Skip to content
அத்தியாயம் 17
முன்பெல்லாம் நடுச்சாமத்தில் வீட்டிற்கு வெளியே கோட்டான்கள் விழித்திருக்கும். இப்பொழுது வீட்டிற்குள் இரண்டு கோட்டான்களேனும் விழித்திருக்கிறது தங்கள் கைப்பேசிகளோடு. இரவு நேர மங்கலான ஒளியில் மெத்தை மேல் படுத்திருந்தாலும் அலர்விழியின் கண்கள் பிரகாசமாய் விழித்தே இருந்தன. காரணம் மனோ.
கண்களை மூடுவதும்… மீண்டும் திறந்து அருகில் இருக்கும் கைப்பேசியை பார்ப்பதுமாகப் படுத்திருந்தவளுக்குத் தவிப்பு உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. நேரம் பார்த்தாள். மணி 3:20. ‘இந்நேரம் கிளம்பியிருக்கணுமே… ஒரு மெசேஜ் கூட இல்ல… ம்ப்ச்’
‘அவர் மெசேஜ் போடாட்டி என்ன… நானே போடுறேன்,’ கைப்பேசியை எடுக்கவும், அவள் எதிர்பார்த்து தவம் கிடந்த சத்தம் கேட்டது. சந்தேகமே இல்லை அது மனோவிடமிருந்து தகவல் வந்திருப்பதற்கான அறிவிப்பே தான்!
தகவலைப் பார்த்தாள். அதற்குள் அவள் விழித்திருப்பது அவனுக்குத் தெரிந்துவிடவே அழைப்பு விடுத்தான்.
“மனோ…” “விழி” இருவரின் அழைப்பும் மோதி நின்றது.
“நீ இன்னும் தூங்கலியா? உன்ன என்ன சொன்னேன்?”
“படுத்துத் தான் இருக்கேன் மனோ. தூக்கம் வரல நான் என்ன பண்ணட்டும்?”
“யோசனையை நிறுத்து. தன்னால தூக்கம் வரும். இங்க போர்டிங் ஆச்சு. சரியா 3:30 எடுத்திடுவான் போல இருக்கு. இப்போ ஃபோனை ஃப்ளைட் மோடுக்கு போட சொல்லிடுவான்! நீ படு சரியா?”
“போய் சேர்ந்ததும் கால் போடுவீங்க தானே.”
“ஃபிளைட் மாறதுக்கு முன்ன பேசறேன் சரியா…”
“பத்திரம் மனோ,” குரல் கமறியது.
“விழி! ஏன் தேவை இல்லாத டென்ஷன்? உலகத்தில பாதி ஊருக்கு போயிட்டு வந்திருக்கேன். எனக்கு இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல விழி… சோ சில்! நிம்மதியாத் தூங்கு புரியுதா? பத்திரமா போய் சேர்ந்திடுவேன். நிம்மதியாப் படு டி,” அவனும் இதையே எத்தனை தரம் கூறுவான்.
“ம்ம்ம்”
கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்களை அணைத்து வைக்கும்படியான அறிவிப்பு வரவும், “வைக்கட்டுமா?” அவன் கேட்க, “மனோ…” என்றாள் தவிப்பாய்.
“தூங்குடா.” பாசம் சிதறப் பொறுமையாய் குழந்தைக்குக் கூறுவது போல் கூறினான். “நடுவில ஃப்ராங்க்ஃபர்ட்ல ஃப்ளைட் மாறும் போது மெசேஜ் இல்ல கால் பண்றேன். போய் சேர்ந்ததும் பேசறேன். பத்திரமா இருப்பேன். தினமும் கண்டிப்பா என்ன வேலை இருந்தாலும் பேசறேன்.” அவன் குரல் வருடியது. இவள் கண்கள் கரித்தன.
தலை வருடி அப்பா இப்படித்தான் இரண்டரை வருடங்கள் முன் விடுதியில் விட்டுச் சென்றார். அதன் பின் வாழ்க்கை மாறிப் போனது. இப்பொழுதெல்லாம் வீட்டையும், வீட்டு ஆட்களையும் பிரிந்து வாழக் கற்றுக் கொண்டாள். இனி மனோவும் அப்படித் தானே மாறிப் போவான். தனிமையைப் பிடித்துக் கொண்டு தன்னை விட்டு விடுவானோ?
‘லவ் யூ மனோ…’ என்றும் போல் தொண்டை வரை வந்தது. “டேக் கேர், மனோ,” என்று முடித்து விட்டாள்.
‘லவ் யூ சோ மச் விழி… வில் மிஸ் யூ விழி’ மனதை நிறைத்து நாக்கு நுனி வரை வந்தது. நட்பு என்னும் போர்வையைக் களைய நேரம் வரவில்லை போலும், “குட் நைட் விழி,” என்றான்.
அலைபேசியை அணைத்தவன் கண்கள் மீனம்பாக்கம் விமான ஓடு பாதையை வெறித்தன. வைகறையை தொட்டிருந்த பின்னிரவில், ஓடுபாதை விளக்குகளால் ஒளிர்ந்தது. கண்கள் அதை வெறித்தாலும் மனம் ஜானகி ஆன்ட்டியின் விடுதியில் தூக்கம் இழந்து கண்ணீர் கடலில் மூழ்கிக் கிடந்தவளைச் சுற்றியது.
ஏனோ இப்பொழுதெல்லாம் எம்.ஐ.டி.-யை விட விழியை அதிகம் பிடிக்கிறது. என்ன மாயம் செய்தாய் பெண்ணே? பல முறை கேட்டுப் பார்த்துக் கொண்டான். பதிலில்லை. காதல் தான்! சந்தேகமே இல்லை. இருந்தும் அதை வெளிப்படுத்தும் நோக்கம் இன்றும் இல்லை. காதலை உரைத்திருந்தால் அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள் என்பது திண்ணம். அவள் கண்ணீரை மீறி அவனால் எந்த முடிவும் எடுக்க முடியும் என்று தோன்றவில்லை!
இப்பொழுதே விழியை சமாளிக்கத் தெரியவில்லை… அதனால் இருவர் படிப்பும் முடியும் வரை போவது போல் போகட்டும் என்பது அவன் எண்ணம்.
அன்று நூலகத்தில் அலர்விழி கண்கள் காட்டிய நம்பிக்கை உள்ளுக்குள் சென்று அவனை ஏதோ செய்தது. நெஞ்சோடு அன்று பட்டும் படாமலும் நின்றவள் உள்ளுக்குள் புதைந்தே போனாள். அன்று தெரிந்து கொண்டான், அலர்விழி என்ற பெண்ணுக்காக தன் பெயர் கெடுவதைக் கூட பொருட்படுத்த மாட்டான் என்று.
இருவருக்கும் அதிக பழக்கமில்லை. இருந்தும் அவன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால் அவனோடு ஒட்டிக் கொண்டு நின்றிருப்பாள்? அணைத்தும் அணைக்காமலும் நின்ற விழியின் ஸ்பரிசம்… உடல் வெப்பம் இன்றும் மனதைப் புரட்டிப் போட்டது. போதாக் குறைக்கு அவள் வடிவமும் ஆண்மகனைச் சோதித்தது மறுக்க முடியாத உண்மை.
அன்றைய நாளில் அவர்கள் நின்ற விதம், அவள் சொந்தக்கார மருத்துவனிடம் இவன் கூறிய பதில் என்று நினைவு செல்ல, ‘மருத்துவன் நினைத்தது நடந்திருந்தால்’ என்று எண்ணம் தறிகெட்டு ஓடியது. பிடரியை அழுத்தி தேய்த்து விட்டுக் கொண்டான்.
மூடிய கண்களுக்குள் எதையோ கண்டிருப்பான் போல, முகம் மலர… இதழ் ஓரம் வெட்கப் புன்னகை வந்து நின்று கொண்டது. அதை வெளிக் காட்டாமல் இருக்க வாய்க்குள் சவ்வு மிட்டாயைத் திணித்துக் கொண்டான்.
‘விழி.. மூணு வருஷம் காத்திருப்பியா?’ மனம் ஏங்கியது. ‘காத்திருப்பாள்’ அவனே பதிலளித்துக் கொண்டான். அது கொடுத்த தைரியமாயிருக்கும் காதலை உரைக்காமல் சுற்றித் திரிவது!
காற்றைக் கிழித்து கொண்டு லுஃப்தான்ஸா விமானம் பறந்தது. மேகங்கள் மேல் ஒரு பயணம். சென்னையில் ஆரம்பித்து ஃப்ராங்க்ஃபர்டில் மாறி ந்யூவர்க் (Newark) விமான நிலையம் சென்றடைந்தான்.
பயணக் களைப்பை மிஞ்சியிருந்தது அவன் ஆர்வமும் எதிர்பார்ப்பும். மிக அருகில் தெரிந்தது அவன் கனவை அடையும் கதவு! கனவு முன் வர, சென்னை பின் சென்றது!
அபிகேல் வந்திருந்தாள் அவனை அழைத்துச் செல்ல. தமிழ்த் தாய்க்கும் அமெரிக்க வாழ் ஐரிஷ் தகப்பனுக்கும் அமெரிக்காவில் பிறந்த மகள். பிறந்தது முதல் பள்ளிப் பருவம் வரையிலுமே அமெரிக்க வாசம். அதன் பின் தகப்பன் விபத்தில் இறந்துவிட இந்தியா திரும்பினர் தாயும் மகளும். கல்லூரிப் படிப்பு சென்னையில். இரண்டு வருடங்கள் முன் சொந்த மண்ணுக்கு திரும்பியவள் இந்தியா செல்ல விருப்பப் படவில்லை. தாயும் இன்று உயிரோடில்லை என்பது தான் காரணம்.
“ஹாய் எபி,” மெல்ல அணைத்து கன்னத்தோடு கன்னம் வைத்து, “வா… எப்டி இருந்துது பிரயாணம்?” என ஆங்கிலத்தில் உரையாடலை ஆரம்பித்தாள். தமிழில் பேச ஆரம்பித்தால், அது தற்கொலை செய்து கொள்ளும் என்பதால் ஆங்கிலமே அவளுக்கு வசதி.
அனைத்திலும் அப்பாவின் சாயலைச் சுமந்து நிற்பவளிடம் தாயின் அன்பைக் காணலாம்.
“என்ன அபி வெயிட் போட்டா உயிர விட்டுடுவ? இப்போ என்ன டையட் எல்லாம் இருக்கறது இல்லியா?”
“நோ சில்லி! ஆம் ப்ரெக்னென்ட்,” என்றாள் எழும்பாத குட்டி வயிற்றைத் தடவிக் கொண்டே.
“எத்தனாவது மாசம்?”
“இப்பொ தான் ஆறாவது வாரம்… யார் கிட்டயும் சொல்லக் கூட இல்ல. உனக்குத் தெரிஞ்சிடுச்சு.”
“கல்யாணம் ஆனத என் கிட்ட நீ சொல்லவே இல்ல?” பெட்டியை வாகனத்தில் அடுக்கிக் கொண்டே குறைபட, அவள் சத்தமாகச் சிரித்தாள்.
“எபி! குழந்த பெத்துக்க கல்யாணம் தேவை இல்லன்னு உனக்குத் தெரியாதா?”
அவள் சிரிக்க அவன் ஏன் அதன் பின் வாய் திறக்கப் போகிறான். சட்டென்று ஏமாற்றி விடலாம். அப்படித்தான் ஒருவனிடம் ஏமாந்து நிற்கிறாள் என்பது கூடத் தெரியாது நிற்கும் சூதுவாது தெரியாத பெண்! மிகவும் அருமையான குணம் கொண்டதால் இருக்கலாம்… கல்லூரியில் ஆரம்பித்த தோழமை இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறது.
ஜெர்சி சிட்டியில் வேலை என்றதுமே தன்னோடு தான் தங்க வேண்டும் என்று சண்டையிட்டுச் சம்மதிக்க வைத்தாள். அவள் வீட்டிலிருந்து பத்து நிமிட வேக நடையில் எபியின் அலுவலகத்தை அடைந்து விடலாம். அவளோடு இருந்து கொள்ள அவன் ஒத்துக் கொண்டதின் காரணமும் இதுவே.
மூன்று தளம் கொண்ட டவுன் ஹவுஸ் (பகிரப்பட்ட சுவர்களைக் கொண்ட அடுக்கு மாடி வீடு). கீழே ஒரு கார் விடும் அளவு கராஜ் மற்றும் குளியலறையை உள்ளடக்கிய ஒரு பெரிய விருந்தினர் அறை. அதில் தான் அவன் வசிக்க ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. போதிய தனிமை கிடைக்கும்.
அறையை ஒட்டுயிருக்கும் படிகள் ஏறினால் பொதுவறை, கழிவறை, அடுக்களை… மேலும் ஒரு மாடி ஏறினால் இரண்டு படுக்கையறைகள். பெரிய வீடு என்றில்லை என்றாலும் அவர்களுக்குப் போதுமானதே!
ஸ்டீஃபன் வேலையாக டெக்ஸாஸ் சென்றிருக்கவே இருவர் மட்டுமே வீட்டில். காபி கொடுத்து சிறிது நேரம் அளவளாவியவள், அவனுக்குத் தனிமை கொடுத்து மாடிக்குச் சென்று விடவும் கைப்பேசியோடு அமர்ந்தான்.
வீட்டிற்கு தகவலை அனுப்பியவன், அலர்விழிக்கு தகவல் அனுப்பவும் பெண் அதற்காகவே காத்திருந்தது போல் உடனே பதில் அனுப்பி வைத்தாள். அவனுக்கு எழுதி கதை பேசும் பொறுமை எல்லாம் இல்லை. அழைத்தான்.
காணொளித் திரையில் வேர்த்து வழிந்து நின்று கொண்டிருந்தாள் அலர்விழி. நலன் விசாரிப்பு முடிந்தது.
“எத்தன ரௌண்ட் ஓடி முடிச்சிருக்க?”
“ரெண்டு தான்,” மூச்சு வாங்க, முதன் முதலில் இருவரும் மோதிக் கொண்ட மரத்தடி பெஞ்சில் அமர்ந்தாள்.
சுருட்டை முடியிலிருந்து வியர்வை நெற்றியில் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் இருந்த ஊரில் சூரியன் அஸ்தமித்திருக்க, அவளுக்கு மறு நாள் விடிந்திருந்தது. சூரியனின் தங்கக் கதிர் அந்த வியர்வைத் துளியைத் தங்கத் துளியாய் காட்ட, உள்ளுக்குள் பழைய நினைவலைகள்.
உள்ளங்கைகளைத் தேய்த்து விட்டுக் கொண்டான். “காலைலயே ரன்னிங் முடிச்சுடுவியா?”
“ம்ம்.. டெய்லி 5:00 டூ 6:00. ஈவ்னிங் சென்டர் போகணுமில்ல? அது தான்!”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்படவும், அதைத் திறக்க அபிகேல் உணவோடு நின்றிருந்தாள். மெலிதான ஸ்ட்ராப் வைத்த சின்ன கௌண் அணிந்து அழகுப் பதுமை போல் நின்றிருந்தவளைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வரும். பெண்களுக்குப் பொறாமை வரும். அலர்விழிக்கு பொறாமையெல்லாம் இல்லை… இருந்தும் விழி பிதுங்கி வெளி வரும் போல் இருந்தது.
“விழி, இவ என் ஃப்ரெண்ட் அபிகேல். அபி, இவங்க அலர்விழி” இருவருக்கும் அறிமுகம் நடந்தது. அபியின் அருகிலிருந்த மனோவைப் பார்த்தாள். அவன் இவளைத் தான் பார்த்து அமர்ந்திருந்தானே ஒழிய, அத்தனை அழகான அபியை விழுங்கும் பார்வை எல்லாம் பார்க்கவில்லை. அந்த மந்தகாச குறுஞ் சிரிப்பும், வசீகரப் பார்வையும் தனக்கானது மட்டுமே என்பது ஆறுதல்.
கல்லூரியின் உபயத்தால் ஆங்கிலம் சரளமாகப் பேச வரும், இருந்தும் அபியின் அமெரிக்க ஆங்கிலம் சற்று கடினம் தான் அலர்விழிக்கு. இரண்டு நிமிட உரையாடலுக்குப் பின் அவள் சென்றுவிட, “கூட தங்கப் போற ஃப்ரெண்ட், பொண்ணுன்னு சொல்லவே இல்லியே மனோ…” இவள் இழுக்க,
“ப்ரெண்ட்ஸ்ல ஆம்பள பொம்பளன்னு தனித்தனியா இருக்கா விழி?” அவன் எதிர்க் கேள்வி வைக்க, என்ன கூற முடியும்?
“கூட படிச்ச ஃப்ரெண்டுன்னு சொன்னீங்க. வெள்ளக்காரி மாதிரி இருக்காங்க?”
“ம்ம்… அவ ஹாஃப் இண்டியன் ஹாஃப் ஐரிஷ்- அமெரிக்கன்”
“ஓ…”
சிரிப்பை அடக்கியவன், ”இன்டர்வியூ முடிஞ்சுதா?” எனவும்,
“என்னை ஃப்ரெண்டுன்னு கூட அறிமுகப் படுத்தலையே மனோ…” என்றாள். குறையாகக் கூறவில்லை என்பது அவனுக்கும் தெரியும்.
“ஃப்ரெண்டுன்னு சொல்லணுமா விழி? ம்ம்ம்… சரி, நெக்ஸ்ட் டைம் மறக்காம சொல்றேன்!” என்றான் நமட்டு சிரிப்பை மறையாமல்.
இப்படியாகத் தினம் இவர்கள் பேச்சு காரண காரியங்கள் இல்லாமல் இங்கு தொட்டு அங்கு தொட்டு என்று எதையாவது தொட்டுவிடும். அருகே இருந்த வேளை தள்ளி நின்றவர்கள், இன்று தள்ளி இருந்த போது நெருங்க ஆரம்பித்தனர்.
பேச்சின் இடையே படித்த புத்தகத்தின் இதமும், விரிந்த மலரின் நறுமணமும்… அவ்வபோது வருவதுண்டு! குழைந்து… கொஞ்சி… ஏங்கி… தவித்து இப்படி ஒன்றுமில்லாத அவன் காதல், தெய்வீக காதலாய் தான் தோன்றியது, எபிக்கு!
நாட்கள் நகர்ந்தன.
error: Content is protected !!