மனோவா எபனேசர் என்ற ஒருவன் அலர்விழிக்குள் புகுந்து பெண்ணைப் படுத்தி எடுக்க, அவள் சிந்தனை முழுவதிலுமே அவன் மட்டும் தான். ‘என்னானது அவனுக்கு? கடைசியாக பேசிய அன்றும் பாதியிலேயே அவன் தான் கைப்பேசியை அணைத்தான். என்ன கோபம் அவனுக்கு என் மேல்?’ என்பதுதான் அவளின் பதில் தெரியா கேள்வி.
அம்மாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன் நிச்சயத்திற்கு புடவை எடுக்கப் போன அன்று காலை தான் கைப்பேசி கையில் கிடைத்தது. வீட்டில் ஆட்கள் இருக்கவே மனோவை அழைக்க முடியவில்லை. அவனுக்கு விடிந்ததும் பேசலாம் என்று அழைத்தால், அவனைப் பிடிக்க முடியவில்லை. அதன் பின் எத்தனையோ முறை முயன்று தோற்றுப் போனாள்.
அவன் நினைவில் கண்கள் குளம் கட்டாத நாளில்லை. ‘தன் தவிப்பும் வலியும் தலையணைக்குத் தெரிய ஏன் மனோ உனக்குத் தெரியவில்லை. கோபம்ன்னா திட்டு மனோ… வேண்டாம்ன்னு விலகாத மனோ, மிஸ் மீ-ன்னு கேளு மனோ…’ விக்கிக் கொண்டு வர, குளம் கட்டிய கண்கள் பாதையை மறைக்க, அருகே ‘கிரீச்’ என்ற சத்தத்தோடு தன்னை உராய்ந்து கொண்டு நின்ற வாகனத்தைக் கண்டவள் சுற்றம் உணர்ந்தாள்.
“அலர்…” காரிலிருந்து எஸ்தர் வர, ‘உங்க மகன் எப்படி இருக்கார்?’ நா வரை எழுந்த கேள்வியை அப்படியே விழுங்கி, “ஆன்ட்டி…” என்று அவரை நெருங்கினாள்.
“இப்படித்தான் கவனமே இல்லாம நடுத் தெருவுல போவியா?” அவரிடமிருந்து செல்லமாய் ஒரு அதட்டல் வந்தது.
“சாரி ஆன்ட்டி கவனிக்கல… ஏதோ யோசன”
“என்ன இந்தப் பக்கம்?”
“இந்த ஸ்ருதி பொண்ணு நொச்சு பண்ணி வா வெளில போலாம்ன்னு சொன்னாளேன்னு கிளம்பி வந்தா… லாஸ்ட் மினிட் ப்ளான் சேன்ஞ்… வரமுடியலன்னு சொல்லிட்டா. அதுதான் அப்பிடியே… வெட்டியா… ஏதோ யோசனைல…”
“கார்ல இடிச்சுக்கலான்ற முடிவுல நடக்க ஆரம்பிச்சியாக்கும்…” சிரித்தார்.
“போங்க ஆன்ட்டி…” அவளும் சிரிக்க…
“இன்னைக்கு என்னோட வெட்டிங் ஆனிவர்சரி. யாருமில்ல… வீட்டுல நான் மட்டும் தான்! வரியா? என் ஆனிவர்சரிய நம்ம ரெண்டு பேரும் கொண்டாடுவோம்?”
அவரின் திருமண நாளுக்கான வாழ்த்துகள் முடிய, “தொவைக்க துணி இருக்கே…” அவள் தயங்க,
“அது தான் வாரம் பூரா இருக்கே அதுக்கு என்ன பண்றது? நாம போய் துணிய எடுத்து வந்திடுவோம். நம்ம வீட்டு மெஷின்ல போட்டுக்கலாம் சரியா?”
“ஹ ஹ ஹா… அது எல்லாம் ஒண்ணும் வேண்டாம் ஆன்ட்டி. நான் ஹாஸ்டல் போறேன்.”
“நீ நடு ரோட்டுல போற ரேஞ்சுக்கு ஹாஸ்டல் போய் சேர்ற மாதிரி தெரியலியே? ஹாஸ்பிட்டல் போற அறிகுறி தான் இருக்கு. ஹாஸ்பிட்டல் போகணும்ன்னு முடிவு பண்ணிட்ட… ரோட்டுல அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு போனா என்ன, என் சமையல சாப்பிட்டுப் போனா என்ன? வா வா… ஆன்ட்டி பாவமில்ல… நல்ல நாள் அதுவுமா உன் ஆன்ட்டி தனியா உப்புமா சாப்பிட்டு கிட்டு… யோசி, பாவமில்ல உன் ஆன்ட்டி?”
அவர் கெஞ்ச… கொஞ்ச… “ம்ம்கும்… அனுதாப ஓட்டுலயே வாழுங்க! சரி வரேன். ஆனா நான் தான் சமையல். ஹாஸ்பிட்டல் போற ஐடியா இல்ல. சூப்பரா செஞ்சு ரெண்டு பேரும் சூப்பரா சாப்பிடுவோம். யமுனா அக்கா என்ன ஆனாங்க?”
“இந்நேரம் பார்த்து இவளும் அவ ஊர்ல கோவில் கொடை… கெடா வெட்டுன்னு கிளம்பிட்டா”
“உங்க சமையலுக்குப் பயந்து மாமா எஸ் ஆகிட்டாங்களா?”
“நீயுமா? இரு இரு இன்னைக்கு நானும் உன் கூடவே நின்னு என் திறமையைக் காட்டறேன்…”
“எதுல? சாப்பிடுறதுலயா?”
“அடி வாலு!” இருவரும் சிரித்துக் கொண்டே… “என்ன வாங்கலாம்? பிரியாணி பண்ணுவோமா…?” என்று கறிக்கடையை முற்றுகை இட்டு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பினர்.
“நாளைக்கு நானே கூட்டிட்டு வரேன் ஜானு… உன்ன விட நல்லாப் பாத்துப்பேன்,” என்று இடையே அவரே ஜானகியை அழைத்து அலர்விழி தன்னோடிருப்பதை தெரிவித்து விட்டார்.
சின்னவளை எஸ்தருக்கு மிகவும் பிடிக்கும். அது அவளுக்குமே தெரியும். அவர் மகனைப் பற்றி அவரிடம் வாய் திறக்க மாட்டாள். இவர்கள் உலகம் கணினி மையம், வீட்டைச் சுற்றி இருக்கும் பூ… செடி… கொடி.. நாவல் மரம்… புடவை… நகை… அலர்விழியின் வீடு… படிப்பு… சொந்தங்கள் பற்றிய புரளி… இவ்வளவு தான். அதில் மனோ அடக்கமில்லை.
அவளைப் பொறுத்தவரை மனோ அவள் வாழ்வில் வந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி… அது வேறு இது வேறு. எப்படியும் அவனால் வந்த நட்பில்லை அவர்களது.
வீட்டிற்கு வந்ததுமே அவள் களத்தில் குதித்து விட்டாள். “ரெண்டு பேருக்கு எதுக்கு ஆன்ட்டி இவ்வளவு செய்யணும்?”
“நம்ம ட்ரைவர் பாலாவோட பசங்களுக்கு பிரியாணின்னா ரொம்பப் பிடிக்கும். செய்யும் போது ரெண்டு கைப்பிடி எக்ஸ்ட்ரா செஞ்சா குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாமே…”
எஸ்தர் எடுபிடி வேலை செய்ய மதிய உணவு தயாரிப்பு முடிந்தது. உணவு மேசையை அலங்கரித்தது, அலர்விழியின் கைபக்குவத்தில் உருவான உணவு வகைகளின் மணம் வீட்டை நிறைத்தன.
“பாலாக்கு எடுத்து வச்சுட்டு நாம சாப்பிடுவோமா?”
“பத்து நிமிஷம் ஆன்ட்டி… தோட்டத்தைப் பாத்துட்டு முகம் கழுவிட்டு வரேன்.”
“நீ வச்ச செண்டு மல்லியப் பாரு. ஒரே கொத்துல இருபது பூ! யமுனா மாடி வரை மணக்குதுன்னு சொன்னா. என் மகனுக்கு இந்த வாசம் அவ்வளவு பிடிக்கும்!”
வீட்டில் உள்ள ஒருவருக்கும் தோட்டத்தில் அதிக நாட்டமொன்றுமில்லை என்றாலும் யமுனா நித்திய மல்லி பந்தல் போட்டிருந்தார். இவள் பங்கிற்குக் கற்றாழையும் ஓமவல்லியும் வெற்றிலையும் நட்டு விட்டிருந்தாள். மனோவிற்கு பிடிக்கும் என்று தெரிந்ததும் அவனுக்காகவே சென்ற முறை வீட்டிலிருந்து செண்டு மல்லியைக் கொண்டு வந்திருந்தாள். மலர்ந்திருந்த மலர்களின் வாசம் நாசியை எட்டியது.
இன்று புதிதாக கனகாம்பரம் ஆரஞ்ச், பிங்க், மஞ்சள் என்று பல நிறங்களில் பூத்துக் குலுங்கியது.
“என்ன டா பார்த்துட்டு நிற்கிற? யமுனா வாங்கி வச்சிருக்கா. நல்லாப் பூக்குது. இததான் தினமும் கட்டி வச்சுப்பா. கனகாம்பரம்.”
“கனாகாம்பரக் கலர் பாட்டிக்கு ரொம்பப் பிடிக்கும் ஆன்ட்டி. ரொம்ப வருஷம் முன்ன இருந்துது எங்க வீட்டுல. ஆனா இப்போ இல்ல.”
“வேணும்ன்னா உனக்கு ஒரு செடிய வளத்து வைக்க சொல்றேன். அடுத்து ஊருக்குப் போகும் போது எடுத்துக்கோ!”
“வேண்டா ஆன்ட்டி, நான் இங்கேயே பாத்துக்கிறேன்”
“இதப் பார்த்து இருக்கியா? பச்ச கனகாம்பரம்… நீலக் கனகாம்பரம்?”
“இது பாக்க அப்படி இருந்தாலும் அது கனகாம்பரம் இல்ல ஆன்ட்டி, நீலாம்பரி!”
“ஓ! என்னவோ போ… என்னை விட உனக்கு நிறைய விஷயம் தெரியுது. உன் அம்மா உன்ன ரொம்ப அழகா வளர்த்திருக்காங்க. பசிக்குது அலர்.”
“எனக்கும் பசி கொல்லுது. சிக்கன் 65 வாசம் இழுக்குது. போலாம் ஆன்ட்டி”
வீட்டிற்கு வெளியே இருந்த குழாயில் அலர்விழி முகம் கழுவ…
“நான் பாத்ரூம் போறேன். நீ கொடியில இருக்க டவல் எடுத்துக்கோ…” அவர் சென்று விட, கழுவிய முகத்தைத் துடைத்துக் கொண்டே உணவு அறைக்கு வந்தவள் உறைந்து நின்று விட்டாள். இதயம் அதன் அறையை விட்டு வெளியே குதித்துத் துடிக்க… அது அடித்துக் கொள்ளும் சத்தம் மட்டுமே அந்த அறையில் கேட்டது. நான்கு மாதங்களுக்கு மேலாகிறது அவள் இதயம் துடித்து… இன்று எகிறிக் குதித்தது.