இரண்டு சிறிய கூடைகள் நிறைய மலர தயாராயிருந்த மொட்டுகளோடு அவள் அமர, அவள் நூடுல்ஸ் மண்டையை வாரி விட்டார் எஸ்தர்.
“எனக்கு பொண்ணு இருந்தா எப்பிடி இருக்கும்ன்னு நினைச்சுப் பாப்பேன். இப்படித்தான்… உன்ன மாதிரி இருந்திருப்பான்னு இப்போ தோணுது.
28 வார கரு… வளர்ச்சியில்லாம இந்த உலகத்த பார்க்காமலே இறந்து போச்சு. பொண்ணு குழந்த! என் பொண்ணு போராடவே இல்ல… போய்ட்டா. அவளுக்கு போராட காரணம் இருக்கல போல… இந்த அம்மா அப்பாவ பாக்க அவளுக்கு தோணல போல… இப்போ நினைச்சாலும் தாங்கவே முடியல, அந்த குட்டிக் குட்டி விரல்.. ம்ப்ச்!
எல்லாமே எபி தான் எங்களுக்கு. ஒரு குட்டி பொண்ணு குழந்தைய தத்தெடுக்கலாம்ன்னு நினைச்சோம், இவனுக்கு எட்டு வயசிருக்கும் போது. அப்போவே இவனுக்கு என்ன புரிஞ்சுதோ… வேற பேபிய வீட்டுல சேத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான். உங்க தொப்பையில இருந்து தான் பாப்பா வேணும் இல்ல வேண்டாம்ன்னு சொல்லிட்டான். மீறி கொண்டு வந்தா தூக்கி போட்டுடுவேன்னு சொல்லி ரொம்பத் தகராறு பண்ணினான்.
அவனால ஏனோ அப்போவே அவன் ரத்த சம்பந்தமில்லாத ஒரு குழந்தைய குடும்பமா பாக்கவே முடியல” ஏதேதோ பேசினார். கேட்டுக் கொண்டாள். மகன் ஊருக்கும் செல்லவிருப்பதால் இருக்கலாம். இல்லை என்றால் எபி பற்றிய பேச்சுகளே இருக்காது.
அலர்விழி அடர்த்தியாகக் கட்டி கொடுத்த நித்திய மல்லி சரத்தை அவளுக்கே சூட்டி விட்டார். “நீ ரொம்ப டேலன்டட் அலர். செய்யற வேலையில எல்லாம் ஒரு நேர்த்தியும் சுத்தமும்! ரொம்ப நல்லாப் பூ கட்டுற நீ. எனக்கு இவ்வளவு நெருக்கம் வராது. நான் ஊசி நூல் வச்சு தான் கோர்ப்பேன்.”
சூரியன் பூகோளத்தின் மறுபக்கத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்க, “எல்லாம் ஒரு இன்ட்ரஸ்ட் தான் ஆன்ட்டி. நாலு நாள் கட்டிப் பழகினா யார் வேணும்னாலும் செய்யலாம்” என்றவள் கிளம்பத் தயாரானாள்.
“நான் கிளம்பறேன் ஆன்ட்டி,” என்று நிற்பவளை ஏனோ அனுப்பவே மனமில்லை அவருக்கு.
“ஏன் டா எப்போவும் ரெண்டு நாள் இருப்பியே. எபி அப்பா வர பதினொன்னு ஆகிடும். அவன் வர 12 ஆகிடும். வந்ததும் ஏர்போர்ட் கிளம்பிடுவாங்க. உன்ன யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க.”
“ச்ச ச்ச… அப்டி நினைக்கல ஆன்ட்டி. நீங்களும் ஏர்போர்ட் போக வேண்டாமா?”
“அவன் திட்டித் தீத்திடுவான் மா. வீட்டுல இருந்தே வழி அனுப்பினாப் போதும்ன்னு சொல்லிடுவான். அப்டியே பழகிப் போச்சு! எபி அப்பா, அவன் பேச்செல்லாம் கேக்க மாட்டார். அவன் மேல மனுஷனுக்கு உயிர். அங்க போய் மகன வழி அனுப்பினா தான் அவருக்கு தூக்கம் வரும்.
வந்ததுல இருந்து என் பின்னாலயே சுத்திட்டு இருக்க… நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. இல்ல மாடிக்குப் போய் எப்பவும் போல வேடிக்கை பாரு. நானும் ஒரு மணி நேரம் இந்த ஆஃபீஸ் வேலையப் பார்க்குறேன்.
மேல போகும் போது இத அவன் ரூம் வாசல்ல வச்சிடுமா. அவன் வந்து பெட்டில போட்டுக்க வசதியா இருக்கும்.”
நகர்ந்தவளின் கைகளில் சிறிய பொதிகள் சிலவற்றைக் கொடுத்தனுப்பினார்.
“நீ போடறதுக்கு ரெண்டு நைட் ட்ரெஸ் வாங்கி, நீ படுக்கிற ரூம்ல வச்சிருக்கேன். பசிக்கும் போது சொல்லு… சாப்பிடுவோம்.” அவள் முதுகின் பின் அவர் சத்தம் தேய்ந்து போனது.
இன்று செல்லும் மகனை மீண்டும் என்று காண்பாரோ? ஒரு மாதமாக மகன் முகமும் சரியில்லை. எதையோ பறிகொடுத்தவனைப் போல் இருப்பவனைக் காண சகிக்கவில்லை. தனியே இருந்து விடுவானா? மகன் நினைவு தாயை உருக்க, வருத்தம் தொண்டையை அடைக்கத் தனிமை தேவை… இவளையும் அனுப்ப மனமில்லை. தனித்துப் போய் விடுவோமோ என்ற பயமாகக் கூட இருக்கலாம். மகள் போன்றே ஒரு நெருக்கம் அலர்விழியிடம். பெண்ணை விட மனமில்லை.
மொட்டை மாடிக்குச் சென்றாள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் காற்றாடிகள் வானை அலங்கரித்தன. எந்த யோசனையுமின்றி பட்டத்தை வெறித்தாள். பட்டம் அதன் இஷ்டத்திற்குப் பறப்பதாக நினைத்து வாலை ஆட்டிக் கொண்டே போனது. ஆனால் எங்கோ தூரத்தில் நின்றிருந்த சிறுவன் ஒருவன் கையில் கண்ணுக்கு தெரியாத இழை கொண்டு அந்த பட்டத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையும் இப்படித் தானோ? எதோ ஒன்றோ… யாரோ ஒருவரோ நம்மை ஆட்டிப் படைக்கத்தான் செய்கிறார்கள். அதை நாம் உணர்வதில்லை அவ்வளவே.
காற்றாடிகள் தங்கள் இருப்பிடம் சென்று விட்டன. வானம் இருட்ட ஆரம்பிக்கவும் படி இறங்கினாள். முதல் மாடியில் விருந்தினருக்கான அறை இருந்தது. அங்குத்தான் தங்கிக் கொள்வாள்.
அறைக்குள் நுழையப் போனவளின் பார்வை எபியின் அறை வாசலிலிருந்த பொதிகள் மேல் நிலைத்தது. கதவைத் தள்ள அது திறந்து கொண்டது. உள்ளே பொதிகளை வைத்தவள் நின்று விட்டாள். ஆளில்லா அறையில் நுழைவது தவறென்று தெரியும் தான்…
இன்று தான் பார்க்கிறாள் இந்த அறையை. எங்கும் எதிலும் மனோ தெரிந்தான். பெரிய திரை கொண்ட கணினி முதல் சுவரிலிருந்த புகைப்படங்கள் வரை எதிலும் அவன் தான்.
அலர்விழி எபியின் அறையில் அவன் புகைப்படங்களைப் பார்த்து நின்று கொண்டிருக்க, அவனோ அதே வீட்டின் கீழ்தள சோஃபா கைப்பிடியிலிருந்த அலர்விழியின் துப்பட்டாவோடு அமர்ந்திருந்தான். மனம் சரியில்லை… அவள் குரல் கேட்டபின் எங்கோ எதிலோ புரிதல் தவறாகிப் போனதை உணர்ந்தான். மாற்றானுக்கு நிச்சயிக்கப்பட்டவள் குரலில் ஏன் அத்தனை தவிப்பு?
கசங்கிக் கிடந்த துப்பட்டாவை மெல்ல நீவி விட்டான். கசங்கிப் போன உறவைச் சரி செய்வதாய் எண்ணினானோ என்னவோ… ‘எல்லாம் சரி ஆகிப் போகும்’ ஆறுதல் அவனுக்கே கூறிக் கொண்டது போல் தோன்றியது. துப்பட்டாவை ஓரம் வைத்தவன் அம்மாவைக் காணச் சென்றான்.
மகனைப் பார்த்ததும் கலங்கிய கண்கள் மினுமினுக்கத் தாயின் முகம் மலர்ந்தது. தோளோடு அணைத்தவனுக்குப் பேச வரவில்லை. ஒரு மாதமாக அம்மாவைப் படுத்திவிட்டது புரியாமலில்லை. அது அவனையும் மீறிய செயல். அம்மாவின் உச்சந்தலையில் இதழ் பதித்தவன், “ரியலி சாரி மா,” என்றான்.
அம்மாவிடம் மகன் பேசிக் கொண்டிருக்க… அவன் வீட்டில் இருப்பதை அறியாதவளின் பார்வை இன்னும் அங்கிருந்த புகைப்படங்களில். ஒன்று போல் மற்றொன்று இல்லை.
ஒரு படத்தில் கண்கள் நிலைத்து நின்றது. சத்யா என்ற படத்தில் இப்படித்தான் கமல் இருப்பார்.. குட்டை முடியும்… மழிக்கப் படாத தாடியும்… ஓரத்தில் முறுக்கி விட்ட மீசையுமாக! இந்தப் புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது என்று எபியிடம் கேட்டால்… அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ… கண்டிப்பாக அலர்விழி கூறிவிடுவாள்.
மரத்தடியில் இவள் கழுத்தை இறுக்கி நின்ற அன்று இப்படி தானே இருந்தான்? கண்களை மூடினாள். அன்று அவன் நெரித்தது வலிக்கவில்லை. இன்று கழுத்து நெரிபடும் வேதனை எழுந்தது.
அன்று ‘போடா..’ என்று தோரணையாக நின்றாள். இன்றோ… ‘ஏன் போனாய்?’ என்று தன் தன்மை எல்லாம் மாறி கோழையாக, திமிர் எல்லாம் வடிந்து கண்கள் கசிய நிற்கிறாள்.
மூடி இருந்த கண்கள் மடை திறக்க, உடல் மெல்லக் குலுங்க ஆரம்பித்தது. “ஏன் மனோ? ஏன்…” சத்தமாகக் கத்தினாள்.
அப்பொழுதே உள்ளே நுழைந்தவன் அவளை உள்ளே கண்டதும் கதவருகே நின்று விட்டிருந்தான். அவளின் ‘ஏன் மனோவில்’ உள்ளே வந்தான்.
சுவரைப் பார்த்து நின்றிருந்தவளின் பின்னோடு வந்து நின்றவனுக்குப் பதில் இல்லை அவள் கேள்விக்கு. அவள் அழுவது தெரிந்தது. கண்ணீரைப் பார்க்கும் திராணி இல்லை. கைகள் இரண்டும் இரு தோள்களையும் பிடிக்க… சட்டென்று அவளிடம் ஒரு விரைப்பு. அவன் தான் என்றது அவன் வாசனை திரவியம். அவனை எதிர்பார்க்கவில்லை. திரும்பி அவனை எதிர் கொள்ளவும் தைரியம் இல்லை.
இன்று என்ன சொல்லப் போகிறானோ? ‘வேண்டாம் விழி! தோழமை கூட வேண்டாம். உன் வழியே போ… என் முகத்தில் விழிக்காதே…’ சொல்லி விடுவானா? ‘சொல்லிடாத மனோ… தாங்க மாட்டேன்.’ அழுகை பீறிட்டது. இப்படி கோழையாகிப் போனேனே, கழிவிரக்கம் சேர்ந்து கொண்டது.
அவள் அதிக உணர்ச்சி வசப்படுவது அவன் கைவழியே உணர முடிந்தது. தோள்கள் இரண்டிலும் அழுத்தம் கொடுத்தவன் சற்று நெருங்கினான், முதுகில் அவன் சட்டை உராய.
இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. வெட்கமே இல்லாமல் கட்டிக் கொண்டு கதறிவிடும் ஆபாயம் தெரிய, அவன் கையைத் தட்டி விட அவன் நெருக்கம் அதிகமே ஆனது.
கழுத்தோரத்தில் ஒரு சொட்டு உஷ்ணமான நீர் சொட்டவும், அவள் அசைவும் நின்று போனது. பேசவில்லை. விழிகள் மோதவில்லை. ஒரு சொட்டு நீர் அவள் உதிர்த்த கண்ணீரை எல்லாம் அடித்துச் சென்றதாகவே உணர்ந்தாள். அவன் காதல் கூற வேண்டிய அவசியம் இல்லாமலே போனது.
“மிஸ் மீ?” காதருகே கிசுகிசுத்த குரல் கரகரத்தது.
உஷ்ண மூச்சுக் காற்று பெண்ணவளை குளிரச் செய்தது. எல்லாம் முடிந்தே போனது என்று எண்ணியிருக்க, நொடிப் பொழுதில் அனைத்தும் மாறிப் போனது. பழைய பயணம் முடிந்து புதிய பாதையில் புதுப் பயணம் காத்திருப்பது தெரிந்தது. வலித்த வலிகளெல்லாம் வடிய ஆரம்பிக்க… அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள்.
தோள்களில் ஆரம்பித்து கைகளின் முழு நீளத்திற்கும் இறங்கிய எபியின் விரல்கள், அலரின் விரல்களோடு பின்னிக் கொண்டன. உடல் சிலிர்த்து அடங்கியது.
சுட்டெறித்த வெறுமை எல்லாம் எங்கு போனதோ உடலில் மனதிலும் நிறைவான உணர்வு. உணர்வு இருவருக்கும் பொது.
பின்னியிருந்த விரல்களைப் பிரிக்காமலே விழியின் வயிற்றோடு கட்டிக் கொண்டவன் நெஞ்சம் தழுதழுத்தது. இறுக அணைத்து, தலையில் கன்னம் பதித்துக் கண்கள் மூடி நின்றான். அறிவாளியின் அறிவு ஒதுங்கிக் கொள்ள… உள்ளுணர்வு விழுத்துக் கொண்டது. நிமிடங்கள் நகர்ந்தன.
இன்றுதான் புதிதாகப் பிறந்தது போன்று தன்னையே உணர்ந்த நிலை. அவன் உலகம், அவன் உணர்வுகளின் தன்மை எல்லாமே மாறிப் போனது. முதன்மையாகத் தோன்றியதெல்லாம் மாயை என்று தோன்றியது. மனதில் வேறெதையும் ஏற்றிக் கொள்ளவில்லை… அலர்விழி என்றவள் மட்டுமே அவனை ஆட்கொண்டாள்.
இளம் காதலியைத் தனிமையில் அணைத்து நிற்கும் படபடப்போ… பதறலோ இல்லை. உள்ளுக்குள் ஒரு தெளிவு, நிதானம்! மனதின் வெறுமை அகன்று, கனம் நீங்கி உடலும் உள்ளமும் லேசாகிப் போனது.
நீ வேறு நான் வேறில்லை என்ற தெளிவு. சிற்பம் பாறைக்குள் தான் ஒளிந்திருக்கிறது. அவனின் சிற்பம் அவள்… உள்ளுக்குள் புதைந்தே இருப்பவள். தள்ளி நிறுத்தவும் முடியாது, ஒன்றிப் போன இருவர் உணர்வுகளையும் தனித் தனியே பிரிக்கவும் முடியாது.
ஒன்றில்லை என்றால் மற்றொன்று இல்லை. இது பாறைக்கும் சிற்பத்திற்கும் மட்டும் அல்ல… விழி என்ற அலர்விழிக்கும், மனோ என்ற மனோவா எபெனேசருக்கும் சாலப் பொருந்தும்.
“சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்”