22.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 22 

 

லகளவில் தரமான பல்கலைகழங்களில் முதன்மையில் இருக்கும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய இரண்டுமே மசாசூட்ஸ் மாநிலத்தில் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு படித்து பட்டம் பெறுவதென்பது பல படிப்பாளிகளின் கனவு.  

கனவின் வாயிலை அடைந்த துடிப்போடே பாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து வெளிவந்தான் எபி. முப்பது மணி நேரம் முன் அவன் இருந்த மனநிலை என்ன தற்போதைய நிலை என்ன? எந்தப் படிப்புக்கு காதல் முட்டுக் கட்டையாகிப் போகும் என்று நினைத்தானோ அதே படிப்பை முழு நிம்மதியோடே ஆரம்பிக்க அதே காதல் வகை செய்த மாயம் தான் என்ன? 

கண்ணீர் சிந்தி, கட்டி அணைத்து, உச்சி முகர்ந்து, ‘மிஸ் மீ’ என்ற கேள்வியின் மூலம் மனதை உணர்த்திய ஒரே காதலன் இவனாகத்தான் இருக்கும். விந்தை என்னவென்றால், அந்த மிஸ் மீ-கான முழு அர்த்தமும், அதில் அடங்கியிருந்த கட்டுக் கடங்காமல் கரைபுரண்ட காதலும், கேட்டவளுக்கு விளங்கியது தான்!

“மனோ…” என்று அவன் பெயரை உரைத்து தன் பக்கக் காதலை உணர்த்த அவன் ‘விழி’யால் மட்டும் தான் முடியும். 

“ம்மா… பாஸ்போர்ட் ரூம்ல விட்டுட்டு வந்துட்டேன்… டூ மினிட்ஸ் ப்பா…” என்று வாகனம் முன் கிளம்பக் காத்திருந்தவர்களிடம் கள்ளம் உரைத்து, தனித்திருந்த காதலியை பல வருடக் காதலன் போல் காதல் உரைத்தே அன்றே, ஆரத் தழுவி, முகம் முழுவதும் தடம் பதித்து, உதட்டில் இளைப்பாறியதெல்லாம் தனி சுகம் தான். 

“ரெண்டே ரெண்டு வருஷம்… இதே வீட்டுக்கு சொந்தக்காரியா எல்லா உரிமையோட கூட்டிட்டு வந்திடுவேன். அது வரைக்கும் நீ அழவே கூடாது. அதுக்கப்புறம் நீ அழாம நான் பாத்துப்பேன்,” அவனை முற்றிலும் ஆட்கொண்ட பனித்த விழிகளின் இமைகளில் இதழ் பதித்தவனுக்கு விட்டு வர மனமே இல்லை தான், இருந்தும் வந்துவிட்டான். காத்திருக்கும் சுகத்தை அடுத்த இரண்டு வருஷங்களில் ருசித்துவிடும் நோக்கம் இருவருக்கும். 

“காத்திட்டிருப்பேன்…” என்றவளுக்கு அவனோடிருந்த நேரம் போதவில்லை. மூன்று மணி நேரம் மனோவின் மார்போடு சாய்ந்து, அவன் கரங்களின் கதகதப்பில் கதை பேசியது இருவருக்குமே போதவில்லை. 

அன்றே… இரண்டு வருடங்கள் முன்பு பெங்களூரிலிருந்து அவளைக் காண ஓடி வந்த அன்றே காதலை வெளிப்படுத்தி இருந்திருக்கலாம் என்று நூறாவது முறையாக நினைத்து விட்டான். 

“ஒரு மாசத்த இப்பிடி வேஸ்ட் பண்ணிட்டேனே…” நிலவு ஒளியில் மார்போடு காதலியை அணைத்துக் கொண்டு தன் அறையின் மேல்மாடத்தில் நிற்பதெல்லாம் கிடைப்பதற்கரிய போதை. போதை தந்த கிறக்கத்தில் பிதற்றியதெல்லாம் அவள் கேட்க காத்துக் கிடந்த கவிதை. 

நிலவின் ஒளியில் மேல் மாடத்தில் அரங்கியேறிய கவிதை மூன்று மணி நேரம் தொடர்ந்தது. அந்த மூன்று மணி நேரத்தில் பெண்ணவள் விரல் நுனிக்கு அவன் கொடுத்த குட்டி குட்டி முத்தங்களை நினைத்தவனுக்கு இன்றும் உடல் சிலிர்த்தது. 

“விழி… காதல் சொல்லியிருகேனே, கிஃப்ட் ஒண்ணும் இல்லயா?” என்று கேட்டு மண்டையில் வாங்கிய கொட்டு சிரிப்பை வரவழைத்தது.

“மூஞ்சி! மூணு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டு, வந்துட்டார் கிஃப்ட் கேக்க…” என்று பெண் காரித் துப்பவில்லை!

“ஹாய் எபெனேசர்… எப்பிடி இருக்கீங்க? ஜர்னி எப்பிடி இருந்துது?” சத்தம் கேட்க திரும்பியவனின் பார்வையில் அருண். அருண், ஹிம்ரிஷின் தமக்கையின் தோழியின் தோழன். பல வருடமாக அருண் இங்கு தான் வசித்து வருகிறான். சில நாட்கள் அருணோடு இருந்து, கல்லூரிக்கு அருகில் இடம் பார்த்தபின் நகர்ந்து விடுவது தற்போதைய திட்டம்.

 முகமன் முடிந்தது. பேச்சுகளோடு நேரம் கடந்தது. “என் ஃப்ரெண்ட் புவனா ஹாவர்ட்ல இப்போ தான் படிச்சு முடிச்சா. அவ இலக்கியான்னு ஒரு பொண்ணோட அப்பார்மென்ட் ஷேர் பண்ணினா. இலக்கியா கேம்பிரிட்ஜ்-ல தங்கி எம்.ஐ.டி-ல படிக்கிறா. 18 மந்த் கோர்ஸ். இன்னும் ஆறு மாசத்துல முடிச்சுடுவா. ரெண்டு பெட்ரூம் சர்விஸ்-அப்பார்ட்மென்ட்ல இருக்கா. நல்ல பொண்ணு அவளால உங்களுக்கு பிரச்சனை வராது. பேசிப் பாக்கறீங்களா?”

முதலில் யோசித்தான். இருக்கும் இரண்டு வாரங்களில் வேறு இடம் அமையவில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். கல்லூரிக்குச் செல்ல வசதியான இடம். அவளே வாகனம் வைத்திருக்க, அவன் உடனடியாக ஒன்றை வாங்க வேண்டிய அவசியமில்லை. சில பல காரணங்கள் முன்னிட்டு கடைசியில் அவளோடு தங்குவது வசதியாகப் படவும், இரண்டு படுக்கையறைகளில் ஒன்றில் குடி போனான். 

மாதம் ஒன்று சென்றது. பக்கத்து அறைத் தோழியுடன் நட்பு உருவானது. மேல் வேலைக்கு ஆள் வந்துவிடும் என்பதால் வீட்டில் செய்ய      சமையல் வேலை மட்டும் தான். இருவரும் சேர்ந்து செய்து விடுவர். அவள் நட்பு வட்டத்தில் இவனும் நுழைந்தான். இப்படிப் படிப்பும்… இடமும்… தோழர்களும் என்று புதிய வாழ்க்கை புதிய பாதையில் பயணப் பட ஆரம்பித்தது எபிக்கு. 

அலர்விழியும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலையில் அமர்ந்திருந்தாள். அதற்குள் எத்தனை சண்டைகளும் சமரசங்களும் இருவருக்கிடயே.

கணினி மையத்தில் கூறியிருந்தபடியே சில தரமான நிறுவனங்களிடமிருந்து நேர் காணல் வர ஆரம்பித்திருந்தது. அது வரும் முன்னமே எபி அவளை ஒரு வழியாக்கி இருந்தான். 

‘இதப் படி… அதப் படி’ என்று படிக்கத் திணித்ததோடு நிற்காமல், தினமும் அவர்கள் பேசும் நேரம் முழுவதும் அவளை நேர் காணலுக்குத் தயார் படுத்துவதும், அவளுக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுக்க பயன்படுத்த, பெண்ணிற்குத் தான் போதும் போதும் என்றாகி விட்டது. 

அறிவாளியைக் காதலித்தால் இப்படி தானோ என்று தோன்றுமளவு எண்ணம் சென்றுவிட, “மனோ போதும் மனோ… நான் என்ன, குட்டிப் பாப்பாவா பாத்துப்பேன் மனோ. வேற ஏதாவது பேசுவோமே, யாரோ ப்ரொஃபசர் கிட்ட பேசற ஃபீல் குடுக்கறீங்க,” என்று வாய் திறக்கும் அளவிற்குச் சென்றது. 

“பேசுவோம்… நல்ல வேலையில உக்காரு அப்புறம் மணிக் கணக்கா பேசுவோம். இப்போ கவனம் இதுல மட்டும் இருக்கட்டும்,” என்று வாயடைத்தான். 

அவளும் படிப்பாளி தான். ஆனால் கண்டிப்பாக அவன் போல் இல்லை. படிப்பு என்று வந்துவிட்டால் ஏன் அவனிடம் இத்தனை தீவிரம்? புரியவில்லை. அவன் ஆர்வம் அவளுக்கு மூச்சு முட்டியது.  

“எனக்கு எல்லாம் தெரியும். போதும் மனோ. லவ்வர் மாதிரி கூட வேண்டாம் ஒரு ஃப்ரெண்டு மாதிரியாது பேசுங்க மனோ,” என்றதிற்கும், “வேலை கிடைக்கிற வரைக்கும் போதாது. லவ் எல்லாம் உள்ள இருக்கு. அதனால தான் உன்ன மட்டும் நினைச்சு சுத்திட்டு இருக்கேன். இப்போ நான் கேக்கறதுக்கு முதல்ல பதில் சொல்லு” என்று அவளை விட்டானில்லை. விளைவு…  முதலில் வந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கவும் செய்தது.    

அலர்விழியை கையில் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு பெரிய நிறுவனத்தில் அதுவும் நான்கு சுற்று கேள்விக் கணைகளையும் அவ்வளவு எளிதில் மேற்கொள்ள முடியும் என்று நினைத்துப் பார்த்தாளில்லை. அவளாகவே முயன்றிருந்தாலும் கிடைத்திருக்கும், ஆனாலும் பாராட்டியிருப்பார்களா என்பது சந்தேகம் தான். 

அவள், “லவ் யூ மனோ… லவ் யூ சோ மச். கிடைச்சிடுச்சு!” என்று துள்ளிக் குதித்து கூற, அவனோ, “இந்தக் கம்பனி வேண்டாம். அடுத்த இன்டர்வியூ இன்னும் மூணு நாள்ல இருக்கும். அதுக்கு ரெஸ்யுமே(resume) ரெடி பண்ணு விழி,” என்றான். 

முகம் சட்டென்று மாறியது. எத்தனை பெரிய நிறுவனம்? வேண்டாம் என்றால்… எதற்கு இத்தனை பாடு? ஒரு நாள் கூட இனிப்பான பேச்சில்லை வாயைத் திறந்தாலே கணினி சம்பந்தப்பட்ட பேச்சு தான். எல்லாம் இதற்கு தானா? 

“ஏன் மனோ?” குரல் விழுந்து விட்டது. 

“அது வேண்டாம். கொஞ்சம் பெரிய கம்பனி தான். ஆனா அங்க போனா உனக்கு வளர்ச்சி கம்மி விழி.” 

“அது முதல்லையே உங்களுக்கு தெரியாதா? அப்புறம் எதுக்கு என் பிராணனை எடுத்தீங்க?” கோபம் துளிர்க்க, கத்தினாள். 

“ட்ரெயினிங்ன்னு வச்சுக்கோயேன்,” என்றான் எந்த அலட்டலும் இல்லாமல். அந்த பதிலுக்குக் கோபம் அதிகமேயானது. அதே பதிலும், கோபமும் அடுத்த நிறுவனத்திற்கும் நீண்டது. 

எஸ்தர் கேட்டே விட்டார், “ஏன் மா என்ன எதிர்பார்க்குற? ரெண்டுமே நல்ல கம்பனி டா. வேற ஏதாவது மைண்டுல வச்சிருக்கியா?” என்று. 

நியாயமான கேள்வி தான். பதில் என்னவென்று கூறுவது? “எதுனாலும் உங்க மகன்ட்ட கேளுங்க” என்றா?  

அம்மா, அப்பா, பாட்டி, மாதவன், எஸ்தர்… ஏன் நகு கூட அதையே கேட்க, பெண் நொந்து போனாள். அவன் ஒற்றை வார்த்தையில் வேண்டாம் என்று விட்டான். யார் இவர்களிடமெல்லாம் பதில் கூறுவது? இயலாமை கோபமாக உருமாறியது. 

‘நீ சொல்லி நான் என்ன கேக்கறது’ என்று கிடைத்த வேலையில் அமர்ந்து கொள்ளலாம் தான். ஆனால் மனது அதற்கும் இடம் கொடுக்கவில்லை. 

“உங்க பேச்ச கேக்கறேங்கறதுக்காக உங்க இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கலாம்ன்னு நினைக்காதீங்க. நீங்க செய்யறது எனக்கு சுத்தமாப் பிடிக்கல. உங்க ஆண் ஆதிக்கத்தை என்ட்ட காட்ட வேண்டாம்,” என்று சண்டை வரை சென்றது. 

“எப்பவும் பிடிச்சதையே அம்மா சமைக்கிறாங்களா? இல்ல தான? அது மாதிரி தான். உனக்கு பிடிச்ச மாதிரியே என்னால எப்பவும் இருக்க முடியாது. நல்லது செஞ்சா பாராட்ட வேண்டாம், முகம் காட்டாம ஏத்துக்க பார். ஒரு நகைய நாலு கடை ஏறி… பார்த்து தான வாங்குற. அப்டி தான் இதுவும்! கிடைச்ச முதல் வேலையிலயே உக்காரணும்ன்னு என்ன அவசியம் வந்துது உனக்கு?” என்ற பதில்தான் எபியிடமிருந்து வந்தது. 

“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுன்னு சொல்லுவாங்க. கிடைக்கிறத எல்லாம் விட்டுட்டு இருந்தா, கூகுள்ள இருந்து ‘இந்தா வச்சுக்கோ வேலை’ன்னு கொண்டு கையில கொடுப்பானா?” 

error: Content is protected !!
Scroll to Top