மலர் பாதம் பணிந்து..20

அத்தியாயம் – 20

ரஞ்சிதன் தொப்பென்று கீழே விழுந்ததும் அமுதன் சற்று திகைத்து “ஹே ரஞ்சித்..” என்று அழைக்க,

ரஞ்சிதனோ விட்டத்தை பார்த்தபடி தலையை உலுக்கிக் கொண்டு “இதெல்லாம் கனவு தான்.. கண்டிப்பா கனவு தான்.. விருந்து சாப்பாடுன்னு மதியம் ஃபுல் கட்டு கட்டுனது தப்பா போச்சு.. அதான் நானா மொட்டை மாடிக்கு ஏறி வந்து பகல் கனவு கண்டுட்டு இருக்கேன்..” என்று தன் போக்கில் உளறியவன்,

“அதுவும் எப்பேர்பட்ட கனவு…!! அமுதன் தேனுவ லவ் பண்றானாம்… அதை என்னைக் கூப்பிட்டு வேற சொல்றான்…!! இதெல்லாம் நடக்குற காரியமா..?” என வானத்தைப் பார்த்து கேள்வி கேட்டவன்,

“எனக்கு ஏன் இப்படி மோசமா எல்லாம் கனவு வருது..? பகல் கனவுன்னாலும் ஓரளவு வேண்டாம்..” என்று வேறு தலையில் தட்டிக் கொள்ள, அமுதன் தாடையில் கையூன்றி அவனின் லூட்டிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ரஞ்சிதன் சுற்றி எங்கிலும் பார்வையை வீசியபடி “நிஜமா எல்லாமே கனவு தான்.. கனவா தான் இருக்கணும்.. நிஜத்துல இதெல்லாம் நடந்தா நம்ம குடும்பம்ன்ற நாடு தாங்காது சாமி..” என்க,

“ஏன் தாங்காது..” என்ற அமுதனின் குரலில்.. “ஆத்தாடி… ஆத்தா.. மறுபடியும் இந்த அமுதன் பய குரல் கேட்குதே..” என்று அலற,

“ஹே ரஞ்சித்…” என்று அவன் தலையில் மெதுவாக என்றாலும் சற்று அழுத்தித் தான் தட்டினான் அமுதகீதன்.

அவன் தட்டியதும் ரஞ்சிதன் மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு தன் எதிரே தெரிந்த அமுதனின் முகத்தை உற்று பார்க்க, “ரஞ்சித்… லூசாகிட்டயா?” என்றான் அமுதன் கிண்டல் பார்வையுடன்!

“இன்னும் அது மட்டும் தான் அமுதா ஆகல!” என்றவன், “அப்ப.. இவ்வளவு நேரம் இங்க நடந்தது எல்லாம் கனவில்லையா?” என்று பாவமாகக் கேட்க, அமுதன் அவனை நன்றாகவே முறைத்தான்.

“ஆஹா.. பயபுள்ள மறுபடியும் பச்ச மிளகா ரேஞ்சுக்கு மாறிடப் போறான்.. ஸ்டடி ஆகிக்கடா ரஞ்சி..” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், சற்று நிதானித்திற்கு வந்தான்.

முகத்தை இரு கரங்களாலும் அழுந்த துடைத்துக் கொண்டவன், “ஓகே.. சீரியசா கேக்குறேன் அமுதன்.. நீ சொல்றது எல்லாம் நிஜமா? ஐ மீன்.. நீ நிஜமாவே மலரை விரும்புறியா? அவ கிட்ட சொல்லிட்டயா?” என்று திகைப்பு விலகாத தொனியில் கேட்க,

“ஹ்ம்ம்.. எஸ் ரஞ்சித்..” என்றவன் இன்று காலை அவளை அழைத்து வரும் போது தன் விருப்பத்தை சொன்னது குறித்துக் கூற,

“இந்த தேனு பக்கி இவ்வளவு நேரமா பேசினா.. இதைப் பத்தி ஒரு வார்த்தை மூச்சு விடலயே..” என்று தனக்குள் முனங்க, அவன் முனங்கியது நன்றாக அமுதனுக்கு கேட்டது.

ரஞ்சிதனை முறைத்து “மலரை பக்கின்னா சொல்ற..” என்று கேட்க, ரஞ்சிதன் நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டான்!

“டேய்.. உனக்கு அவ்வளவு தான் சொல்லிட்டேன்! இன்னைக்கு வேணும்னா உனக்கு மலரை பிடிச்சு நீ அவளை விரும்பலாம். ஆனா, நானும் தேனும் மூட்டையை தூக்கிட்டு ஸ்கூல் போற காலத்துல இருந்து தோஸ்த்துங்க! சோ, அவளை நான் பக்கின்னு சொன்னா உனக்கு இப்படி எல்லாம் மூக்கு விரைக்கக் கூடாது!” என்று மூச்சு வாங்கக் கூறினான்.

அவன் சொன்ன விதத்தில் அமுதனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“ஓகே.. ஓகே.. கூல்!” என்ற அமுதன் தன் வலக் கரத்தை அவன் புறம் நீட்டி “நானும் இனிமேல் உன் கூட தோஸ்த்தா இருக்க விரும்புறேன்.. ஹ்ம்ம்?” என்று கேட்க, ரஞ்சிதன் முகத்தில் மெல்ல புன்னகை அரும்பியது.

இதுவரை அவனுக்கும் அமுதனுக்கும் இடையே நெருங்கிய நட்போ உரிமையோ இருந்ததில்லை!

இன்று போல் டேய்.. என்று கூட ரஞ்சிதன் அவனை அழைத்ததில்லை. இத்தனைக்கும் ஒரே வயதுடையவர்கள் தான். சிறு வயதில் ரஞ்சிதன் அமுதனிடம் நெருங்க நினைத்தாலும் அமுதன் அதற்கு வழி விட்டதில்லை.

அவன் தேன்மலரோடு நட்புடன் நெருங்கிப் பழகியதே அதற்குக் காரணம் என்றும் கூறலாம்!

நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்கிடையே நெருங்கிய நட்பும உருவாக வேறு சந்தர்ப்பங்கள் அமையாமல் போனது!

ஆனால் இன்று அவளாலேயே தான் ரஞ்சிதனிடம் நட்புடன் இருக்க நினைப்பதை எண்ணி புன்னகைத்துக் கொண்டான் அமுதன்.

ரஞ்சிதன் நீட்டி இருந்த அவன் கரத்தை பற்றிக் கொண்டு “நீ இப்படி எல்லாம் கேட்கணும்னு இல்ல அமுதா.. நாம க்ளோஸ் இல்லை! மத்தபடி எனிமீஸும் இல்லை! இனிமேல் தேனுக்கு மட்டுமில்ல! உனக்கும் தோஸ்த் தான்!” என்று நட்புடன் அவனின் தோளை சுற்றி கையிட்டவன், “நண்பேன்டா!!!!” என்று உற்சாகமாக சொல்ல, அமுதன் முகத்தில் பெரிதான புன்னகை.

“சரி நம்மளோட நட்புத் திருவிழாவ அப்புறம் கொண்டாடலாம்! நீ சொல்லு.. ப்ரப்போஸ் பண்ணேன்னு சொன்ன! தேனு என்ன சொன்னா?” என்று கேட்க, அமுதனின் முகத்தில் அமைதி!

அவன் தோள் மேல் ஆதரவாகக் கை வைத்த ரஞ்சிதன், தானே பதிலை அறிந்தவனாய் “சத்தியமா ‘எஸ்’னு மட்டும் சொல்லி இருக்க மாட்டா என் தோழி தேனடை! அதை மட்டும் நான் உறுதியா சொல்வேன்!” என்று கண்களை உருட்டியபடி கூற, அமுதன் அவனை பொய்யாக முறைத்தான்.

“சரி சரி.. மறுபடியும் மூக்கை விரைக்காத! சொல்லு… என்ன தான் ஆச்சு.. எதாவது திட்டிட்டாளா.. இல்ல நாக்கைப் புடுங்கிற மாதிரி பேசிட்டாளா..! ஒரு வேளை..” என்று வரிசையாகக் கேட்டவன், அவன் முகத்தை இப்படியும் அப்படியுமாக திருப்பிப் பார்த்து,

“என் நண்பி செவில்ல காட்டி ஒரு அர விட்டாளோ?” என ஒற்றைக் கண்ணை மூடியபடி கேட்க, அமுதன் நன்றாகவே அவனை முறைத்தான்.

“என்ன தான் சொன்னான்னு சொல்லேன்டா.. எனக்கு மண்டை வெடிக்குது!” என்று ரஞ்சிதன் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக அமுதனைப் பார்க்க,

“ஒண்ணுமே சொல்லல ரஞ்சித்” என்றான் அமுதன் அமைதியான குரலில்!

அவன் பதிலைக் கேட்டு காற்றுப் போன பலூனாக புஸ் என்றாகி விட்டான் ரஞ்சிதன்.

“ஒண்ணுமே சொல்லலையா?”

“ஹ்ம்ம்.. ஒன்னும் சொல்லல. நானும் அவ எதாவது சொல்லணும்னு எதிர் பார்க்கல! நீ சொன்ன மாதிரி மலர் கண்டிப்பா எஸ் சொல்ல மாட்டா.. அது மட்டும் எனக்குத் தெரியும். ஆனா, நோ சொல்லிடக் கூடாதுன்னு தான் அவ கிட்ட தெளிவா என்னைப் புரிய வைக்கிற மாதிரி பேசினேன்” என்றவன்,

“ஒரே நாள்ல அவளுக்கு என் மேல இருக்க அபிப்ராயம் மாறனும்னு நினைக்கிறது ஓவர் ரஞ்சித்!” என்றான் நிதர்சனத்துடன்.

“ஒரே நாள்ல விடு.. முதல்ல அவ மனசு மாறும்னு நீ நினைக்கிற?” ரஞ்சித் அதி முக்கியமான சந்தேகத்தை கேட்க,

“மாறும்… மாறாது.. இந்த மாதிரி எல்லாம் நான் யோசிக்கல ரஞ்சித். நான் மலரை புதுசா பாத்த மாதிரி அவளும் என்னை புதுசா வேற கண்ணோட்டத்துல பார்த்தா போதும்!”

“க்கும்.. அதுக்கு சார் ஒழுங்கா நடந்திருக்கணும்! எல்லா சமயத்துலயும் டீக் கடையில இருக்க பாய்லர் மாதிரி கபகபன்னு கொதிச்சா என்ன பண்றது?” என்று கடுப்புடன் பேசிய ரஞ்சிதன்,

“சமீபமா நீ பேசுனது பண்ணது எல்லாத்தையும் விடு…. ஆனா, சின்ன வயசுல நீ பண்ணது எல்லாம் ரொம்ப டூ மச்டா! அதுக்கெல்லாம் நானே உன்னை மன்னிக்க மாட்டேன்!” என்றான் உண்மையான கோபத்துடன்!

அவன் கூற்றில் புருவங்களை நெறித்த அமுதன், “சின்ன வயசுலயா? அப்ப எல்லாம் நான் அத்தை குடும்பம்னு வந்தாலே ஒதுங்கிப் போக மட்டும் தான் செய்வேன் ரஞ்சித்.. அப்ப நான் என்ன பண்ணேன்னு இவ்வளவு கோபமா சொல்ற?” என்று புரியாமல் கேட்க,

“என்ன பண்ணியா? நல்லா நியாபகப் படுத்திப் பாரு! நம்ம ஃபேக்டருக்கு தேனு வந்திருந்தப்ப ஆசையா கடலை மிட்டாய் சாப்பிட்டுட்டு இருந்தா! அதை நீ பறிச்சு கீழே போட்டது மட்டுமில்லாம.. இனிமேல் இங்க வரக் கூடாது.. கடல மிட்டாய் வேணும்னா வெளிய காசு கொடுத்து வாங்கி சாப்பிடுன்னு சொன்ன..! அதை மட்டும் என்னால மன்னிக்கவே முடியாதுடா” என்றான் இப்போதும் அதை எண்ணி கோபம் கொண்டவனாக.

அவன் சொல்லச் சொல்ல அமுதனின் முகம் கருத்துப் போனது! அவன் சொல்பவை அனைத்தும் அவனுக்கும் நினைவிருக்கிறதே! அன்று மருத்துவமனையில் நினைவு கூர்ந்த பின்னர் தானே அவனுக்கு மலரின் மேல் உள்ள பார்வையே மாற ஆரம்பித்திருந்தது!

“அப்ப அவ சின்ன பொண்ணு அமுதா.. அவளுக்கு என்ன தெரியும்னு அவ மேல உன் கோபத்தை காட்டின நீ! அவ அப்பா சரி இல்லாம போனதுக்கும் அவ அம்மா நகை பணம்னு எல்லாத்தையும் புருஷனை நம்பிக் கொடுத்து ஏமாந்ததுக்கும் தேனு என்னடா பண்ணுவா?

பாவம் அவ.. எவ்வளவு கஷ்ட பட்டுட்டா தெரியுமா? நீ அப்படி சொன்னதுக்கு அப்புறம் இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு கடல மிட்டாய் கூட சாப்பிட்டது கிடையாது! உன் மேல உள்ள வெறுப்பு.. அது மேலயும் அவளுக்கு இருக்கு..!” என்றான் கோபம் விலகாத குரலில்.

அவன் சொன்ன இறுதி வாக்கியங்களில் அமுதன் திகைப்புடன் ரஞ்சிதனைப் பார்த்தான்.

“என்ன ரஞ்சித் சொல்ற? இப்ப வரைக்கும் சாப்பிட்டதில்லேன்னா….” என்று மேலும் பேச முடியாமல் நிறுத்தி விட்டான். உள்ளத்தில் பெரும் பள்ளம் விழுந்தது போல் இருந்தது!

“ஆமா.. இப்ப வரைக்கும் அவ கடலை மிட்டாய் சாப்பிட்டது கிடையாது! நான் எவ்வளவோ சொல்லியும் தேனு கேட்கல. அதுவும் ஃபேக்டரில செஞ்சதை எடுத்துட்டு போய் கொடுத்தா கொலை வெறியோட முறைப்பா.. ஒரு முறை நான் ரொம்ப கட்டாயப் படுத்தினப்ப ‘வேணாம் ரஞ்சி… இதை இனி சாப்பிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. அதனால இனிமேல் வாங்கிட்டு வராத’ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டா. அதிலிருந்து நானும் விட்டுட்டேன்!” என்றான் பெரு மூச்சுடன்.

அமுதனுக்கு தன்னை நினைத்தே அத்தனை கோபம் வந்தது. பக்குவமும் சரியான புரிதலும் தெளிவான சிந்தனையும் இல்லாத வயதில் தான் அவளிடம் நடந்து கொண்ட முறை அவளை இத்தனை தூரத்திற்கு காயப் படுத்தி இருக்கும் என நினைக்கவில்லை.

‘இடியட்.. இடியட்..’ என்று உள்ளுக்குள் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டான்.

ரஞ்சிதன் இன்னமும் அவனை முறைத்துக் கொண்டு நிற்க, “நான்.. அது.. அப்ப.. என்னமோ கோபத்துல..” என்று அமுதன் முதல் முறையாக தடுமாறினான்.

“வேண்டாம்.. நீ எதையும் விம் போட்டு விளக்க வேண்டாம்..” என்று கடுப்புடன் ரஞ்சிதன் கூறியதும்,

“என் க்ரைம் ரேட் கூடிட்டே போகுதோ…” என்று உள்ளே சென்று விட்ட குரலில் அமுதன் கேட்க,

“கூடலடா.. ஏற்கனவே ‘பீக்’ல தான் நிக்குது..! இதுல லவ் வேற பண்றானாம்.. மலர் ஓகே சொல்லிட்டு தான் மறு வேலை பார்ப்பா பாரு!” என கடுப்படித்தவன்,

“இதுல நான் அவளை லவ் பண்ணேன்னா அதை அடியோட மறந்திடுன்னு மிரட்டல் வேற விட வந்துட்டாரு சாரு.. போடா.. போய் நடக்குற காரியம் எதாவது இருந்தா பாரு..” என்று அயர்ந்த குரலில் சொல்லி விட்டு கீழே இறங்க எத்தனித்தவனை தடுத்து நிறுத்தினான் அமுதன்.

“ப்ளீஸ் ரஞ்சி.. நான் செஞ்சது.. அதெல்லாம் வேணும்னு செய்யல. அதைப் பத்தி இப்ப பேசினாலும் எந்த நல்லதும் நடக்கப் போறதில்ல..” என்றவன்,

“என் தோஸ்துன்னு சொல்லிட்டு நீ இப்படி போனா என்ன அர்த்தம்?” என்று அவனிடமே கேட்க,

“இங்க பாரு அமுதா.. நீ தேனுவ விரும்புறது எனக்கு ஷாக் தான். ஆனா, என்னை மிரட்டுற அளவு யோசிச்சு இருக்கேன்னா நீ எந்த அளவு அவ மேல டீப் லவ் வச்சிருக்கேன்னு புரியுது..! இன்னைக்கு காலைல நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்குள்ள வந்தப்ப நானே ஒரு நிமிஷம் என்னை மறந்து உங்க ஜோடியை பார்த்து ஸ்டன்னாகி நின்னுட்டேன். நீங்க சேர்ந்தா நல்லா தான் இருக்கும்னு தோணுது..” என்றவன்,

“ஆனா, இந்த விஷயத்துல நான் தேனுவோட பக்கம் தான். அவளோட உணர்வுகள் ரொம்ப முக்கியம். சின்ன வயசுல இருந்து அவளைப் பாக்குறேன். அவ வளந்த விதம், அவளோட பக்குவம், அவ கிட்ட இருக்க அழுத்தம், மன உறுதி இதெல்லாம் சாதாரணமா உருவாகல. பல பேரோட ஏளனப் பேச்சுனாலயும் நக்கல் பார்வையாலயும் உருவானது. தேனு நீ நினைச்சத விட பல மடங்கு மேல் அமுதா.. என்னைப் பொறுத்த வரைக்கும் தேனு சந்தோஷமா இருக்கணும்” என்றவன்,

“உன் கிட்ட ஒரே ஒரு ரெக்குவெஸ்ட் மட்டும் கேட்டுக்குறேன்.. செய்வியா?” என்று அமுதனிடம் கெஞ்சுதலான பார்வையுடன் கேட்க, அமுதன் ஆமோதிப்பாக தலை அசைத்ததும்,

“நீ உண்மையாவே அவளை விரும்புறேன்னா எந்த சூழ்நிலையிலையும் தேனுவைக் கட்டாயப் படுத்தாத அமுதா. அவளுக்கும் இஷ்டம் இருந்தா மட்டும் அவ கூட ஒரு வாழ்க்கையை யோசி! இல்லேன்னா ஒதுங்கிடு. விருப்பம் இல்லாம இணையிற பந்தம் என்னைக்கும் நிலைக்காது” என்றவன்,

“உன்னை காயப் படுத்தணும்னு நான் இதை சொல்லல அமுதா. எந்த வகைலயும் தேனு காயப் பட்டுட கூடாதுன்னு தான் இதை சொல்றேன். ஏன்னா ஏற்கனவே அவ நிறைய காயப் பட்டுட்டா. இனிமேலும்… ம்ஹும்.. வேண்டாம்.. அவ விருப்பப் படலேன்னா விட்டுடு.. ப்ளீஸ்..” தோழிக்கு உண்மையான நண்பனாக தனது புது நண்பனிடம் வேண்டுகோள் வைத்தான் ரஞ்சிதன்!

அவன் கேட்டுக் கொண்டதற்கு அத்தனை சீக்கிரம் பதில் சொல்லவில்லை அமுதகீதன்! உள்ளுக்குள் அத்தனை போராட்டம்! மலரில்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கவே பயந்தவன் போல் கண்களை மூடிக் கொண்டான்.

எந்த சூழ்நிலையிலும் அவளை விட்டுக் கொடுக்க முடியாது என்பதால் தான் ரஞ்சிதனிடம் அவளை விரும்பினால் அடியோடு மறந்து விடு என்று எச்சரிக்க எண்ணினான்.

இப்போது அவளே விரும்பவில்லை என்றால் என்ன செய்வது என்று தவித்துப் போனவன் பதில் கூற முடியாமல் தத்தளிக்க, “அமுதா..” என்று ரஞ்சித் தோள் மீது கை வைத்ததும், கண்களைத் திறந்தவன் “மலரை விட முடியுமான்னு தெரியல ரஞ்சி.. ஆனா, நிச்சயமா அவளை கட்டாயப் படுத்த மாட்டேன். அவளோட மனசு என்னை ஏத்துக்குற வரை வெயிட் பண்றேன்” என்றான் முயன்று வரவழைத்த புன்னகையுடன்.

அவன் வலி ரஞ்சிதனுக்கும் புரிந்தது. ஆதரவாக அவனை அணைத்துக் கொண்டவன் அவனை இயல்பாக்கும் பொருட்டு “உன் மனசையும் புரிஞ்சு உனக்காகவும் சப்போர்ட் பண்ண சொல்லி என் உள் மனசு சொல்லுது தான்! ஆனா, என் தோழிக்கு தான் முதல் உரிமை! சோ, நீ செக்கண்ட் தான்..” என்று கிண்டலாக கூற,

“உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல நான் செக்கண்ட இருக்கிறது எனக்கு சந்தோஷம் தான்! ஏன்னா என் மலர் ஃபர்ஸ்ட் இருக்காளே..” என்று புன்னகைக்க,

“இருந்தாலும் நீ இப்படி தொபுக்கடீர்னு தேனு கிட்ட தலை குப்புற விழுவன்னு நான் நினைச்சு கூட பாக்கலடா..” என்று ரஞ்சிதன் ஆச்சர்யத்துடன் சிரிக்க, “நானுமே நினைக்கலயே..” என்று தானும் அவனோடு இணைந்து புன்னகைத்தான் அமுதகீதன்.

இதோ.. அடுத்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டிருந்தன! இந்த நாட்களுக்கு இடையே அவன் தேன்மலரை காணவே இல்லை என்று சொல்லி விட முடியாது.

இரண்டு முறை பார்த்தான்!

ஒரு நாள் வீட்டிற்கே தபால் கொடுக்க வந்திருந்தாள். அப்போது மறந்தும் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை பெண்!

ஆனால், அவன் பார்த்தான். சென்ற முறை அவள் வந்த போது ஏற்பட்ட காயத்தின் தழும்பில் சற்று கூடுதலாக அவன் பார்வை படிந்து மீண்டது.

அவளோ தபாலை கொடுத்து முடித்த கையோடு கவனமாக அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.

அடுத்து ஒரு முறை அன்னையையும் தங்கையையும் கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது அவளைப் பார்த்தான். கவி மற்றும் கோகுலனுடன் வந்திருந்தாள்.

இவனைக் கண்டதும் பார்வையை விலக்கிக் கொண்டவள், கிருஷ்ணாவிடமும் வசுந்தலாவிடமும் புன்னகை முகமாக பேசி விட்டு கிளம்பி இருந்தாள்.

அமுதனும் அவள் தன்னிடம் முகம் கொடுத்து பேச வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவளின் பேரமைதியும் ஒதுக்கமும் அவனை என்னவோ செய்தது.

எல்லாவற்றையும் யோசித்தபடி அமர்ந்திருந்தவன் அலைபேசி சிணுங்கியதும் தான் தன்னிலை அடைந்தான்.

யாரென்று எடுத்துப் பார்க்க, வசுந்தலா தான் அழைத்திருந்தார்.

ஏற்கனவே அவரிடமிருந்து இரண்டு அழைப்புகள் வந்திருப்பதை கண்டவன்

என்ன அவசரமோ என தாய்க்கு அழைப்பு விடுத்தான்.

அழைப்பை ஏற்றதும் “அமுதா.. அப்பாவைக் கூட்டிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா” என்றவரின் குரலில் படபடப்பு தென்பட்டதை உணர்ந்து,

“என்னாச்சுமா.. எதுவும் பிரச்சனையா?” என்று இருக்கையில் இருந்து எழுந்தபடி கேட்டான் அமுதன்.

“அதெல்லாம் இல்ல அமுதா. வள்ளியும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க. அனேகமா உன் கல்யாண விஷயமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்” என்றதும் அமுதனின் தேகம் சட்டென்று இறுக்கம் பெற்றது.

“நான் தான் அன்னைக்கே அக்கா கிட்ட தெளிவா சொன்னேனேமா..” என்று கோபத்தில் அவன் வார்த்தைகள் வர, வசுந்தலா மெல்லிய குரலில், “தயவு செஞ்சு கோபப் படாத அமுதா. உன் அக்கா மட்டும் வந்திருந்தா கூட பரவாயில்ல. அவ புருஷனும் வந்திருக்கார். தேவை இல்லாத பிரச்சனை வேண்டாம். என்னன்னு பொறுமையா கேட்டு பேசிக்கலாம். நீ அப்பாவை கூட்டிட்டு வா. நான் அவருக்கு ஃபோன் பண்ணேன். அப்பா எடுக்கல” என்க,

“சரிமா” என்றவன் இன்று அக்கா குடும்பத்தினரின் ஆசைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தந்தையுடன் வீட்டிற்கு சென்றான்.

அங்கே யோகவள்ளியும் ஏழுமலையும் அமுதனை தங்கள் வீட்டு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள முடிவு செய்து எப்போது நிச்சயத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பேசி நாள் குறிக்க வந்திருந்தனர்!

ஆனால், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.

அமுதன் தான் அவர்கள் பேசிய பேச்சில் பொறுமை இழந்து “நான் என் அத்தை பொண்ணு தேன்மலரை விரும்புறேன். அவளை தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுறேன்” என அழுத்தம் திருத்தமாக கூறி எல்லோரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top