Skip to content
அத்தியாயம் 19
“அக்கா, அக்கா எனக்கும் ஐஸ் வேணும்,” என்று கப்பிலிருந்த பனிக்கூழை விழுங்கிக் கொண்டிருந்த நகுநாவிடம் வாண்டொன்று வந்து நிற்க, மாடியில் பந்தி பரிமாறும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஒன்றை எடுத்துக் கொடுக்க, அடுத்த ஐந்து நிமிடங்களில் ஐந்தாறு குட்டிகள் அவளைச் சுற்றிக் கொண்டது.
“நிம்மதியா உக்காந்து ஒரு கப்பைஸ் சாப்பிட விடுறீங்களா?”
“அக்கா அக்கா… ஒரே ஒரு ஐஸ் க்கா… பிளீஸ் க்கா”
“ஷ்ஷ்ஷ்! சத்தம் போடாதீங்க பிள்ளைகளா… எடுத்துத் தரேன். ஒருத்தர் மட்டும் என் கூட வாங்க,” என்று ஒரு பொடுசோடு காலியாயிருந்த உணவறைக்கு சென்றாள்.
ஒரு பெட்டியில் ஒரு டசன் கப்பைஸ் இருக்கவே… அதை எடுத்துக் கொடுத்து விட்டு, அவள் கையிலிருந்ததை நக்கிக் கொண்டே அவசர அவசரமாய் வெளிவரவும் வாயிலில் கைகளை மார்புக்குக் குறுக்காய் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் வினோத்.
“என்ன திருடிட்டு போற?”
அவசரமாக ஓடி வந்து கொண்டிருந்தவள் சத்தம் கேட்டு தலை தூக்க… இடித்துக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டாள்.
பட்டு வேட்டியை மடித்துக் கட்டி, முட்டி வரை மடித்துவிட்ட கருஞ்சிவப்பு ரா சில்க் சட்டையில் அசத்தலாய் நின்றிருந்தவனைப் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க்கானாலும் பயப்படவில்லை.
“பந்தி தான் முடிஞ்சிடுச்சே, அது தான் பசங்களுக்கு…” அவள் முடிக்கவில்லை…
அவன், “முடிஞ்சா… திருடுவியா?” எனவும்
பதறிப் போனவள், “திருடல! எடுத்தேன்…” என்றாள் அவசர அவசரமாக.
அவனோ வம்பு வளர்க்க ஆசை கொண்டு, “யார்ட்ட கேட்ட?” என்று புருவம் உயர்த்தினான்.
“ஏன்? யார்ட்ட கேக்கணும்? என்னோட அத்த வீட்டு பங்ஷன்… எனக்கு எடுக்க உரிமை இருக்கு,” சின்னவள் நேர்மையான பதிலைத் தந்தாள்.
அந்த ‘உரிமை’ என்ற சொல் அவனுக்குப் பிடித்துப் போனது. “ஓஹ்… சட்டம் பேசறியோ? என்ன லா படிக்கிறியா?”
அவன் கிண்டல் புரியவில்லை போலும். “இல்ல பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி,” என்றாள்.
“அவ்வளவு பெரிய ஆளா நீ! போகட்டும் விடு. இப்படித்தான் பாக்கறவங்கட்ட எல்லாம் நின்னு கத பேசுவியா?”
அவன் த்வனி மிரட்டுவது போல் இருக்கவும், அவள் சத்தம் குறைந்தது. “எல்லார்ட்டையும் எல்லாம் பேச மாட்டேன்… தெரிஞ்சவங்கட்ட மட்டும் தான்.”
“ஓ… என்ட்ட பேசற? அப்போ நான் யார்ன்னு தெரியுதா?”
பெண் குஷியாகிப் போனாள். “ஏன் தெரியாம? வினோ அத்தான். சின்னதுல மாதுண்ணா கூட எங்க வீட்டுக்கு வருவீங்களே. அப்புறம் ஒரு தரம் பெரியம்மா கூட உங்கள கரண்டியால அடிச்சாங்களே… அப்புறம் மாடிப்படி கைப்பிடி சுவர்ல சறுக்கும் போது அடிபட்டு…” ஆரம்பித்ததை முடிக்காமல் வாய் பொத்தி கிளுக்கினாள்.
அவன் உச்சி குளிர்ந்து போனது. “இவ்வளவு ஞாபகம் வச்சிருக்கியா?”
“அது மட்டுமா? காலையில இருந்து வச்ச கண்ண எடுக்காம வசுவ பார்த்துட்டே இருந்தீங்களே… தெரியாதா?” அவள் சிரித்துக் கொண்டே கூற, அவனுக்கு ஃப்யூஸ் போனது!
“நம்ம வசுவ… நான் சைட் அடிச்சேனா? அது எப்போ?” விழித்தான்.
“என்ன அத்தான்? அவ்வளவு பப்ளிக்கா பார்த்துட்டு எப்போன்னு கேக்கறீங்க?”
‘தல எழுத்து’ என்று நினைத்துக் கொண்டான். “ஓ… சரி சொல்லு, நான் நல்லா இருக்கேனா?”
“ஹீரோ மாதிரி இருக்கீங்க…” கண் விரித்து கவி பாடினாள்.
“என்னை சைட் அடிச்சியா?” அவன் புருவம் வளைக்க…
“இல்ல இல்ல” பதுங்கினாள்.
“சும்மா சொல்லு… தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்” எனத் தெம்பூட்ட,
“அவளுங்க எல்லாம் பாத்தாங்களா… நீங்க ரொம்ப ஸ்மார்ட்டுன்னு சொன்னாங்களா… அது தான் நானும்…. ஆனா கொஞ்சமே கொஞ்சம் தான் பார்த்தேன். நீங்க வசுவ பாக்கிறத பாத்தப்புறம் நா பாக்கல…” தயங்கித் தயங்கி, திக்கித் திணறி, ஒரு வழியாய் உண்மையைப் போட்டு உடைத்தாள் பெண்!
‘இப்படியா உளறுவ நகு?’ அவனுக்குள் அப்படி ஒரு சிரிப்பு. நினைத்ததை விட அப்பாவியாகத் தெரிந்தாள். பார்க்கப் பிடித்த மங்கையோடு பழகவும் பிடித்தது. பெண் பார்க்க எடுத்துக் கொள்ளும் ஐந்து நிமிடங்கள் போல் பெண் பார்க்கும் படலம் நடத்திக் கொண்டிருந்தான்.
“கொஞ்சம் பார்த்ததுக்கே ஹீரோன்னு சொல்லிட்ட. ம்ம்! ஒரு வாட்டி முழுசாப் பார்த்துக்கோ. அப்புறம் பாக்காம முடிவெடுத்துட்டன்னு சொல்லக் கூடாது!”
“என்ன முடிவு த்தான்?” அவளுக்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
“நீ முதல்ல என்னை முழுசா தலைல இருந்து கால் வரைக்கும் பாரு,” என்று ஆர்ம்ஸ் காட்ட, பெண்ணிற்குக் கூச்சமாய் போனது. “ம்ம்… பாரு. எப்டி ஸ்ட்ராங்கா இருக்கேன் பாரு…” ஊக்குவித்தான்.
மெல்ல கண்கள் உச்சி முதல் பாதம் வரை வருடியது. புன்னகை அரும்பியது. மாப்பிள்ளை பார்ப்பது போல் தான் அவளுக்கும் தோன்றியது.
“பார்த்துட்ட போல…” இதழ் விரிந்த சிரிப்பு அவனிடம்.
“ம்ம். ஆனா ஏன் த்தான்…” இன்னுமா பெண்ணே புரியவில்லை?!
“நான் வசுவ சைட் அடிக்கிறதப் பார்த்துட்டு நீ என்னை சைட் அடிக்கறத நிறுத்திட்டல்ல அதுக்கு தான்… பாத்துக்கோன்னு!”
‘இவன் என்ன இப்படிப் பேசறான்…’ அவளால் நினைக்காமல் இருக்க முடியுமா?
“ஆமா, நீ என்னை சைட் அடிக்கிறது உங்க வீட்டுல தெரியுமா?”
பெண் மிரண்டு போனாள். இதெல்லாம் பேனர் அடித்தா செய்வார்கள்? “த்தான்..? ஏன் த்தான்?”
“வசுக்கு தெரியுமா? சொந்த அக்காக்கே துரோகம் பண்றதாத் தோணல?”
“தெரியாம ரெண்டே ரெண்டு தரம் பார்த்தேன்… அவ்வளவு தான். முழுசா கூட இல்ல! அது எல்லாம் சைட் லிஸ்ட்ல வராது. அதுவும் நீங்க அவள பாக்கவும் நான் பாக்கிறத நிறுத்திட்டேன் த்தான். இனி மேல் பாக்கல. என்னை விடுங்கத்தான்” பாவம் போல் பெண் கெஞ்சி நின்றாள்.
“ஓ லிஸ்ட்ல வராது? அப்போ லிஸ்ட்ல வர மாதிரி நீ இன்னும் நிறைய எல்லாம் சைட் அடிச்சு இருக்க? நான் கூட நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். கேடியா இருப்ப போல.”
“இல்லத்தான்… அப்படி எல்லாம் இல்ல. நான் நல்ல பொண்ணு தான் த்தான்! நீங்க தான் ஃபர்ஸ்ட். நீங்க தான் லாஸ்ட். இனி மேல் வாழ்க்கையில சத்தியமா யாரையும் சைட் அடிக்க மாட்டேன் த்தான்.”
அழுது விடுவாள் என்று தோன்றியது. அவன் விட்டானில்லை. “சொல்லு… என்ன நினைப்பில சைட் அடிச்ச? என்னை லவ் பண்ண நினைச்சியா?”
“ஐயையோ… ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க. வழி விடுங்க நான் போறேன்…” கண்ணீர் துளிர்க்கவா வேண்டாமா தருணம்.
“பேசாம நில்லு. இல்ல. அத்தையைக் கூப்பிட்டு உங்க பொண்ணு என்னை சைட் அடிக்கிறான்னு சொல்லிடுவேன்.”
அமைதியாக திருவிழாவில் தொலைந்த பிள்ளை போல் நின்று கொண்டாள். உடல் உதறல் எடுக்கவா வேண்டாமா என்று கேட்கும் நிலை. வாழ்க்கையில் இந்த தவற்றை இனி செய்யவே கூடாது என்று சத்தியம் செய்து கொண்டாள். ‘இருந்திருந்து அழகா இருக்கானேன்னு ரெண்டு தரம் பாத்தேன்… அதுக்கே இப்படியா?’ அவள் யோசனையை அவனே கலைத்தான்.
“என்ன ட்ரீம்? என் கூட அதுக்குள்ள டூயட்டா? என்ன பாட்டு? எந்த லொக்கேஷன்?”
“ம்ம்ஹூம். இல்லத்தான். அப்படி எல்லாம் இல்ல த்தான். டூயட் எல்லாம் இல்ல த்தான்! நான் போகணும்.”
“ஏன் போகாட்டி ஆத்தா வையுமோ? அடங்கு.”
“என்ன அத்தான்?”
“அத விடு! ஏன் டூயட் இல்ல? என்னைப் பார்த்தா நல்ல பையன் மாதிரி இல்லியா? லவ் பண்ற தகுதி இல்லன்னு நினைக்கிறியா?”
“எனக்குத் தெரியாது த்தான். ப்ளீஸ் நான் போறேன். அம்மா தேடுவாங்க.”
அவனுக்குக் காதில் விழுந்ததா தெரியவில்லை. அடுக்கிக் கொண்டே போனான்.
“என்னைப் பத்தி தெரியலையா? தப்பாச்சே… ஏன் தெரியலை?”
“யாருமே சொல்லல த்தான்…” அழகாய் விழித்தாள்.
‘ஐயோ…! என் வெல்லகட்டி…’ கொஞ்சிக் கொண்டான். “ஒரு தரம் தான் சொல்லுவேன். ஒழுங்கா கேட்டுக்கோ.”
“ம்ம்…” மண்டை ஆடியது.
“ஆஸ்ட்ரேலியால படிச்சேன். அங்கேயே வேலையும் கிடைச்சிடுச்சு. சொல்லிக்கிற அளவு சொத்தும் சம்பாத்தியமும் இருக்கு. உன்ன ஒரு குறையும் இல்லாமப் பாத்துப்பேன். ஸ்மோக்கிங்… கெட்ட பழக்க லிஸ்ட்டுல இல்லன்னா, கெட்ட பழக்கம்ன்னு ஒண்ணும் இல்ல. என் ஆசைக்கு மறு பேச்சில்ல எங்க வீட்டுல. என் அம்மா அப்பா மாதிரி ஒரு நல்ல மாமியார் மாமனார் எங்க தேடினாலும் உனக்குக் கிடைக்க மாட்டாங்க. உன் நாத்தனார் ரொம்ப நல்லவ. உன் கூட நல்ல ஃப்ரெண்டா இருப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் உன் விருப்பம் தான் என் விருப்பமும்.
இப்போ சொல்லு. என்னை உங்க வீட்டுல உனக்குப் பார்த்தா என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா?”
“த்தான்?” எச்சில் விழுங்கினாள் பெண்.
“சொல்லு, சைட் அடிச்சவனையே கட்டிக்கிறியா?”
“வசுவ பார்த்துட்டு என் கிட்ட கேக்கறீங்க… அவ பாவம் இல்ல?”
“லூசா நீ? அவ என் கூடவே வளர்ந்தவ. என் தங்க மாதிரி. அப்புறம் உன் கண்ண டெஸ்ட் பண்ணு! நான் சைட் அடிச்சேன் தான், அவள இல்ல உன்ன,” என்றான்.
வாயடைத்து நின்று விட்டாள். அத்தனை பேர் முன்னிலையிலும் தன்னைத் தான் பார்த்து வைத்தானா? அதற்குத் தான் வசு இவளை இடித்து இடித்து சிரித்தாளா? அச்சோ… தான் மக்கென்று தெரியும். இவ்வளவு பெரிய மக்கா?
“எனக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. லவ் பண்ணினா என்னன்னு தோணுது. எப்படியும் நம்ம லவ்வுக்கு ரெண்டு வீட்டுல இருந்தும் எதிர்ப்பு வராது. என்ன சொல்ற? லவ் பண்ணுவோமா? பேசிப் பழகி பிடிச்ச பிறகு லவ் பண்ண எனக்கு டைம் இல்ல. நாளைக்கு ஃப்ளைட். சோ டைரக்டா லவ் தான். சரியா?”
கைகால் நடுங்க ஆரம்பித்தது பெண்ணிற்கு. இது என்ன வம்பு என்பது போல் பார்த்தாள்.
“எனக்குக் கல்யாணம் பண்ண ரெண்டு வருஷம் ஆகும். அதுக்கு முன்ன உனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்தா எனக்கு ஒரு கால் போடு, நானே மாப்பிள்ளையா வரேன்.”
“எனக்கு அக்கா இருக்கா!”
சிரித்தான். “அப்போ உனக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு எடுத்துக்கிறேன். இன்னைல இருந்து நான் தான் உன் லவர். ஆள மாத்திடாத. மாத்த மாட்டியே…”
“ம்ம்ஹூம்”
“உன்ன நம்பலாமா?”
“ம்ம்” என்ன ஏதென்றே யோசிக்காமல் மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள்.
“என்ன ம்ம்? ஒழுங்கா சொல்லு ரெகார்ட் பண்ணிக்கிறேன். நாளைக்குப் பின்ன மாத்திச் சொல்லிடக் கூடாதே…”
கைப்பேசியில் பதிய தயாராகினான். “இப்போ சொல்லு.”
“என்ன த்தான்?”
“இன்னைல இருந்து நான் தான் உன் லவர்ன்னு!”
“இன்னைல இருந்து நீங்க தான் என்… த்தான்… ப்ளீஸ் த்தான் நான் போகணும்.”
“சரி பொழச்சு போ… லவ் மனசுல இருந்தா போதும். வெக்கம் போனதும் ஃபோன் போட்டுச் சொல்லு.”
“உங்க நம்பர் தெரியாதே…” அதற்கும் விழித்தாள்.
அவனால் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. சிரிப்பை அடக்க முடியவில்லை. எவ்வளவு நேரம் தான் டெரர் பீஸ் போலவே பேசுவது.
“உன் கை நீட்டு…”
வியர்வையைத் துடைத்து, அந்த குட்டி பஞ்சுக் கையில் அவன் அலைபேசி எண்ணை எழுதினான். அந்த வளர்ச்சியில்லா குட்டிக் கையை விட மனம் வரவில்லை. சில்லிட்ட கையைப் பிடித்தே வைத்திருக்க முடியாதே! பெண் மயங்கினாலும் மயங்கி விடுவாள்.
“இது என் நம்பர்… லவர்ஸ் ரூல்ஸ் தெரியுமில்ல?”
“ம்ம்ஹூம்.” தலை வேகமாக ஆடியது.
“லவ் உனக்கு புதுசு இல்ல… ம்ம்! டெய்லி என் கூடப் பேசணும். இல்ல அடுத்த ஃப்ளைட் பிடிச்சு வந்திடுவேன்.”
“என்ட்ட ஃபோன் இல்ல த்தான்.” பாவம் போல் உரைத்தாள்.
“வாங்கித் தரட்டா…”
‘என்னத்த? அம்மாட்ட இருந்து விளக்குமாத்து அடியையா?’ “இல்ல இல்ல… வேண்டாம் அம்மாக்குத் தெரிஞ்சா கொலை விழும்.” உடனே மறுத்தாள்.
“அப்போ எப்டி பேசுவ?” அவன் கவலை அவனுக்கு!
“தெரியலியே. அக்கா ஊருக்கு வரும் போது அதுல இருந்து பேசவா?” சிறு பிள்ளை போல் ஒப்பித்தாள்.
கையில் அவள் வைத்திருந்த பனிக்கூழ், மில்க்ஷேக் ஆகி இருந்தது. ஒரு கப் காபி போல் ஒரு கப் பனிக்கூழ் உருகும் நேரத்தில் அவன் வாழ்க்கை துணையைத் தேடியிருந்தான். அதில் அவனுக்குப் பரம திருப்தியும் கூட.
“வீடியோ கால்ல பேசுவியா?”
“பேச ட்ரை பண்றேன் த்தான்”
“ட்ரை எல்லாம் இல்ல. அலர் ஊருக்கு வரும் போதெல்லாம் என் கூட உன் முகம் காட்டிப் பேசியே ஆகணும். இல்ல அடுத்த ஃப்ளைட் பிடிச்சு வந்திடுவேன் ஞாபகம் இருக்கட்டும். இப்போ ஓடு.”
அவள் ஓட்டம் பிடிக்கவும், “ஓய், என் வெல்லக் கட்டி,” என்றதும் சட்டென்று பிரேக் போட்டு, “என்ன த்தான்,” என்றவளிடம் குப்புற விழாமல் போனால் அவனெல்லாம் என்ன காதலன்? வினோத் குப்புற விழுந்தே விட்டான்.
“என் வெல்லக் கட்டியா டி நீ?” வாஞ்சை கொப்பளிக்கக் கேட்டவனை, பெண்ணவள், “அத்தான்!” எனப் பாவமாய் பார்த்து நிற்க,
“என் எல்லாமே நீ தான் டி இனி மேல். ஞாபகம் வச்சுக்கோ என்ன?”
“ம்ம். சரி த்தான்” என்று மண்டையை நாலா பக்கமும் ஆட்டியவள் கண்களும் மின்னத் தான் செய்தது.
“சரி ஓடு” எனவும் அவள் பிடித்த ஓட்டத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
(பாடல் வரிகள்)
error: Content is protected !!