மலர் பாதம் பணிந்து..7(2)

அவன் சொல்வதும் உண்மை தானே! எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன? உருவான கரு தங்களின் குழந்தை அல்லவா? இதற்கு ஏன் வெட்கம் கொள்ள வேண்டும்?

ஊராரும் உறவினர்களும் கேலி கிண்டல் செய்தால் செய்து கொள்ளட்டும்! தங்கள் பிள்ளையை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தவர் மனைவியிடம் சென்று “இந்தக் குழந்தையை களைக்க வேண்டாம் வசு. நாம பெத்துக்கிட்டே ஆகுறோம்” என்று முடிவாக கூறி விட்டார்.

கணவனின் பேச்சில் அதிர்ந்த வசு முடியவே முடியாது என்று அடம் பிடித்து மறுக்க, இன்பசேகரனும் இறங்கி வரவில்லை.

“எத்தன வருஷம் கழிச்சு பெத்துக்கிட்டாலும் பெத்துக்க போறது நம்ம குழந்தை வசு. ஊரும் உறவும் கேலி பேசுறாங்கன்றதுக்காக நம்ம பிள்ளையை என்னால தூக்கி எறிய முடியாது. நாம பெத்துக்கலாம். உன்னோட நான் இருக்கேன்” என்று விட்டார்.

வசுந்தலாவுக்கு துளி அளவு கூட விருப்பமே இல்லை! அதே சமயம் கணவனின் முடிவை மாற்ற முடியாமல் அல்லாடிப் போனார்.

இறுதியாக, அப்போது உயிரோடு இருந்த வசுந்தலாவின் அன்னை முத்தம்மாள் “என்னத்துக்குடி கலங்குற. அந்த காலத்துல நாங்க எல்லாம் வயசு வித்தியாசம் பார்த்தா பிள்ளை பெத்துட்டு இருந்தோம். வருஷக் கணக்கு பாக்காம வதவதன்னு பெத்துப் போடுவோம். ஏன்.. நீயே நம்ம வீட்ல அஞ்சாவது பிள்ள. உனக்கு அண்ணனுங்க அக்காங்க தங்கச்சிங்கன்னு கூடப் பொறந்த பொறப்புங்க ஏழு பேர் இருக்காங்க. உனக்கும் உன் மூத்த அண்ணனுக்கும் பதினாலு வயசு வித்தியாசம்! நானெல்லாம் இப்படியா உன்னைக் களைச்சிடலாம்னு ஒப்பாரி வச்சேன்! உனக்கடுத்து ரெண்டு பிள்ளையை பெத்துப் போட்டேன்டி” என்று ஒரு போடு போட்டவர்,

“ஊர் வாய நாம மூட முடியாது. பேசுறதை அவிங்க பேசிட்டு போவட்டும்! நீ பிள்ளையை பெத்துக் கொடு. நானும் எம்பேரன் அமுதனும் அதை ஜம்முன்னு வளத்துக் காட்றோம்” என்று மகளுக்கு தெம்பூட்டும் விதமாக சவால் விடுத்தார் முத்தம்மாள்.

வசுந்தலாவும் அதற்கடுத்து குழந்தையை களைக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அன்னையும் கணவரும் இருக்கும் தைரியத்தில் குழந்தையை சுமக்க ஒப்புக் கொண்டார்.

மூன்று பெண்களின் திருமணமும் வரிசையாக அடுத்தடுத்த நாட்கள் நடக்க, சற்றே மேடிட்ட வயிற்றுடன் தான் அனைவரையும் ஆசீர்தாவம் செய்தார்.

ஆனால், பெண்கள் மூவருக்கும் தங்களுக்கு திருமணமாகும் வயதில் அன்னை கருவுற்றதை ஏற்க மனமில்லை. எனவே, திருமணமானதும் அன்னையிடம் இருந்து விலக ஆரம்பித்தனர்.

இன்பசேகரன் அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. எங்கள் குழந்தை. எங்கள் விருப்பம் எனும் தெளிவிற்கு எப்போதோ வந்திருந்தார். ஆகையால், மற்றவரின் நக்கல் பேச்சுக்களோ கிண்டல் பார்வைகளோ அவரை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து வசுந்தலா பாதிப்படைந்தார்.

பிரசவத்தின் போது வயது காரணமாக சுகப் பிரசவம் ஆக முடியாமல் தவித்துப் போனார். ஆபரேஷன் செய்து குழந்தையையும் அவரையும் காப்பாற்றி இருந்தனர்.

எல்லோரும் அழகான பெண் குழந்தையை பார்த்து ஆசீர்வதிக்க வந்ததை விட, உடல் வலியோடு சேர்த்து வசுந்தலாவின் மன அழுத்தத்தை அதிகப் படுத்தவே வந்தனர்.

அவரின் ஓய்ந்த உடலைக் கண்டு “இந்த வயசுல குழந்தை தேவையா? களைச்சிருந்தா உனக்கிந்த ஆபரேஷன் வலி வந்திருக்குமா?” அறிவுரை என்ற பெயரில் அனாவசியமாக ஏகப்பட்ட பேச்சுக்களை பேசி ஒரு தாயின் மனதை உருக்குழைத்திருந்தனர்.

அன்றிலிருந்து குழந்தையை காணும் போதெல்லாம் இவளால் தான் சுற்றத்தாரும் உற்றத்தாரும் என்னை கிண்டல் கேலி செய்தனர், இவளால் தான் எனக்கு இந்த வயதில் ஆபரேஷன் வலி என அனைத்தையும் யோசித்து குழந்தை மேல் வெறுப்பினை வளர்த்துக் கொண்டார்.

அது மட்டுமல்லாமல் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல்

இத்தனை ஆண்டுகள் வித்தியாசத்தில் பிறந்த குழந்தையுடன் அவரால் ஒன்றவே முடியவில்லை.

எனவே, குழந்தையிடம் இருந்து முற்றும் முழுதாக ஒதுங்கிக் கொண்டார். இதை அறிந்து இன்பசேகரன் மனைவியை கடிந்து கொண்ட போது “இங்க பாருங்க.. பெத்துக்க சொன்னீங்க. நானும் அதுக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா, அவளால நான் செத்துப் பொழச்சிருக்கேன். என்னால ஒட்ட முடியல. விட்ருங்க” என்று வெறுப்புடன் கூறி விட்டார்.

இன்பசேகரும் அப்போது மனைவியின் மன அழுத்தம் புரிந்து விட்டுப் பிடிக்கலாம் என்று மேற்கொண்டு எதையும் பேசவில்லை.

தங்கைக்கு ஆசை ஆசையாக கிருஷ்ணாரூபி என பெயர் வைத்தது கூட அமுதன் தான். முத்தம்மாள் உயிரோடு இருந்த வரை குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.

பின்பு ரூபிக்கு ஐந்து வயது ஆனதும் அவருக்கு உடல் நலம் குன்றி விட, அவரின் அறிவுரையில் அமுதகீதன் தான் பணியாளுடன் சேர்ந்து குழந்தையை பார்த்துக் கொண்டான்.

‘யோக’ சகோதரிகள் மூவரும் தங்கையுடன் பேசியது கூடக் கிடையாது! பேசப் பிடித்ததும் இல்லை. அவளைக் கண்டாலே ஒரு வித ஒவ்வாமை தன்மை தான் மூவருக்கும்!

புகுந்த வீடே கதி என்று இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது விழாக்களில், விஷேஷங்களில் என பிறந்த வீட்டை பார்த்து உறவு கொண்டாடிக் கொள்வார்கள். மற்றபடி அதிகம் ஒட்டியது இல்லை.

ஆனால், இன்று வரை தம்பி என்றால் மூவருக்கும் பிரியமே!

தங்கையின் கேள்வியில் அனைத்தயும் யோசித்து மனம் நொந்து போனவன் “அம்மாவுக்கு உன்னைப் பிடிக்காம இல்ல கிருஷ்ணா.. அவுங்க சூழ்நிலை அப்படி..” என்று அவள் மனதை தேற்றவென கூறியவன்,

“நீ இதை எல்லாம் யோசிக்கக் கூடாது கிருஷ்ணா. அண்ணா நான் இருக்கேன் தான. இதை எல்லாம் யோசிச்சு கவலை படக் கூடாது” என்றான் அண்ணனாக.

“ம்ம்..” என்று சுரத்தே இல்லாமல் தலை அசைத்தவள், “அண்ணி எப்பண்ணா வருவாங்க. நீ என்ன சொன்ன அம்மா அப்பா கிட்ட” என்று தன் சோகத்தை மறந்து கேட்க,

சின்ன புன்னகையுடன் அவளைப் பார்த்தவன் “உனக்கு அண்ணி சிக்ஸ் மந்த்ஸ் கழிச்சு வருவாங்க கிருஷ்ணா. சந்தோஷமா?” என்று கேட்க,

“சிக்ஸ் மந்த்ஸ்ஆஆ…. அவ்வளவு நாள் ஆகுமா?” என்று இழுத்தவள், “ஒன்னு கேட்கவாண்ணா?” என்று தயங்க,

“கேளு கிருஷ்ணா” என்றான் அமுதன் புன்னகையுடன்.

“அண்ணி உன்னை மாதிரியே இருப்பாங்களா..” என்று வினவ,

புரியாமல் தங்கையைப் பார்த்தவன், “என்னை மாதிரின்னா?” என்று கேட்க,

“அதில்லண்ணா.. வரப் போற அண்ணி.. உன்னை மாதிரியே என்னை நல்லா பாத்துக்குவாங்களா. என் கிட்ட நல்லா பேசுவாங்களா? என்னை வெளிய கூட்டிட்டு போவாங்க தான.. சப்ஜெக்ட் டவுட் எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க தானே.. உன்னை மாதிரியே என் கூட பார்க் சினிமா எல்லாத்துக்கும் வருவாங்கல்ல” என்று ஏக்கமாகக் கேட்க, தங்கையின் வார்த்தைகள் அமுதனின் நெஞ்சத்தை பிசைந்தது.

“கண்டிப்பா வருவாங்க கிருஷ்ணா. அண்ணின்றவங்க உனக்கு இன்னொரு அம்மாவுக்கு சமம்” என்று மனதார கூறியவனின் வார்த்தைகள் என்னவோ சாதாரணமாக வெளிவந்தவை தான்!

ஆனால், ‘இன்னொரு அம்மாவுக்கு சமம்’ என்பதை கேட்ட கிருஷ்ணாரூபிக்கு முகம் இருளடைந்து விட்டது.

அவன் சொன்ன மறு நொடியே சற்றும் யோசிக்காமல் “வேண்டாம்..எனக்கு இன்னொரு அம்மா மாதிரி எல்லாம் அண்ணி வேணாம் ண்ணா. எனக்கு அண்ணி உன்னை மாதிரி இருந்தாலே போதும். அம்மா மாதிரி வேணாம். அம்மா மாதிரி வேணவே வேணாம்” என்று கலங்கிய குரலில் முகத்தை இடமும் வலமும் அசைத்து அரற்றினாள்.

அவள் அரற்றியதும் தான், தன் வார்த்தைகள் அவளுள் என்ன மாதிரியான பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது என்பதை உணர்ந்தவன், “கிருஷ்ணா..” என்று தவிப்பாக அழைத்தபடி காரை ஓரம் கட்டி நிறுத்தி இருந்தான்.

தண்ணீரை எடுத்து அவளைக் குடிக்க வைத்தவன் அவள் சற்று தெளிந்ததும் அவளின் உள்ளங்கையை தன்னிரு கைகளுக்கிடையே பற்றிக் கொண்டு “இங்க பாரு கிருஷ்ணாமா.. அண்ணா உனக்கு ஒரு பிராமிஸ் பண்றேன். கண்டிப்பா உனக்கு வரப் போற அண்ணியை ரொம்ப ரொம்ப நல்லவங்களா தான் அண்ணா சூஸ் பண்ணுவேன். அம்மா மாதிரி இல்லாம.. அவுங்க அண்ணியாவே இருந்து உன்னை நல்லா பாத்துப்பாங்க” என்று புன்னகையுடன் அவளின் கன்னம் தட்டினான்.

அண்ணனின் பேச்சை கேட்டவள் இல்லை என்பது போல் தலை அசைத்து “இல்லண்ணா.. அண்ணி என்னை மட்டுமில்ல உன்னையும் நல்லா பாத்துக்கனும். நீயும் என்னைப் பாத்துக்கிற மாதிரி அண்ணியை பாத்துக்கணும். எனக்காக அண்ணியை சூஸ் பண்ணாதண்ணா. உனக்கும் அண்ணியை பிடிச்சிருக்கணும்” என்று ஒவ்வொன்றாக யோசித்துக் கூற, அவளின் பேச்சில் நெக்குருகி விட்டது அமுதனுக்கு.

புன்னகையுடன் தங்கையின் தலையை பிடித்து செல்லமாய் ஆட்டியவன் “சரிங்க சிஸ்டர்! அண்ணா நீ சொன்னதை எல்லாம் நோட் பண்ணிக்கிறேன். ஒரு ஆறு மாசம் மட்டும் டைம் கொடுங்க” என்று மகிழ்ச்சியான குரலில் கேட்க, “சரிண்ணா..” என்றாள் இளையவளும் புன்னகையுடன்.

அன்று அவளிடம் சரி என்று சொல்லி விட்டாலும் மனம் ஏனோ தவித்தபடியே இருந்தது அமுதகீதனுக்கு.

ஒரு புறம் நல்ல பெண்ணாக அமைய வேண்டும் என்கிற சிந்தனை.. மற்றொரு புறம் அந்த நல்ல பெண் தன் தங்கையிடம் நடந்து கொள்ளும் முறை அன்னை, சகோதரிகளை போல் இருந்து விடக் கூடாது எனும் தவிப்பு!

இதை எல்லாம் தாண்டி அந்தப் பெண்ணை தனக்குப் பிடிக்க வேண்டும் என்கிற அலைப்புறுதல் என பல்வேறு உணர்வுகள் மனதில் கலந்து அவனை பாதித்தது.

எதேதோ சிந்தனையில் தன்னை மறைந்து நின்றிருந்தவனின் முழங்கையை கிருஷ்ணரூபி வந்து பற்றிய பின்னர் தான் சுய நினைவிற்கே வந்தான் அமுதகீதன்.

“என்ன ண்ணா? எத்தனை தடவ கூப்பிட்டேன்.. நீ மலையையே பாத்திட்டு இருக்க?” என்றாள் அந்த இளங்காலை பொழுதில்

அழகாகத் தெரிந்த இயற்கையின் படைப்பை தானும் ரசித்த வண்ணம்.

தங்கையைக் கண்டதும் மற்றவை மறந்து போனது அமுதகீதனுக்கு.

 “வேற எதோ தாட்’ல இருந்தேன் கிருஷ்ணா..” என்றவன்,

“உனக்கு இப்ப ஓகேவா? இன்னும் தலை சுத்துதா?” என்று அக்கறையுடன் கேட்க,

“இப்ப ஓகே ண்ணா” என்றவள், “இந்த வியூ பாயிண்ட் சூப்பரா இருக்கு ண்ணா. ஒரு செல்ஃபி எடுப்போமா?” என்று கேட்க,

“ஓ எடுப்போமே” என்றவன் தன் அலைபேசியை அவளிடம் கொடுக்க, அண்ணனின் அலைபேசியில் இரண்டு மூன்று சுயப்படத்தினை எடுத்தவள்,

“என்னை மட்டும் ஃபோட்டோ எடுக்குறியாண்ணா” என்று கேட்டாள்.

“கொடு கிருஷ்ணா” என்று அலைபேசியை வாங்கி, “அங்க போய் நில்லு” என்று இடம் பார்த்து நிற்க சொன்னவன் அவளை மட்டும் ஃபோட்டோ எடுத்தான்.

அலைபேசி வழியே அவளின் புன்னகை நிறைந்த முகத்தினை கண்டவனுக்கு, இந்தப் புன்னகை என்றும் வாடாமல் இருக்க வேண்டும் எனும் தவிப்பு தான் அதிகமாக இருந்தது.

*************

error: Content is protected !!
Scroll to Top