குடும்பத்தில் இருவருமே அறிவாளியாகிப் போனால் இது ஒரு கஷ்டம் போலும். அவன் பேச, அவள் பதில் பேச எனச் சின்னதாக ஈகோ முளைத்தது.
நேர் காணலுக்கு அவன் உதவுவதால் தானே அவன் முடிவெடுக்கிறான் என்று தோன்றவும், “போதும் மனோ. என் கரியர நான் பாத்துக்கிறேன். உங்க படிப்ப பாருங்க.” என்று விட்டாள்.
அவன் கண்டு கொண்டதாகத் தோன்றவில்லை. “இது ரொம்ப நல்ல கம்பனி,” என்று அடுத்த நேர் காணலுக்கு அவன் சிரத்தை எடுத்து அவள் தற்குறிப்பை அவனே நிறுவனத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி அனுப்பித் தர, அவள் கோபம் இன்னும் அதிகமேயானது. ‘அது என்ன சொன்னால் புரியாதா?’ என்ற கோபம்.
இரண்டு மூன்று பக்கத்திற்கு வினாத் தாள் அனுப்பி, கேள்விகளுக்கு கோடிங்(coding) செய்யச் சொல்லவும், கோபம் உச்சத்தைத் தொட்டது. அதே கோபத்தோடு நேர்காணலில் அமர, முதல் சுற்றிலேயே அவள் தேர்ச்சி பெறவில்லை என்றனர்.
ஆனால் அப்படி ஒரு கோபத்தை எபியிடமிருந்த அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் அவனிடம் கூறும் முன்னமே அழைத்தவன், “ஏன் என்ன ஆச்சு?” என்று ஆரம்பித்து, என்ன மாதிரி கேள்வி, எங்கு தவறு நடந்தது என்று எல்லாவற்றையும் பொறுமையோடே கேட்டவன் பொறுமை பறந்திருந்தது அவள் பதிலைக் கேட்டு.
“வேணும்ன்னே தப்புத் தப்பா ப்ரோக்ராம் பண்ணுனியா…” என்று அவன் கேட்க… அவளும் ஏதோ கோவத்தில், “ஆமா, ட்ரெயினிங் தானே, தோத்தா என்ன… ஜெயிச்சா என்ன? தோல்வி தானே வெற்றிக்கு முதல் படி, அதுதான் முதல் படில ஏறிட்டேன்!” என்றாள் அசராமல்.
“என்ன டி? பேச்சு ஒரு மாதிரி போகுது?”
“கிடைச்சிருந்தா மட்டும்? எப்பிடியும் இது வேண்டாம்ன்னு தானே சொல்லப் போறீங்க?” என்றுவிட, பிடி பிடி எனப் பிடித்து விட்டான்.
“எனக்கு இருக்க வேலை எல்லாம் விட்டுட்டு உன் பின்னாடி தொங்கிட்டு இருக்கவே வேலை இல்லாத வெட்டி ஆஃபீஸர் னு நினைச்சியா? அந்தக் கம்பனியோட பேஸ்(base) கலிஃபோர்னியா! உனக்கு ஆன்சைட் வர சான்ஸ் அதிகம் இருந்துது. நல்ல கம்பனி கவனமாப் பண்ணுன்னு சொன்னேனா? பாத்து பாத்து செய்யவே உனக்கு மதிப்பு தெரியல.” என்று ஆரம்பித்தவன், “இவன் சொல்லி நான் ஏன் கேக்கணும்னு நினைச்சா சொல்லிடு… உன் வழிக்கே நான் வரல” என்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.
அவன் கூறியதில் உண்மையிருக்கத்தான் செய்தது. சிரத்தையோடு கலந்து கொண்டிருந்தால் கிடைத்திருக்கும். ஒத்துக் கொள்ள மனமில்லை. நிம்மதி தொலைந்தது. யார் மேல் கோபம்? எதற்கு இந்த கோபம்?
அடுத்து இரு வாரங்களாகியது இவளுக்குத் தகுந்த ஒரு நிறுவனத்தைக் கணினி மையத்தின் ‘வேலை வாய்ப்பு துரை’ கை காட்ட. அந்த இரு வாரங்களும் அதிக பேச்சில்லை இருவரிடமும், ஹாய் ஹலோ-வோடு நாட்கள் சென்றது. நான்கைந்து முறை அவன் பேச முயலவும், “கொஞ்சம் பிஸி மனோ…” என்று தள்ளி நிறுத்தினாள்.
“என்ன விழி… காதலிச்சா எப்பவும் கொஞ்சிட்டே இருக்கணுமா? உன் மேல் நான் காட்டுற அக்கறையும் காதல் தான் டி… கோபப்படாத விழி”. அவன் கொஞ்சலும் கெஞ்சலும் அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஹாய் ஹலோ நிரந்தரமானது. பித்தம் தெளிந்து வரட்டும் என்று அவனும் விட்டுவிட்டான்.
“ஒரு வாரத்துல இன்டர்வியூ” என்ற தகவல் அலர்விழியை எட்டியது. எபிக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவனிடமிருந்து மூச்சு பேச்சில்லை. எங்கோ ஒரு ஓரத்தில் வலித்தது. எபி திரும்பிப் பார்க்க மாட்டானோ? தொண்டைக் குழி கசந்தது.
‘அடுத்த வாரம் இன்டர்வியூ மனோ’ என்று இவள் கூறும் முன்னமே, “ஆல் தெ பெஸ்ட். நல்லா பண்ணு!” என்ற தகவலை அனுப்பி இருந்தான். அவ்வளவு தானா? அவன் பேச மாட்டானோ? அவன் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் மனம் மெல்ல ஏங்கியது. அன்று இரவு அழைத்தவள், “ஒரு வாரத்துல இன்டர்வியூ மனோ…” என்றாள் தயங்கி தயங்கி. அவனைக் காயப்படுத்தியது, இன்று அவன் தள்ளி செல்லவும், வலித்தது.
“ம்ம் கேள்விப்பட்டேன். பார்த்துப் பண்ணு. இந்த கம்பெனிக்கு தான் வெயிட்டிங். அவங்க ஹெட் ஆஃபீஸ் இங்க தான் ஜெர்ஸி சிட்டில இருக்கு. கண்டிப்பா ஆன்சைட் அனுப்புவாங்க. என் மேல இருக்க கோவத்த அதுல காட்டாத.
அவங்க ரெக்வயர்மென்ட்(requirement) என்ன… எதுக்கு ஆள் எடுக்குறாங்க… என்ன ஸ்கில் செட்(skill set) கேக்கறாங்க எல்லாம் பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி ரெஸ்யூமே-வ மாத்து. உன்ன இன்டர்வியூ பண்றதுல அவங்களுக்கு யூஸ் இருக்கான்னு உன் சிவி(CV) தான் சொல்லும். ஃபர்ஸ்ட் ரௌண்டே டீப்பா தான் இருக்கும். அடுத்து கோடிங் பண்ண சொல்லுவாங்க. அடுத்து டெக் லீட் கிட்ட இருக்கும்.. அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சு மேஞ்சிடுவானுங்க. கடைசி ரௌண்ட் ஹெச்.ஆர். அதுல சம்பளம் போனஸ் பத்தி பேசுவாங்க. ஒரு நாள் பூரா அங்க தான் இருக்க மாதிரி வரும். பார்த்து செய். நீ அட்டென்ட் பண்ணின மத்த மூண விட இது கஷ்டம்…”
அவன் பேசிக் கொண்டே போக, அவன் தனக்காக மெனக்கெடுவது புரிந்தது. தன்னை விட படிப்பதற்கும், முடிப்பதற்கும் அவனுக்கு வேலை குவிந்து கிடக்க… இது, இந்த ‘மெனக்கெடல்’ அவள் மீது கொண்ட காதலால் தானே! மனம் குறுகுறுத்தது. காதல் ஒன்றும் கடினமான விஷயமில்லை. யார் வேண்டுமென்றாலும் காதலிக்கலாம். ஆனால் இந்த அக்கறை? அது தானே காதலின் அளவைக் காட்டுகிறது. பெண் உருகிப் போனாள்.
இந்த நிறுவனம் அதன் தேவையாக ‘மோபைல் கேமிங் ஆப்’பை முன் வைத்திருக்க, அதற்கு தனியே தயார் ஆக வேண்டும்! “மனோ…” என்று அவனிடம் தான் போய் நின்றாள்.
“இது தானே நீ கண்ட கனவு? நல்ல கம்பனில நல்ல பொசிஷன்ல ஆன்சைட் போகணும்ன்னு? உன் திறமைக்கு ஏத்த கம்பெனி. உன்னோட வளர்ச்சியும் அங்க அதிகம் இருக்கும். உன்ன நான் டாமினேட் பண்ண நினைக்கல. நான் சொல்றத நீ கேக்கணும்ன்னு நான் நினைக்கல. உன் கனவ கலையவிடாம அத நீ பிடிக்க ஒரு ஏணியா இருக்க நினைச்சேன், அவ்வளவு தான்! நான் ரொம்ப மோசமான மேல் சோவ்வனிஸ்ட்(male chauvinist) எல்லாம் இல்ல விழி!”
“என்ட்ட சொல்லி இருந்திருக்கலாமே மனோ. எல்லாரும் கேக்கும் போது என்ட்ட பதில் இல்ல மனோ. அது தான் கோபம்.”
“முன்னமே வெறும் எக்ஸ்பீரியன்ஸ்க்குன்னு சொன்னா நீ அதுல முழு கவனமும் போட மாட்டன்னு தான் சொல்லல. இதுல வேலை வாங்க ட்ரை பண்ணு. நல்லாப் பண்ணு. ஏதாவது வேணும்னா அங்க விஜய்ட்ட கேளு சொல்லுவான். ஆல் தெ பெஸ்ட் விழி,” என்று வைத்து விட்டான். பேசியவன் குரலும் சரி இல்லை. அவன் முகமும் சரியில்லை.
கைப்பேசியில் தொடர்பு துண்டித்திருந்தது. இப்படித் தள்ளி நின்றால் கைப்பேசி தொடர்பு மட்டுமல்ல தங்களின் தொடர்புக்கும் அதுதான் நிலை என்று தோன்றியது.
ஏனோ அவனில்லாமல் தனித்து நிற்கப் பிடிக்க வில்லை. முடியாதென்றில்லை. கண்டிப்பாக அவளால் முடியும்! ஆனால் பிடிக்கவில்லை. இறுமாப்பை யாரிடம் காட்ட வேண்டுமோ அவரிடம் காட்டினால் போதும். வாழ்க்கைத் துணையிடம் காட்டி எதை சாதிக்க? இருவர் நிம்மதியும் போவது தான் மிச்சம்!
அழைத்தாள். “சாரி மனோ,” என்றாள். “நீ ரொம்ப ஸ்மார்ட் விழி. ஒரு புஷ் குடுத்தா நல்லா வருவன்னு நினைச்சேன். நீ என்னைப் புரிஞ்சுக்கவே இல்ல போடி” என்றான், ஆதங்கமாய்.
“ஆமா மனோ. புரிஞ்சுக்கல. எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க. புரிஞ்சுப்பேன். நான் கோபப்பட்டா எப்படியோ போன்னு விட்டுடுவீங்களா?” இதுவும் சண்டை தான். ஆனால் உரிமை சண்டை. நான் தள்ளிப் போக மாட்டேன் என்ற காதல் சண்டை.
“நீங்க சிவி(CV) ரெடி பண்ணித் தாங்க. அப்போ தான் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணுவேன்,” என்று பிடிவாதம் பிடித்து, வேலை வாங்கி வேலையும் வாங்கி விட்டிருந்தாள்.
அதன்பின் ஆயிரம் ஆயிரம் ‘லவ் யூ’க்களும்! கொஞ்சல்களும்! மிஞ்சல்களும்! அனைத்தும் அவர்களுக்கு மட்டுமேயானது.
இருவருக்கும் வாழ்க்கை சரியான பாதையில் செல்ல, முன் போல் விழியின் முகத்தில் விழித்து, அவள் குரல் கேட்டபின் கண் அயர்ந்தான். வாழ்க்கை இருவருக்குமே தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்தது. மாதங்கள் கழித்து அர்ச்சனா திருமணம் என்றதும் தான் எபிக்கு அன்று இரவு தூக்கம் பிடிக்கவில்லை!
“ஏன் ஒரு மாசமா என்னைப் பாக்க வரல மனோ?” எத்தனை ஏக்கமாக அன்று வீட்டில் வைத்துக் கேட்டாள். அவன் காரணங்களாய் நினைத்த காரணங்களைக் கூற, எத்தனை கேவலமாகப் பார்த்து வைத்தாள்.
“மக்கு மனோ நீங்க! உங்க மேல நான் எவ்வளவு ஆசையா இருக்கேன்னு உங்களுக்கே தெரியும். ஒரு மோதிரத்த பாத்து சிரிச்சா, அதப் போய்… உங்கள என்ன பண்ணினாத் தகும்?” என்றபோது உண்மையிலுமே கேவலமாக தான் இருந்தது.
“அண்ணா தான் ஃபோன குடுத்தான். கையில ஃபோன் கிடைக்கும் போது உங்களுக்கு மிட்நைட். உங்களுக்கு விடியட்டும்ன்னு காத்திருந்தேன். எங்கேஜ்மென்ட் என் கசினுக்கு! மாப்பிள்ள, பொண்ணு ரெண்டு பேருமே சொந்தம். அதுதான் நாங்க எல்லாரும் ஷாப்பிங் போனோம். எனக்கு உங்ககிட்ட இருந்து கால் வந்ததே தெரியாது. அன்னைக்கு நைட்ல இருந்து எத்தன நாள்… எத்தன கால் போட்டேன். நீங்க பேசவே இல்ல. இப்போ என்னை சொல்லுங்க” என்றபோது தான் முடிவெடுத்தனர், இனி எதுவென்றாலும் நேரில் பேசி விஷயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று.
நாட்கள் நகர, அர்ச்சனா திருமண நாளும் நெருங்கியது. ஒரே விழா! ஆனால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மனநிலை.