18 அத்தியாயம்
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்…
எலும்பை உருக்கும் குளிர்காற்று திறந்திருந்த ஜன்னல் வழி அறைக்குள் நுழைந்து குளிர்ந்திருந்த அவன் மனதோடு அவன் உடலையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது. அந்த அவன் – மனோ. அவனைக் குளிர்வித்துக் கொண்டிருப்பது அலர்விழி அனுப்பியிருந்த அவள் புகைப்படம்.
மணற்கடிகாரம் வடிவில் கண்களை நிறைத்தாள் அவன் அழகிய இராட்சசி. வேலைப்பாட்டில் மிளிர்ந்த ஆரெஞ் நிற சைனீஸ் காலர் ரவிக்கையும், அதிக வேலைப்பாடில்லாத அழகிய புடவையும் அவளுக்கே அவளுக்கென்று வடிவமைத்தது போல் இருந்தது. அவ்வளவு நேர்த்தியாய் உடுத்தியிருந்தாள். அவள் தேன் நிறத்திற்கு எல்லாமே அழகு தான்.
மாராப்பு முழுவதும் குட்டி குட்டி அடுக்குகள். கொஞ்சம் அதிகமாக அவனை சுண்டி இழுத்த தேன் நிற இடை. பார்த்தவன் இதழ் விரிந்தது. “அடக்கம் ஒடுக்கமா இப்படியே நில்லுடி…” சிரித்துக் கொண்டான்.
நின்றிருந்தவள் பின்னால் மங்கலாய் தெரிந்த மஞ்சள் மற்றும் ஆரஜ் சாமந்தி அவளை இன்னுமே எடுப்பாய் காட்டியது.
புருவத்திற்கு அருகே தொங்கி நின்ற சுருளை முடியும், ஜிமிக்கியும், ஆரஞ்சு சுளை உதடும் மனோவை இனிதாக இம்சை செய்யவில்லை என்றால் கண்டிப்பாக இருவரும் நண்பர்கள் தான்!
மணி நேரமாய் அவளையே பார்த்து உருகிக் கொண்டிருப்பவன் நண்பனாய் இருக்கும் தகுதியை இழந்திருந்தான். இன்னும் விரலால் வருடவில்லை அவள் பிம்பத்தை. கண்கள் மட்டுமே வருடி நின்றது அந்த நீள நயனத்தை. சிரித்த கண்கள் கதை பேசியது அவனோடு.
அவன் கைப்பேசியை அணைத்ததும் மீண்டும் அழைக்க அவகாசம் அவளுக்குக் கிடைக்கவில்லை. மாதவன் வந்து விடவே ஒற்றை புகைப்படம் மட்டும் எடுக்கச் சொல்லி அதை மனோவிற்கு அனுப்பவும் ஜானகி ஆன்ட்டி அழைத்திருந்தார். அனைவரிடமும் கூறிவிட்டுக் கிளம்பத் தான் நேரம் சரியாயிருந்தது.
அவளிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஆனால் கிடைத்த புகைப்படமே போதுமானதாக இருக்க, அதன் பின் அவனும் அழைக்கவில்லை.
‘தனக்கும் விழிக்கும் மட்டும்’ என்று ஒன்றுமில்லை என்று எண்ணியவனுக்கு அவர்களைப் பற்றி அசை போட விடயம் அதிகம் இருந்தது. முதல் நாள் பேருந்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவளை சுற்றி எத்தனை பேர் இருந்தனர்? அவள் தன்னைத் தானே பார்த்தாள். அன்றே அவள் நயனம் அவனை இழுத்ததே! ஈர இதயத் துடிப்பை உணர்ந்த உள்ளங்கையைப் பார்த்தான், கண்கள் மூடி கண்ணெதிரே தெரிந்தவளிடம் ‘லவ் யூ டி, என் செல்ல இராட்சசி’ என்றான் காதலாய்.
நாள் ஒன்றிலிருந்து இருவருக்கும் இடையே மின்னல் கீற்றாய் வந்து சென்ற நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டே கண்ணயர்ந்தான்.
அவன் கனவை நிறைத்தவள் மாதவனோடு அவன் மகிழுந்தில் அமர்ந்திருந்தாள்.
“பட்டு வேட்டி எல்லாம் போட்டு ரொம்ப ஹேன்சமா இருக்க மாதுண்ணா”
“அர்ச்சனாவோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அண்ணனுங்க, அத்தானுங்க எல்லாம் பட்டு வேட்டியும் ரா சில்க் சட்டையும் போட்டே ஆகணும்னு சொல்லிட்டா.”
“இந்த க்ரீனிஷ்-ப்ளூ உனக்கு நல்லா இருக்குண்ணா.”
“தேங்க்ஸ் டி. ஆமா உன்ன போட்டோ எடுக்கும் போது கூட புடவைய அடக்கமா கட்டி இருந்த மாதிரி இருந்துது. இப்போ என்ன இப்பிடி பறக்க விட்டுட்டு நிக்கற?”
என்ன கூறுவாள்? ஜானகி ஆன்ட்டி அறையின் முழு நீளக் கண்ணாடியில் அடங்க மறுத்த கேசத்தை அடக்கிய பின் மனோ கூறியதே சரி என்று தோன்றவே மாற்றினேன் என்றா?
“சிங்கிள்ல விட்டா ஸ்டைலா இருக்கும்ன்னு தான்.”
“நம்ம வீட்டு ஃபங்ஷன், உனக்கும் வேலை இருக்கும், தடுக்கி விழுந்திடாத.”
“ம்ம்… அங்க போய் பிளீட்ஸ் வச்சுக்கிறேன் ண்ணா. ஆமா, எல்லாரும் மண்டபத்துக்கு வந்தாச்சா?”
“இந்நேரம் போயிருப்பாங்க!”
“நீ வர மாட்டன்னு சொன்ன. லீவ் எப்பிடி கிடைச்சுது? எத்தன நாள் லீவ் ண்ணா? எப்போ கிளம்புவ?”
அடுத்த ஒரு மணி நேரம் எதை எதையோ பேசிக் கொண்டே மண்டபம் அடைந்தனர்.
வாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்த திருநாவுக்கரசிற்கு அலர்விழியை சட்டென்று அடையாளம் தெரியவில்லை. மாமா அருகில் வரவும், “மாமா… தியாகு சித்தப்பாவோட பொண்ணு அலர்விழி…” என்று ஆரம்பிக்கவும் அம்பிகாவும் அங்கு வந்திருந்தார்.
“ஹேய்… அலர் பொண்ணே… வா வா! என்னங்க யாருன்னு தெரியல? நம்ம சௌந்தர்யா அண்ணியோட மூத்தவ.”
“நாலஞ்சு வருஷம் இருக்குமா பார்த்து? அதுக்குள்ள நல்லா வளர்ந்துட்ட. அதுதான் சட்டுன்னு அடையாளம் தெரியல டா. அதுக்காக மாமாவ கோவிச்சுக்காத சரியா?” என்றார் திரு.
“இல்ல மாமா, அப்படி எல்லாம் இல்ல.”
“நீ நல்லா இருக்கியா மா?”
“நல்லா இருக்கேன் மாமா… நீங்க நல்லா இருக்கீங்களா?”
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அம்மா அப்பா எல்லாம் உள்ள தான் இருக்காங்க போ. உள்ள அர்ச்சானாட்ட கூட்டிட்டு போ அம்பிகா.” பெரியம்மாவின் அண்ணனா இவர் என்று நினைக்கத் தோன்றும்.
“நீ அத்த கூட போ,” என்றுவிட்டு மாதவன் வினோத்தோடு இணைந்து கொண்டான்.
“நீ பத்தாவது படிக்கும் போது நகு சடங்குக்கு உன்ன பார்த்தது! அப்போ சின்னப் பொண்ணா சுத்திட்டு இருந்த. காலம் எவ்வளவு வேகமாப் போகுன்னு உங்கள எல்லாம் பார்க்கும் போது தான் தெரியுது. நீ எப்டி இருக்க? ஹாஸ்டல் வசதியா இருக்கா?” அம்பிகா நலம் விசாரிப்போடே ஆரம்பித்தார்,
“என்ன படிக்கிற? படிப்பு எப்டிபோகுது?”
“ஃப்ரீயா இருக்கும் போது சொல்லு… ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.”
அவர் கேள்விகளுக்குப் பதில் கொடுத்தும், அவள் பங்கிற்குக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் மற்றவர்கள் இருந்த அறை நோக்கிச் சென்றனர்.
இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது நிச்சயம் ஆரம்பிக்க. அலங்காரம் முதல் பந்தி வரை வாலிபப் பிள்ளைகளே எடுத்துப் போட்டுச் செய்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக் கூட்டமும், பெண் வீட்டுக் கூட்டமும், சிறியவர் பெரியவர் என்று இடம் களை கட்டியது. வருடங்கள் முன் பார்த்த பல உறவுகள் மீண்டும் ஒன்று சேர அந்த இடமே பேச்சும் சிரிப்புமாய் உயிருள்ள ஓவியமாய் மாறிக் கொண்டிருந்தது.
பெரியம்மா மட்டும் அவர் வாயை அவ்வப்போது திறந்து தன் இருப்பை காட்டிக் கொண்டே இருந்தார். சிரித்த முகத்தோடு பொலிவாய் சுற்றித் திரிந்த அலர்விழி தான் எப்பொழுதும் போல் அவர் வாயில் விழுந்தாள்.
“சௌந்தர்யா உன் பொண்ணு என்ன சினிமாக்காரி மாதிரி சீவி சிங்காரிச்சுட்டு வந்து நிக்கிறா?” என்று அவர் பங்கிற்குக் கொளுத்திப் போட… அவள் போட்டிருந்த ரவிக்கைக்கு, சௌந்தர்யா மகளைப் பாவமாகப் பார்த்து வைத்தார். அவர் மகளுக்கு சாதகமாக ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால், கண்டிப்பாக அங்கு ஒரு பஞ்சாயத்தே நடக்கும் என்றதால் சௌந்தர்யா காதில் விழாதது போல் நின்று கொண்டார்.
“நான் சினிமான்னா வசந்தி ட்ராமாவா பெரியம்மா?” என்று அவள் கேட்டுவிட, “பாப்பா… என்ன இது?” என்று ஆரம்பித்த அம்மாவிடம், ‘பெண் சுதந்திரம்’ பற்றிப் பெண் பேச, அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்த அம்பிகா தான், “அண்ணி இப்போலாம் பிள்ளைங்க இப்படித்தான் போடுறாங்க. ஏன்? அர்ச்சனாவும், வசுவும் இப்படி தானே போட்டிருக்காங்க. நல்ல நாள் அதுவுமா பிள்ளையப் பேசாதீங்க! அலர், கொஞ்சம் வா டா,” என்று இழுத்துக் கொண்டு வெளியே சென்றார்.
நிச்சய விழா ஆரம்பிக்க, மேடையில் அர்ச்சனா அருகில் வசந்தியோடு நகு-வும் நின்று கொள்ள, அலர்விழியை அம்பிகா அவர் உதவிக்கு இழுத்துக் கொண்டார்.
வினோத், அர்ச்சனாவிற்கு அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்ய, மேடையில் அர்ச்சனாவின் அருகில் நின்றிருந்தவள் மீது பார்வை அவ்வப்போது பட்டு மீண்டது. பாவாடை சட்டையில் இரட்டை ஜடையில் பார்த்த உருவம் முழுப் பெண்ணாய் மாறியிருந்தாள்.
தாவணி கட்டிய பைங்கிளி ஈர்த்தாள், அவளின் கொள்ளைக் கொள்ளும் அழகால்! முழு வளர்ச்சியில்லாத ஒற்றைக் கை அவளைப் பல வாலிபர்களிடமிருந்து காக்க, வினோத்திற்கு அது ஏனோ பெரிய குறையாகத் தெரியவில்லை போலும். பால் நிலா பெண்ணின் தெற்றுப்பல் சிரிப்பில் கிறங்கிக் கிடந்தான்.
நிச்சயம் முடிந்து மதிய உணவோடு கூட்டம் குறைய ஆரம்பித்தது. இரண்டு மணி வாக்கில் வெறும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருக்க, மண்டபம் காலியானது.
சௌந்தர்யா, பாக்கியம், அபிராமி என்று பெரியவர்கள் ஒரு ஓரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஆண்களில் சிலர் கதையடிக்க, சிலர் சின்ன சின்ன வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய, சிறியவர்கள் ஒரு கூட்டமாகக் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.