பெண் ஏதோ அவஸ்தையோடே இருப்பது போல் தோன்ற, “ஏன் ஒரு மாதிரி இருக்க அலர்? தூக்கம் வருதா மா?”
“அடி வயிறு ஒரு மாதிரி சூடா… என்னவோ பண்ணுது. நரம்பு ரொம்ப லேசா இழுத்துப் பிடிக்குது. உடம்பு பீவரிஷ்சா இருக்க மாதிரி இருக்கு. ஆனா ஃபீவர் எல்லாம் இல்ல.”
“பீரியட்ஸ் வர டைமா? தொப்புள் சுத்தி அப்புறம் கால் விரல் நகத்துல நல்லெண்ணை வை. ராசாத்திய கூப்பிடட்டுமா?”
எதையோ கணக்குப் போட்டாள். “இல்ல ஆன்ட்டி.. 14 டேஸ் தான் ஆகுது.”
“சிலருக்கு ஓவியுலேஷன் பிரியட்ல இப்படித்தான் இருக்கும், ஓவியுலேஷன் பிரியடா?”
“அதெல்லாம் தெரியாது ஆன்ட்டி.”
“ஓவியுலேஷன்னா குழந்த பிறக்க அந்த மாசம் உடம்பு தயாராகுதுன்னு சொல்லலாம். அவங்க அவங்க சைக்கிளுக்கு ஏத்த மாதிரி ஃபெர்டிலிட்டி பிரியட் ஒவ்வொருத்தருக்கு மாறும். 28 டேஸ் சைக்கிள்ன்னா மோஸ்ட்லி 12 டு 16 டேஸ்ல வரும். தெரியுமா… இது தான் ப்ரெக்னென்ட் ஆக ட்ரை பண்றவங்களுக்கு சரியான டைம். கவனிச்சு வச்சுகிட்டா, ப்ரெக்னென்ட் ஆகலாம்… ஆகாமத் தடுக்கலாம்.”
“ஓ” விழித்துப் பார்த்தாள். இப்படியான விஷயங்கள் கூட பெரியவர்கள் பேசுவார்களா? இப்படி எல்லாம் பேசினால் அம்மாவிடமிருந்து குமட்டில் இரண்டு இடி தான் விழும்.
“என் ஃப்ரெண்டு சொல்லுவா… ஃபெர்டிலிட்டி டைம்-ல ட்ரை பண்ணினா பையன் பிறக்க வாய்ப்பு ஜாஸ்தியாம். அதுக்கு ரெண்டு மூணு நாள் முன்ன ட்ரை பண்ணினா பொண்ணு பிறக்க வாய்ப்பு இருக்காம். இது சயன்ஸ் கிடையாது! வெறும் ஒரு தியரி. ஆனா எனக்கு வர்க் ஆச்சு. மேல், ஃபீமேல், ஸ்பர்மோட லைஃப் டைம் தான் காரணம்ன்னு சொல்லுது கூகுல்! நீ கல்யாணத்துக்கு அப்புறம் இத எல்லாம் கூகுல் பண்றதோட நிறுத்தாம, டாக்டர் கிட்டப் பேசி தெரிஞ்சுக்கோ.”
எதைப் பற்றிப் பேசினாலும் அவரும் அவளுக்குப் புரியும் வண்ணம் அனைத்தையும் விம் போட்டு விளக்கிக் கொண்டிருந்தார். அவளும் அவள் பங்கிற்கு வாய் பிளந்து கேட்டுக் கொண்டாள்.
“ஹாட் சாக்லேட் குடிப்பியா மா?”
“குடிச்சதில்லையே…”
கேட்டவர் கைப்பையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தையும், மார்ஷ்மெல்லோவையும் (marshmallow) தூக்கிக் கொண்டு அடுப்பங்கரை சென்றார். சுடு பாலில் கரைத்து, “இந்தா,” என்று அவளையும் கூட்டிக் கொண்டு டைனிங் ஹால் சென்றார்.
அதி முக்கிய கேள்வியைக் கேட்டாள்! “உங்களுக்கு என்னைத் ‘தெரியும் பாத்திருக்கேன்’னு சொன்னீங்களே? எப்படி?”
“சென்டர்ல்ல பாத்திருக்கேன். நீ தான் கவனிச்சதில்ல.”
“அது பெரிய இன்ஸ்டிட்யூட் இல்லையா, அது தான் கவினிக்காம விட்டுட்டேன் போல. நீங்க அங்க ஃபேக்கல்டியா?”
“இல்லடா, அது என்னோடைய சென்டர்”
“எஸ்தர் மேடம்?”
“ம்ம்..”
பட்டென்று எழுந்து நின்று கொண்டாள்.
“அலர்!! உக்காரு.”
“மேடம்…”
“ஓய் அடி விழும். மேடம் இல்ல ஆன்ட்டி! சென்டர்ல என்னைப் பார்த்தாலும் அப்படித்தான் கூப்பிடணும். மொதல்ல உக்காரு.”
அவளால் பூரிப்பை அடக்கவே முடியவில்லை. அதன் பின் கேள்விகள் எல்லாம் மையத்தைச் சுற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் தான்.
பேச்சு வெகு நேரம் சென்றது. “ஒரு நாளைக்கு உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். நாளைக்கு காலேஜ் இருக்கில்ல… வா, போய் படுப்போம்..”
“உங்க வீட்டுல?”
“நான், என் ஹப்பி, என் செல்ல மகன், என் ஹெல்பர். நாலு பேர் தான். உனக்கு அங்க தாராளமா இடம் இருக்கும்.”
“உங்க மகன் தானே கூட்டிட்டு வந்தாங்கன்னு சொன்னீங்க? அவங்க என்ன பண்றாங்க?”
“இஞ்சினியரிங் முடிச்சுட்டு, கேம்பஸ்ல செலக்ட் ஆகி இப்போ ஐடி வேலையில இருக்கான். அவனுக்கும் உன்னை மாதிரி ஒரு எதிர்காலக் கனவிருக்கு. உனக்கு ஆன் சைட் ஜாப்! அவனுக்கு சின்னதுல இருந்தே எம்.ஐ.டி.(MIT)… ஸ்டான்ஃபர்ட்(Stanford).. ஹாவர்ட்(Harvard)ல படிக்கணும். இது தான் ட்ரீம். அறிவாளிப் பையன்! எட்டாவது படிக்கும் போது ஆரம்பிச்சான் SAT எக்ஸாம் பத்திப் பேச.
ஸ்டான்ஃபர்ட் மாதிரி யுனிவர்சிட்டிக்குள்ள நுழைய 4 வருஷ மார்க் டாப்ல இருக்கணும். GPA 4.5/5 வேணும். ஹாவர்ட்ல நுழையணும்னா படிப்பு மட்டும் போதாது. ஆல் ரௌண்டரா இருக்கணும். ஏதாவது வித்தியாசமா சாதிச்சு இருக்கணும். எம்ஐடி-ல நுழைய SAT ஸ்கோர் ஹெவியா இருக்கணும். இந்த மாதிரி நிறைய இருக்கு. எல்லாத்தையும் மனசில வச்சுகிட்டு அவ்வளவு ஃபோக்கஸ்ட்டா இருந்தான்.
எனக்கு அவன யூஜி-க்கு வெளிநாடு அனுப்ப மனசே இல்ல. ஆனா அவன் தவமா தவம் இருந்து ஸ்கூல் பாடமும் படிச்சு, SAT எக்ஸாமுக்கு தனியா படிக்கவும், என்னால முடியாதுன்னு சொல்ல முடியலை. என் மகன் ஆசைய நிராகரிக்க எனக்கு தெம்பில்ல. அவன் நிம்மதியும் சந்தோஷமும் எனக்கு ரொம்ப முக்கியம். சரின்னு ஏத்துகிட்டேன்.
ஆனா யார் போராத நேரமோ… அவன் பன்னெண்டாவது ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே எனக்கு ஒரு ஆக்சிடென்ட். அதுல என் முட்டி ரொம்ப அடி வாங்கிடுச்சு! என்னால ரொம்ப நாள் நடக்க முடியல. வீல் சேர் தான் நிரந்தரம்னு நினைச்சிட்டோம். எனக்கு முடியாத போது என்னை அவ்வளவு நல்லாப் பார்த்துகிட்டான். அவன் எனக்கு மகனா கிடைக்கப் புண்ணியம் பண்ணியிருக்கணும்.
அவனால என்னை அப்படி விட்டுட்டுப் போக முடியல. யூஜி வேண்டாம் பிஜி போயிக்கிறேன்னு சொல்லிட்டான்.
இந்த தரம் அவன் கனவைக் கலைக்கிற மாதிரி எதுவும் நடந்திடக் கூடாது. அவன விட்டு இருக்க முடியாது தான். இருந்தும் அவன் தவம் நிறைவேறணும். ஒரு அம்மாவா அது மட்டும் தான் என்னோட ஜெபம்.”
‘பாசம் அதிகம் வைப்பவர்களால் கிளிகளைக் கூண்டில் அடைக்க முடிவதில்லை என்பது இது தான் போலும்.’ “அவர் விருப்பப்படி கண்டிப்பா அவர் ஆசைப் பட்ட காலேஜ்ல போய் படிப்பார் ஆன்ட்டி. ஒரு தடங்கலும் வராம கடவுள் பாத்துப்பார்.”
“அவனுக்கு ப்ரே பண்ணும் போதெல்லாம் இனி மேல் உனக்கும் சேர்த்தே பண்ணுவேன். நீயும் உன் கனவை அடையணும்ன்னு.”
“தேங்க்ஸ் ஆன்ட்டி”
“உனக்குத் தெரியுமா… அவன்தான் உன் மார்க் ஷீட் எல்லாம் பார்த்துட்டு, ஸ்காலர்ஷிப் கொண்டு வந்தான் நம்ம சென்டருக்கு. அவனுக்கு படிப்போட அருமை தெரிஞ்சு அதை ஆசையாப் படிக்கிற பிள்ளைங்களப் பார்த்தாலே அவ்வளவு பிடிக்கும்”
“ஓஹ்!” ஏகமாய் கண்கள் விரிந்தன. “அப்போ அவருக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிடுங்க ஆன்ட்டி. என்னைக்காது மீட் பண்ணினா, கண்டிப்பா அவர் கிட்ட மனசார என் நன்றிய தெரிவிப்பேன்.”
“சொல்லு சொல்லு. அவன் ரொம்ப நல்ல குழந்தை! நல்லது செஞ்சு, அது கவனிக்கப்படும் போது செய்யறவங்களுக்கு இன்னும் செய்யணும்னு தோணும்.”
“குழந்தையா ஆன்ட்டி?” சிரித்தாள்.
“என்ன பண்ண? அவன் வளர்ந்துட்டான். ஆனாலும் எனக்கு அவன் தான் குழந்த! கொஞ்சிக் கொஞ்சி என்னை மயக்கி வச்சிருக்கான் என் மகன்.அவன் கிளம்பிட்டா ரெண்டு வருஷம் என்ன பண்ணுவேன்?”
“இங்க வந்திடுங்க ஆன்ட்டி”
“என் புருஷன நாடு கடத்தினா தான் நான் இங்க வர முடியும். அப்படியே அவர விட்டுட்டு இங்க வந்தா, நீயும் படிச்சதும் போயிடுவியே…” சிரித்தார்.
“வா படுப்போம்.”
“உங்க மகன் இப்போ போனா, அவர் வர வரைக்கும் நான் இங்க தான் படிச்சுட்டு வேலைல இருப்பேன். நம்பி வாங்க…” மெத்தையைத் தயார் செய்து கொண்டே பதிலுரைத்தாள். “என்னை நம்பினவங்கள நான் கைவிட மாட்டேன் ஆன்ட்டி.”
மெத்தையில் அமர்ந்தவர் மீண்டும் எழுந்தார். “மருந்தை எடுக்காம மெத்தைக்குப் போயாச்சு. அறிவுக் கொழுந்து!” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
மெத்தையை விட்டு எழும்பவும்… “ஆ” என்று முகம் சுளித்துக் கொண்டே அங்கிருந்த மேசையிலிருந்த கைப்பையிலிருந்து களிம்போடு வந்து மீண்டும் அமர்ந்தார்.
கொட்டக் கொட்ட விழித்து அவரையே பார்த்து அமர்ந்திருந்தவளிடம், “உனக்குத் தூக்கம் வரலியாமா?” எனவும், “இல்ல ஆன்ட்டி.! இன்னும் நேரம் ஆகும். லேட்டாப் படுத்து பழகிடுச்சு” என்றாள்.
“படிப்பியோ?”
“ம்ம்… ஆமா ஆன்ட்டி. தனி ரூம் எவ்வளவு நாளைக்குக் கிடைக்கும்? அது வரைக்கும் கிடைக்கிற ச்சான்ச மிஸ் பண்ணிடக் கூடாதில்ல? சோ பதினொன்னு, எக்ஸாம்னா பன்னென்டாகிடும் படுக்க.”
“ஓ…” மருந்தைத் தேய்த்துக் கொண்டே… “இந்த ரூம்ல, இந்த கட்டில் என்னுது. நான் எப்போ வந்தாலும் எனக்குன்னு ரெடியா இருக்கும். சோ, இங்க நீ மட்டும் தான். எப்பவாது.. ரெண்டு மூனு மாசத்துக்கு ஒரு தரம் நான்.”
“ஸ்ஸ்…” மீண்டும் முகம் சுளித்தார்.
பார்த்துக் கொண்டு அவளால் சும்மா இருக்க முடியவில்லை. பாட்டிக்கு அவளும் நகுநாவும் தானே மருந்து தேய்த்துவிடுவது.
“எங்க பாட்டிக்கும் முட்டி வலி இருக்கு. எனக்கு தேச்சு விட்டுப் பழக்கமிருக்கு. தேச்சு விடவா?”
கை நீட்டி நிற்பவளைப் பார்த்தார். “குடுங்க ஆன்ட்டி, தேச்சு விடுறேன்.”
“இது ஆயுர்வேதிக் மெடிசின் மா… கை எல்லாம் ஒரே வாசமா இருக்கும். கழுவினா கூட வாசம் போகாது. சின்னப் பொண்ணு… உனக்கு எதுக்கு?”
“ப்ச்! நீங்க குடுங்க.” வாங்கி அவர் முட்டியின் அடியில் தலையணை வைத்து மெல்ல முட்டியைச் சுற்றி நீவி விட ஆரம்பித்தாள்.
கண் மூடி சுவரோடு சாய்ந்து கொண்டார். வலி அதிகம் என்று தெரிந்தது.
“யமுனா, எங்க கூட இருக்க ஹெல்பர், அவ இல்ல என் மகன் இல்ல அங்கிள் தான் போட்டு விடுவாங்க… அவள உன் கிட்ட அனுப்பறேன் ஒரு நாள். சொல்லிக் குடு அவளுக்கு.”
அவர் முகம் பார்க்க, அமைதியாகக் கண் மூடி அமர்ந்திருந்தார். “பாட்டிக்காக பிசியோ தெரபிஸ்ட் கிட்ட கத்துகிட்டது.”
“பாட்டி கொடுத்து வச்சவங்க. வலிக்கும் போது தாங்கிப் பிடிக்க ஆள் எல்லோருக்கும் கிடைக்கிறதில்ல.”
அம்மா கூறியது போல் இவர் இல்லையே… அனைத்து இனத்திலும் நல்லவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கிறார்கள். அம்மாவிற்கு சொன்னால் புரியுமா? கூறினால் கேட்டுக் கொள்வாரா என்ன? எஸ்தரிடம் பேசுவதைப் போல் அம்மாவிடமும் பேச முடிந்தால்? நீண்ட மூச்சை இழுத்து விட்டாள்.
“என்ன மா?”
“நீங்க கிறிஸ்டியன் தானே ஆன்ட்டி?”
“ஆமா…”
“நான் ஒண்ணு கேக்கட்டுமா? உங்களுக்கு கோபம் வர வாய்ப்பு இருக்கு? கேக்கவா?”
“ஹ ஹ ஹா… கேளு கேளு”
“நான் உங்க கூட பழகினா, எனக்கு ப்ரீச் பண்ணி கன்வர்ட் பண்ண ட்ரை பண்ணுவீங்களா?” உள்ளத்தை உறுத்தியதைக் கேட்டாயிற்று!
சுவரிலிருந்து தலை உயர்த்தி அவளைப் பார்க்க, அவள் முகத்தில் உண்மையிலுமே கலவரம்!
“ஹாட் சாக்லேட் ட்ரிங்க் பிடிச்சுதா?”
“ம்ம். நல்லா இருந்துது. அந்த மார்ஷ்மெல்லோ ரொம்பப் பிடிச்சுது.”
“எனக்கும் பிடிக்கும். அதே மாதிரி கோல்ட் காபி கூடப் பிடிக்கும். இன்னும் இதே மாதிரி நிறையப் பிடிக்கும் பிடிக்காதது இருக்கு. எனக்குப் பிடிச்சது உனக்கு பிடிக்காம இருக்கலாம். எனக்குப் பிடிக்காதது உனக்கு பிடிக்கலாம். அது அது அவங்க அவங்க விருப்பு வெறுப்பு! எனக்குப் பிடிக்குதுன்னு சொல்றதனால உன்னை அதைக் குடின்னு நான் சொல்றதா அர்த்தமில்ல… எனக்குப் பிடிக்கும்னு மட்டும் தான் அர்த்தம்.
இன்னைக்கு நீ என் கால பிடிச்சுவிடப் போய் இந்த வலி காணாமலே போச்சுன்னு வை, பாக்கிற எல்லார் கிட்டயும் உன்னைப் பத்தி சொல்லுவேன். நாளைக்கு இதே வலி இந்நேரம் வந்தா எனக்கு மருந்து போட உக்கார்ற என் மகன் கிட்டயோ… என் ஹெல்பர் கிட்டயோ கண்டிப்பா உன்னைப் பத்தி… நீ அமுக்கி விட்டதப் பத்தி சொல்லுவேன். அதுக்காக கால் வலி இருந்தாலே உன் கிட்ட அவங்களும் வரணும்னு சொல்றதா அர்த்தமில்ல. எனக்கு நீ அமுக்கி விடுறது பிடிக்குதுன்னு மட்டும் தான் அர்த்தம்.
என் கடவுள் நம்பிக்கை அப்படித்தான்! என் உடம்பு, என் ரத்தம், என் உணர்வு இதோட ஒன்றிப் போனது தான் என் கடவுள் நம்பிக்கை. கடவுள் அவங்க அவங்க தேடலா இருக்கணும்.
எனக்காக ஹாட் சாக்லேட் நீ குடிக்கிறத நான் என்னைக்குமே விரும்ப மாட்டேன். உனக்கா பிடிச்சு குடிக்கிறதை எனக்காக விடச் சொல்லவும் மாட்டேன். என் ஸ்பேஸ் எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு மரியாதை என் கூட இருக்கிறவங்களுக்கும் உண்டு. உன் ஸ்பேஸ்ல நான் எதையும் திணிக்க மாட்டேன்.”
ஒருத்தரைக் கண்ட அன்றே பிடிக்குமா? அலர்விழிக்கு எஸ்தரை மிகவும் பிடித்துப் போனது. அவள் கேட்டதற்குச் சட்டென்று கோபப் பட்டிருக்கலாம்! அவரிடம் ஒரு நிதானம்… பொறுமை… தோழமை… பணிவு… அன்பு… அரவணைப்பு… அறிவு என்று பலதை ஒர் கலவையாகப் பார்க்க முடிந்தது. எதையேனும் கேட்டால் எவ்வளவு விளக்கம் கொடுக்கிறார்?
எல்லாம் தெரிந்தவர் தானே அம்மா, நல்லவர்கள் எல்லா இனத்திலும் இருக்கத் தானே செய்கிறார்கள் ஏன் மனிதர்களுக்குள் இந்தப் பாகுபாடு? அம்மாவிடம் எஸ்தர் ஆன்ட்டியைப் பற்றிப் பேசவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். மற்ற இனத்தவரைப் பற்றிய வேண்டாத எண்ணங்களை அம்மா மனதிலிருந்து நீக்க வேண்டும். அனைவரும் ஒன்று தான் என்று விளக்க வேண்டும். பொங்கலுக்குச் செல்லும் வேளை பேச நினைத்தாள். பொங்கலும் வந்தது ஆனால் வாய் தான் திறக்க முடியவில்லை பெண்ணால்.
மனோவா அவளின் எட்டா நிலவு என்பது தெளிவாகத் தெரிந்தது.
வைதேகி, சௌந்தர்யாவின் அக்கா மகளுக்கு விவாகரத்து முடிவாகியிருந்தது. அலர்விழி வீட்டிற்குள் நுழையும் வேளை, “தல தலையா அடிச்சுக்கிட்டேன்… இந்த காதல் கன்றாவி எல்லாம் வேண்டாம்ன்னு கேட்டியாடி? அவங்க வேற ஆளுங்க ஒத்து வராதுன்னு சொன்னேன்! கேட்டியா? அவன் இல்லன்னா என்னால வாழவே முடியாது சித்தின்னு சொன்ன? இன்னைக்குப் பாரு. அவன் கூட வாழ முடியாதுன்னு வந்து நிக்கிற. இனம் இனத்தோட மட்டும் தான் சேரணும்னு சொன்னா ஏதாவது புரியுதா உங்களுக்கு எல்லாம்?” சௌந்தர்யா வைதேகியைக் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருந்தார்.
வைதேகி புண்ணியத்தில் அம்மாவின் எண்ணம் வலுத்துப் போனது, அலர்விழிக்கு சாதகமாக அமையவில்லை. அவர் பெண்களிடம், “படிக்கப் போற இடத்துல காதலிக்கிறேன்னு சொல்லிட்டு வந்தீங்க… இந்த வீட்டுல கொலை விழும். பெத்த பிள்ளைங்கன்னு பாக்க மாட்டேன்.” என்று கண்டிப்புடன் கூறினார்.
அம்மா எண்ணம் மாறாதா? ம்ப்ச்! எச்சில் விழுங்கி நின்றாள். அந்த எச்சில்… தொண்டை வழியே பிரயாணப் படுகையில், அங்கு ஒருவன் கை வைத்தது, இன்றைய சூழலில் நினைவில் வர வேண்டுமா? வந்தது! கூடவே அவன் தொட்ட இடம் இன்று குறுகுறுவென புதுவித உணர்வையும் தந்தது.
காதலுக்குக் கண் தான் இல்லை! காதுமா? அம்மாவின் பேச்சு காதில் விழவில்லையா பெண்ணே?