வேலையை முடித்து கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்த அம்பிகாவின் பார்வை முழுவதும் அலர்விழி மேல். சித்தியைப் பார்த்த பிரவீன் கூட்டத்தை விட்டு அவர் பின்னோடு வந்தான்.
“என்ன சித்தி, மணி மூணாகப் போகுது. கிளம்பலாமா?” கேட்டுக் கொண்டே அருகே வந்தமர்ந்தான் அந்த இளம் மருத்துவன்.
இரவு ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்கு துணை நின்றிருக்க, அவனுக்கோ தூக்கமின்மையால் அசதி. கை கால் நீட்டிப் படுத்தால் போதும் என்றது உடல். இருந்தும் ஒருத்திக்காக இழுத்துப் பிடித்துச் சுற்றித் திரிகிறான். அலர்விழியை பார்த்த அன்றே அவனை ஈர்த்தாள். பெண்ணின் அமைதியும், அடக்கமும், அளவான புன்முறுவலும், நிலம் பார்த்த பெண்மையும் அவளை மனைவியாக்கிக் கொள்ளும் முடிவில் அவனைத் தள்ளியது. ஆனால் இன்று? அவன் பார்த்த அலர்விழியே வேறு!
அமைதி என்றால் என்ன என்று கேட்பாள் போல் இருந்தது, அவள் மாதவன் அம்மாவிடம் பேசிய பேச்சு! அடக்கம்? அவள் ரவிக்கையின் ஜன்னலைப் பார்த்தபின், அடி வயிறிலிருந்து அவள் சிரித்த சிரிப்பின் சத்தம் கேட்டபின், ‘அடக்கம்’ என்ற வார்த்தைக்கும் அலர்விழிக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று தெரிந்து கொண்டான். இதோடு நின்றதா என்று பார்த்தால்… ம்ஹூம்! பெண்ணின் பரிமாணமே புதிதாக இருந்தது.
நியாயப்படி அவன் தலைதெறிக்க வேறு திசை நோக்கி ஓடியிருக்க வேண்டும். ஆனால் இன்றைய பரிமாணம் அவனை ஈர்ப்பிலிருந்து காதலுக்குள் இழுத்து போட்டது. அம்பிகாவோடு சுற்றித் திரிந்து, அவரோடு பேசி சிரித்துக் கொண்டிருந்த அலர்விழி, மருத்துவனுக்குள் ஆழப் பதிந்து போனாள். இவள் தான் தனக்கானவள் என்று உள்ளுக்குள் பதித்துக் கொண்டான்.
“கொஞ்ச நேரம் உக்காரு டா. நாலு வரைக்கும் மண்டபம் நமக்குத் தான்! எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எப்பவாது ஒண்ணு சேர்றோம், இருந்து பொறுமையாப் போவோமே…” பேச்சு பிரவீனிடம் என்றாலும் அவர் பார்வை அலர்விழியின் மீதே.
“என்ன சித்தி?” அவர் பார்வை சென்ற திசையை நோக்கினான். ஏதோ புரிவது போல் தோன்றியது, இருந்தும் அமைதி காத்தான்.
“அர்ச்சனாக்கு முடிச்சதும் அடுத்த வருஷமே வினோக்கும் முடிச்சிடணும்.” அவர் பார்வைக்கான பொருள் உணர்ந்த பின்னும் பதறவில்லை.
“இருபத்தியஞ்சு கூட ஆகல, அவனுக்கு என்ன அவசரம்?” என்றான் பொறுமையாக.
“அவள பாரேன். அழகா இருக்கா டா. அழகுன்னா வெளி அழகை சொல்லல. அவ எல்லாமே… அவ சிரிப்பு, பேச்சு, அறிவு, அப்பிடி எல்லாமே. எவ்வளவு வேலை சொன்னேன் தெரியுமா? கொஞ்சம் கூட முகம் சுளிக்கல. வேலைல நேர்த்தி, சுத்தம் ரொம்பப் பிடிச்சுது. எறும்பு மாதிரி சுறுசுறுப்பு. உன் தங்க அவ கிட்ட இருந்து கத்துக்கலாம்.
என்ன சொன்னாலும் மாடு மாதிரி தலைய ஆட்டாம சரின்னு படாட்டி மரியாத குறையாம எடுத்து சொல்ற குணம் தான் எனக்கு அவள திரும்பிப் பார்க்க வச்சுது. ரொம்ப அருமையான பொண்ணு டா. நேத்தோட படிப்பு முடிஞ்சுது. இப்போதைக்கு மேல படிக்கல போல. ஏதோ சென்டர்ல்ல கோர்ஸ் எல்லாம் பண்ணியிருக்கா, அங்கேயே அவ கை செலவுக்கு சம்பாரிக்கிறா! வெளிநாட்டுக்குப் போய் வேலை பாக்கணுமாம். அது தான் ‘ஆஸ்ட்ரேலியா போறியா’ன்னு கேக்கத் தோணுது.
போனா கிடைக்காதுன்னு சொல்லுவாங்களே… அந்த மாதிரிப் பொண்ணு. அவ போயிடக் கூடாதேன்னு தான் அவசரம்.”
“ம்ம்ம்…”
“ரெண்டு வருஷம் கழிச்சு தான் வரன் பாக்க ஆரம்பிக்கணும்ன்னு அண்ணி சொன்னாங்க. அவசரப்பட்டு யாருக்காவது அவங்க வாக்கு கொடுக்கறதுக்கு முன்ன, வினோக்கும் அவளுக்கும் விருப்பம்னா எனக்கு மருமகளா கேக்கலாம்ன்னு பார்க்கறேன்.”
“ம்ம்…”
“என்ன டா? யாருன்னே கேக்கல”
“சுருள் முடிய லூசா கொண்ட போட்டு… நட்சத்திரம் மாதிரி அதுல அங்கங்க வெள்ள முத்தை சொருகி… முகத்துல சுருள் சுருளா முடி தொங்க… ஆரஞ்ச் கலர்ல உதடு மினுக்க… அந்த பெரிய ஜிமிக்கி ஆட ஆட யாரைப் பத்தியும் கவல இல்லாம, இயல்பா… கண்ணு கத பேச, விரல் நாட்டியமாட, சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டு இருக்காளே, அவ தானே? அலர்! அலர்விழி!”
அம்பிகாவிற்கு பேச்சு வரவில்லை.
“ரெண்டரை வருஷமாத் தெரியும்! அவள பார்த்ததும் பிடிச்சுப் போச்சு சித்தி. யார் கிட்டயும் சொன்னதில்ல. கொஞ்ச நாள்ல மறந்திருவேன்னு நினைச்சு அவட்ட கூட சொன்னதில்ல. உங்கட்ட தான் என் மனச சொல்றேன்.”
“பிரவீன்…?”
“எனக்கென்னமோ அவள மறக்க ஏழு ஜென்மம் ஆகும்ன்னு தோணுது சித்தி”
“கண்ணா!”
“முன்னமே என் பேஷண்ட் ஒருத்தங்க அவ அப்பாவோட ஃப்ரெண்டுன்னு தெரிஞ்சுட்டு அவர் மூலமா கல்யாணத்துக்குத் தோதா மாப்பிள இருக்குன்னு மேலாப்புல யாருன்னு விபரம் கொடுக்காம பேசச் சொன்னேன், அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்க…”
“டேய்..?”
“அவ படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்த பிறகு தான் கல்யாணம் பண்ணுவாளாம். அதுவும் வெளிநாடு போய். அவ கொள்கையாம். அதனால அத பத்தி யார்கிட்டயும் பேசல!”
“பிரவீன்?”
“என்ன சித்தி?”
“அவ பொறந்ததுல இருந்தே எனக்கு அவள தெரியும். அவ உனக்கு பொருத்தமில்ல டா. உன் டைப்புக்கு சரி வர மாட்டா கண்ணா. நீ விரும்பற மாதிரி அமைதியான பொண்ணில்ல அவ. உன் அம்மாக்கு அடங்க மாட்டா. அவ காட்டாறு மாதிரி நீ அணை போட முடியாது. ஃப்ரீ டைப். அர்ச்சனா பிளவுஸ் கொஞ்சம் இறக்கி போட்டாலே நீ திட்டுவ. அவ பிளவுஸ் பின்னாடி இருந்த ஜன்னல் சைஸ்ச பாத்தியா? என்ன டா இப்படிப் பேசறாளேன்னு நினைக்காத! இது அவ சுதந்திரம். அவ பெரியம்மா கேட்டதுக்கே ‘பொண்ணுக்கு பொண்ணு தான் எதிரி’ன்னு பெண் சுதந்திரம் பேசறா!
அப்புறம் அவங்க வீட்டு பண வசதிக்கு உன் அம்மா ஒத்துக்கவே மாட்டா. அபிராமி, தேவை இல்லாம சத்தம் போட்டா இவ போடின்னு போய்டுவா, நித்தம் சண்டை தான் வீட்டுல! நீ நினைக்கிற அமைதி எல்லாம் கிடைக்காது. வீடு எந்நேரமும் சத்தமா தான் இருக்கும். யோசி!
எந்தக் காரணம் கொண்டும் வேலைய எல்லாம் விடுவான்னு தோணல. அவ படிப்ப ரொம்ப விரும்பிப் படிக்கிறா. உனக்கு எதுலயுமே அவ பொருத்தமில்ல கண்ணா. உனக்காக கண்டிப்பா அவ மாற மாட்டா பிரவீன். மாற மாட்டான்னு சொல்றத விட, அவளால மாற முடியாது!”
“அப்போ அவளுக்குப் பிடிச்ச மாதிரி நான் மாறிக்கிறேன் சித்தி. அவ அமைதியா பொம்மை மாதிரி இருக்கறத விட இப்பிடி சத்தமா சிரிச்சா அழகா இருக்கா இல்ல! இன்னும் வேணும்னாலும் படிக்கட்டும். வேலைக்குப் போகட்டும். இன்னும் அவளுக்கு என்ன என்ன தோணுதோ அப்டி எல்லாம் இருக்கட்டும் சித்தி… ஆனா என் கூட இருக்கட்டும். என் மனைவியா!”
“கண்ணா, நீ கத்தி பிடிக்கிறவன். அவ கம்ப்யூட்டரோட வாழறவ. ரெண்டு பேரும் ரெண்டு துருவம் டா… ஒத்து வருமா?”
“எல்லாம் ஒத்து வரும் சித்தி. அவ விட்டுக் கொடுக்காட்டி என்ன? நான் விட்டுக் கொடுத்துப் போறேன். இந்தக் காலத்துல பொண்ணுங்க வேலைக்கு போறது என்ன பெரிய விஷயமா? அது அவ விருப்பம்! அவ தான் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணுமா? நான் அவளுக்குப் பிடிச்ச மாதிரி இருந்துட்டு போறேனே சித்தி!”
இப்படி எல்லாம் ஒரு பெண்ணிடம் இவன் மனதைப் பறிகொடுப்பான் என்று யார் நினைத்தது? மனம் நிறைந்து போனது அவனைப் பெறாத தாய்க்கு.
“நல்ல பொண்ணு டா. ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க. அக்காட்ட அவ வீட்டுல பேச சொல்லவா?”
“அதுக்கு பதில் என் ஆசைக்கு கொஞ்சம் விஷம் கொடுத்து… ஆறடிப் பள்ளம் நோண்டி அத உள்ள தள்ளி… பெட்ரோல் ஊத்தி கொளுத்தி, பொதச்சிடுங்க சித்தி.”
“டேய்…” அவன் தோளில் தட்டி சிரித்தார்.
“நான் சொன்னது கரெக்டா இல்லியா?”
“100%” வாய் விட்டுச் சிரித்தார்.
மருத்துவனாய் இல்லாமல் போனால் கேட்டிருப்பான், “ட்வின்சா இருந்தும் ஏன் சித்தி அம்மா உங்கள மாதிரி இல்ல?” என்ற கேள்வியை.
“இப்போவே அவங்க வீட்டுல பேசி முடிவு பண்ணிட்டோம்னா நாளைக்குப் பின்ன பிரச்சினை இல்ல பாரு! அண்ணி காதுல போட்டு வைக்கிறேன் சரியா?”
“கொஞ்சம் பொறுங்க சித்தி. லண்டன் போறேன். பதினெட்டு மாசம் ஆகும் நான் சென்னை வர. அதுவரைக்கும் எனக்கு டிஸ்ட்ராக்ஷன் வேண்டாம். அவ கேட்ட ரெண்டு வருஷம் ஆகவும் கல்யாணம் பண்ணிக்கலாம்! நான் வந்ததும் அம்மாட்ட பக்குவமா சொல்லிட்டு, அப்புறம் அவங்க வீட்டுல பேசுவோம். என்னனாலும் எனக்கு அவ வேணும். அம்மா வேண்டாம்ன்னு சொன்னா அம்மா இல்லாமலே கல்யாணம் நடக்கும்ன்னு சொல்லிடுவோம்!”
“அவ விருப்பமாது கேக்கட்டுமா வேண்டாமா?” விளையாட்டு போல் கேட்டார்.
“அவட்ட சரியான நேரம் பாத்து நான் சொல்லிக்கிறேன். அவ விரும்பினாலும், விரும்பாட்டாலும்… அவ கழுத்துல நான் தான் தாலி கட்டுவேன் சித்தி. யாருக்காகவும் அவள விடுறதா இல்ல.”
அம்பிகா இப்படி ஒரு தீவிரத்தை அவனிடம் எதிர்பார்க்கவில்லை. வார்த்தையின் வீரியம் முகத்திலோ குரலிலோ இல்லை. அவன் பார்வை அலர்விழியை வருடிக் கொண்டிருந்தது.
மூத்தவன் அவருக்கு என்றுமே ஸ்பெஷல் தான். அவன் மேல் தனிப் பிரியம் உண்டு. பிரவீன் விருப்பம் தான் அவர் விருப்பமும் கூட!
“நான் பார்த்துக்கிறேன் கவலையை விடு! எப்படியோ நம்ம வீட்டு மருமகளானா சரி தான்! இருந்தாலும் பிரவீன் உனக்கு அவ தங்கதான் டா சரி மேட்ச். சமத்துப் பொண்ணு!”
“சித்தி அவ கைய பாத்தீங்களா?”
“ஏன் அதுக்கு என்ன குறை?”
“குறை தான் குறை!”
“ஒரு டாக்டர் பேசற பேச்சா இது? எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. போடா… இன்னைக்கு மண்டபத்துல வந்த பொண்ணுங்கள்ல ஒருத்தி அவ கிட்ட நிக்க முடியுமா? என்ன ஒரு அழகு! குணத்துலயும் சரி.. முகத்துலயும் சரி இன்னும் அந்த இன்னொசன்ஸ் அப்பிடியே இருக்கு. இந்த கையோட தானே இத்தன நாள் வாழ்ந்தா… இனியும் வாழ்ந்திடுவா! அப்புறம் அத ஏன் குறையா பாக்கணும் நாம?”
“அப்போ அவ உங்களுக்கு மருமகளா இருக்க ஓகேவா?”
“வினோக்கும் அவளுக்கும் ஓகேன்னா… எனக்கும் ஓகே தான்!”
“கொஞ்சம் பொறுங்க. அர்ச்சனா கல்யாணம் போது நமக்கு தெரிஞ்சுடும் அவ உங்க மருமகளா இல்லையான்னு.”
“என்ன டா பேசற? புரியற மாதிரி பேசேன்!”
“வினோவ கவனிங்க. அவன் பார்வையை கவனிங்க,” கூறியவன் மீண்டும் மாதவன் எதிரே சென்று அமர்ந்து கொண்டான். அதாவது அலர்விழி அருகே. அவன் அமர திரும்பிப் பார்த்த அலர்விழி புருவங்கள் உயர்த்தி, “ஹாய் டாக்” என்று அழகாய் புன்னகைத்தாள். “ஹாய்” சின்ன தலையசைப்போடே புன்னகைத்த மருத்துவன், அலர்விழி என்ற வானில் சிறகில்லாமல் பறந்தான்.
“அம்மா… ஐயா பார்க்கிங் கிட்ட உங்கள கூப்பிட்டாங்க,” வேலையாள் ஒருவன் வரவே, “அர்ச்சனா கிளம்ப ரெடி ஆகு, வசந்தி கொஞ்சம் வா…” என்று கூறிவிட்டு அம்பிகா எழுந்து வேலையைப் பார்க்க சென்று விட்டார்.
மாதவனும் வினோத்தும் நகர்ந்துவிட, அங்கிருந்த நாற்காலியில் தனித்துக் கிடந்த கைப்பேசியை பிரவீன், வீட்டாருடையதாக இருக்கும் என்ற நினைப்பில் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நகர்ந்தான்.
அர்ச்சனாவோடு அலர்விழி சென்று விட்டிருக்க, கரத்தில் இருந்த பனிக்கூழை நகுநா கையில் திணித்து விட்டு வசந்தி அவள் அத்தையோடு சென்றுவிட, ஒரு ஓரமாக அமர்ந்த நகுநா உலகம் மறந்து பனிக்கூழோடு ஐக்கியமானாள்.