அந்த விடுதலையும் மனதிற்கு நிம்மதியை அளிக்காது என்று புரிந்து கொண்டவளுக்கு கண்ணீர் தான் வந்தது.
மேலும், அப்போது தேன்மலர் அவள் கையை பற்றிக் கொண்டு “உங்க அப்பா அம்மா சொல்றதுக்கு ஓகே சொல்லிடுங்க அண்ணி. அண்ணா திருந்த மாட்டான். எனக்கே அவனை கொல்லனும் போல இருக்கு. அவனை விட்டு போனீங்கன்னா நீங்களாவது நிம்மதியா இருப்பீங்க” என்று கண்ணீருடன் கூறி இருந்தாள்.
“போனா மட்டும் நிம்மதி வந்திடுமா தேனு?” என்றவள், தன் மேடிட்ட வயிற்றில் கை வைத்து “இந்தக் குழந்தையையும் நான் யோசிக்கணும் தான” என்றவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உறுதியாக பெரியவர்களை பார்த்து,
“விவாகரத்து எல்லாம் வேண்டாம்” என்று கல்லான மனதுடன் சொல்லி விட்டவள் அன்றிலிருந்து இன்று வரை கணவனையும் அவனின் குடி பழக்கத்தையும் சகித்து கொண்டு தான் வாழ்கிறாள்.
ஒர்க் ஃப்ரம் ஹோம் கிடைத்ததும் தங்களோடு வந்து இருக்க சொன்ன பெற்றோரிடம் மறுத்து விட்டு தாரமங்கலத்திற்கே வந்திருந்தாள்.
இதுவரை திவாகரனை எந்த விதத்திலும் நெருங்க விட்டதில்லை. கோகுலனைக் கூட தூக்க விட மாட்டாள்.
மங்கைப் பொறுக்காமல் மருமகளிடம் சண்டையிட்ட போது “குழந்தை கிட்ட ஒரு குடிகாரன என்னால நெருங்க விட முடியாது அத்த. என்னைக்கு உங்க புள்ள இந்த வீட்டுக்குப் பொறுப்பான தலை மகனா எனக்கு நல்ல புருஷனா கோகுலுக்கு ஆரோக்யமான அப்பாவா நடந்துக்குறாரோ அன்னைக்கு அவர் குழந்தையையும் என்னையும் நெருங்கட்டும். அது வரைக்கும் இந்த வீட்ல நாங்க தனி ரூம்ல தான் இருப்போம்” என்று உறுதியாக கூறியவளிடம் எதிர்த்து ஒரு வார்த்தை கூட மங்கையால் பேச முடியவில்லை.
அவள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறதே! அதற்காகத் தான் அவரும் இன்று வரை போராடுகிறார். எப்படியாவது மகனை குடியில் இருந்து வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று!
ஏறாத கோவிலில்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. பார்க்காத சாமியார்கள் இல்லை. அவர்களிடம் லட்ச லட்சமாக கொட்டாத பணமும் இல்லை! எல்லாமே விழலுக்கு இரைத்த நீராய்த் தான் போனது.
இதோ.. இந்தத் திருவண்ணாமலை சாமியாரிடம் சென்று வந்த பின்னர் மகன் மாறியே விடுவான் என்று ஆணித் தரமாக நம்பிய மங்கைக்கு மகனின் குடி அவதாரம் வெகுவாகக் கலங்க வைத்தது.
அவன் மீண்டும் குடிக்க ஆரம்பித்து இரண்டு மாதங்கள் முடிவடைந்து விட்டன. மங்கை தான் சோர்ந்து போனார்.
கவியும் தேனுவும் இயல்பாக தைரியமாகத் தான் இருந்தார்கள். அன்று வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த தேனுவிடம் வந்து நின்றான் திவாகரன்.
உடல் இறுக அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, திவாகரன் தயக்கத்துடன் தலையை கோதியபடி “தேனு.. எனக்கொரு ரெண்டாயிரம் தாயேன். நான் உனக்கு கவிக்கிட்ட அப்புறமா வாங்கித் தந்திடுறேன்” என்று நல்ல பிள்ளையாக கேட்க, அவனை உக்கிரத்துடன் முறைத்தாள் தேன்மலர்.
அவள் வேலைக்கு சென்ற தினம் தொட்டு இன்று வரை அண்ணனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை!
நல்லது செய்யும் அண்ணனாக இருந்தாள் நிச்சயம் கொடுத்திருப்பாள். இப்படி குடித்து விட்டு தன்னையே அழித்துக் கொள்பவனுக்கு பத்து பைசா கூட தர மாட்டேன் என்று முதல் முறையாக அவன் தன்னிடம் வந்து பணம் கேட்ட போதே சொல்லி இருந்தாள்.
இன்று அவன் வந்து கேட்கவும் சுள்ளென்று கோபம் ஏறியது. கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஒரு பொறுப்பான அண்ணனா நீ இல்ல. ஆனா நான் ஒரு பொறுப்பான தங்கச்சியா இருக்கணும்னு நினைக்கிறேன். என் கையாலேயே காசு கொடுத்து உன்னை குடிக்க அனுப்புறதுக்கு எனக்கு பெரிய மனசு இல்ல. மன்னிச்சிடு” என்றவள்,
“அம்மாட்டையும் அண்ணிட்டையும் காசு கொடுக்க வேண்டாம்னு சொன்னது நான் தான்! நான் வேலைக்கு போன பின்ன அவுங்க கிட்ட காசு கேட்டு மறுபடியும் பிரச்சனை பண்ணேன்னா பொறுத்து போக மாட்டேன். கண்டிப்பா போலீஸ் கிட்ட போயிடுவேன்” என்றதும் திவாகரனுக்கு தொண்டை வறண்டு போனது.
“தேனு..” என்று திகைப்புடன் தங்கையைப் பார்த்தவன், பேசியது தன் தங்கை தானா என்று நம்ப முடியாமல் நின்றான்.
“சும்மா சொல்றனேன்னு நினைக்காத! இந்த ரெண்டு மாசமும் நீ அம்மா கிட்டயும் அண்ணி கிட்டயும் வாங்கி குடிச்ச குடிக்கு இன்னும் போதை உன் உடம்பில ஒட்டிட்டு தான் இருக்கும். இன்னும் போதை ஏத்திக்க எங்க உயிரை எடுக்காத. மீறி பிரச்சனை பண்ணா நான் சொன்ன மாதிரி அண்ணன்னு கூட பாக்காம போலீஸ் கிட்ட போவேன்” என்று தீயாய் தகித்த குரலில் சொன்னவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.
அங்கே ‘சபாஷ் தேனு!’ என்ற பார்வையுடன் கவிரத்னா நாத்தனாரைப் பார்க்க, மங்கை நெஞ்சில் கை வைத்து மகளைப் பார்த்திருந்தார்.
அண்ணியிடம் தைரியமாய் இருக்கும் படி கண்களை மூடித் திறந்தவள் தாயைப் பார்த்து “உன் பிள்ளை திருந்தனுன்னா இதான்மா வழி” என பையை எடுத்துக் கொண்டு காலை உணவைக் கூட உண்ணாமல் வேலைக்கு கிளம்பி விட்டாள்.
மனதில் சூழ்ந்த புழுக்கம் மட்டும் நீங்கவே இல்லை. தமையனை மாற்றவே முடியாதா எனும் விடையற்ற கேள்வியுடன் அன்றைய அலுவலகப் பணி முழுவதையும் முடித்தவள் போஸ்ட் கவார்களை டெலிவரி செய்யவென புறப்பட,
அவளின் மேலதிகாரி அவளை அழைத்து “தேன்மலர். நம்ம போஸ்ட் மேனுக்கு உடம்பு சரியில்ல. ரெண்டு நாள் லீவ் எடுத்திருக்கார். சோ, அவரோட டிவிஷன்ல டெலிவரி பண்ண வேண்டிய லெட்டர் அண்ட் போஸ்ட்டை நீங்களே டெலிவரி பண்ணிடுங்க” என்று கூற, “சரி சார்” என்றவள் அனைத்து போஸ்ட் கவர்களையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டாள்.
இது அவ்வப்போது நிகழ்வது தான். சில சமயங்களில் எல்லா போஸ்ட்டையுமே போஸ்ட் மேன் டெலிவரி செய்து விடுவார். முக்கியமானதை மட்டும் இவர்கள் டெலிவரி செய்வார்கள். அலுவலக வேலை முடிந்து விட்டால் குறிப்பிட்ட பகுதியில் டெலிவரி வேலையை தேன்மலர் பார்த்துக் கொள்வாள்.
ஆனால், இன்று நிறைய தபால்கள் இருந்தன.
ஒவ்வொன்றாக கொடுத்து விட்டு வந்தவள் அடுத்த போஸ்ட்டில் இருந்த பெயரையும் அட்ரஸையும் படித்து விட்டு ஒரு நொடி நின்று விட்டாள்.
பெறுநரின் இடத்தில்
“K.Inbasekaran” என்கிற பெயரும் இல்லத்து முகவரியும் இருப்பதைக் கண்டு பெரு மூச்சை விட்டுக் கொண்டாள்.
தாரமங்கலத்தின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள அவர்களின் இல்லத்திற்கு இன்று வரை அவள் சென்றதில்லை.
தபால்களை கொடுக்கும் அவசியமும் அவளுக்கு வந்திருக்கவில்லை. இன்று தான் முதல் முறை!
இத்தனைக்கும் அவ்வீடு அமுதகீதன் கட்டியிருப்பது என சொந்தங்கள் மூலம் மங்கைக்கு தெரிய வர, தாய் மூலமாக தாரமங்கலத்தில் அவன் வீடு கட்டியிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டாள் தேன்மலர்.
அதை தவிர்த்து அவ்வீடு எப்படி இருக்கும் என்று கூட அவர்கள் வீட்டினர் யாரும் பார்த்ததில்லை. வீடு பால் காய்ச்சுவதற்கு அழைத்தால் தானே சென்றிருக்க முடியும்?
தான் இன்பசேகரனின் மகன் என நிரூபிக்கும் விதமாக அவனும் தங்களை ஒதுக்கி வைத்திருப்பது அவளுக்கொன்றும் பெரிய கவலையை கொடுக்கவில்லை. சிறு வயதிலேயே அவனிடம் அனுபவப்பட்டவள் ஆகிற்றே!
அவன் தங்களைக் கண்டாலே பார்வையால் எரிப்பதை உணர்ந்திருக்கிறாள். அவன் உணர்த்தி இருக்கிறான்!
அது மட்டுமல்லாமல் இப்போது அவர்கள் வீட்டிற்கு இந்தப் போஸ்ட்’டை சென்று கொடுக்கும் போது அவனைப் பார்க்க நேரிடுமோ என்று கசப்பாக எண்ணியவளுக்கு அன்று இளவழகன் வீட்டு விசேஷத்திற்கு அழைத்து செல்ல வந்த போது என்ன மாதிரி எல்லாம் பேசினான் என நினைக்கும் போதே உடல் பற்றி எரிந்தது.
அவனுக்குத் தங்களை பிடிக்காது என்று தெரியும்! ஆனால், இந்த அளவிற்கு தரம் தாழ்த்தி தங்களை நினைவில் வைத்திருப்பான் என்று எதிர் பார்த்திருக்கவில்லை.
அவன் நினைவுகள் மனதில் வெப்பத்தை கிளப்ப, சூடான மூச்சுக் காற்றினை வெளியேற்றி விட்டு வண்டியை அமுதகீதனின் இல்லத்திற்கு செலுத்தினாள்.