ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

கைப்பேசியை அணைத்ததும் அவள் இயல்புக்குத் திரும்பினாள். அப்படி எல்லாம் அவள் விருப்பமில்லாது அவளைத் திருமண பந்தத்தில் அம்மா நுழைக்க மாட்டார் என்று தெரியும் என்பதால் முடிந்த பேச்சு வார்த்தை எண்ணத்தில் நிலைக்கவில்லை. ஆனால் அது அவனுக்குத் தெரியாதே… அவன் அதிலேயே உழன்றான். 

“மாப்பிள்ளை பாத்தாச்சா?” சாதாரணம் போல் கேட்டாலும் உள்ளுக்குள் உதறல் தான்! 

“ப்ச்! நீங்க உங்கள பத்தி சொல்லுங்க. ப்ளீஸ்…” 

“படிச்சு முடிச்சதும் கல்யாணமா?” 

“என்னைக்குனாலும் செஞ்சு தானே ஆகணும்! இப்போ நீங்க உங்கள பத்தி சொல்றீங்களா?” 

“கல்யாணத்துக்கு சரி சொல்லப் போறியா விழி?”

“ஏன் நீங்க பண்ணிக்கப் போறிங்காளா? இல்ல தான… அப்புறம் என்ன? உங்கள பத்திக் கேட்டேன்!” எரிந்து விழுந்தாள்.

இதற்கு மேல் தன்னை பற்றித் தெரிந்து என்ன செய்யப் போகிறாளாம்? “ஏன் என்ன பத்தி தெரிஞ்சா தான் என் ஃப்ரெண்டா இருப்பியா?” 

‘ஃப்ரெண்டா?’ அவனைப் பார்த்தாள். கருப்புக் கண்ணாடிக்கு பின் ஒளிந்திருந்த கண்களிலிருந்து உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை! 

அவள் ஏன் வாய் திறந்தாள் அதன் பின்! மூக்கை உறுத்தி பாடாய்ப் படுத்திய  வளையத்தைக் கழற்றி, அதை அருகிலிருந்த கப் ஹோல்டரில் போட்டுவிட்டு அமைதியாய் கண் மூடி சாய்ந்து கொண்டாள். 

‘இப்போ இவன வான்னு கூப்பிட்டேனா… அப்புறம் வந்து பிடிச்சிருக்கா… மண்ணான்னு ஆயிரம் கேள்வி எதுக்கு? ஃப்ரெண்டா இருக்கவா? போடா. நீ யாரா வேணா இரு!’ இறுக கண்களை மூடிக் கொண்டாள். 

“மேடத்துக்கு கோவமா?”

“மூக்குல ஓட்டை காணம். ஆனா மூக்குத்தி எல்லாம் போட்டிருக்க?”

“ஸாரில பெரிய பொண்ணாத் தெரியற. இப்படி எல்லாம் அழகா வெளியில் சுத்தறதுனால தான் பொண்ணு கேக்கறாங்க”

“பேச மாட்டியா?”

“நீ ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறன்னு தெரியுதா?”

“விழி…” 

“ஆமா எனக்குப் பிடிவாதம் தான். முன்னப் பின்ன தெரியாதவங்க கூட பழக முடியாது.” கண்கள் மூடியே இருக்க இதழ் மட்டும் அசைந்தது. 

“ஒரு அம்மா, ஒரு அப்பா, அவங்களுக்கு ஒரே மகன்… அது நான்! இது தான் என் குடும்பம். எங்க கூடவே குடும்பத்தில ஒருத்தங்களா யமுனாக்கா.” 

பட்டென்று கண்கள் திறந்தாள். அவன் தொடர்ந்தான். 

“ராயபெட்ல தான் வீடிருக்கு. நீ காலேஜுக்குள்ள போன நேரம் நான் கம்யூட்டர் எஞ்சினியரா வெளியில வந்தேன். இப்போ சாப்ட்வேர்ல இருக்கேன். வேலை விஷயமா அமெரிக்கா போறேன். நாலஞ்சு மாசத்துல திரும்பி வரலாம். இல்ல… வேலை இழுத்தடிச்சா, அடுத்த மூணு… நாலு வருஷம் வர முடியாமலும் போகலாம்.”

“மூணு நாலு வருஷமா?”

“அடுத்த வருஷம் பிஜி ஜாயின் பண்ணனும்ன்னு ப்ளான். அதுக்கு, டிசம்பர்குள்ள காலேஜஸ்க்கு அப்ளை பண்ணனும். எல்லாம் சரியா நடந்து நான் ஆசைப் பட்ட எம்.ஐ.டி.-ல சீட் கிடைச்சா… அடுத்த மூணு நாலு வருஷம் அங்க தான்.

படிப்பு முடிச்சு… அங்கேயே ஒரு வேலை பார்த்தா தான் இங்க வரும் போது பெரிய கம்பனியில பெரிய ஆஃபர் கிடைக்கும்! எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கிற வரைக்கும்  கொஞ்ச வருஷம் அங்க வேலை பார்க்க வேண்டி வரும்!” சொல்லிக் கொண்டிருக்கும் போதே எப்படியோ போல் இருந்தது.

‘மூன்று வருடமேனும் எனக்காகக் காத்திருப்பாயா?’ கேள்வி தொண்டைக்குள் மாட்டி மாண்டு மடிந்தது. 

மீண்டும் அழுகை வரும் போல் இருந்தது, அலர்விழிக்கு. அவன் வேண்டாம் என்று கூறியதன் காரணம் முழுவதுமாகப் புரிந்தது. “உனக்காக… எனக்காக… நமக்காக இப்போ வேண்டாம்!” கூறினானே! 

இருவருக்கும் ஒன்று சேர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ‘இப்பொழுதே திருமணத்திற்கு அவசரப்படும் குடும்பம் ஒரு பக்கம்… வேற்று இனத்தைச் சேர்ந்த இவன் ஒரு பக்கம்… நான்கு வருடம் கண் காணா தேசத்திற்கு செல்லத் தயாராகிக் கொண்டு! ச்ச…!’ 

“அப்பிடியே போக வேண்டியது தானே… ஏன் திரும்பவும் பிடிச்சிருக்கான்னு கேட்டுகிட்டு வந்தீங்க?” இயலாமை கோபமாய் வெளி வந்தது. 

“விழி?” அவன் முகம் விழுந்து போனது. 

“ஏன் இருக்க படிப்பும் வேலையும் பணமும் போதாதா உங்களுக்கு? அங்க போய் படிச்சா தான் ஆச்சா?” எரிந்து விழுந்தாள். 

சிவந்து போன அவள் முகத்தைப் பார்த்தவனிடம் ஒரு நிமிட மௌனம். என்ன நினைத்தானோ… “சரி போகல, இங்கேயே இப்படியே இருந்திடுறேன். போதுமா?” கூறும் பொழுதே ஏதோ வெறுமை. 

அவன் முகம் பார்த்தாள், அவனும் திரும்பி அவள் முகம் பார்க்க, “நிஜமாவா சொல்றீங்க?” என்றவளிடம் யோசிக்காமல், “சத்தியமா! நீ வேண்டாம் சொன்னா, நான் போகல!” என்றான் தீர்மானமாய்.

அதன் பின் இருவருமே பேசிக் கொள்ளவில்லை. வாகனம் உணவகம் முன் நின்றது. கட்டிடத்தைப் பார்த்ததுமே பர்ஸ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். இருவருக்குமான மேசையில் அமர, அவள் இதயம் அடித்துக் கொண்டது மனோவிற்காக அல்ல. ‘செத்த அலர், பசிக்கலன்னு ஜூசோட நிறுத்திக்கோ.’ 

“என்னைப் பத்தி கேட்டியே?” அவன் தான் கேட்டான். 

“அது தான் உங்க ஹிஸ்டரி ஜாகரஃபி எல்லாம் சொல்லிட்டீங்களே… இதுக்கு மேல என்ன இருக்கு?” 

“ம்ம்… இன்னும் ஒண்ணு பாக்கி! அப்பா பேங்க்ல ஆப்பிஸர். அம்மா உன் ஃப்ரெண்ட்… அவங்களுது தான் கம்யூடர் சென்டர்.” 

“எஸ்தர் ஆன்ட்டி பையனா நீங்க?” முகம் மலர்ந்து போனது. 

“ம்ம், உன்ன பத்தி அம்மா ஒரு ஒரு தரமும் பக்கம் பக்கமாப் பேசறாங்க! அம்மாக்கு உன்ன அவ்வளவு பிடிச்சிருக்கு!” 

“எனக்கும் ஆன்ட்டிய ரொம்ப ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்.” 

மகனின் கனவைப் பற்றி பக்கம் பக்கமாக இவளிடமும் பேசினாரே! மனோவா தான் அந்த மகனா? ‘கண்டிப்பா இந்த தரம் உங்க மகன் கனவு நிறைவேறத் தடை ஏதும் வராது!’ சொல்லிக் கொண்டாள்.

அவன் கண்கள் மென்யூ கார்டில் பதிய.. “என்ன வேணும்ன்னு சொல்லு விழி…” என்றான். 

‘நீ தான்’ என்று கூற ஆசை தான்! “உங்க நம்பர் குடுங்க மனோ,” எனவும் பதில் கேள்வி கேட்காமல், அவன் கைப்பேசியிலிருந்து அழைப்பு விடுத்தான். 

‘என் நம்பர் தெரியுமா?’ அவசியம் இல்லாத கேள்வி அவசியம் இல்லாததால், எழுந்த இடத்திலேயே மறைந்தது. 

“ஏன்னு கேளுங்க மனோ!”

“ஏன்?” 

தொண்டை வரை அடைத்து நின்ற காதலை உள்ளுக்குள் விழுங்கி, “ஃப்ரெண்ட்ஸ்னா கான்டாக்ட்ல இருக்கணும் இல்ல… அதுக்கு தான்!” என்றாள். 

“ஓஹோ… நீயும் முடிவு பண்ணிட்ட போல!” வெற்றுப் புன்னகை வந்து மறைந்தது.

“ம்ம்… எனக்காக உங்களுக்காக நமக்காக!” அதே வெற்றுப் புன்னகை! மனதை மறைத்து வெறுமையாய் புன்னகைக்க மட்டுமே இருவராலும் முடிந்தது.

“நடுவுல வரவே மாட்டீங்களா மனோ?” என்ன முயன்றும் ஏக்கம் எட்டிப் பார்த்தது.

“போக வேண்டாம்ன்னு சொன்னியே விழி?” 

“ஒரு தவத்தைக் கலைச்ச பாவம் எனக்கு வேண்டாம் மனோ…” 

அவனிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.

“சாரி! அப்போ யோசிக்காம லூசு மாதிரி பேசிட்டேன். ஏதோ ஒரு கோபம், காரணமே இல்லாம உங்க மேல திரும்பிடுச்சு! நல்லபடியா போயிட்டு வாங்க. நாலஞ்சு மாசம் வேலை அப்புறம் படிப்பு அப்புறம் புது வேலை! மொத்தத்துல நாலஞ்சு வருஷம் ஆகிடும் இல்ல?” 

“ம்ம்” 

“நடுவுல வரவே மாட்டீங்களா?” 

“கண்டிப்பா வருஷா வருஷம் வருவேன் விழி. ரெண்டு வாரம் கிடைச்சா கூட வந்துட்டுப் போவேன். வீட்டுக்கு ஒரே பையன். அம்மா அப்பாவால என்னைப் பாக்காம முடியாது. வர்க் ஜாயின் பண்றதுக்கு முன்ன கொஞ்சம் ப்ரேக் கண்டிப்பா எடுப்பேன். நீ? உன் ப்ளான்?” 

“நான் கூட இன்னும் ஒரு வருஷம் தான். அப்புறம் எங்க போவேன்னு எனக்கே தெரியாது. ஆனா போய்டுவேன்.”

திருமணத்திற்கு சம்மதிக்க மட்டேன் என்று கூற நினைத்து… என்னை மறந்து விடாதே என்று கூற நினைத்து… என் காதலோடு உனக்காகக் காத்திருப்பேன் என்று கூற நினைத்து, நினைத்த எதையுமே கூற இயலாதவளாய் ஏதோ உளறிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. வாய் மூடிக் கொண்டாள். 

அவள் திருமண பேச்சைப் பற்றி அவனுக்குத் தெரிந்தே ஆகவேண்டும் போல.. “உடனே கல்யாணம் பண்ணலனா… நல்லா படிச்சு சென்டர் வழியாவே எம்.என்.சி-ல நுழைஞ்சுடு. அங்க இருந்து ஸ்டேட்ஸ் வர வாய்ப்பு கிடைச்சா… என்ட்ட சொல்லுவ தான?” 

“நீங்க அங்க போனதும் என்னை மறந்திடாம என் கூட டச்சுல இருந்தா சொல்றேன்.”

“என்ன பேசற விழி? உன்ன என்னால என்னைக்குமே மறக்க முடியாது”

புன்னகையை பதிலாகத் தந்தாள் பாவை. 

“உன்னையும் சென்டர்ல பாக்க முடியறது இல்ல. எனக்கும் ஓவர் பிஸியா போய்ட்டு இருக்கு. இனி மேல் நானும் கம்யூட்டர் சென்டர் பக்கம் அதிகம் வர மாட்டேன்.” 

“ஓஹ்…” 

“கொஞ்ச நேரம் முன்னாடி உன்ன பாக்கத்தான் ஹாஸ்டலுக்குப் போனேன். ஆன்ட்டி நீ வெளியில போய்ட்டதா சொன்னாங்க. வழில உன்ன பாப்பேன்னு எதிர்பார்க்கல.” 

என்ன சொல்லப் போற மனோ? மனம் எதை எதையோ நினைத்து ஆசை கொண்டது. 

“விசா ஸ்டாம்ப் ஆகிடுச்சு ரெண்டு மாசத்துல கிளம்பறேன்னு சொல்லணும்னு தோணிச்சு. அதுக்கு தான்…” 

“ரெண்டு மாசத்துலயேவா…?” சுரத்தையே இல்லாத குரலோடு கேட்டவள் பார்வையில் கலக்கம் எட்டிப் பார்த்தது.

“ம்ம்ம்” இருவரையும் மௌனம் ஆட்கொண்டது. 

மெலிதான இசையில், மிதமான குளிரில் கண்ணாடித் தடுப்புக்கு மறுபுறம் தெரிந்த நீச்சல் குளத்தைப் பார்த்து அமர்ந்திருந்தவளின் எண்ணம் எல்லாம் பர்ஸில் இருக்கும் பணம் பற்றித் தான். வேறு எண்ணங்களுக்கு விடை கொடுத்திருந்தாள். 

“என்ன விழி யாருமில்லாத பூல எவ்வளவு நேரம் முறைச்சுட்டே இருப்ப? இந்த வெல்கம் ட்ரிங்க் ட்ரை பண்ணிப் பாரு. நல்லா இருக்கு.” 

சுவைத்தாள். நாவு இன்பத்தில் திளைத்தது. எச்சில் சுரபி எல்லாம் உயிர்தெழ, ‘ஸ்ஸ்’ என்று கண்களை மூடி ரசித்தாள்.  

“நல்லா இருக்கில்ல?” 

“வாவ்! என்ன ஜூஸ் இது?”

 “ட்ராபிக்கல் ஃப்ரெஷ் ஜுஸ். ஆரெஜ், ஆப்பிள், பேர், பைன்ஆப்பிள், லைம்.” 

எச்சில் ஊற ரசித்து அதை அவள் பருக… அவன் ரசனையோடு பருகியது குளிர் பானத்தோடு நிற்கவில்லை என்பது நிஜம். 

“ஆர்டர் பண்றோமா… புஃபே ட்ரை பண்ணலாமா?” அவன் வினவ, உணவுப் பட்டியலில் விலை  பார்த்தவளின் கண்கள் விரிந்தன. அந்த மூன்று அங்குல கோப்பையிலிருந்த இரண்டு அங்குல அளவு ஜூஸ் மூன்று இலக்க விலையைக் காட்டியது. 

“மனோ…” 

“சொல்லு…” உணவுப் பட்டியலை பார்த்துக் கொண்டே வினவ,

“இங்க க்ரைண்டரா? இல்ல ஆட்டுக் கல்லா?” என்றாள் படு சீரியசாக. 

“அங்..? அப்படினா?” பாவம் அவனுக்குப் புரியவில்லை. 

“அப்படினா… என் கிட்ட இருக்க அமௌண்டுக்கு என்னால இந்த ஜூசுக்கும், ஒரு பாட்டில் தண்ணிக்கும் ஒரு ஸ்டாட்டருக்கும் மட்டும் தான் பில் பே பண்ண முடியும். மீதிக்கு நான் மாவாட்டணும். அது தான் கேட்டேன்.” 

சத்தம் போட்டுச் சிரித்தான்.  

“இப்போ எல்லாம் க்ரைண்டர் தான். சோ பாத்திரம் கழுவ விடுவாங்களா  இருக்கும் இல்லனா இங்க சர்வ் பண்ண விடுவாங்க. உனக்கு எது வசதி?” 

“வீ ஆர் பார்ட்னர்ஸ். சோ, உங்களுக்கு எது வசதியோ… அதே,” அவனோடு அவளும் சிரித்தாள்.  

நேரம் கடந்தது. வயிறோடு மனமும் நிறைந்தது. 

நீச்சல் குளத்தில் சிலர் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் அப்பாவும், ஒரே வயதில் இரு குழந்தைகளும் அடக்கம். பல வர்ண பந்து இருவரையும் சிரிப்பில் ஆழ்த்தியிருந்தது. அம்மா தண்ணீரில் இறங்கவும் சிறுவன் அம்மா கழுத்தைக் கட்டிக் கொள்ள, மகள் அப்பா முதுகில் சவாரி சென்றாள். சிறிது நேரம் வெளியே தெரிந்த கவிதையை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் காவியம் படைக்க ஆசை பிறந்தது.   

“என்ன ஸ்வீட் சொல்லட்டும்?” கேட்டவனைப் பார்த்தாள். இருவர் விழிகளும் சந்தித்து நகர மனமின்றி சிக்கி நின்று கொண்டது. 

இந்த நிமிடம் இருவருக்குமே அவர்கள் லட்சியமும் பிடித்தமில்லை, கனவும் பிடித்தமில்லை. சுற்றியிருக்கும் எதுவுமே வேண்டாம்! எதிரில் இருப்பவரின் கனவாய்… வாழ்வாய்… லட்சியமாய் தான் மட்டும் இருக்க முடியாதா என்ற கடலளவு ஆசை மட்டுமே!

காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர்தான் எதிர்காலமோ (பாடல் வரிகள்)

error: Content is protected !!
Scroll to Top