Skip to content
அத்தியாயம் 16
“கடைக்குப் போயிட்டு வா மிட்டாய் தரேன்,” என்று காரியம் சாதித்த காலம் மாறி, “சொன்னத செய் இல்ல செல் ஃபோன் கிடையாது,” என்றாகிவிட்ட தலைமுறை இது. பல்லில்லா குழந்தை முதல் பல் போன கிழம் வரையிலுமே காலையில் கண் விழிப்பது கைப்பேசியில் தான். அதில் அப்படி என்ன தான் இருக்குமோ?
மற்றவருக்கு எப்படியோ… அவள் கண் விழிப்பது கைப்பேசியில் சிரித்துக் கொண்டிருக்கும் அவன் பிம்பத்தில் தான். இன்று நேற்று இல்லை, அவன் கைப்பேசி எண்ணை அவள் கைப்பேசியில் பதிந்த அன்றிலிருந்தே இது தான் அலர்விழியின் வழமை. காலை மாலை இரவு என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனோவைப் பார்த்துவிட வேண்டும் பெண்ணிற்கு.
ஒற்றை ஸ்மைலி மட்டுமே இதுவரை பகிரப்பட்டிருந்தது, அவள் திறந்து வைத்திருந்த வாட்ஸ் ஆப் திரையில். வாட்ஸ் ஆப் சுய-விவர திரைக்குள் போக அங்கு எபி நண்பர்களோடு சிரித்துக் கொண்டிருந்தான். எண்ணி பத்தே நாட்கள் தான் அவன் இங்கிருப்பான். அதன் பின்? நீண்ட மூச்சுக் காற்று வெளிவந்தது அலர்விழியிடமிருந்து.
இன்று அவனிடம் பேச வேண்டும் போல் இருக்க, ‘மனோ…’ என்று எழுத ஆரம்பித்து பின் அதை அழித்து, ‘ஹாய்’ என்று எழுதி பின் அதையும் அழித்து விட்டு மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்து, அழித்து, என்று தவிப்பும் தயக்கமுமாக பத்து நிமிடங்கள் ஓடிப் போனது.
அதே கணினி மையத்தில் நான்கு பேரோடு காரசாரமாகப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தவனுக்குக் கிடைத்தது பத்து நிமிட இடைவெளி.
ஏனோ அவனுக்கும் காலையிலிருந்தே விழி தான் அவன் எண்ணம் முழுவதும். இன்று எஸ்தர் மையம் வரமுடியாமல் போகவே, இதோ காபி அருந்தும் இவர்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்பதால் இங்கு வந்திருக்கிறான் வெகு நாட்களுக்குப் பிறகு.
அலர்விழி கணினி மையத்திற்குள் நுழையும் முன்னமே அவளைப் பார்த்து விட்டான் மாடி ஜன்னல் வழியே. ஒரே ஒரு ‘ஹாய்’ கூறலாம் என்றால் தடியன்கள் விட்டால் தானே!
கைப்பேசியை எடுத்தவன், வாட்ஸ்ஆப் மூலம் அலர்விழிக்கு ஒரு ‘ஹாய்’ தட்டி விடும் எண்ணத்தில் அவள் திரையைத் திறக்க, ‘விழி டைப்பிங்’ என்றது! தரையிலிருந்து ஒரு அடி மேலே பறக்கும் உணர்வு.
மீண்டும் பேச்சு வார்த்தை ஆரம்பமாகியது. அவ்வப்போது இவனும் திரையைப் பார்ப்பதும் அவர்களோடு பேசுவதுமாக நேரம் சென்றது.
‘விழி டைப்பிங்…’ ‘விழி ஆன்லைன்’ இதுவே கடந்த பத்து நிமிடங்களாக மாறி மாறி அவன் கண்களில் விழுந்து கொண்டிருந்ததே தவிர, ஒரு தகவலும் வந்த பாடில்லை!
‘ஒரு மெசேஜ் டைப் பண்ண இவ்வளவு நேரமா உனக்கு?’ அலுத்துக் கொண்டவனின் பொறுமையும் ஒரு கட்டத்தில் கரைந்து போனது.
‘ஒரு மெசேஜ் அடிக்க துப்பில்ல உனக்கு எல்லாம் எதுக்கு லவ்? போடி…’ என்ற அலுப்பு அலர்விழிக்கு எழ, கைப்பேசியை அணைக்க முற்படவும் பொறுமை இழந்தவனிடத்திலிருந்து அழைப்பு வந்தது.
‘ஐயையோ… கால் பண்ணிட்டேனா?’ என்று தான் முதலில் நினைத்தாள். அவள் அழைப்பை எடுக்கவும், அவன் பேச்சும் அப்படித்தான் இருந்தது. “சொல்லு விழி” என்றான் எடுத்ததும்.
என்னவென்று சொல்லுவாள்? ‘உங்கள ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று ஆரம்பித்து, கொட்ட நிரம்ப உண்டு தான். ஆனால் முடியாது! நிறைய இருந்தும் ஒன்றுமில்லாத நிலை!
“விழி?” – கேள்வியாய் அவன்,
“ம்ம்” – பதிலாய் அவள்,
“என்ன விழி?” – ஆர்வமாய் அவன்,
“என்ன மனோ?” – ஊமையாய் அவள்,
அதன் பின் இரண்டு நிமிட மிக நீளமான மௌனம்.
அவன் தான், “படிப்பு எப்டி போகுது?” என்று சில பொதுவான கேள்விகள் மூலம் மௌனம் களைந்தான்.
“விழி…”
“சொல்லுங்க மனோ…”
“இங்க ரியல் டைம் டெவலப்மென்ட்ல இருக்க தான?”
“ஆமா மனோ. கோர்ஸ் முடிஞ்சதும் ட்ரெயினிங்காக, கோடிங்ல போட்டிருக்காங்க.”
“அம்மா உன் ஃப்ரெண்டு தானே… அம்மாட்டப் பேசு. அம்மாட்ட உனக்கு இங்க பார்ட் டைம் ஜாப் வேணும்ன்னு கேளு. உன் சாமர்த்தியத்துக்கு வேலை கிடைக்கும். சேலரி, அலவன்ஸ் பத்தி எல்லாம் யோசிக்காத. என்ன கொடுத்தாலும் போதும் சொல்லிடு! எக்ஸ்பீரியன்ஸ் கெயின் பண்ணிக்கோ. அப்போ தான் படிப்பு முடியவும் சென்டர்ல இருந்து உன்ன ப்ளேஸ் பண்ணும் போது நல்ல கம்பனில ஈசியா கிடைக்கும்.”
“ம்ம்…”
“என்ன ம்ம்ம்…? அம்மாட்டப் பேசு.”
“பேசறேன் மனோ”
“ம்ம்!”
“மனோ…” அவள் குரலில் தயக்கம்.
“சொல்லு விழி…” அவன் குரலில் ஆர்வம்.
“இன்னைக்கு ஃப்ரியா…” கேட்டு முடிக்கும் முன் தொண்டை வரை வறண்டு போனது.
அன்றைய திடீர் சந்திப்பிற்கு பின் இருமுறை கணினி மையத்திற்கு வந்தவன் அவளைத் தேடி வந்து பார்த்தான். எண்ணி எண்ணிப் பேசுவான். ஆனால் இதயத்தை நிறைத்து விடுவான். வெட்டிப் பேச்சு பேசத் தெரியாதா இல்லை கூடாது என்ற திடமா தெரியவில்லை. இதுவரை இப்படி அர்த்தமான பேச்சுகள் மட்டும் தான் அவனிடமிருந்து.
அலர்விழிக்கு என்னவெல்லாமோ பேசவேண்டும். இவள் இடை வரை துள்ளிக் குதிக்கும் ஜான்சன் பற்றி… அவள் எம்பிக் குதித்து தொடர்ந்து ஆறு முறை கூடைக்குள் போட்ட பந்தைப் பற்றி… இதழ் விரிந்து மணம் பரப்பும் வெள்ளை நிற மல்லி பற்றி… என்றும் வாடாமல் மல்லி பெயர் கொண்டு வாசமில்லாமல் பூத்து நிற்கும் அழகிய வாடாமல்லி பற்றி… நேற்று இரவு பழைய புத்தகம் ஒன்றை படித்து லயித்தது பற்றி… இப்படி அலர்விழிக்கு சுவைத்தது, கண்டு களித்தது, தொட்டு உணர்ந்தது, மனதை வருடியது என்று எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் மனோ கைப்பிடித்து… தோள் சாய்ந்து!
ஆனால் இது எதுவுமே மனதில் இல்லாதது போல் எட்ட நின்று. ‘நீ நலமா நண்பா? நான் நலமே!’ என்று பேச வேண்டும்! மனம் முழுவதும் காதலை ஏந்திக் கொண்டு ஒன்றுமில்லாதது போல் பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை என்று அலர்விழியைக் கேட்டால் தெரியும். ஏன் அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லையா? இல்லை, அவன் கனவின் மீதான மோகம் அதையும் தாண்டியதா? இருக்கலாம். அலர்விழியிடம் பதில் இல்லை. அவனிடம் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலமை இல்லை.
“உனக்கு லேப் இருக்குமே விழி”
இன்று இல்லை என்றாலும் வார தினங்களில் வருவாள் என்று அவனுக்குத் தெரியுமே… இருந்தும் இந்தக் கேள்வி தேவையா?
செக்கு மாடு ஊர் போய்ச் சேராது என்ற உண்மை தெரிந்ததால் தள்ளி நிற்கிறான் போலும். அவனை ஏன் படுத்திக் கொண்டு? விரக்தியான மனநிலை. “ம்ம் இருக்கு. டைம் ஆச்சு, வைக்கிறேன் மனோ,” பதில் எதிர்பார்க்காமல் வைத்து விட்டாள்.
கரை சேராத் தோணியில் பயணிப்பவளுக்கு எதற்கு இந்த வீண் ஆசைகள் என்று அவளுக்கே தெரியவில்லை. உள்ளங்கைகளில் முகம் புதைத்து மேசை மேல் முழங்கை ஊன்றி அமர்ந்திருந்தவளுக்கு வாழ்க்கை மேல் வெறுப்பு வர ஆரம்பித்தது. இந்தக் காதல் எல்லாம் ஒன்று சேரத் தகுதி இல்லாதவர்களுக்கு ஏன் வரவேண்டும்? கடுப்பாய் வந்தது.
மீண்டுமாக கைப்பேசியில் எபியின் பிம்பத்தைப் பார்த்தாள். மெல்ல அவன் முகம் வருட, கை நடுங்கியது. இப்படி தன்னைத் தள்ளி நிறுத்தும் ஒருவன் மேல் பைத்தியமாய் திரிவது சரியா தவறா என்று பகுத்தறிய முடியவில்லை.
‘உனக்கு என்னைப் பிடிக்கும் தானே மனோ…’ மனம் பாறாங்கல்லாய் கனத்தது. ‘வேண்டாம் அலர். அவனுக்கு விருப்பம் இல்லை. விட்டு விடு!’ விடச் சொல்லும் அறிவு அது எப்படி என்று மட்டும் கூறவில்லை. அதனால் மனம் அவனை அசை போடுவதை நிறுத்தவில்லை.
யாரிடமும் பகிரவும் முடியாமல் உள்ளுக்குள் புதைக்கவும் முடியாமல் அவள் தவிக்க… இரண்டாவது நிமிடம் பிம்பத்தின் அசல் அவள் முன் வந்து நின்றது.
“விழி…”
சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க மனோ நின்றிருந்தான். அவன் இங்கிருப்பது அவளுக்குத் தெரியாதே… கீழ் தளத்திலிருந்து படி வழியே தாவி ஓடி ஐந்தாம் தளம் வந்திருந்தான். அதனால் மூச்சு வாங்கியது.
பிடிக்காமலா ஒருவன் விழுந்தடித்து ஓடி வருவான்? அவனுக்கும் அவள் மேல் கொள்ளைப் பிரியம் என்ற அவளுக்கு சாதகமான எண்ணம் வலுத்தது.
அதற்குள் இவன் எப்படி இங்கே? அவள் கைப்பேசியைப் பார்த்திருப்பானா? அவள், அவன் முகத்தை வருடிக் கொண்டிருந்ததை? பார்த்திருப்பான் தான்! அதிலென்ன சந்தேகம்?
அவன் முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடிந்தால் எதை எதையோ கண்டு பிடித்திருப்பாளே. அவனாக உணர்த்தினால் உண்டு! இன்று அவன் கண்டு கொண்டானா இல்லையா என்று அவள் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்!
சுழல் கதிரை ஒன்றை இழுத்து போட்டு அவள் அருகில் அமர்ந்தான். “சொல்லு விழி, என்னாச்சு?”
என்ன சொல்ல? விழித்தாள்.
“ஏதாவது சந்தேகமா? சொல்லித் தரணுமா?”
‘பாஸ்… உங்க ஆர்வத்திற்கு அளவே இல்லையா?’ இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
அவனுக்கு அவள் ஏக்கம் புரிந்திருக்குமோ? அவளும் கல் போல் தான் முகத்தை வைக்க நினைக்கிறாள். ஆனால் கண்ணாடி முன் நின்றால் அது சொல்லும் நீ நினைத்ததைச் சாதிக்கவில்லை என்று!
“உன்னால லேப் வர்க்க அப்புறம் பண்ண முடியும்னா ஒரு மணிக்கா சாப்பிடப் போலாமா? நான் ஆன்சைட் போறதுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்தாச்சு. நீ தான் பாக்கி… என்ன சொல்ற?”
அவனையே பார்க்க… “மௌனம் சம்மதம். எனக்கு இப்போ அவசரமா ஒரு வெளி வேலை இருக்கு. ஒரு மணி நேரத்தில எங்க மீட் பண்றதுன்னு மெசேஜ் பண்றேன். வந்திடு!”
அவன் கிளம்பவும், “மனோ…” அவள் அழைக்க அவன் நின்றான்.
“என்ன விழி?” அவளோடு அமர்ந்து பேச ஆசை தான். இன்று ஏனோ அவனுக்கும் அவள் கை பிடித்து, ‘நாலே மாசம் தான் வந்திடுவேன்…’ என்று கூற ஆசை எழுந்தது. ஆனால் வருவானா? வரமுடியுமா? தெரியாதே! ஆன்-சைட் வேலை என்று சொன்ன நேரத்தில் முடிந்தது? பொய்யான நம்பிக்கை கொடுக்க மனம் வரவில்லை. அதனால், ‘என்ன விழி’யோடு நிறுத்திக் கொண்டான்.
“நீங்க வேலையை பாருங்க மனோ. அதுதான் பத்து நாள் இருக்கே. நீங்க ஃப்ரீயா இருக்கும் போது சாவகாசமா பேசலாம்,” என்றாள் அவன் அலைச்சல் பார்க்க சகியாதவளாய்.
“நாளைக்கு பெங்களூர் ஆஃபீஸ் போகணும் விழி. ஒரு வாரம் அங்க தான். அப்புறம் பேக்கிங் அது இதுன்னு லாஸ்ட் மினிட் ஜாப் வந்து நிக்கும்! சோ இன்னைக்கு தான் முடியும்!”
“ஓ…” இவனோடு எந்த சந்தில் நுழைய நினைத்தாலும் அது முட்டுச் சந்தாகத்தான் இருக்கும் போலும்!
“பரவால்ல மனோ… நீங்க உங்க வேலையைப் பாருங்க! டைம் கிடைக்கும் போது ஃபோன் போடுங்க போதும்.”
புன்னகைத்தவன், “மெசேஜ் பண்றேன்… ஏமாத்திடாம வந்து சேரு! தனியா தொங்கல்ல என்னை விட்டுடாத விழி, உன் மனோ பாவம்,” கூறி விட்டுப் பறந்தான்.
error: Content is protected !!