மணி பதினொன்று நெருங்கவும் மாதவனும் வினோத்தும் மறுநாள் காலை திருமணத்திற்காக மேடை அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஏவிக் கொண்டிருக்க வாலிபப் பெண்களின் அரட்டை நின்றபாடில்லை. லண்டனிலிருந்து திருமணத்திற்காக வந்த மருத்துவன் அவசர வேலையாக தில்லி சென்றிருக்க, இன்னும் வந்து சேரவில்லை. காலை திருமணத்திற்கு வந்துவிடுவதாகத் தகவல்.
அம்பிகா, “மா எல்லாரும் போய் நேரத்துக்குப் படுங்க… காலைல எழுந்துக்கணும். வசு இந்தப் பசங்களுக்கு டீ காபி ஏதாவது வேணுமான்னு பார்த்துட்டு நீயும் போய் படு,” என்று கிளப்பி விட்டார்.
கூட்டமும் கலைய ஆரம்பித்தது. ஒருவர் கவனத்தையும் கவராமல் வினோத்தும் மெல்ல நழுவினான். அவனையே நோட்டம் விட்டுக் கொண்டு ஒரு ஜீவன் இருப்பதை கவனியாது போனான்.
அனைவரும் அவரவருக்கான அறையை நோக்கிச் செல்ல நகுநா அந்த இருட்டுக்குள் நுழைந்தாள். ஆள் அரவமில்லா இருட்டில் எரிந்து கொண்டிருந்த கங்கை நோக்கி பெண் குருட்டு நம்பிக்கையில் சென்றாள். நம்பிக்கை வீண் போகவில்லை. வினோ புகை பிடித்துக் கொண்டிருந்தான்.
“க்க்கும்…” தொண்டையை கனைத்தாள்.
அந்த இருளில் திடீர் சத்தம். வினோத் அரண்டு போனான். சட்டென்று சிகரெட்டை முதுகுக்குப் பின் மறைத்தான். யாரென்று பார்க்க நகுநா நின்றிருந்தாள். அவளோடு ஒருவரும் இல்லை.
“ஏய்… இங்க என்ன டி தனியா பண்ணிட்டு இருக்க?” பிடிபட்ட திருடனாய் அவளிடமே எகிறினான்.
“ஓ… நீங்களா? நான் என்னோட லவ்வர தேடி வந்தேன். அவர் இங்க தானே வரச் சொன்னார்.”
ஒரு வினாடி அவளைப் பார்க்க, அவள் அவனை எல்லாம் கவனிப்பது போல் தெரியவில்லை. விழிகள் இருட்டில் யாரையோ தேடின.
“நான் இங்க இருக்கும் போது அது யாரு?” பார்வை கூர்மையானது.
“நீங்க யாரு த்தான்?” சந்தேகக் குரலில் அவள் வினவ,
நொடியில் குழம்பிப் போனான். “என்ன டி நக்கலா? என்னைத் தானே லவ் பண்றதா சொன்ன?”
“ஓ அப்படியா? நினைவில்லியே த்தான்.” உதடு பிதுக்கி தோளைக் குலுக்கினாள்.
“என்னது ஞாபகமில்லையா?”
“ஷாக்க குறைங்க அத்தான்! நீங்க விளையாட்டுக்குச் சொன்னதெல்லாம் பிடிச்சுகிட்டு சுத்த முடியுமா?” சிரித்தவள், “என் லவர் என்னைத் தேடப் போறார். நான் போகணும் வழி விடுங்க,” வெறுப்பேற்றினாள்.
“எவன் டி அது இருட்டுல உன்ன வரச் சொன்னவன்? வரச் சொல்லு அவன முகரையப் பேக்கறேன்.” உண்மையிலுமே வினோவிற்கு கோபம் வர ஆரம்பித்தது.
“ஏன் கோபப்படறீங்க? அவருக்கு உரிமை இருக்கு. வரச் சொன்னார். நான் அவர பாக்க போறேன். ஏன் கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க?”
“அடிச்சு பல்ல பேக்க போறேன் பாரு. ஏதோ நாய் கூப்பிட்டுச்சாம், இவளும் தேடி வந்தாளாம். எங்க டி அவன்? போடி உள்ள.” சத்தமில்லாமல் கத்த ஆரம்பித்தான்.
“அவர தப்பா பேசாதீங்க த்தான்! எங்க லவ் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”
“ஓ தெய்வீகக் காதலோ?” கனல் பறந்தது.
“பின்ன லவ்ல சொல்லிட்டு அவர் காணாமலா போனார்? நாங்க லவர்ஸ் ரூல்ஸ் ஃபாலோ பண்ணி எங்க காதல நெய் ஊத்தி வளர்க்குறோம்.”
“பார்த்து கொஞ்சமா நெய்ய ஊத்து. யாராவாது பத்த வச்சிடப் போறாங்க. ஆமா அது என்ன டி லவர்ஸ் ரூல்ஸ்?”
“அதுதானே, உங்களுக்கு எப்டி தெரியும்? உங்களுக்குத் தான் லவ்வரே இல்லியே பாவம்…”
சட்டென்று எல்லாம் நினைவில் வந்தது. ‘ஃபோன் பேசாதத சொல்லிக் காட்டறாளாமா?’ “எல்லாம் என் நேரம், வாய் பேசாத புள்ளப்பூச்சிக்கு எல்லாம் என் கிட்ட வாய் நீளுது! ம்ம்ம்…”
“டெய்லி பேசணும்… பாக்க ஆசைப் படணும்… அவங்க தான் லவ்வர்ஸ். காதலிக்கிறேன்னு சும்மா இருக்க பொண்ணுட்ட சொல்லிட்டு தலை மறைவாப் போக நினைக்கிறவங்க எல்லாம் வாய மூடிட்டு போயிருக்கணும்.”
“ஆஹா… இது தான் என் தங்கத்துக்குக் கோபமா? பட்டுக் குட்டி என்னைத் தான் பாக்க வந்தீங்களா?”
“நான் எதுக்கு உங்கட்ட கோபப்படணும்… நீங்க யாரு எனக்கு? உங்கள எதுக்கு நான் பாக்கணும்? போங்க, நாளைக்கே அடுத்த ஃப்ளைட் பிடிச்சு காணாமப் போங்க… யாரு கேட்டா? நான் என் லவ்வரோட ரொமான்ஸ் பண்ணப் போறேன்.”
“ரொமான்ஸ்சா? காலேஜ் வாசல்ல கால் வச்சதுக்கே ரொமான்ஸ் கேக்குதா உனக்கு? அடிங்…”
“ஹலோ… செக்கண்ட் இயராக்கும்! ஆமா, ஏன் எரியுது உங்களுக்கு? தானும் படுக்கிறது இல்ல… தள்ளியும் படுக்கிறது இல்ல! தள்ளுங்க அத்தான் தள்ளுங்க, காத்து வரட்டும்! நான் போகணும்.”
வயிறு குலுங்க சிரித்தான். “நல்லாப் பேசற டி நீ! ஆடியேய் என்னை உருக்குற வெண்ணகட்டி, நீ குட்டிப் பொண்ணு டி! உன்ன கொஞ்சிட்டு இருந்தா, ரெண்டே நாள்ல உன் முகத்தப் பாத்து உங்க அம்மா கண்டு பிடிச்சு, உனக்கு முதுகுல டின் கட்ட மாட்டாங்களா?”
“டின்னு கட்டினா… நீங்க வந்து தாலி கட்ட மாட்டீங்களா?”
“மேடத்துக்கு 20 வயசு ஆகல நினைவிருக்கா?”
“அப்புறம் எதுக்கு என்ட்ட வந்து சொன்னீங்களாம்…”
“பிடிச்சுது. பிடிச்சதும் சொன்னேன். அத ஒரு ஓரத்துல வச்சுக்கோ, கல்யாணம் பேசும் போது உனக்கு மாப்பிள்ளையா வரேன்னு தானே சொன்னேன்!”
“ஓ… இடம் பிடிக்கிறீங்களோ? சரி போகட்டும். நீங்க மாப்பிள்ளையா வாங்க! நான் வாக்கு கொடுத்தவன அதுவரைக்கும் லவ் பண்ணிக்கிறேன். தள்ளுங்க!”
“அம்மாடி… நீ வாயில்லா பூச்சின்னு நினைச்சு ஏமாந்துட்டேனா? வாயக் குறைடி என் அத்த பெத்த ரத்தினமே.”
“ப்ச்! போங்க த்தான்… உங்களுக்கு என் மேல விருப்பமில்லன்னா எதுக்கு வந்து ‘லவ் பண்றேன்’ன்னு சும்மா இருந்த என் மனச கலைச்சீங்க?” கடுப்பாக வந்தது பெண்ணிற்கு.
“லவ் தான் டி உன்மேல. எக்கசக்கமா… உன் மேல் ஆசை இருக்கு. உன் மனச கலைக்க வேண்டாம்ன்னு தான் பேசல போதுமா? புது போன் எல்லாம் வாங்கிட்ட போல… இனி கண்டிப்பா தினமும் பேசறேன்.”
“தேவை இல்ல போங்க, நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு! நான் உங்கள டிவோர்ஸ் பண்றேன்.” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
“ஆஹா… அதுக்கு கல்யாணம் ஆக வேண்டாமா?”
அவள் முறைக்க, “எதுக்கு இவ்வளவு பெரிய முடிவு? உன் பேச்செல்லாம் கேக்கறேன், இப்படி எல்லாம் யோசிக்காத டி என் வெல்லக் கட்டி” என்று தழைந்தான்.
அவன் என்ன கூறியும் சமாதானம் ஆக மாட்டேன் என்று அவள் தைய தக்க என்று கதகளி ஆட… “வாய நீயா மூடுறியா இல்ல நானா மூடட்டுமா?” பெண்ணின் இதழில் அவன் பார்வை போக, நகுநா விழி விரித்தாள். “…த்தான்?”
“பள பளன்னு பலாச் சுளை மாதிரி இருக்கு, நீ வேற ரொமான்ஸ் கேட்ட… எதுக்கு உன் ஆசையைக் கெடுப்பானேன்! நீ ரெடினா வாயத் திற, ரொமான்ஸ்ஸ ஆரம்பிப்போம்.”
அதிர்ச்சி குறையாமல் பெண் மலைத்து நிற்க, “ஓய்! என்ன டி…” என்றவனுக்கு யாரோ வரும் அரவம் கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் ஆள் வருவது தெரிந்தது.
“அத்தான் லவ்ஸ் யூ பேபி, இப்போ சட்டுன்னு கண்ண மூடி மூச்ச உள்ள இழு பாப்போம்!”
“ம்ம்…”
“சீக்கிரம் டா பேபி”
ஏனென்று கேட்காமல் அவன் சொன்னதைச் செய்து, தான் இன்னும் குட்டி பெண் தான் என்பதை நிரூபித்தாள்!
அடுத்த பத்தாவது வினாடி…
தனித்து நின்றவளின் கையில் சிகரெட்டும்… வாயில் புகையும்…!
நுரையீரல் வெளி வந்து விழுமளவிற்கு இருமிக்கொண்டிருந்தவள் எதிரில் மாதவன்!
பாவி உன்னை நம்பினத்துக்கு!
error: Content is protected !!