மாதங்களுக்குப் பின்… அலர்விழியின் விடுதி:
அலர்விழியின் இறுதித் தேர்வும் முடிந்தது. மூட்டை முடிச்சு எல்லாம் கட்டியாயிற்று. கணினி மையத்தில் முழு நேர வேலையில் ஜூலை பாதியில் சேர்வதாகக் கூறியிருக்க, இன்று சென்றால் அடுத்து ஜூலை முதல் வாரம் தான் மீண்டும் வருவாள் என்பதால் எல்லாவற்றையும் எடுத்து அடுக்கி அறையைச் சுத்தம் செய்தாயிற்று.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மாதவன் வந்துவிடுவான். நேரே செல்லவிருப்பது நிச்சயதார்த்த நிகழ்விற்கு! அதற்கு தான் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
மாதவனின் மாமன் மகள் அர்ச்சனாவின் நிச்சயதார்த்த விழா இன்று. விழாவை முன்னிட்டு அலர்விழி வீட்டில் அனைவரும் முன்தினமே மாதவன் வீட்டிற்கு வந்தாயிற்று. நேற்று தான் அலர்விழிக்கு தேர்வு முடிந்திருக்க அவள் இங்கிருந்து நேரே வருவதாகக் கூறிவிட, மாதவன் வருவான், மூட்டை முடிச்சுகளோடு தங்கையையும் அள்ளிப் போட்டுக் கொண்டு செல்ல.
மூன்று வாரங்களாக தேர்வின் நிமித்தம் மனோவோடு இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேச முடியவில்லை. இவள் பேசியிருப்பாள்… ஆனால் அவன் தான் ‘படி விழி’ என்று விடுவான். “எந்த பாடத்துலேயாவது சந்தேகம் இருக்கா? சந்தேகம் இருந்தா எந்த நேரம் வேணா கூப்பிடு விழி,” என்று கூறாமல் கைப்பேசியை அணைத்ததேயில்லை அவன்.
மூன்று வாரங்கள் பெண்ணிற்கு யுகமாய் கழிய அவனுக்கு எதுவுமே தோன்றவில்லையா என்பது அவளின் பெருத்த சந்தேகம். இன்றுமே அலர்விழிக்கு சந்தேகம் தான் அவன் காதலைக் குறித்து. சில நேரம் சிறந்த காதலனாகத் தோன்றும் அவனே பல நேரம் உற்ற தோழனாய் தோன்றுகிறான்! அவள் சென்று கொண்டிருப்பது ஒற்றையடிப் பாதையோ என்ற சந்தேகம் இந்த இரண்டு மாதங்களாக சற்று அதிகமே! இருந்தும் கேட்டாளில்லை.
அவன், ‘என்ன கேள்வி இது? நாம நல்ல ஃப்ரெண்ட்ஸ் தான!’ என்று விட்டால்? தாங்க முடியுமென்று தோணவில்லை. கண்டிப்பாக அவனில்லாத வாழ்க்கை சூனியம் தான்!
ஒரு வழியாக அவள் நினைவுகளின் சொந்தக்காரன் அழைத்தான். மூன்று வாரங்களுக்கு பின் இன்று தான் காணொளியில் அழைத்திருக்கிறான். என்ன மாயமோ என்று அவள் நினைக்க, “விழி…” என்றான். பெண்ணின் உள்ளம் குளிர்ந்து போனது.
“எப்படி இருக்கீங்க மனோ?” என்றவளின் தொனியில் ஏக்கம் கொட்டிக் கிடந்தது. ‘உன்ன மிஸ் செய்தேன் விழி’ என்று இன்றேனும் கூறுவானா, ‘மிஸ் மீ’ என்று காதலாய் கேட்பானா? என்று காத்திருக்க, அவனோ என்றும் போல் புன்முறுவலோடு “ஹாய்…” என்றான். இந்த ஜென்மத்தில் காதல் கூறுவான் என்று தோன்றவில்லை பெண்ணிற்கு!
அவனோ பெண்ணை ஆசை தீரப் பார்த்தான். ஏனோ இமைக்கத் தோன்றவில்லை. பார்க்காமல் பேசாமல் மூச்சு முட்டியது. மூன்று யுகங்கள் காத்திருந்தான் அவள் தேர்வு முடிய. இந்த ஏக்கம் அவனே எதிர்பாராதது. விழியின் கல்லூரிப் படிப்பும் முடிந்தாயிற்று. இன்று மனதைத் திறந்தே ஆகவேண்டும் என்று தான் வந்தான். ஆனால் பார்த்தபின் எண்ணம் மாறியது. ‘என் காதலும் என் வாழ்வும் நீ. நீ மட்டும் தான் விழி’ என்று நேரில் கூற மனம் ஏக்கம் கொண்டது. பெண்ணைப் பார்த்த களிப்போடு, “நல்லா இருக்கேன். நீ என்ன சூப்பரா இருக்க? எங்க கிளம்பிட்டு இருக்க?” என்றான் துள்ளலோடு!
‘அது தானே… இவன் என்னை மிஸ் செஞ்சுட்டாலும்! ப்ச்.’ மனம் சுணங்கியது. “மாதுண்ணாவோட தாய் மாமா பொண்ணுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்,” என்றாள் சுரத்தே இல்லாது.
“யாரு… அன்னைக்கு பார்த்தேனே அந்த டாக்டரோட சிஸ்டரா?”
“அவருக்கும் தங்க முறை தான். அவர் மாதுண்ணாவோட ஒண்ணு விட்ட சொந்தம். நேர் சொந்தம் இல்ல”
“அப்பிடினா?”
“அண்ணாவோட தாய் மாமா திருநாவுக்கரசு. அத்த அம்பிகா. அவங்களுக்கு ட்வின்ஸ். வினோத் குமார், அர்ச்சனா.”
“அர்ச்சனாக்கு இன்னைக்கு நிச்சயம் ”
“ஆமா!”
“அப்போ அந்த டாக்டர்?”
“அம்பிகா அத்தையோட ட்வின் சிஸ்டர் அமராவதியோட பையன். இங்க வந்த பிறகு, மூணு வருஷமா தான் அவர பழக்கம்.”
“சரி சரி. அதுக்கு எதுக்கு நீ இவ்வளவு அழகாக் கிளம்பணும்? அவங்க தூரத்து சொந்தம் தானே?”
‘ஆமா அழகா இருந்தா மட்டும் இவரு காதலிக்கப் போறார்!’ அவனிடம் ஏதோ எதிர்பார்க்க, அது அவனிடமிருந்து கிடைக்கமல் போகவே, ஏமாற்றமும் கோபமும் சேர்ந்து கொண்டது.
“ம்ம்ம்… என்னைப் பொண்ணு பார்க்க வராங்க. அதுக்கு தான்! மாப்பிள்ளைக்கு என்னைப் பிடிக்க வேண்டாமா?”
அவள் விளையாடுவது தெரிந்தது. “அட்வான்ஸ் விஷ்ஸஸ் விழி!” என்றான் எழுந்த சிரிப்பை மறைத்து.
‘கொழுப்ப பாரேன் இந்தாளுக்கு! நானா பல்ல காட்டவும் கொழுப்பு ஏறுது!’ “ரொம்ப தேங்க்ஸ்! எல்லாம் சரியா வந்தா கையோட நிச்சயம்! உங்களால தான் வர முடியாதே… சோ உங்களுக்கு இன்விடேஷன் கூட இல்ல. ”
“போ டி லூசு, உளறாத!”
“நேரத்துக்கு வந்தா நிச்சய மோதிரத்தில பார்க்கலாம், இல்ல தாலில தான்.” என்றாள் கடுப்பு குறையாமல்.
கையிலிருந்த கைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு, மேசை மேல் இருந்த இரண்டடி கண்ணாடி பார்த்து முகத்திற்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தாள்.
“சொல்லுங்க… புடவ நல்லா இருக்கா? மாப்பிள்ளைக்குப் பிடிக்குமா?”
‘இந்த மாப்பிள்ளைக்கு இப்போவே உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆச வருதுடி’ நினைத்தவன், “பிடிக்கதுக்கு என்ன? உன் புடவ மட்டும் தான் தெரியுது உன் முகம் தெரியல. ஃபோன மேல வை.” என்றான்.
“மேல எங்க வைக்க? கண்ணாடி தான் இருக்கு. நீங்க பேசுங்க, எனக்கு கேக்குது! இந்தப் பட்டுப்புடவ எனக்கு நல்லா இருக்கா? இல்லியா?”
‘எல்லாம் நல்லா தான் இருக்கு!’ என்றாரம்பித்து இன்னும் என்னென்னவோ கூறி அவளை சிவக்க வைக்க ஆசை பிறந்தது. ஆனால், “உனக்கு என்ன, எது உடுத்தினாலும் அழகாப் பொருந்துதே. இந்த ஆரஞ்ச் சில்வர் காம்போ உனக்கு நல்லா இருக்கு!” என்று நிறுத்திக் கொண்டான்.
குஷியாகிப் போக, “தேங்க்ஸ் தேங்க்ஸ்” என்றவள் விழிக்கு மை தீட்டினாள்.
“அரை மணி நேரம் முன்ன கூப்பிட்டேன்… ஒரே பிஸி போல.” – எபி
“ஆன்ட்டிட்ட பேசிட்டு இருந்தேன்”
“அம்மாவா?”
“ம்ம்… காலேஜ் முடிஞ்சிடுச்சே, ஒரு நாள் வீட்டுக்கு வந்து இருந்துட்டுப் போன்னு சொன்னாங்க.”
“என்னவோ போ… என்னை விட நீ அம்மாக்கு தோஸ்தாகிட்ட. அவங்க கூடவே வேலை பாக்குற… அடிக்கடி போய் அங்க தங்குற, உன்னால அம்மாக்கு என் நினைப்பே வர மாட்டேங்குது ”
“என்ன அடிக்கடி? ரெண்டு தரம் போய் தங்கினேனா? அதுவும் அங்கிள் இல்ல வீட்டுல, தனியா இருப்பாங்களேன்னு போனேன்.”
“உன் வீட்டுல தெரியுமா?”
“பாட்டிக்கு மட்டும் தெரியும். பாட்டியும், ஆன்ட்டியும் ஃப்ரெண்ட்ஸ்! அம்மாக்கு தெரிஞ்சா கால உடைச்சிடுவாங்க.”
“ம்ம்! அதுசரி இப்போ என்னவாம்? அப்பா வீட்டுல தானே இருக்காங்க?”
“ஆமா இருக்காங்க… ஆனா ஆசையா இருக்கு வான்னு கூப்பிட்டாங்க. ஆன்ட்டிக்கு நான்னா ரொம்ப இஷ்டம். எல்லாரும் உங்கள மாதிரி மறந்து சுத்த மாட்டாங்க”
மெல்ல சிரித்தான். “ஆமா எனக்கும் வீட்டுல பொண்ணு பாக்குறாங்க. அது தான் உன்ன மறந்துட்டேன்.”
அவன் சிரிக்க, அவளிடம் மௌனம். ‘இவ மட்டும் வம்பு பண்ணுவாளாம்… நான் சொன்னா முகத்த மூணு முழத்துக்கு தூக்கி வச்சுப்பா! ஆளப் பாரு’ செல்லமாய் அர்ச்சித்துக் கொண்டான்.
“ஓய்… என்ன சவுண்ட காணம்?”
“அப்போ என்னை மறந்துட்டிங்க தான?”
“என்ன மறந்தேனா? அடிப்பாவி நேத்து கூடப் பேசினேனே!”
“எது? டவுட் இருந்தா கேளுன்னு சொன்னீங்களே அதுவா?” அவள் நொடித்துக் கொள்ள அவன் சிரித்தான். ஏனோ அவளைப் பார்த்த நிமிடம் விரிந்த இதழ்கள் இன்னும் அதே நிலையில் இருந்தன.
“அப்புறம் உங்க க்ளோஸ் ஃப்ரெண்ட் எப்பிடி இருக்கா?”
“என்ன புகையுது?”
“ம்கும்… புகைய என்ன இருக்கு?”
“நீ தான் சொல்லணும். என்ட்ட கேட்டா?”
“நானும் அவங்கள மாதிரி ஒரு ஃப்ரெண்டு தானே அப்புறம் ஏன் புகைச்சல்?” ஆதங்கத்தோடு கூறினாலும் அவனிடமிருந்து பதிலில்லை. அழுகை வரும் போல் இருக்க, முயன்று மீண்டு வந்தாள்.
பெண்களுக்குப் பொறாமை கூட அழகுதான். அலர்விழியின் செல்லப் பொறாமையும் அவனுக்கு அழகாகத் தோன்றியது. மெல்ல சிரித்துக் கொண்டான்.
முகத்தில் ஒப்பனை முடிய, குனிந்து முகம் காட்டினாள்.
“நல்லா இருக்கேனா மனோ?”
“உனக்கென்ன, எப்பவும் போல செம்மையா இருக்க. இந்த குட்டிக் கம்மல் எடுப்பா இல்ல. அன்னைக்கு ஒண்ணு போட்டிருந்தியே பெருசா, ரெக்டாங்கிள் கம்மல்ல இருந்து டிரையாங்கில் ஜிமிக்கி தொங்கிச்சே. அதுக்கு கூட, கொத்தா முத்து சரத்துல பெருசா ரெக்டாங்கிள் பெண்டன்ட்… அதப் போடு! இந்த பிங்க் லிப் கலர் எடுக்கவே இல்ல… டார்க் பீச் இல்ல லைட் ஆரஞ்ச் போடு”
இன்று நிச்சயத்திற்கு வரும் இருகண்கள் விழியைக் கபளீகரம் செய்யும் என்று தெரிந்திருந்தால் ‘இந்த ஜிமிக்கியைப் போடு, இந்த மாலையை அணிந்துகொள், இந்த உதட்டுச் சாயம் பூசு’ என்று அவளைத் தங்கப் பதுமையாகக் கிளம்ப விட்டிருக்க மாட்டான். இன்றைய தினம் இருவர் வாழ்வில் பல திருப்பங்களைக் கொண்டு வரும் என்று தெரிந்திருந்தால், ‘நிச்சயத்திற்குப் போகாதே விழி’ என்று காலில் விழுந்திருப்பான். இது எதுவும் தெரியாமல் போகவே அவன் வாழ்விற்கு அவனே ஆழமான குழி தோண்டிக் கொண்டிருந்தான்.
தலை அலங்காரத்தை சரி செய்து பூ சூட, கைகள் உயர்ந்து தலைக்குச் சென்றன. அவன் இதயம் தாளம் தப்ப ஆரம்பித்தது. பேச்சற்ற சில வினாடிகள் அவை.
“விழி…”
“என்ன?”
என்னவென்று கூற? சொல்லித்தான் ஆக வேண்டுமா? சொல்ல மனம் வரவில்லை. லஜ்ஜையே இல்லாமல் வளைவு நெளிவுகளைப் பார்த்தான். மேடு பள்ளங்களை ரசித்தான். ரசனை மாறாமல் அழைத்தான், “விழி…” என்று. அதில் மோகம் கொட்டிக் கிடந்தது.
“சொல்லுங்க மனோ”
சொல்லத்தான் நினைத்தான். இரு மொழிகள் தெரிந்தும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் விழித்தான்.
“அது அது வந்து… நீ… நீ ரொம்ம்ம்ப அழகா இருக்க விழி” என்றான்.
“ஆஹா… ஆஹா என்னே அதிசயம்! முத்து உதிர்கிறதே! அப்பிடியே இருங்க பூ வச்சுட்டு வரேன். இன்னொரு முறை சொல்லுவீங்களாம். நான் ரெக்கார்ட் பண்ணிப்பேனாம்.”
அவள் சிரிக்க, அவன் முகம் சிவந்தது. “போடி லூசு! போனாப் போகுதேன்னு சொன்னா என்னையே கலாய்க்கறியா? ஸாரிய சிங்கிளாப் போட்டுக்கோயேன்… இன்னும் அழகா இருக்கும்.” மென்று விழுங்கினான். பார்வையை விலக்க முயன்றும் தோன்றுக் கொண்டிருந்தான்.
“போங்க மனோ, கஷ்டப்பட்டு குட்டி குட்டியா ப்ளீட்ஸ் போட்டிருக்கேன் யூ-ட்யூப் பார்த்து. அது எல்லாம் மாத்த முடியாது. இப்போ சிங்கிள் ப்ளீட்டா மாத்தினா முந்தி தழையும்.”
யார் சேலை எப்பொழுது விலகும் என்று பார்க்கும் ரகமல்ல. அபி தன் முழு தேகத்தை மறைத்தால் அது அவள் வேலைக்கு செல்கிறாள் என்று அர்த்தம். மற்ற நேரங்களில் வீட்டில் இரண்டு கைக்குட்டை அளவு தான் அவள் மேலாடை. அவளிடம் எதையும் பார்க்கத் தோன்றியதில்லையே.
இன்று திரையில் தெரிபவள் மேலிருந்து கண்கள் எடுக்கவும் இல்லை. பார்வையை விலக்கவும் இல்லை. அபியும் விழியும் ஒன்றா? மனம் கேட்டது. முன்பு கேட்டுக் கொண்ட கேள்விகள் எல்லாவற்றையும் மீண்டும் தன்னிடமே கேட்டுக் கொண்டான். இம்முறை பதில் வேறு வந்தது.
கண்களை மூடினாலும் திறந்தாலும் மேடு பள்ளங்கள் உள்ளுக்குள் ஏதோ செய்தது. நட்பு என்ற வலை முதல் முறை இறுக்கியது.
அனைத்தையும் அனைவரிடமும் பகிர்ந்தவனால், இதை மற்றவரிடம் பகிர முடியாது என்று தெரிய அறிவு தேவையில்லை. மனம் ரசிப்பதை விழியிடம் மட்டும் தான் பகிர முடியும் என்றது அவன் காதல் மனம்.
இருந்தும், “நான் பார்த்ததை மற்றவர் பார்க்க வேண்டாம்… இழுத்து மூடு!” என்று அவளிடம் உரிமை எடுக்க முடியவில்லை. காரணம், அவளை இன்னும் கோட்டிற்கு அந்த பக்கம் நிறுத்தியிருந்தான். ஆனால், நாசுக்கான பேச்சும் பிடிக்கவில்லை!
தன்னை விரும்பும் பெண்ணை அவளுக்கே தெரியாமல் வஞ்சனையின்றி பார்த்து ரசிப்பது திருட்டுத் தனமாகத் தோன்ற, ‘ஒன்று உரிமையோடு செய். இல்லையேல் செய்யாதே’ என்று உணர்வு எச்சரிக்க… பட்டென்று கைப்பேசியை அணைத்து விட்டான்.
அவனுக்குத் தெரியவில்லை. இனி மாதக் கணக்கில், பல இரவுகள் பல பகல்கள் அவளோடு பேச முடியாமல் போகும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவள் முகத்தைப் பார்க்காத நாட்கள் நரகமாக மாறும் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் ‘மூடுடி’ என்று கூறியிருப்பான். கைப்பேசியை அணைக்காமல் பேசியிருப்பான். காதல் உரைத்திருப்பான்.
‘ஏன் மனோ கைப்பேசியை அணைத்தாய்? உரிமை இல்லாததாலா? அந்த உரிமையை வேண்டாம் என்றவன் நீ தானே?’ மனம் சாடியது.
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாத புதுத் தவிப்பு… உள்ளுக்குள் குடைந்தது. முதல் முறை நட்பு என்ற போர்வையின் கனம் தாள முடியவில்லை, விழியின் மனோவிற்கு. அவளுக்கும் இப்படி தானே இருந்திருக்கும்? மனம் கனத்தது. விழியை நேரில் பார்க்க… மனம் திறக்க ஆசை பொங்கியது.