நீளமான பெருமூச்சோடு விட்ட வேலையைத் தொடர்ந்தாள். எது எப்படியோ படிப்பு கெட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டாள்.
அதுவும் அவனுக்கு? அவள் மேல் இருக்கும் அக்கறையா இல்லை படிப்பின் மீது இருக்கும் மோகமா தெரியவில்லை. அவளிடம் பேசினாலே ‘படிப்பு எப்டி போகுது?’ என்ற கேள்வியோடு நிற்காமல் அதில் அவள் நிலைப்பாடு எந்த அளவில் உள்ளது என்பது வரை தெரிந்த பின்னரே விடுவான். சந்தேகங்கள் கேட்க ஊக்குவிக்கும் ஒரே ஜீவன் இவனாகத் தான் இருக்கும். ‘சந்தேகம் இருந்தா தயங்காமக் கேளு விழி’ என்று கேட்டு கேட்டுப் பாடத்தை விளக்கும் இவன் ஒரு தனி ரகம் தான் போலும்!
இவன் இடத்தில் வேறொருவன் இருந்திருந்தால், இவள் பார்க்கும் பார்வைக்கே இவளை, அவன் அம்மாவிற்கு மருமகள் ஆக்கியிருப்பான். இவனோ எதிர்காலம்… கனவு… என்று ஏதோ பிதற்றிக் கொண்டு, அவனும் கனவின் பின் ஓடி, அவளையும் புத்தகம் பின்னால் புதைத்துக் கொண்டிருக்கிறான்!
இவனிடம் மானம் போகாமல் இருக்கவேண்டும் என்றால் இவள் படித்தே ஆகவேண்டிய சூழல்! கணினிக்குள் புதைந்தாள். சரியாக ஒரு மணி நேரம் ஆகவும் அவள் கைப்பேசி சிணுங்கி அதில் தகவல் வந்துள்ளதை அறிவித்தது.
எங்கு எப்பொழுது வரவேண்டும் என்று தகவல் இருந்தது. குழப்பங்களை ஒதுக்கி வைத்தவள், ஒப்பனை அறைக்கு சென்று கலைந்த கூந்தலைச் சரி செய்து, ஒப்பனையை மெருகேற்றி, என்றுமில்லா திருநாளாய் அணிந்திருந்த, கஞ்சி போட்டு விரைப்பாய் நின்றிருந்த துப்பட்டாவை கொஞ்சம் கசக்கி இரு தோள்களிலுமாகப் போட்டு கிளம்பினாள்.
அவனைக் காண இன்னும் 45 நிமிடங்கள் இருக்க, ஆட்டோ பிடித்தவள் நேரே சென்று இறங்கியது ஒரு நூலகத்தில்.
‘ஹோட்டல் கிட்ட வந்ததும் கால் போடுங்க’ என்று கூற நினைத்து எபி எண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு சென்று கொண்டிருந்தது. அவன் தான் எடுத்த பாடில்லை. எடுக்கும் நிலையைக் கடந்திருந்தான். அவன் வந்து கொண்டிருந்த சாலையில் அவ்வளவு நெரிசலில்லை. அவனும் மிதமான வேகத்தில் தான் வந்து கொண்டிருந்தான். ‘விழி காலிங்’ என்றதும் அவன் பார்வை ஒரு நொடி தான் சாலையை விட்டு நகர்ந்தது. அதற்குள் ‘க்ரீச்… க்ரீச்…’ என்று அவன் முன் பல வாகனங்கள் சட்டென்று வீதியில் நின்றுவிட, ஷண நேரத்தில் சுதாரித்தவன் சட்டென்று வாகனத்தை நிறுத்தியிருந்தான். ஆனால் பின்னால் வந்து கொண்டிருந்த பல்சர் இதை எதிர்பார்க்கவில்லை! பல்சர் கேம்ரியை இடித்து சரிந்தது. சின்ன சிராய்ப்பு கூட விழாமல் பொத்தி வைத்திருந்தவன் வண்டியின் பின் எதோ உடைந்து விழும் சத்தம்!
‘டெயில் லைட்ட போட்டுட்டானா?’ கண்ணு மண்ணு தெரியாத கோபம் என்பாரே அப்படி ஒரு கோபம் எபிக்கு. அவனைப் பொருத்தவரை அவன் வாகனத்திற்கு வலிக்கும் என்பது போல் தான் அதை பாவிப்பான்!
எபியின் கோபம் எல்லாம் நின்றிருந்தவனின் கையில் வழிந்த குருதியைக் காணும் வரை தான். இவனைப் பார்த்ததுமே… வலியில் நின்றிருந்தவன், “சாரி சார் ரொம்ப சாரி சார். என் மேல தான் தப்பு. கவனிக்கல. உடைஞ்சத நானே ஃபிக்ஸ் பண்ணித் தரேன். சாரி சாரி” இடது கையை வலக்கை கொண்டு பிடித்துக் கொண்டே கூற.
“அத இன்ஷ்யூரன்ஸ் பாத்துக்கும். உங்க கையப் பார்ப்போம்.” என்று இரு வண்டிகளையும் அவனே ஓரம் கட்டி, கை காயத்தைக் கழுவி முதலுதவிப் பெட்டியிலிருந்து மருந்திட்டான்.
“என்னை உங்களுக்குத் தெரியுமா?” என்று இவன் தான் ஆரம்பித்தான். எங்கோ பார்த்த முகம். சட்டென்று நினைவில் வரவில்லை.
“இல்ல சார்” என்றான் மாதவன்.
“சார் வேண்டாம். எபி-ன்னு ஃப்ரெண்ட்ஸ் கூப்பிடுவாங்க!”
சிலரைப் பார்த்ததும் பிடித்து விடும். எபியும் அந்த ரகத்தைச் சேர்ந்தவன் என்பதால், “மாதவன்,” என்று வலக் கையை நீட்டிய மாதவனுக்கு எபியை பிடித்துப் போனதில் அதிசயமில்லையே!
மாதவன் முகம் முழுவதும் வலியின் சாயல். விட்டுச் செல்ல மனமில்லை. நேரம் பார்த்தான், “வாங்க பக்கத்தில தானே ஹாஸ்பிட்டல் இருக்கு. கைய பார்த்துடுவோம்,” என்று வம்படியாக அழைத்துச் சென்றான்.
“வண்டி?” – எபி
“என் ஃப்ரெண்டுட்ட சொன்னா வந்திடுவான். பக்கத்தில தான் அவன் லேப் இருக்கு,” என்றவன் விஷ்வாவிற்கு அழைத்தான்.
வலிக்கு ஒரு ஊசியும், கையை சுற்றிக் கட்டும் போட்டுக் கொண்டு நெடுநாள் நண்பர்கள் போல் இருவரும் சிரித்துக் கொண்டே வெளி வரவும் விஷ்வா வந்திருந்தான்.
“டேய் மாது… ஊருக்கு வந்து ரெண்டு நாள் ஆகல, விழுந்து சில்லறை எடுத்தியாக்கும்?” என்று விஷ்வா அழைத்துக் கொண்டே வரவும் தான் ‘மாதுண்ணா!’ பொறி தட்டியது எபிக்கு. விழியின் அண்ணன் இவன்! கணினி மையத்தில் ஓரிரு முறை பார்த்திருக்கிறான்! தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை!
கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்த மருந்துக் கடைக்குள் அவர்கள் நுழையவும் எபி இருவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப, அவன் பார்வையில் விழுந்தாள் அலர்விழி.
சாலையின் நேர் எதிரே இருந்த நூலகம் முன் அவள் கை பிசைந்து கொண்டிருக்க, அருகே ஒரு நெடியவன்.
நெடியவன் – டாக்டர் பிரவீன் குமார்! எபி வெளியே வந்த மருத்துவமனையிலிருந்து பத்து நிமிடங்கள் முன் வெளியே வந்த பிரவீனின் பார்வையில் சிக்கினாள் அலர்விழி!
“இல்ல ப்ளீஸ், நான் போய்க்கிறேன்,” என்று அவள் நகரப் பார்க்க, பிரவீன், “பசிக்கலன்னு சொல்லிட்ட. போகட்டும். வா நான் ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன்…” என்று அவள் கரம் பிடித்து இழுக்காத குறையாக அவள் முன் நின்றிருக்க, ஏதேதோ கூறி ஓடத் தயாரானாள்.
‘இங்க என்ன பண்றா இவ? இவன் யாரு?’ என்று நினைத்த எபி அறக்கப் பறக்க, வேகமாகச் செல்லும் இரு பக்க வாகனங்களையும் கடந்து ஓடிவர, அலர்விழியை அங்கு காணவில்லை. பிரவீன் கைப்பேசியில் யாருடனோ பேச ஆரம்பிக்கவும், “எனக்கு டைம் ஆச்சு,” என்று ஓடியே விட்டிருந்தாள்.
ஒரு சாலையைக் கடக்கும் நிமிட நேரத்தில் எங்கு சென்றிருக்க முடியும்? இவன் யோசிக்க அருகிலிருந்த நூல் நிலையத்தின் மேல் பார்வை நிலைத்தது. எபி உள்ளே நுழையவும் நெடியவனும் அதனுள் நுழைந்து கொண்டிருந்தான்.
உள்ளிருந்து சத்தமில்லாமல் வெளியே வந்து கொண்டிருந்தவள் பிரவீனைப் பார்த்ததும் மீண்டும் உள்ளுக்குள் பதுங்கிக் கொண்டாள். ‘சாகடிக்கிறானே… நேரம் ஆச்சு! போய்த் தொலையேன் டா. இருந்திருந்து இன்னைக்குத் தான் இவன் கண்ணுல பட்டுத் தொலையணுமா? போன்னு சொன்னா புரிஞ்சுக்காத மரஜென்மம்!’ மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.
உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே பதுங்கிக் கொண்டிருந்தவளின் துப்பட்டா ஏதோ ஆணியில் மாட்டி இழுபட, ‘மாட்டினியா?’ நினைத்துக் கொண்டே திரும்ப, ‘மனோ..?’ கண்கள் விரிய, ‘ஹப்பாடா’ என்ற முகபாவம் அவளிடம்.
“யாரவன்? எதுக்கு அவனப் பார்த்து ஒளியற?”
“ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதீங்க. வந்திடப் போறார்.. எப்படி என்னைக் கண்டு பிடிச்சீங்க?” கிசுகிசுத்தாள்.
துப்பட்டாவை ஆணியிலிருந்து விடுவித்தவன், “இது தான் ‘நான் இங்க இருக்கேன்’ன்னு பறந்து கிட்டே நீ இருக்க இடத்தைக் காட்டுதே,” எனவும் அதை வாரிச் சுருட்டிப் பைக்குள் திணித்துக் கொண்டவள், “மெதுவாப் பேசுங்க,” என்றாள் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில்.
அவளை அப்படிப் பார்த்தபின் பேச்சு எங்கு வந்தது? காத்து தான் வந்தது! பெருமூச்சாய்! கச்சிதமாய் அளவெடுத்துத் தைத்துப் போட்டிருந்த கமிசீல், கண்ணைப் பறித்து சித்தத்தைக் கலைக்கும், சிற்பமாய் தெரிந்தவளை ரசிக்கும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை.
“யாரவன்?” இவனும் குனிந்து அவள் காதுக்குள் கிசுகிசுக்க…
“ஹலோ… கொஞ்சம் தள்றீங்களா?” என்று எபியின் முதுகுப் பின்னாலிருந்து வந்த சத்தம் பிரவீனுடையதே!
பெண் வெலவெலத்துப் போனாள். இவன் நகர்ந்தால் அவன் இவளைக் கண்டு கொள்வானே. யார் அவனிடம் மாட்டிக் கொள்வது? போதாக் குறைக்குத் துப்பட்டாவும் இல்லை. ‘இவன் வேற இம்சைக் காட்டேறி! இவன் பார்த்தா அண்ணாட்ட போட்டு கொடுப்பானே. செத்த அலர் நீ!’
உயரமான இரு நூல் அடுக்கங்களுக்கு இடையே ஒருவர் நகர்ந்தால் மற்றவர் நுழையும் இடம் தான் இருக்க, எபி நகர்ந்து இடம் தரவேண்டும் பிரவீன் நகர்ந்து போக!
எபியின் மார்புக்குள் தன்னைக் குறுக்கி மறைத்துக் கொண்டவள் காதில் மீண்டும் பிரவீன் சத்தம் நாராசமாய், “சார் உங்கள தான். தள்றீங்களா?” என்று!
நகர்ந்துவிடக் கூடாதே! எபியின் சட்டையைப் பொத்தானோடு இழுத்துப் பிடித்துக் கொண்டாள். எபியின் தலை தன்போல் அவளை நோக்கிச் சாய்ந்தது.
“ஹலோ… சார்,” அவன் மூன்றாம் முறை பொறுமை இழந்து கூப்பிட, பயத்தில் இவள் இடது கை சட்டையோடு எபியை தன் பக்கம் இழுக்க… வல கை விரல்கள் விலாவிற்கு பின்னிருந்த சட்டை பகுதியை இறுக்கிக் கொண்டிருந்தது. அவன் பரந்த மார்புக்குள் ஒடுங்கி நின்று கொண்டிருந்தவள் எபி நகர்ந்து விடாமல் பிடித்துக் கொண்டாள். பின்னால் இருந்து பார்த்தவனுக்கு இருவர் சந்தில் நின்று கொண்டு வேண்டாத வேலை பார்ப்பது போன்ற பிம்பத்தை தந்தது.
எபி, “என்ன விழி பண்ற?” மீண்டும் கிசுகிசுக்க, அவள் கைகள் இரண்டும் இறுக, கசங்கியது சட்டை. கூடவே, “ம்ம்ம் ச்சு…” என்றவள், “அவர் தான்,” என்று வாய் அசைத்தாள்.
காதில் விழுந்த ‘ம்ம்ம்’மிற்கு மருத்துவனே ஒரு அர்த்தம் கொடுத்தான். பிரவீன் மூளை எப்படி எல்லாமோ வேலை செய்ய, “ச்ச… ஒரு ப்பளிக் ப்ளேஸ்ல கூட டீசென்சி மெயின்டெயின் பண்றது இல்ல… இத எல்லாம் வேற எங்கேயாவது பண்ண வேண்டியது தானே…” எரிச்சலில் புகையவும் தான் எபிக்கு புரிந்தது அவன் என்ன நினைத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறான் என்று.
அலர்விழியைப் பார்க்க… அவளோ ஏகபோக உரிமையோடு சட்டையைப் பிடித்துக் கொண்டு கோழிக்குஞ்சு போல் ஒட்டி நின்று கொண்டிருந்தாள். அவன் முகத்தைப் பார்த்து நின்றிருந்தவளின் முகத்திலோ மனோ பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை.
பொத்தானில் இருந்த அவள் கையை விலக்கியவன், வெறும் தலையை மட்டும் திருப்பி, “அதுதான் என்ன நடக்குதுன்னு தெரியுதில்ல. போவியா… அத விட்டுட்டு நகரு நகருன்னு வந்து நிக்கிற? என்ன ஃப்ரீ ஷோ வேணுமா?” எனவும் அவன் முறைக்க, இவன் ‘போடா அந்தப் பக்கம்!’ லுக் விட அவன் வந்த வழியே திட்டிக் கொண்டே சென்று விட்டான்.
அவன் தலை மறையவும் இருவரும் வாய் பொத்தி சிரித்துக் கொள்ள, “போடி, உன்னால என் பேரு கெட்டுது,” செல்லமாய் அவள் பின்னந்தலையில் தட்டி கசங்கிய சட்டையை இழுத்து விட்டுக் கொண்டான்.
சிலரைப் பார்த்ததும் ஏன் என்றே தெரியாமல் பிடிக்காமல் போய் விடும். எபிக்கும் பிரவீனுக்கும் அப்படித்தான் ஆகிப்போனது.
ஒரே நாளில் ஒருவன் பார்வைக்கு நல்லவனாகவும் மற்றவன் பார்வைக்கு பொல்லாதவனாகவும் ஆகிப் போனான் மனோவா எபெனேசர். யாருக்கு எப்படியோ அன்று விழியும் மனோவாவும் நன்றாக உறங்கினர், இன்பக் கனவுகளோடு!