Skip to content
அத்தியாயம் 21
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமென்றால்… சிரிக்க ஒரு காலம்! மழைக்கு ஒரு காலம்… வெயிலுக்கு ஒரு காலம். விதைக்க ஒரு காலம், அறுவடை செய்ய ஒரு காலம்!
அப்படித்தான் கற்றிருந்தான் மனோவா எபெனேசர். அதனால் படிக்க ஒரு காலம்… அதில் காதலுக்கு இடமில்லை என்று தெளிவாகத் தான் இருந்தான், அலர்விழி என்ற பெண்ணைக் காணும் வரை.
அவன் கேட்டு வரவில்லை விழி மீதான காதல். ஆசை தான் அவளோடு பேசிப் பழகி கைகோர்த்து சுற்ற… ஆனால் சூழ்நிலை சரி இல்லை. அவனுக்கு காதலிக்கும் வயதென்றாலும் அவள் அதற்கான வயதை எட்டியதாக அவனுக்கு அன்று தோன்றவில்லை. அன்று அவளுக்காக… அவனுக்காக… அவர்கள் எதிர்காலத்திற்காக விலகி நின்றான். விலகி நிற்க முடியும் என்று நினைத்தான். அது சரி என்று நினைக்கக் காரணம் இருந்தது. அவர்கள் உடல்கள் மட்டுமே பிரிந்திருக்க மனம் ஒன்றியிருந்தது.
என்ன மாயமோ… அவர்கள் உடல் விலகினாலும் அவள் அவனை மறக்கவும் இல்லை அவனால் அவளை மறக்கவும் இயலவில்லை. இன்று, இருவருக்கிடையே மதில் சுவர் எழவும் எபெனேசரின் எண்ணம் அடிவாங்கிப் போனது.
அன்றும் கடைசியாக அவள் பேச்சில் அவனைத் தள்ளி நிறுத்தவில்லையே. யாரோ ஒருத்தர் நிச்சயத்திற்கு தானே போகப் போவதாய் கூறினாள். படுக்கப் போகும் போழுது அவள் நினைவில் தானே கண்ணயர்ந்தான். தனக்கு மறுநாள் என்றாலும் அவளுக்கு அதே நாள் தானே… அதற்குள் அவன் யார் நடுவில்?
அப்படியே அலர்விழிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் அவள் விருப்பம் கேட்பார்கள். அவள் மனதில் தான் இருக்க, அவள் எப்படிச் சம்மதிப்பாள் என்று நினைக்கவும் செய்தான்.
ஏனோ அதன் பின் அவனால் தள்ளியிருக்க முடியவில்லை. தன்னை நம்பிக் கொடுத்த வேலையைக் கூட அந்தரத்தில் விட்டு விட்டான். தனக்கு வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த நிறுவனத்திற்குச் செய்தது நம்பிக்கை துரோகம் என்றே தோன்றியது. இவன் விலகினால் அவர்கள் டீம்மில் இருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை என்று தெரிந்தே வேலையை விட்டான்.
தன் ஜீவனை கையில் தேக்கி அவள் வருகைக்காகக் காத்திருக்க, அவளும் வந்தாளே கணினி மையத்திற்கு, விரலில் நிச்சய மோதிரத்தோடு.
அதன் பின் வந்த நாட்கள் நெருப்பைத் தொட்டு மீண்ட நாட்கள். உவப்பாய் இல்லை. அப்பா அம்மா என்ற இருவர் முகம் கண்டு கசந்த வாழ்வை இழுத்துப் பிடித்து நகர்த்திக் கொண்டிருக்கிறான் என்றால் மிகையாகாது. மனதளவில் தனித்துப் போனான்.
அவனோ அவளால் வாழ்க்கை கசந்து நிற்க, நிச்சய மோதிரத்தை தோழியிடம் காட்டி சிரித்த அதே முகம் இன்று அவனை ஏக்கத்தோடு பார்த்து நிற்கிறது. இன்றைய நிலையில் மனோவா என்பவனுக்குக் காதலும் புரியவில்லை… அதை அவனுள் இறக்கிய பெண்ணையும் புரியவில்லை. இனி காலம் தான் அவன் காயத்தை ஆற்ற வேண்டும்!
நான்கு மாத சோகத்தில் கண்கள் மூடி நீந்திக் கொண்டிருந்தவனை அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு எழுப்பி விட்டது.
“என்ன மா?”
“பெட்டி அடுக்க வேண்டாமா? எப்போ வர?”
“எதையாது எடுத்து வைங்க! காலைல 3:30க்கு ஃப்ளைட். ஒரு மணிக்கு தான் வர முடியும்.”
“ஏன் ஃப்ளைட்ட மிஸ் பண்ணலாம்ன்னு பிளானா?”
“ம்ப்ச்… மா”
“பஜ்ஜி போடறேன். டீ குடிக்க வா டா…”
“மா…”
“சரி விடு. நைட் சாப்பிடவாது வா டா.”
“ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி இருக்குமா… ஒரு மணிக்கு முன்ன வரப் பாக்கறேன். நீங்க படி ஏறிடாதீங்க. சாமான் ஹால்ல இருக்கட்டும். நான் எடுத்து பெட்டியில போட்டுட்டு அப்பிடியே கிளம்பறேன்.”
“என்னவோ போடா. கொஞ்ச நாளா நீ நீயாவே இல்ல. உன் பிரச்சனையைச் சொல்ல முடியாத அளவுக்கா நாங்க தள்ளி இருக்கோம்? அம்மாட்ட சொன்னா, என்னாலானத செய்ய மாட்டேனா எபி. என் மேல நம்பிக்கை இல்லியா டா? உன் சந்தோஷம் தானே எங்க நிம்மதி… அந்த அபிகேல் பொண்ண ஏதும் விரும்பறியா? அவதான் உனக்கு சந்தோஷம்ன்னா… எனக்கும் சரிதான் எபி.”
“மா… மா மா மாஆஆ அவ ஃப்ரெண்டுமா! எங்களுக்குள்ள ஒண்ணும் இல்ல மா. எனக்கும் ஒண்ணும் இல்ல மா. நல்லா இருக்கேன். தேவ இல்லாம கவலைப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க. நைட் வெயிட் பண்ணாம சாப்பிட்டு படுங்க. ஒரு மணிக்கு கிளம்பும் போது எழுப்பறேன்.”
கைப்பேசியை அணைத்த பின்னும் அவர் முகம் தெளியவில்லை. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த அலர்விழிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இவன் தன்னையும் வருத்தி பெற்றவர்களையும் வருத்திக் கொண்டு சுற்றுகிறான்?
தன் மேல் இவனுக்கு என்ன கோபம்? எங்கோ இடறிரியது. ஒன்றும் விளங்கவில்லை. எஸ்தரிடம் அவன் எண்ணை வாங்கிப் பேசினால் என்ன என்று தோன்றியது. ஆனால் எப்படிக் கேட்க… என்ன என்று கேட்க? ஹப்பா… ஒருதலைக் காதலே இவ்வளவு கொடுமையா? இன்னும் என்னவெல்லாம் காண வேண்டுமோ என்றிருந்தது.
அவர் தேநீர் தயாரிக்க செல்லவும், இவனிடம் எப்படியேனும் பேச வேண்டுமே என்ற தவிப்போடு நித்திய மல்லி பந்தல் பக்கம் சென்றாள் தனிமை தேடி.
மலரத்தயாராகிக் கொண்டிருந்த மொட்டுகளை பறிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்றது. தயக்கத்தை தள்ளி வைத்து, நடுக்கத்தை மறைத்து, “ஆன்ட்டி உங்க செல்… தருவீங்களா… பேசணும்,” என்று கடித்துத் துப்பி வாக்கியம் அமைத்தாள். அவர் எதற்கு? யாரிடம் பேச என்று ஏதேனும் கேட்டுவிட்டால்? உதறல் எடுத்தது.
அவர், ஏன், என்ன என்றெல்லாம் கேட்கவில்லை. “அதோ அங்க இருக்கு எடுத்துக்கோ மா,” என்று கடவுச் சொல்லையும் கேட்காமலே கொடுத்தார்.
கைப்பேசியோடு பந்தல் பக்கம் நகர்ந்தவள், அழைக்கவா வேண்டாமா… என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்தினாள். நேரம் கடந்தது. தலைவர் இல்லாத பட்டிமன்றம் என்பதால் தீர்ப்பு சொல்ல நாதியில்லை என்றதும் அழைக்கத் துணிந்தாள்.
கால் ஹிஸ்டரியில் சென்று பார்த்தாள். ‘எபி-இண்டியா’விடம் தான் கடைசியாகப் பேசியிருந்தார். இந்த எண் புதிது… அவளிடம் இல்லை. எச்சில் விழுங்கி அழைத்தாள். கை நடுங்கியது. தவறு செய்கிறேனோ? மனம் நெருடியது. ஆன்ட்டிக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்… அணைத்து விடலாம் என்று அவள் நினைத்து முடிக்கும் முன் அழைப்பை ஏற்றிருந்தான் மனோ.
“ம்மா…”
“…” என்ன பேச? ஐயோ… ஒட்டு மொத்த மூளையும் செயலிழக்கும் நேரமா இது?
“அம்மா?”
“…” எச்சில் விழுங்கினாள். கனத்த மூச்சுக் காற்று மட்டுமே வெளி வந்தது.
“வி..ழி…?”
“…” தொண்டை அடைத்து இம்சித்தது.
நிமிட நேர அமைதி இருபக்கமும்.
“சொல்லு விழி?”
“ம்..ம..னோ..”
“வா டா அலர். ட்டீ ரெடி…” எஸ்தர் அழைக்கவும், கைப்பேசியைப் பயத்தில் பட்டென்று அணைத்து விட்டாள். அச்சோ… கோபித்துக் கொள்வானோ?! மீண்டும் எப்படி அழைக்க? உடல் முழுவதும் மெலிதான நடுக்கம் பரவியது. கண்டு கொண்டானே… லேசாகச் சிலிர்க்கவும் செய்தாள்.
அடுக்களைக்கு வெளியே இருந்த படிகளில் அமர்ந்திருந்த இருவரும் தேநீர் அருந்திக் கொண்டே பேசினாலும் இருவர் மனதிலும் எபி தான். ஏன் என்னவாயிற்று இவனுக்கு என்ற ஒரே கேள்வி வெவ்வேறு கோணத்தில்.
“டீயும் பஜ்ஜியும் நல்லா இருக்கு ஆன்ட்டி…”
“எல்லாம் உனக்காக தான். வீடியோ பார்த்து செஞ்சேன்…” சிரித்தார்.
“எப்படி சமையல் தெரியாம சமாளிக்கறீங்க?”
“யமுனா! அதுக்கு முன்ன என் மாமியார். கல்யாணம் ஆகி வந்த போது ஒரு நாள் சமையல் செஞ்சேன். ஆயுசுக்கும் மறக்க முடியாது, அந்த டேஸ்ட்ட எல்லாம்”
“அவ்வளவு சூப்பரா சமைப்பீங்களா அப்போ?”
“ம்ம்ம்… எவ்வளவு சூப்பர்ன்னா, என் மாமியார் உயிரோட இருந்த வரை அடுக்களை பக்கம் கூட விடலன்னா பாரேன்” கூறியவர் வாய் விட்டு சிரிக்க, அலர்விழி கூட எபியை மறந்து சிரித்த தருணம் அது.
“எனக்கு வீட்டு வேலையில கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்ல. என் இன்ட்ரஸ்ட் எல்லாம் ஒரு கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கிறதுல இருந்துது. என் விருப்பம் தெரியவும் என் மாமியார், ‘நான் தான் வீட்டோட இருந்துட்டேன். நீயாது ஏதாவது உருப்படியா செய்’ன்னு சொல்லிட்டாங்க. அது தான் இந்த டேர் டு ட்ரீம் சென்டர்.”
“அப்படி கூட மாமியார் எல்லாம் இருப்பாங்களா?”
“என் மாமியார் அப்பிடித்தான். அம்மா கூட கண்டிப்பு. ஆனா மாமியார் என்னை எதுலயுமே விட்டுக் கொடுத்தது இல்ல. அவங்க இறந்த போது என்னால அத தாங்கிக்கவே முடியாம மயக்கமாகி, உடம்புக்கு வந்து, ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். அவ்வளவு பாசமா இருப்பாங்க. அவங்க எல்லாம் லட்சத்துல ஒருத்தங்க.
எனக்கும் கூட அவங்கள மாதிரி இருக்கணும்ன்னு ஆசை. என் மருமக மேல பாசமா, லட்சத்தில ஒரு மாமியாரா.”
“நீங்க கோடில ஒருத்தங்க ஆன்ட்டி. வீட்டுல வேலை செய்யறவங்களுக்கு சாப்பாட எடுத்து வச்சுட்டு சாப்பிடுற நீங்க நிஜமாவே கோடில ஒருத்தங்க. நீங்க வேணும்ன்னா பாருங்களேன் உங்க மருமக உங்க மாமியார் மாதிரியே உங்க மேல பாசமா இருப்பா.”
அவர் அவளைத் தான் பார்த்தார். மெல்ல தலையை வருடி விட்டார். ஆசைதான் ‘நீ ஒரு கிரிஸ்டியனா இல்லாமப் போயிட்டியே’ என்ற வருத்தத்திற்குள் சின்ன ஆசை இருக்கதான் செய்தது.
“இந்த கருநீல கலர் சல்வார் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு அலர்”
“சௌமி செலக்ஷன் ஆன்ட்டி”
“கேக்கணும்ன்னு நினைச்சேன்… நீ யார்ட்ட சல்வார் தைக்கிற? இவ்வளவு ஃபிட்டிங்கா இருக்கு, ஆனா பிளவுஸ் மாதிரி கை எல்லாம் ஃப்ரீயா மூவ் பண்ற? யாராது டிசைனரா?”
“இல்ல ஆன்ட்டி நம்ம சௌமி அம்மா… ராஜாத்தி அக்கா. இப்போ எல்லாம் அவங்களால நான் நிறைய சல்வார் தான் போடறேன். ஒரு கஷ்டம் என்னன்னா துப்பட்டா இல்லாம வெளியில தலை காட்ட முடியாது.” சிரித்தாள்.
error: Content is protected !!