17.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

ஐந்து கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தான். விண்ணபித்த கல்லூரிகளைச் சென்று பார்த்து வந்தான். கல்லூரியைச் சுற்றி இருக்கும் இடங்களைத் தெரிந்து கொண்டான். முதுகலை என்பதால் முதல் ஆண்டு கண்டிப்பாக பல்கலைக்கழக வளாகத்தில் தான் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. விருப்பப்பட்டவர் வெளியே தங்கிக் கொள்ளலாம் என்றிருக்க அவனுக்கும் வெளியே வீடெடுத்து தங்குவது தான் சரி என்று பட்டது. 

ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் பதில் வர ஆரம்பித்தது. அவன் GPA, GRE மதிப்பெண் அதிகம் என்பதாலேயே சில கல்லூரிகள் அவன் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது. எதிர்பார்த்த ஒன்று தான்! அதிக மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகள் நிலைக்க மாட்டார்கள் என்பதற்காகவே சில கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. 

அது ஒரு பக்கம் இருக்க, அலுவலகத்திலும் நன்கு பொருந்திப் போனான். காரணங்கள் இரண்டு. ஒன்று அவன் அதி புத்திசாலி. மற்றொன்று அங்கு பாதிக்கும் மேல் இந்தியர்கள். 

எபியின் அலுவலகத்தில் ஒருவன் இருக்கிறான், தமிழ்! தமிழ், தாய் மொழி மட்டுமல்ல அவன் பெயரும் கூட! அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் தமிழகத்தில் இருக்க, இருவருக்கும் இடையே கைப்பேசி தான் பாலம். அவள் முழித்திருக்கும் பாதி நேரமும் இவன் கைப்பேசியோடே சுற்றித் திரிவான். அழகாய் சிரிப்பான்… தலை கோதுவான்… வெட்கப் படுவான்… கொஞ்சுவான்… கெஞ்சுவான்… பார்க்க காவியமாகத் தோன்றியது எபிக்கு. விழியோடு இப்படி நேரம் காலம் இல்லாமல் கதை பேச ஆசை எழுந்தது. 

சில வாரங்கள் தான் இந்த எண்ணம் நீடித்தது. அதன் பின் எபிக்கு இது எதுவுமே ரசிக்கவில்லை. வேலையை நேரத்திற்கு முடிக்காமல் தமிழ் பின் தங்கி நிற்பது முதல் வருத்தம்! கடமை தவறுவது அவனுக்குத் தான் பிடிக்காதே! 

இவர்கள் நண்பர் கூட்டம் எங்குச் சென்றாலும் தமிழ் மட்டும் தனித்து கைப்பேசியோடு சுற்றுவான்! அதோடு நின்றால் கூட பரவாயில்லை! பெண் அவனைப் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள். அப்படித்தான் எபிக்கு தோன்றியது! 

‘அவ யாரு? அவட்ட பேசாத’

‘தண்ணி அடிச்சியா? பார்ட்டிக்குப் போகாத’

‘சிகரெட் பிடிச்சியா? கொடுத்தவன் ஃப்ரென்ட்ஷிப்ப கட் பண்ணு’

‘நேரத்துக்குத் தூங்கினியே? ஏன் லேட்டா எழுந்த?’

‘எல்லாரும் ஊர் சுத்தப் போனா என்ன? நீ போகாத’

‘இத செய்’ ‘அத செய்யாத’ – எதிலும் அவள் மூக்கை நுழைத்தாள். அவளிடம் தப்பித்துக் கொள்ள, கூசாமல் பொய் உரைப்பான், தமிழ். பல நேரம் இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடக்கும்… சில நேரம் வஞ்சனை இல்லாமல் குழைவான்! இது எதுவுமே எபிக்கு சகிக்கவில்லை. காவியமாவது காதலாவது மனநிலை எபிக்கு! 

விழியும் கேட்பாளே இதே போல் கேள்விகளை! அந்த இளம் அறிவாளி மூளை கணக்குப் போட்டது. தமிழின் காதல் வாழ்வைப் பார்த்தபின் காதலைக் கொஞ்ச நாள் தள்ளிப் போடுவதில் தவறில்லை என்ற எண்ணம் எபியிடம் வலுத்தது. 

சில மாதங்களுக்குப் பின்: 

என்றும் போல் அன்றும் காலையில் ஒரு கப் காபியோடு அமர்ந்தவன் கரத்தில் கைப்பேசி. காணொளித் திரையில் அலர்விழி. 

தினமும் இது இவர்களின் வழமையாகி மாதங்கள் ஆகிறது. 

“ஏன் இன்னைக்கு லேட்?” முன்போல் குரலில் தயக்கமெல்லாம் இல்லை. செல்ல கோபம் எட்டிப் பார்த்தது அவள் தொனியில். 

“சொன்னேனே நைட் வீட்டுல பார்ட்டின்னு. படுக்க லேட் ஆகிடுச்சு” 

“தண்ணி அடிச்சீங்களா?” 

“பியர் மட்டும் தான். ரெண்டு கேன்!”  உண்மை உரைத்தான்.

“ரெண்டு வேண்டாம். ஒண்ணு போதும் இனிமேல்,” என்றாள்.

வாதம் செய்யாமல் “ம்ம் சரி,” என்றான்.

“எதுக்கும் பார்ட்டி தானா?” 

அவள் சலிப்பு அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை. “காலேஜ்ல சீட் கிடைச்சது பெரிய விஷயமில்லையா?” 

“முடிவு பண்ணியாச்சா? எத அக்சப்ட் பண்ணறதா பிளான்?” 

“என்ன? ரெண்டு தான் கிடைச்சிருக்கு… ஹாவர்ட், ப்ரின்ஸ்டன் ரெண்டும் வெயிட்டிங்-ல போட்டிருக்கான். NYU கிடைக்கவே இல்ல. ஸ்டான்ஃபர்ட், எம்.ஐ.டி. மட்டும் தானே கையில இருக்கு!” 

“அது ரெண்டு தானே உங்க ட்ரீம். இதுல கிடைக்கிறது ஒண்ணும் லேசுபட்ட காரியம் இல்லியே… அப்புறம் என்ன? ஸ்டேன்ஃபர்ட் தானே டாப். அதுக்கு தான் போகப் போறீங்களா?” 

“இல்ல விழி, அதோட லொக்காலிட்டி எனக்குப் பிடிக்கல. எம்.ஐ.டி. தான் எல்லா விதத்துலேயும் சரியா வருது. என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு ஒருத்தன் (cambridge porter square) கேம்பிரிட்ஜ் போர்டர் ஸ்கொயர் கிட்ட தங்கியிருக்கான். ஏரியா ரொம்ப நல்லா இருக்கு. அதையே ஒத்துக்கலாம்ன்னு நினைக்குறேன். என்ன சொல்ற?” 

‘தோசைக்கு தேங்காச் சட்டினியா? தக்காளிச் சட்டினியா?’ என்று கேட்டுச் செய்யும் வீடு போல் தான் இருவரின் மனப் போக்கும். அவள் கேள்வி கேட்பதும், அதற்கு இவன் பதில் கொடுப்பதும், அவனுக்கு ஏனோ படுத்தி எடுப்பதாகத் தோன்றவில்லை. அதை அவன் கவனித்தானா என்றும் தெரியவில்லை. 

“யோசிக்க என்ன இருக்கு சரின்னு சொல்லுங்க. எப்போ ஸ்டார்ட் பண்றான்?” 

“செப்டம்பர் ஃபர்ஸ்ட் வீக்” 

“எப்போ தான் இந்த ப்ராஜெக்ட் முடியும்?” சலிப்பாகத் தோன்றியது அலர்விழிக்கு. 

“இழுத்தடிக்குது. ஜூலை எண்ட் வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்காங்க. இன்னும் கூட லேட் ஆகலாம்.” 

“ஜூலையா? நீங்க எப்போ தான் பேப்பர் போடப் போறீங்க?” 

“ம்ம்ம்… வேலைய விட நோட்டீஸ் குடுக்கணும்!” யோசனையாய் அவன். “டெலிவரி டேட் பிக்ஸ் ஆகட்டும்ன்னு பாக்குறேன்!”

“நடுல வருவீங்களா மனோ?” ஏக்கம் எட்டிப் பார்த்தது. 

யோசனையின் முடிவாய் கேட்டான், “நான் வேணும்னா கேப் இயர் வாங்கட்டா?” என்று. 

“சீட் கிடைச்ச பிறகா?” 

“ஆமா அட்மிஷன் கன்ஃபர்ம் ஆன பிறகு, நான் ஒரு வருஷம் கழிச்சு சேர்ந்துக்கிறேன்னு சொன்னா… ஒரு வருஷம் கேப் கொடுப்பாங்க.”

“எதுக்கு மனோ? அதெல்லாம் வேண்டாம். சட்டுன்னு முடிச்சுட்டு வாங்க.” அவன் சந்தேகத்தை முடித்து வைத்தாள் பெண். 

மிஞ்சிப் போனால் இன்னும் இரண்டரை வருடங்கள் திருமணத்தை தள்ளிப் போடுவார்கள் அவர்கள் குடும்பத்தில், அதற்குள்ளாக இவன் படித்து ஒரு வேலையில் அமர வேண்டாமா? ‘இன்னும் இவன் காதல் சொல்லவில்லையடி பெண்ணே!’ நீண்ட மூச்சுக் காற்று பெருமூச்சாய் அவனைத் தாக்கியது.

“என்ன டி?”

“ம்ப்ச்!”

நேரம் பார்த்தான். “ஹெவி ஸ்னோ இந்த வருஷம். காலைல இருந்தே காத்து படுத்தி எடுக்குது. இன்னைக்கு ஸ்னோ ஸ்டார்ம் (snow storm) இருக்கு. ஸ்டீஃபன் டெக்ஸாஸ் போயிருக்கார். அபிய தனியா வெளியில அனுப்ப முடியாது. அவள கூட்டிட்டு நான் கடைக்குப் போகணும். நீ தூங்கு காலையில பேசலாம்.” 

‘ஸ்டீஃபன் என்று அவளுக்காக இருந்தான் இன்று இருக்க?’- இது அலர்விழி. இன்று வரையிலுமே ஒன்று அபிகேல் தனியே அவள் காரியத்தைச் செய்வாள் இல்லை எபி முன் போய் நிற்பான். இது அனைத்துமே அலர்விழிக்குத் தெரியும். 

விழி புரிந்து கொள்வாள் என்று அவன் நினைத்தானோ? அதனால் நினைத்ததைத் தயக்கமின்றி கூறிவிட்டு கிளம்பி விட்டான். அலர்விழிக்குப் புரியாமல் இல்லை. அதனால் இன்று வரை வாய் திறந்தாளில்லை. அபிகேலுக்காக பரிதாபப்பட்டு இவன் அவளோடு சுற்றுவதும், அதனால் இவர்கள் பேச்சு தடைப்படுவதும் முதல் முறை இல்லையே!  

நீண்ட மூச்சோடு, ‘பாய்’யை உதிர்த்தாள். அவள் வலியும் ஏக்கமும் அவளுக்கானது. பேச்சில் காட்டிக் கொள்வதில்லை. 

பேச்சு, உணர்வைக் காட்டவில்லை என்றால் என்ன? கண்கள் காட்டியதே அவள் ஏக்கத்தை. அவளிடம் காதலுரைக்க எது தடுக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை. உந்தித் தள்ள காரணமில்லை என்றதால் இருக்கலாம். எங்கு போகப் போகிறோம் இருவரும் என்ற எண்ணமாயிருக்கலாம்! 

ஏன் கூறவில்லை? 

தோழன் ஹமியிடம் பேசும் அனைத்தையும் விழியிடம் எபி பேசினான். எஸ்தரிடம் பகிரும் அனைத்து விடயமும் அலர்விழியிடமும் பகிர்ந்தான். 

ஆனால் இதைத் தானே அபிகேலிடமும் செய்கிறான்?! அவளிடமும் ஒளிவு மறைவின்றித் தானே பேசுகிறான்? இந்த இடம் தான் இடறியது எபிக்கு! அபியிடமும் விழியிடமும் ஒரே உணர்வா வருகிறது? இருவரும் தனக்கு ஒன்றா என்ற கேள்வி காதலுக்கும், நட்புக்கும் இடையே சீனச் சுவராய் முளைத்து, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர ஆரம்பித்திருந்தது.

‘தனக்கும் விழிக்கும் மட்டுமே’ என்று கூறிக் கொள்ளும்படி ஒன்றுமில்லையே… காதல் பேச்சென்று எதுவுமில்லையே! ஏன் பிரிவில் இருவரும் உருகவில்லை? மற்ற பெண்களைப் பார்ப்பதற்கும் காதலியைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா? காதலியாய் விழியைப் பார்க்க முடியவில்லையா? அதனால் தான் காதலை அவளிடம் உரைக்கவில்லையா?  

சுய அலசலின் காரணமாக மனம் என்னும் வேதாளம் ‘காதல் தானா’ என்ற ‘சந்தேக’ முருங்கை மரத்தை நோக்கிச் சென்றது. 

இன்றைய நிலையில் அலர்விழிக்கு வேறொருவனோடு திருமணம் நடந்தால், அது எபியை பாதிக்குமா? கண்டிப்பாகப் பாதிக்கும். ஆனால் மனம் உடைந்து வாழ்க்கை வெறுத்து மரணத்தை நோக்கிப் போவானா? அவனுக்கு அப்படி ஒன்றும்  தோன்றவில்லை! 

வேறொருத்தி இவன் வாழ்வில் வந்தால் அவள் மேல் காதல் வருமா? வருவதற்கென்ன என்று தோன்றியது. 

மாதங்கள் முன் எழுந்த தவிப்பும், படபடப்பும் அடங்கிப் போயிருந்தது. நட்புக் கரம் நீட்டியிருக்கவே நட்பு மட்டும் தொடர, குழப்ப மனநிலை அந்த முதிர்ச்சியற்ற இளம் அறிவாளிக்கு. 

ஏதேதோ யோசனையோடு அபிகேலோடு கடைக்குக் கிளம்பினான். வெக்மென்ஸ் அங்காடி வளாகத்தில் அபியின் அலுவலக தோழியைக் காண நேர்ந்தது. 

“அவன் தான் உன் பாய் ஃப்ரெண்டா? நல்ல செலக்ஷன். ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்,” என்று அவள் அபியிடம் கூறுவது இவன் காதில் விழுந்தது. மருத்துவ பரிசோதனை முதல் வீட்டுச் சமையல் சாமான் வரை இவனே அனைத்துக்கும் அவளோடு சென்றால் வேறென்ன பேச்சை எதிர்பார்க்க? யாருமில்லா தோழியை அவனால் தனியே விடவும் முடியவில்லை! வயிற்றுப் பிள்ளையில்லை என்றால் கதை வேறு! 

அபிகேல் கூடவே தோழிகளாய் இருப்பவர்களுக்குக் கூட ஸ்டீஃபனைத் தெரியவில்லை! அவன் அவளை விட்டுச் சென்றால் கூட அவள் சார்பாக அவனிடம் பேச ஆள் இல்லாத பெண்ணை பார்க்கப் பாவமாகத் தோன்றியது. 

அவன் எல்லை அவனுக்குத் தெரியும் இருந்தும் முதல் முறை வாய் திறந்தான்.  “அபி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குழந்த வயிறுல வர வரைக்கும் சரி தான்! ஆனா குழந்த வந்த பிறகும் ஏன் கல்யாணம் பண்ணிக்க நினைக்க மாட்டேன்ற? அவரும் வீட்டுல இருக்கறது இல்ல! கமிட்மென்ட் வேண்டாம்ன்னு நினைச்சா ஏன் குழந்தை?” 

அவன் கேட்க, அவளும் அலட்டிக் கொள்ளவில்லை. உண்மையை உரைத்தாள். “எனக்கு மட்டும் ஆசை இல்லியா எபி? அம்மா அப்பா மாதிரியே புருஷன் பொண்டாட்டியா இருப்பேன்னு தான் நினைச்சேன். ரெண்டு பேரும் விரும்பினோம். அப்போ எல்லாம் அவர் ஒண்ணும் சொல்லல. ஓரே வீட்டுல வாழறது ஒண்ணும் இங்க புதுசில்லையே… ஒரு கட்டத்துல அவர் என்னோட வந்துட்டார். நாலு மாசம் முன்ன எப்போ கல்யாணம்ன்னு கேட்டா, ஸ்டீவ்க்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லியாம். இப்படியே இருந்தா என்னன்னு கேக்கறார்.

‘விட்டுட்டுப் போயிடுவேன்னு நினைக்கிறியா? நம்பிக்கை இல்லியா’ன்னு கேள்வி கேட்டா என்ன சொல்ல? இதப் பத்தி பேசினா சண்டை வருது. இந்த நேரத்துல எதுக்கு சண்டைன்னு விட்டுட்டேன். எனக்கும் அவர பிடிக்குது. அவருக்கும் என் மேல கொள்ளைப் பிரியம். அப்புறம் என்ன எபி?” 

“மாசமா நிக்கிற உன்ன திரும்பிக் கூடப் பாக்கிறது இல்ல. இது தான் கொள்ளைப் பிரியமா அபி? குழந்தையோட அப்பா உனக்கு பாய்-ஃப்ரெண்டா? புருஷன் இல்லியா? அப்போ உன் பிள்ளை அவர அப்பான்னு கூப்பிடுமா மாமான்னு கூப்பிடுமா? உன் உரிமைக்கு நீ தான் போராடணும் அபி!” 

“குழந்த பிறந்தா எல்லாம் சரி ஆகிடும் எபி. நீ ஏன் தேவ இல்லாம டென்ஷன் ஆகற?” போராடி வெறுத்துப் போய் விடவே, விதி போல் வாழ்க்கை என்று விட்டு விட்டாள். ‘மனைவி என்ற அங்கிகாரம் கொடு,      இல்லையேல் குழந்தையைக் கலைத்து விடுவேன்’ என்றதற்கும் ஸ்டீவிடம் எதிர்வினை இல்லை! அவன் தேவைகளுக்கு மசக்கை தடையாயிருக்கவும் வீட்டுப் பக்கம் வருவதும் இல்லை. இதை எப்படி எபியிடம் கூற? 

‘பிள்ளையைக் கொடுக்கத் தெரிந்தவனுக்கு, பிறக்கும் குழந்தைக்காகக் கூட அவன் கொள்கையை மாற்ற மாட்டேன் என்றால் என்ன செய்ய?’  இதில் எபெனேசர் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் அந்த பேச்சை அதன் பின் பேசவில்லை. அவன் வரமாட்டான் என்று எபிக்குத் தோன்றியது. வாழ்க்கைத் துணையை தேடுவதில் நிதானம் காட்டாமல் அவள் வாழ்க்கையில் அவசரப்பட்டு அவளே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டாள் என்று தோன்றியது.

சிலருக்கு அவசரம்! சிலருக்கு நிதானம்! அவரவர் நியாயம் அவரவருக்கு! 

அன்றைய காலைப் பொழுது அபியோடு சென்றது. முன் மாலையில் பனி மழை முழு வேகத்தோடு கொட்ட ஆரம்பித்தது. வாயிலில் கொட்டும் பனியை, அவ்வப்போது பனி கொட்டிக் கொண்டிருக்கும் போதே குளிரைப் பொருட்படுத்தாது தள்ளி விடுவதும், உப்பு போடுவதுமாக அன்றைய நாளும் அடுத்து வந்த நாட்களும் கடந்தன. 

error: Content is protected !!
Scroll to Top