20.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 20 

 

தினமும் ஒரே நேரத்தில் மது அருந்துபவனுக்கு, அந்த குறிப்பிட்ட நேரம் வந்தால் கை கால் உதறுமாம். குடித்தே ஆகவேண்டும் என்ற வெறி எழும்புமாம். இது மதுவென்றில்லை ஒரு காரியத்தைத் தினமும் விரும்பி ஒரே நேரத்தில் செய்யும் வழமை வைத்திருந்தால் நாம் அனைவரும் அந்த நேரத்திற்காகக் காத்திருப்பது இயல்பு தானே. 

அலர்விழிக்கும் அதே நிலை தான். பெண்ணின் கவனம் முழுவதும் கடிகாரத்தில். ‘எப்போ அங்க விடியும்?’ மனம் நச்சரித்தது.   சுரேந்தரோடு அர்ச்சனா கைப்பேசியில் கொஞ்சலும் உரிமையுமாகப் பேசுவதைக் கேட்டவளுக்கோ, ‘என்று தான் இப்படி மனோவோடு பேசுவேனோ’ என்றிருந்தது.

அவளைச் சுற்றி ஆட்கள் இருந்தனர் இருந்தும் மனம் மனோவை அதிகமாய் தேடியது. ஒவ்வொரு உறவு முறைக்கும் ஒரு பெயர் இருந்தது. ஒவ்வொரு உறவோடும் தனிப்பட்ட உரிமையும், எல்லையும் இருந்தது. 

மனோவோடு அவள் நிலை என்ன? அவர்கள் உறவின் பெயர் தான் என்ன? அவர்களுக்கிடையே இருக்கும் உரிமையும், எல்லையும் தான் என்ன? 

நட்பு என்ற நிழலில் நிற்க விருப்பமில்லை. எல்லை இல்லா வானம் போல் மனோவோடு எல்லை இல்லாத உறவு வேண்டும் என்றது மனது. அவனிடம் எல்லா உரிமையும் தனக்கு மட்டுமே வேண்டும் என்ற பேராசை தலை விரித்தாடியது. 

இருவருக்கும் இடையே அவன் பின்னியிருக்கும் மாய வலையை இன்றே அறுத்தெறிந்தால் என்ன என்று தோன்றவும், நேரம் காலம் யோசிக்காமல் அழைக்கும் எண்ணத்தோடு கைப்பேசியைத் தேட, தேடிய பொக்கிஷம் எங்கு      சென்றதோ? கண்களில் சிக்கவில்லை. 

நினைவு வந்தவளாய், “அச்சு ஃப்போன குடேன்…” என்று அர்ச்சனா முன் நிற்க, அவளோ தன்னுடைய கைப்பேசியைக் கொடுக்க, “ஃபோட்டோ பாக்க என்னுத வாங்கினியே, ஒரு கால்      போடணும். அதக் குடு,” என்றவளைப் பார்த்து ஒரு நிமிடம் விழித்த அர்ச்சனா, “உன் அண்ணாட்ட கேளு. மாது ஃபோட்டோவ அவன் ஃபோனுக்கு ஃபார்வர்ட் பண்ணிக்க வாங்கினான். உன்ட்ட சொல்லிட்டு தானே குடுத்தேன்.” 

‘ப்ச்! அண்ணனைத் தேட வேண்டுமா?’ மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். “சரி உன் ஃபோன குடு அண்ணாட்ட கொண்டு வர சொல்றேன்”

அழைப்பு போய் சேரவில்லை.

“என்ன அலர்?”

“நைட் சார்ஜ்ல போடல. சார்ஜ் காலியோ என்னவோஎடுக்க மாட்டேங்குது. அண்ணா ஃபோனும் எடுக்கல. சரி விடு… இப்போ வேலைய பாப்போம், கிளம்பும் போது வாங்கிக்கிறேன்.”

விட்ட வேலையை இருவரும் தொடர்ந்தனர். அதாவது நன்றாய் இருந்த கேசத்தை விழாவிற்காகக் கண்ட ‘ஹேர் ஸ்ப்ரே’ போட்டு குருவிக் கூடு போல் மாற்றியிருந்ததை மீண்டும் அதன் வனப்பிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இரு பெண்களும் இறங்கினர். 

சென்னை, மாலை நேரத்தை தொட்டுக் கொண்டிருக்க, பூகோள உருண்டையின் மறுபக்கத்திற்கு இன்னும் வெளிச்சம் சென்று சேரவில்லை. ஆனால் விடியும் முன் மனோ எழுந்து விட்டிருந்தான். தூக்கம் பிடிக்கவில்லை. பதின்ம வயது சிறுவன் போல் அந்த இளையவன் மெத்தையில் புரண்டான். நேரம் பார்த்தான். விழா முடிந்திருக்கும். அழைத்தால் என்ன என்று தோன்றியது. சுற்றி ஆட்கள் இருக்கக் கூடும் அவளைக் காணொளியில் காண இயலாது! 

கைப்பேசியை எடுத்தவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. விழி அவன் வாட்ஸ்-ஆப்பை நிறைத்திருந்தாள். முதல் பத்து நிமிடங்கள் அவள் மட்டும் தான் அவன் கண்களைப் பறித்தாள். அதன் பின் பெண்ணை சுற்றியிருந்தவர்களின் மேல் கவனம் செலுத்தினான். விழியைத் தவிர இருவரைத் தெரிந்தது. வாட்டம் சாட்டமாக இருந்த மாதவனோடு பெண் சிரித்த முகமாய் நின்றிருக்க மனோ இதழ்களிலும் அதே புன்னகை.  

தெரிந்த மற்றொருவன், அன்று நூலகத்தில் பார்த்த அதே மருத்துவன். இன்று அலர்விழி அவனைக்      கண்டு ஓடி ஒளிந்திருக்கவில்லை. இருவரும் புன்னகை முகமாய் இருந்தனர். ஏனோ மனோவிற்கு காரணமே இல்லாமல் அவனைப் பிடிக்கவில்லை. வெறுப்பில்லை என்றாலும் பிடித்தமில்லை.

சுற்றி இருந்தவர்களை மறந்து விழியை மட்டுமே பார்த்தான். பெண்ணைக் காணக் காண ஆசை அதிகமேயானது. யோசிக்கவில்லை. அழைத்து விட்டான். திரையில் விழி அவள் தங்கையோடும் வேறு இரு பெண்களோடும் நின்றிருந்தாள். காலையில் தான் சுய-விவர படத்தை மாற்றியிருப்பாள் போலும்.  

புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே காத்திருந்தவனின் அழைப்பு எடுக்கப் படவில்லை. அடுத்த இரண்டு நாட்களும் அப்படியே சென்றது.

ஒருவழியாக அன்று எடுக்கப்படவும், “விழி…”  என்றான் காதல் சொட்ட. ‘விழி’யில் இருந்த மென்மையை… காதலை… அலர்விழி கேட்டிருக்க வேண்டும். பெண் பனியாய் உருகிக் கரைந்திருப்பாள். ஒற்றை வார்த்தையில், அடிமனதில் காதலைக் கடத்தும் முடிவோடு அவன் விழி என்று அழைக்க, “ஹலோ?” ஆண் குரல்! நாராசமாய் அவனைத் தாக்கியது.

காதில் விழுந்த சத்தம் புதிது. ஒரு கைப்பேசியில் ஸ்பைவேர்(spyware) நிமிடத்தில் புகுத்திவிடலாம் என்பதால் தெரியாதவர்களிடம் அலர்விழி கைப்பேசியைக் கொடுக்க மாட்டாள். அது இவனுக்கு நன்கு தெரியும்! ‘யார் இவன்?’ நொடி தேக்கம் எபியிடம். எண்ணைப் பார்த்தான். விழி தான் திரையில். தவறான எண்ணிற்கு அழைக்கவில்லை.

ஆதரவு கொடுத்த அலைபேசியைப் பற்றி மறந்து போயிருந்தவன் காலையில் தான் அதை கவனித்து பேட்டரியை உயிர்ப்பித்திருந்தான். யோசனையோடு அழைப்பை எடுத்தான். கைப்பேசியின் சொந்தக்காரன் அழைத்தால், தன்னிடம் இருப்பதைக் கூறி வாங்கிக் கொள்ளச் சொல்லும் நோக்கத்தோடு அழைப்பை எடுத்தான். ஆனால் அழைப்போ கைப்பேசியின் சொந்தக்காரனுக்கு.

விழி என்பவர் தான் அலைபேசியின் சொந்தக்காரரோ? தன் சொந்தத்தில் யார் விழி? தெரியவில்லையே? “யாருங்க?” என்றான் பிரவீன். 

“விழி. சாரி அலர்விழி இருக்காங்களா? அவங்க ஃப்ரெண்ட் பேசறேன்.” 

“அவ பக்கத்துல இல்ல. ஃபோன் என்ட்ட இருக்கு. இம்பார்ட்டென்ட் மேட்டர்ன்னா சொல்லுங்க, நான் அவங்க வீட்டுக்கு கால் பண்ணி அவட்ட சொல்லிடுறேன்.” என்றான்.

ஏதோ… எங்கோ… இடறியது. “ஓ… அவசரம் ஒண்ணும் இல்ல. தேங்க்ஸ். நீங்க?”

யோசிக்கவில்லை பிரவீன். “அத்தான், அவ வருங்காலப் புருஷன்” என்றவன் கைப்பேசியை அணைத்திருந்தான். அவன் த்வனி… இனி அவளைத் தொடர்பு கொள்ளாதே என்றது போல் தோன்றியது எபிக்கு!

‘என்னைப் பொண்ணு பாக்க வராங்க’ என்றாளே! அவள் விளையாடவில்லையா? ஒரே நொடியில் இவனுக்கு சகலமும் ஆடிப் போனது.  இருக்காது என்று தன்னை அமைதி படுத்திக் கொண்டான்.

விழியின் குரல் கேட்காமல் பைத்தியம் பிடிக்கும் போல் இருக்க, இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் அழைத்தான். கைப்பேசி எடுக்கப்பட்டது. காதில் விழுந்த ‘ஹலோ’ கண்டிப்பாக அலர்விழியின் சத்தமில்லை.

“அலர்விழி?” என்று நிறுத்தினான். நகு பேசினாள். “நான் அவ தங்க பேசறேன். சொல்லுங்க…” என்றவளிடம், “நான் அலர்விழி ஃப்ரெண்ட் பேசறேன்… அவங்கட்ட பேசணும்,” என்று அவன் ஆரம்பிக்க, “பெஸ்டின்னு சேவ் பண்ணியிருக்கா… பாத்தேன், அது தான் எடுத்தேன். அவ ஃபங்ஷனுக்காக பட்டுப்புடவ எடுத்துட்டு இருக்கா. நான் வேற புடவ ஏரியால இருக்கேன். ஒரு நிமிஷம் இருங்க கொடுக்குறேன்,” என்றவளின் குரல் சில வினாடிகளில் கேட்டது. யாருடனோ பேசினாள். பின் யாரோ யாரோ பேசினார்கள். எபி பொறுமையோடே காத்திருந்தான்.

அலர்விழியிடம் சென்றிருப்பாள் போல, “ஏய் அலர் பாத்து முடிச்சியா இல்லியா?” என்ற சத்தம் கேட்டது. 

“இல்ல நகு! மண்டை காயுது! இவங்க இப்பிடி அவசர அவசரமா நிச்சயம் வைக்கணுமா?”

“முடிச்சுட்டு அத்தான் கிளம்பணும் இல்ல…”

“அவங்களே எடுக்க வேண்டியது தானே. எனக்கு டையர்டா இருக்கு. நேரம் ஆச்சு! சரி, இதப் பாரு நிச்சயத்துக்கு இது ஓவர் கிராண்டா இருக்கா? இல்ல ஓக்கேவா?” 

“கிராண்டா இருந்தா என்ன? எவ்வளவு அழகா இருக்கு பாரு! டபுள் ஓக்கே!”

“இந்த அத்தான் எங்க டி. அவர வர சொல்லு. அவருக்கு பிடிச்சிருந்தா இதயே எடுக்கலாம்! அப்புறம் இது நொள்ள அது நொட்டன்னு சொல்லியே படுத்துவார்.”

“இரு கால் போடுறேன்” 

இரண்டு நிமிடங்கள் பின் கைப்பேசியை எடுத்தவள், “அச்சோ சாரி சாரி சாரி… மாத்தி மாத்தி ஆள் வரவும் உங்கள மறந்துட்டேன். தப்பா நினைக்காதீங்க, உங்க நினைவில்லாம நான் வேற ஃப்ளோர் வந்துட்டேன். ஃபிரியானதும் அக்காட்ட பேச சொல்றேனே” என்றவளிடம், பதில் உரைக்க முடியவில்லை. 

அழைப்பு துண்டிக்கப் பட்ட பின்னும் கைப்பேசியை வெறித்திருந்தவனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ‘என்னைப் பொண்ணு பாக்க வராங்க’ ‘அவ வருங்காலப் புருஷன்’ ‘நிச்சயத்துக்கு இது ஓவர் கிராண்டா இருக்கா’ மாற்றி மாற்றி வாக்கியங்கள் அவனைத் துளைக்க, கண்கள் கலங்க ஆரம்பித்தன. 

விழிக்கு திருமணமா? வேறொருவனோடா? எப்படி சம்மதித்தாள்? தன்னால் தானோ? மூன்று வருட நண்பன் என்ற போர்வையால் அவளை இழந்தே விட்டேனா? நெஞ்சு கனத்தது. 

வாழ்க்கையில் ஆசைப்பட்ட எதுவுமே எபிக்கு கிடைக்காமல் போனதில்லை. படிப்பு விளையாட்டு என்று அனைத்திலுமே ‘ஆல் ரௌண்டர்’ என்பதால் ஏமாற்றம் கூட கண்டதில்லை. வலி என்றால் என்ன என்றே தெரியாதவன் முதல் முறை வலியை அனுபவித்தான். அது எவ்வளவு கொடுமை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டான். 

ஒன்றும் புரியவில்லை. கனத்த தலையும், அடைத்த மூச்சுக் குழாயும், பிழிந்து வலித்த நெஞ்சும் அவனால் முடியவே இல்லை. ‘விழி’ என்ற பனித்துளி உள்ளுக்குள் சென்று அவனை நெருப்பாய் சுட்டது. 

புலராத வானைப் பார்த்து கண்ணீரை உள்ளிழுத்தான். அவன் மேலேயே அவனுக்கு கோபமாக வர, அதைக் கையிலிருந்த கைப்பேசியில் காட்டினான். வாரக் கடைசியில் நண்பர்களோடு மலையில் ஹைக்கிங் சென்ற இடத்திலிருந்து அவன் அழைத்திருக்க, கோபத்தில் எறிந்த கைப்பேசி பாறையில் இடித்து… சிதற… அதன் பாகங்கள் அவன் கண் முன்னே அதல பாதாளத்திற்கு பறந்தது. 

உள்ளுக்குள் வெறுமை சூழ்ந்தது. அமெரிக்க மண்ணில் கால் மிதித்த அன்றிலிருந்து கடைசியாக அவளிடம் பேசியது வரை அவன் விழித்ததும் பார்ப்பது அவள் முகத்தைத் தான். படுக்கும் முன் பார்க்கும் முகமும் அவளுடையதே. 

விழியின், ‘ஹாய் மனோ’வில் கண் விழித்து, குட் நைட்டில் கண் மூட மனம் ஏங்கியது. 

ப்ராஜெக்ட், ஆகஸ்ட் இருபது அன்று ப்ரொடக்ஷ்ன் செல்வதாய் முடிவாகி இருக்க, இருபத்தி ஐந்தாம் தேதி அலுவலகத்தில் இவனது கடைசி நாள் என்பது ஏற்கனவே முடிவாகியிருந்தது. இதற்கிடையே கேம்பிரிட்ஜ் (மசாசூசட்ஸ் அருகே உள்ள நகரம்) சென்று தங்குவதற்கு வசதி செய்ய வேண்டும். வாகனம் வாங்க வேண்டும். மசாசூசட்ஸ் சென்று மகிழுந்து ஓட்டுநர் உரிமத்தை (லைசென்ஸ்) மாற்றி வாங்க வேண்டும். இப்படி நிறைய வேலைகள். இருக்கும் மனநிலையில் என்னத்தை எல்லாம் செய்வான்?   

செப்டம்பர் 1 கல்லூரியின் முதல் நாள். நடுவே அவன் ஊருக்குச் செல்ல வாய்ப்பே இல்லை. என்ன செய்வது குழம்பி      தவித்துப் போனான். காதல் கொடுக்கும் வலியை      தாங்கத் தெரியவில்லை. ஆதரவாய் தலை வருடத் தாயும் இல்லை. தோள் தட்டி காரியம் பேச தகப்பனும் இல்லை. தனித்துப் போனான். விழி என்பவளோடு அவன் நிம்மதி போகும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

நாட்கள் கடந்தது. முதல் முறை 13000கிமி இருவருக்கும் இடையே வந்து இருவருக்கும் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருந்தது.   

பிரிவின் வலி அவனுக்கு மட்டுமல்ல. சென்னை வந்து இரண்டு மாதங்களாகிய பின்னும் அலர்விழியால் இயல்புக்குத் திரும்ப முடியவில்லை. பெண் முகம் பொலிவிழந்து போயிருந்தது. நான்கரை மாதங்கள் முன்பு மனோவோடு பேசியது. அவர்களுக்குள் எல்லாம் முடிந்து போனது என்று தோன்றியது. ஏன் என்று தான் தெரியவில்லை. 

error: Content is protected !!
Scroll to Top