அரவம் கேட்டு தட்டோடு அமர்ந்திருந்தவனும் தலை நிமிர்த்த, அவன் மூச்சுக் காற்று நுரையீரலை எட்டியதா தெரியவில்லை. அவனும் சிலையாகிப் போனான். ‘விழி’ மனம் எகிறிக் குதித்தது. எழுந்து நின்றவன் கண்களோடு மனமும் அவள் பிம்பத்தை உள்வாங்கியது.
இருவருமே இந்த சந்திப்பை எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டிய தருணம்… வெறும் அதிர்ச்சியாகப் போனது.
‘மனோ…’ விழி நீர் முட்டிக் கொண்டு வந்தது. கட்டிக் கொள்ளும் வேகம் எழ, இதழ் துடிக்க, “மனோ…” என்று ஒரு அடி முன் வைத்திருப்பாள்…
“என்ன டா வந்துட்ட? ஊர் சுத்தப் போறேன்… நடு ராத்திரி தான் வருவேன்னு சொன்ன?” கேட்டுக் கொண்டே எஸ்தர் உள்ளே வரவும் தான் சுயம் உணர்ந்தனர்.
“உனக்கு தெரியுமில்ல மா, சென்டர்ல பாத்திருப்பியே, என் மகன் எபி. செஞ்சிட்டு இருந்த வேலைய விட்டுட்டுப் போன மாசம் தான் அமெரிக்கால இருந்து வந்தான். நாளைக்கு விடிய காலையில திரும்பவும் அமெரிக்கா கிளம்பறான். அவனுக்கு எம்.ஐ.டி.-ல சீட் கிடைச்சிருக்கு, அதுக்கு தான் போறான்”
‘ஒரு மாசமா இங்க தான் இருக்காரா?’ ஏமாற்றத்தைத் தாங்க முடியவில்லை. அழுத்தி துடித்த மனதை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. ‘ஏன் மனோ..? ஏன்?’ சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போல் இருந்தது. கன்னம் பழுக்க அறையத் தோன்றியது. ‘நட்பு கூட நமக்குள் வேண்டாம் என்று கூறி விட்டுப் பிரிந்திருக்கலாமே…’ அழுகையை உள்ளுக்குள் புதைக்கவே தொண்டை அழுத்தி வலித்தது.
அவள் அவனையே பார்க்க… அவன் நொடி நேரம் பார்த்திருப்பான். பின் எந்த உணர்வும் இல்லாதவன் போல், “ஹாய் அலர்விழி,” என்றவன் அம்மாவைப் பார்த்தான்.
“என்ன டா கேட்டா பதில் சொல்ல மாட்டியா?”
“என்ன மா?”
“என்ன காத்து இந்த பக்கம் வீசுதுன்னு கேட்டேன்?”
“உங்க ஆனிவர்சரிக்கு வெளியில லன்ச் கூட்டிட்டு போகலாம்ன்னு வந்தேன்…” ஏதோ ரோபோ போல் பதில் உரைத்தான்.
“ஐயோடா… என் மகனுக்கு இப்போ தான் என் நினைப்பு வருது. அப்பறம் நான் செஞ்ச மட்டன் பிரியாணி… பிரியாணி கத்திரிக்கா, சிக்கன் 65, பைனாப்பிள் கேசரி… எல்லாம் பாத்ததும் உக்கார்ந்துட்டியாக்கும்?”
அவர் கூறிக் கொண்டே பரிமாற… அவன் பார்த்த பார்வையில், “அது தான் யார் செஞ்சதுன்னு தெரியுதில்ல… அப்பறம் என்ன பார்வை? சைலன்ட்டா சாப்பிட்டுட்டு அவளுக்கே தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பு.” என்றார்.
அவள் நின்ற இடத்தில் சிலையாய் நின்றிருக்க, “நீ ஏன் மா இன்னும் அங்கேயே நின்னுட்டு? வா… பசி வயத்தைக் கிள்ளுது.” என்று பக்கத்து இருக்கையை காட்டினார்.
அவர் மட்டுமே பேச, மற்ற இருவரும் தட்டிலிருந்ததை அவஸ்தையோடே உள்ளிறக்கினர். ருசியான உணவு ருசி அறியாமலே உள்சென்றது.
“நல்லா சமைக்கிற அலர். யமுனாக்கு சொல்லி குடுமா. இன்னைக்கு வரைக்கும் அதுதான் ருசின்னு ஏமாந்துட்டேன். நல்லா இருக்கில்ல எபி?”
“ம்ம்…”
“யமுனாத விட நல்லா இருக்கில்ல?”
“ம்ம்”
“எனக்கும் ஒண்ணும் தெரியல… இந்த யமுனாக்கும் ஒண்ணும் தெரியல. வரப் போற மருமகளுக்காவது சமைக்கத் தெரியுமோ என்னவோ…”
இருவரும் எச்சில் கூட்டி விழுங்கினார்களே ஒழிய, தட்டிலிருந்து தலையை உயர்த்தினார்கள் இல்லை.
“பொண்ணு ஃபோட்டோ அப்பா அனுப்பினாரே பாத்தியா டா? பிடிச்சிருக்கா? நிச்சயம் பண்ணிடலாமா?”
தட்டிலிருந்து எழுந்த அவன் கை அந்தரத்தில் நின்றுவிட, அவளுக்கோ முள்ளின் மேல் இருப்பது போல் வலித்தது. ‘திருமணமா? அவள் மனோவிற்கா?’ எத்தனை முறை இதே வீட்டை தன் வீடாய் நினைத்தாள். இன்று?
“என்ன டா? பார்த்தியா இல்லியா?”
“இல்ல.” என்றவனின் பார்வை அலர்விழியைத் தீண்டி மீண்டும் தட்டை நோக்கியது.
“ஏன் டா? சட்டுன்னு பாரு. நைட் அப்பா வந்ததும் அதத்தான் முதல்ல கேப்பார். இல்லன்னு சொல்லிட்டு நிக்காத. நீ சரின்னு சொல்லவே தான் மனுஷன் நல்ல நாள் அதுவுமா வீட்டுல இருக்காம கிளம்பிப் போயிருக்கார்.”
“…”
“கிளம்பறதுக்குள்ள ஒரு நல்ல முடிவா சொல்லிடு”
“போதும்மா,” அவன் எழுந்து கொள்ள, “சரி சரி நான் பேசல… கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிடு டா. அலர் வச்சது. ரொம்ப நல்லா இருக்கு எபி. நாளையில இருந்து என்னத்த சாப்பிடுவியோ?”
“பிடிச்சது கிடைக்காட்டா… பட்டினியாவா கிடக்கறாங்க எல்லாரும்? கிடைச்சத பிடிச்சதா ஆக்கிக்கறது இல்லியா? எப்பவும் எல்லாரும் பிடிச்சதையே நினைச்சுட்டு இருக்கறதில்லியே… உலகம் மாறும் போதும் நாமளும் மாறணும் இல்லியா? அதுதான் நானும் எனக்கு கிடைச்சது போதும்ன்னு வாழ்ந்துடுவேன்”
அவன் கூறியது அவளுக்கென்று பாவம் அவளுக்குப் புரியவில்லை!
“என் பிள்ள தத்துவம் எல்லாம் பேசுது போ…! இத… இந்தப் பொன்னான எழுத்த தங்கத் தட்டுல பொறிக்கணும். பொண்ணுக்கும் இதயே பதிலா எடுத்துக்கவா?” அந்த அமானுஷ்ய அமைதியை அவர் ஒருவரின் பேச்சு மட்டுமே போக்கிக் கொண்டிருந்தது.
அவன் கை கழுவச் சென்றுவிட… “நீ ஏன் மா கண்ணீர் விடுற? காரம் தாங்கலையா? அப்போவே நீ சொன்ன, நான் தான் உன் பேச்ச கேக்காம காரத்தை ஏத்தி விட்டுட்டேன். ரொம்ப காரமா டா? தயிர் வச்சுக்கிறியா?” அவர் தலையைத் தடவிக் கொடுக்க,
“இல்ல ஆன்ட்டி… நாக்கை கடிச்சுகிட்டேன். காயத்துல காரம் பட்டுடுச்சு.” கண்களைத் துடைத்து கொண்டவளுக்கு உணவு உள்ளே இறங்குவேனா என்று தொண்டையில் மாட்டித் தவித்தது.
எபி வெளியே கிளம்ப எஸ்தருக்கு அப்படி ஒரு கோபம். “உன் மனசில என்ன தான் இருக்கோ தெரியல. ஒரு நிமிஷம் வீட்டுல அடங்காம எங்க தான் சுத்துவியோ தெரியல. இதுக்கு நீ அங்கேயே இருந்திருக்கலாம். அவசர அவசரமா எதுக்கு வேலைய விட்டுட்டு வந்தனே தெரியல. மனுஷாள் முகத்த பாக்க கூட நேரம் இல்ல உனக்கு.”
அவர் பேச்சைக் கேட்க அவன் அங்கு இல்லை.
“முன்ன எல்லாம் என் மகன் பாக்க நல்லா தான் இருந்தான். இப்போ தான் இப்பிடி எதையோ தின்ன எதுவோ மாதிரி சுத்திட்டு இருக்கான். நடு ராத்திரி கிளம்பணுமே பெட்டிய அடுக்கினானா பாரு. எப்போ வருவானோ தெரியல.
அவர் ஃப்ரெண்டு குடும்பம் இங்க விழுப்புரத்தில இருக்க சொந்தக்காரங்க வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருக்காங்க. அதுதான் அவர் ஃப்ரெண்ட பார்க்கப் போனார். பொண்ண உன் மாமாக்கு பிடிச்சு போச்சு போல… அவர் ஃப்ரெண்டுக்கு எபிய ஏற்கனவே பிடிக்கும். இந்தப் பையன் சரின்னு சொல்லிட்டா பொண்ணுட்ட கேட்டுடலாம். வாய் திறக்கிறானா பாரேன்.”
அவர் ஒரு பக்கம் புலம்ப… அவரை புலம்ப விட்டவனோ வீட்டிற்கு வெளியே மரத்தடியில் நின்றிருந்த மகிழுந்தில் அமர்ந்திருந்தான்.
சில மாத வேதனையோடு உறவு முடிந்துவிடும் என்று தான் நினைத்தான். சோகம் எஞ்சாது என்று தான் நினைத்தான். ஆனால் இருந்த சோகம் போதாதென்று புதிதாக மீண்டும் எங்கிருந்து தான் இப்படி மனம் வலிக்குமோ? இவளைக் கடந்து போகவே முடியாதா? சொல்லாத காதலுக்கு ஏன் இத்தனை வலி என்றே புரியவில்லை மனோவிற்கு.
செய்து கொண்டிருந்த வேலையை விட்டு பதட்டத்தோடு வந்ததெல்லாம் விழியைப் பார்க்கத் தானே. வந்த அன்றே பயணக் களைப்பையும் உறக்கத்தையும் கூட பொருட்படுத்தாமல், விழிக்காக அவன் கணினி மையத்தில் காத்திருக்க, அவன் கண்டதோ முழுப் பொலிவோடு மையத்திற்குள் நுழைந்தவளைத் தான்.
“எங்கேஜ்மென்ட் நல்லபடியா முடிஞ்சுதா?” என்று ஸ்ருதி கேட்டதும், இவள் கையிலிருந்த மோதிரத்தை இருவரும் ரசித்துப் பார்த்துக் கொண்டே சிரிக்க சிரிக்க பேசியதையும் பார்த்தவன் தளர்ந்து போனான்.
கடைசியில் எவனோ பெயர் தெரியாதவன் கூறியது தான் உண்மை போலும். அலர்விழியைக் குற்றம் சொல்ல முடியாது. அவள் காதல் பார்வை பார்க்க இவன் தானே தோழன் என்று கரம் நீட்டினான். இன்று அவளுக்கு வேறு வாழ்க்கை முடிவாக இவன் மௌனம் தானே காரணம். இருந்தாலும் ஒரு வார்த்தை தன்னிடம் கூறியிருக்கலாம் என்று தோன்றியது.
கண்கள் மூடி ஓட்டுநர் இருக்கையில் படுத்துக் கொண்டவனுக்கு எஸ்தரிடமிருந்து அழைப்பு வந்தது.
“என்ன மா?”
“பெட்டி அடுக்க வேண்டாமா? எப்போ வர?”
“எதையாது எடுத்து வைங்க. காலைல 3:30க்கு ஃப்ளைட். ஒரு மணிக்கு தான் வர முடியும்.”
போதும்! இவளைப் பார்த்தது வரை போதும் என்று எண்ணிக் கொண்டான். கண்காணத் தேசத்திற்கு நாளை போனால் இவள் சுவடு மனதிலிருந்து மறையும் வரை இந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாதென்று முடிவெடுத்தான்.
சொல்லாத காதல் அவனை முற்றிலும் பொசுக்க, மூடிய கண்களுக்குள் தேங்கி நின்ற குளம் வெளிவராமலே வற்றிக் கொண்டிருந்தது.
காண்டா மிருக வண்டு என்று ஒரு வகை வண்டு, உயர்ந்து நிற்கும் தென்னை மரத்தின் விரியாத குருத்து, மலராத பாளை முதலியவற்றைக் கடித்து உண்டு விடும்! தவறான புரிதலும் அப்படித்தான், மௌனமான காதலை சுவடே இல்லாமல் வேரோடு அழித்துவிடும்!