பணிதல் – 3
தான் வீசிய வார்த்தைகளுக்கு பதிலாக அவள் வீசி விட்டு சென்ற இரு ஐநூறு ரூபாய் தாள்களை கோபத்தோடு கையில் எடுத்தவன், “வாட் த ஹெல்!.. உடம்பு முழுக்க திமிரும் கொழுப்பும் தான் இருக்கும் போல!” என்று ஆவேசமாக கூறியபடி, “இன்னைக்கு அவளை விடப் போறதில்ல” என்று சூளுரைத்துக் கொண்ட பின்னர் தான் காரை விட்டு கீழேயே இறங்கி இருந்தான்.
உள்ளே வந்த தேன்மலருக்கோ அவன் வீசிய வார்த்தைகளில் மனம் குமுறியது.
அதுவும் அவன் சொன்ன ‘சீப் பீப்பில்ஸ்….!’ எனும் வார்த்தை ஆழமாக மனதை தாக்கி இருக்க.. எத்தனை கீழிறக்கமாக தங்களை நினைத்திருக்கிறான்! ராஸ்கல்! என்று இரத்தம் கொதித்தது.
அவன் தன்னை நோக்கி இப்படி வார்த்தைகளை அள்ளி இரைப்பதற்கு அன்னையும் அண்ணனும் தானே காரணம் என்று நிதர்சனம் புரிகையில் இன்னமுமே மனம் கொதித்தது தேன்மலருக்கு!
அதீத கோபத்தினால் உண்டான கண்ணீரும் கண்களை மறைத்து விட, எதிரே யார் மீதோ மோதிக் கொண்ட பின்பு தான் ஒரு நிலைக்கு வந்தாள்.
“சாரி..” என்றவள் நிமிர்ந்து பார்க்கும் போதே, “ஹே தேனடை.. ஒரு வழியா வந்துட்டியா.. வெல்கம் டூ அவர் நியூ ஹோம்” என்று அவளுக்கு நேர்மாறான உணர்வுடன் உற்சாகமாக வரவேற்றான் ரஞ்சிதன்!
அவனைப் பார்த்ததுமே ‘இவனால தான எல்லாம்’ என்று கட்டுக்கடங்காமல் கோபம் பெருகியது அவளுக்கு.
சுற்றி சொந்தங்கள் வேறு சூழ்ந்திருந்தமையால் அவனை அடிக்கும் ஆத்திரத்தை கட்டுப் படுத்தி, “தள்ளிப் போடா” என்று பல்லைக் கடித்துக் கொண்டு உள்ளே நகர்ந்தவளின் கண்ணீரை கண்டு கொண்டான் ரஞ்சிதன்.
அவள் முகத்தில் தென்பட்ட உணர்வுகளையும் அவளின் வார்த்தைகளையும் கண்டவனுக்கு என்னவோ போலாகி விட, அப்போது தான் கோபமாக மாடிப் படிகளில் ஏறி செல்லும் அமுதனைக் கண்டான்!
“ஐயோ.. தேனடைக்கும் யோகராசுக்கும் முட்டிக்கிச்சி போலிருக்கே” என்று மெல்ல அலறியவன், அமுதனின் பின்னால் வால் பிடித்துக் கொண்டு மாடியேறிச் சென்றான்.
இங்கே கீழே கவிரத்னாவை தேடிக் கொண்டு வந்த தேன்மலரை கமலம் பார்த்து விட, “வா..” என்று சம்பிரதாயத்திற்காக வரவேற்றவர்,
“இப்ப தான் வர்றதா? பால் காய்ச்சி முடிச்ச பின்ன வந்திருக்கலாம் தானே” என்று நீட்டி முழக்கியவரிடம், எந்த வித எதிர் பதிலையும் கொடுக்காமல் மௌனமாகவே நின்றாள் தேன்மலர்.
அவரும் அவளின் மௌனத்தை பொருட்படுத்தாமல் “வெள்ளன கிளம்பி வந்தா விஷேச வீட்டுல கூட மாட இருந்து உதவி செய்யனுமேன்னு நீயும் உன் அண்ணியும் பிளான் போட்டு லேட்டா கிளம்பி வந்தீங்களாக்கும்” என்றவர், “ஆமா.. எங்க உன் அம்மாவும் அண்ணனும்? வரலையா?” என்றார் பதில் தெரிந்தும் வேண்டுமென்றே!
தேன்மலர் அவரை மௌனமாய் ஏறிட்டு, “அவுங்க வரல அத்த” என்று சுருக்கமாக பதில் கூற,
“என்னது வரலயா?” என்று தாடையில் கை வைத்து போலி அதிர்வுடன் கேட்டவர்,
“சொந்த அண்ணன் வீட்டு பால் காய்ச்சுறதுக்கு கூடவா வர முடியாது உன் அம்மாவால? அப்படி என்ன வேலை?” என்று பொய்யான உரிமைக் கோபத்தோடு கேட்க, தேன்மலருக்கு பதில் சொல்லவே சங்கடமாகப் போயிற்று!
“என்னடி? நான் கேட்டுட்டே இருக்கேன்! நீ கல்லு மாதிரி நிக்குற” என்று விடாமல் கேட்க, அப்போது அங்கே வந்த இன்பசேகரன், தம்பி மனைவி தங்கை மகளிடம் கேட்டவற்றை கண்டு ஏளன சிரிப்புடன் “அப்படி எங்க போய் இருக்கப் போறா என் அருமை தங்கச்சி! திருந்தாத குடிகார மகனை கூட்டிட்டு வழக்கம் போல ஊர் ஊரா போய் காவி வேட்டி கட்டியிருக்க போலி சாமியார் கால்ல விழுந்து பணத்தை வாரி வழங்கிட்டு வருவா” என்று கூற, தேன்மலருக்கு அவர்கள் சொன்னதை மறுக்க முடியாத நிலையில் கண்கள் கலங்கியது.
சற்று நேரத்திற்கு முன்னர் அவரது மகன் கொழுத்திப் போட்டிருந்த நெருப்பே மனதில் ஜூவாலையாக எரிந்து கொண்டிருக்க, இப்போது அதில் எரிபொருளை ஊற்றி மேலும் கொழுந்து விட்டு எரிய வைத்திருந்தார் இன்பசேகரன்.
“அப்படி சொல்லுங்க! குடிகாரனை வீட்ட விட்டு அடிச்சு துரத்தாம அவனுக்கு வைத்தியம் பாக்குறேன்! சாமியார் கிட்ட கூட்டிட்டு போய் தெளிய வச்சு திருத்திக் காட்டுறேன்னு ஊர் ஊரா சுத்தி காசைக் கறி ஆக்குறதே ஒரு பொழப்பா வச்சிருக்கா இந்த மங்கை!” கமலமும் அவருக்குக் குறையாத ஏளனத்துடன் பேச, அவர்கள் சொல்லும் எதற்கும் பதில் பேசாமல் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் தேன்மலர்.
இன்பசேகரன் அவள் அப்படி கண் கலங்கி நிற்பதை எல்லாம் ஒரு பொருட்டாக கூடக் கருதவில்லை!
“வர்ற காசு உழைச்சு சம்பாதிச்சதா இருந்தா அதோட அருமை தெரியும் கமலம்! என் தங்கச்சிக்கு வர்ற வருமானம், எங்க அப்பா வழி பண்ணிட்டு போனதாச்சசே! சொல்லப் போனா மகளுக்கு போனா போகுதுன்னு போட்ட பிச்சை அது!” என்று வார்த்தைகளால் குத்திக் கிழித்தவர், “மாசம் சொழையா ரெண்டு லட்சம் வருது! ஆனா, ரெண்டு லட்சம் வர்ற வேகமும் தெரியாது.. காலியாகுற வேகமும் தெரியாது! ஊதாரி மகனுக்கேத்த ஏமாளி அம்மா! செலவு செய்றேன்ற பேர்ல பணத்தை வேஸ்ட் பண்றது தான் இவுங்க குடும்பத்துக்கு வேலையே” என்று பேசிக் கொண்டே செல்ல, தேன்மலர் கல்லாக நின்றிருந்தாள்.
அப்போது அங்கே கையில் மகனுடன் வந்த கவிரத்னா மூவரும் நிற்பதைக் கண்டு விட்டு “என்னாச்சு பெரியம்மா?” என்று கமலத்திடம் கேட்க, அவள் வந்ததும் இன்பசேகரன் உதடு வளைத்தபடி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
கமலமோ கவியைக் கண்டதும் “வாடியம்மா மகராசி! நீ எப்ப வந்த? நான் உன்னை பாக்கவே இல்லையே” என்று அவளிடம் கேட்க, “இப்ப தான் பெரியம்மா. கொஞ்ச நேரம் தான் இருக்கும். கோகுல் பசில அழுதான். அதான் அந்த ரூம்ல போய் அவனுக்குப் பால் ஆத்தி குடிக்க வச்சு கூட்டிட்டு வரேன்” என்று கூற,
“ஓஹோ..சரி சரி. நான் உன் நாத்தனார் கிட்ட அவ அம்மாவும் அண்ணனும் எங்கன்னு கேட்டுட்டு இருந்தேன். வேற ஒன்னுமில்லை” என்று ஒன்றுமே பேசாதது போல் அவளிடம் சாதாரணமாக கூறினார்.
ஆனால் தேன்மலரின் முகத்தை வைத்தே அவர் நிறைய பேசி விட்டார் என்பதை புரிந்து கொண்டவள், கூடவே தான் இங்கு வந்த போது தன்னை ஏளனமாய் பார்த்து உதடு வளைத்து சென்ற இன்பசேகரனையும் கவனித்திருந்தாள்.
இவர்கள் எப்பொழுதும் இப்படித் தானே என்று எண்ணிய கவி அசராமல் “ஓ அப்படியா பெரியம்மா.. உங்களுக்கு தான் அத்தையை பத்தி தெரியுமே!” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவள்,
“தேனு சொல்லியா அவுங்க எங்க போய் இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியணும்!” என்று அழகாய் பேச, கமலம் சற்றே திடுக்கிட்டு விட்டார்.
“அத்தையும் அவரும் திருவண்ணாமலை போன விஷயம் உங்களுக்கு தெரியாம இருக்க வாய்ப்பில்லையே!” என்று கவி இழுக்க, கமலம் திருதிருவென விழித்தபடி, “தெரியாம இருக்க வாய்ப்பில்லையா? என்னடி கவி சொல்ற? உன் புருஷனும் மாமியாரும் எங்க போய் எந்த சாமியார் கால்ல விழறாங்களோ? எனக்கெப்படி தெரியும்?” என்றார் பதட்டத்தில் படபடவென.
அவரைக் கண்டு வாய்க்குள் நாக்கை சுழற்றி சிரித்த கவிரத்னா “அட என்ன பெரியம்மா நீங்க? உங்களுக்கு எப்படி இப்படி ஒரு மறதி வந்தது? திருவண்ணாமலை கோயில் அடிவாரத்துல திருநீர் சுவாமிகள்னு யாரோ சக்தி வாய்ந்த சாமியார் இருக்கிறதா அத்த கிட்ட சொல்லி என் புருஷனை கூட்டிட்டு போக சொன்னதே நீங்க தான” என்று கவிரத்னா முழு பூசணிக்காயை நடு ரோட்டில் உடைப்பது போல் விஷயத்தை பட்டென்று உடைத்து விட, தேன்மலர் திகைத்துப் போய் தன் சின்ன அத்தையைப் பார்த்தாள்.
அவரோ கவிரத்னா புட்டு புட்டு வைத்த லட்சணத்தில் “அ..அது.. அது வந்து.. ஹான்.. இப்ப தான் நியாபகமே வருது. மறந்தே போய்ட்டேன்” என்று நெற்றியில் பூத்திருந்த வியர்வையை துடைத்துக் கொண்டே கூறியவர், “ஆமாமா. நான் தான் சொன்னேன். ஆனா, மங்கை இன்னைக்கு வந்திடுவான்னு நான் நினைச்சேன்” என்று சமாளிக்க, “என்ன பெரியம்மா.. மறுபடியும் மறுபடியும் மறக்குறீங்க பாத்தீங்களா? ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க தான அத்தை கிட்ட ‘நாளைக்கு வெள்ளிக் கிழமை. நாளைக்கே போனா தான் அந்த சாமியாரை பாக்க முடியும்! அதுக்கு அப்புறம் அவர் இமய மலைக்கு கிளம்பிடுவாரு. நீ முதல்ல உன் மகனை பாரு. பால் காய்ச்ச நீ வரதை விட உன் மகனோட மாற்றம் தான் முக்கியம் மங்கை’ன்னு சொன்னீங்க” என்று கவிரத்னா கமலத்தின் வேஷத்தை கிழி கிழி என கிழிக்க,
“இந்த மங்கை எல்லாத்தையும் மருமக கிட்ட உளறி கொட்டிட்டா போலயே” என்று நாத்தனாரை மனதிற்குள் வறுத்தெடுத்த கமலம், வெளியே பல்லைக் காட்டி சிரித்தபடி, “ஆமாடியம்மா. உன் புருசன் இப்படியே இருந்திடுவானோன்னு கவலையா இருந்தது. என்னமோ மனசு கேக்கல. அதான் எனக்குத் தெரிஞ்சதை சொன்னேன். நீ சொன்ன மாதிரி நான் சொன்னதை நானே மறந்து போய்ட்டேன்” என்றவர்,
“இதெல்லாம் உனக்காக தான் கவி நான் பண்ணேன்! உன் மேல எனக்கு அவ்வளவு அக்கறை இருக்கு தெரியுமா?” என்று சக்கரையாகப் பேச, கவிரத்னாவிற்கு அவரின் நடிப்பில் பெரிதளவில் சிரிப்பு வந்தது.
“உங்க அக்கறைய கண்டு எனக்கு புல்லரிக்குது பெரியம்மா!” என்றவள், “நீங்க சொன்ன மாதிரி திருநீர் சுவாமிகள் கிட்ட போய் ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்த பின்ன என் புருஷன் மட்டும் நல்லபடியா திருந்தி குணமாகிட்டார்னா உங்களுக்கு அழகு குத்தி மொட்டை போடுறதா அந்தப் பழனி மலை முருகன் கிட்ட வேண்டிக்ககிறேன் பெரியம்மா” என்று அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டினை போட்டவள்,
கமலம் அதிர்ந்து நெஞ்சில் கை வைத்து அவரைப் பார்க்கும் போதே, “என்ன பெரியம்மா? சந்தோசம் தான!” என்று கேட்க,
“அடி ஆத்தாடி.. அதெல்லாம் வேண்டாம். என்னால முடியாது. நான் எதோ டிவில வந்த சேதியை வச்சு உன் மாமியார் கிட்ட சும்மா சொன்னேன். அவ பொசுக்குன்னு கிளம்பிப் போய்ட்டா. மத்தபடி எனக்கொண்ணும் தெரியாது. எனக்கு நீ அழகெல்லாம் குத்தி அழகு பாக்க வேணாம். ஆளை விடுமா” என்று அவளுக்கு மிகப் பெரிய கும்பிடாகப் போட்ட கமலம், “இந்தா தேனு. என்னமோ ஞாபக மறதில கேட்டுட்டேன். நீ பெருசா எடுத்துக்காத. அத்தையை மன்னிச்சுக்க” என்று படபடவென கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட, செல்லும் அவரை கேவலமாகப் பார்த்து உதடு வளைத்த கவி,
கலங்கி நிற்கும் நாத்தனாரிடம் “என்ன தேனு.. அவுங்க பேசினா திரும்பப் பேசாம இப்படியா கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு நின்னுட்டு இருக்கிறது?” அவள் கண்ணீரைத் துடைத்து விட்டபடி கேட்க,
“இல்லண்ணி. எப்படிப் பேசிட்டு போறாங்க பாருங்க. அவுங்களே அம்மா கிட்ட சாமியார் பத்தி சொல்லி அனுப்பி வச்சுட்டு என்கிட்ட ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேக்குறாங்க? எப்படி அண்ணி இவுங்களால இந்த அளவுக்கு நடிக்க முடியுது” என்று மனம் ஆறாமல் கேட்க,
“தேனு. அவுங்க அப்படி தான்னு உனக்குத் தெரியாதா? விடு. அதான் சமாளிச்சுட்டேன் தான” என்று கூறியவள், “இந்த காலத்துல சொந்த பந்தம் எல்லாம் ஒற்றுமையா இருக்கதை விட ஒதுங்கி நிக்கிறது தான் நல்லதுன்னு புரிய வைக்குறாங்க. எப்ப நம்ம கீழ விழுவோம்..எப்ப நம்மளை பாத்து கை கொட்டி சிரிக்கலாம்னு தான் ரெடியா இருக்காங்க. இன்னும் சில பேர் எப்படி நம்ம கையை பிடிச்சு நம்ம கண்ணையே குத்துறதுன்னு தான் யோசிச்சிட்டு இருக்காங்க. கமலம் பெரியம்மாவும் அந்த மாதிரி தான்!” என்று ஆயாசத்துடன் இன்றைய நிதர்சனத்தை பேசிய கவிரத்னாவிடம்,
“உண்மை தான் அண்ணி” என்ற தேன்மலர், “உங்களுக்கு எப்படி கமலம் அத்த தான் அம்மா மிட்ட அண்ணனை கூட்டிட்டு திருவண்ணாமலை போக சொன்ன விஷயம் தெரியும்? எனக்கு கூட அம்மா சொல்லல” என்று ஆச்சர்யமாக கேட்க,
அவளை குறும்பாய் பார்த்த கவிரத்னா “என் மாமியார் கிட்ட இருந்து எப்படி விஷயத்தை வாங்கனும்னு எனக்கு தெரியும் தேனு” என்று சிரிக்க, தேன்மலரும் அண்ணியின் பேச்சில் புரிந்தார் போல் புன்னகைத்தாள்!
மெய்யாகவே கவிரத்னாவை எண்ணி அவள் மனம் பெருமிதத்தில் திளைத்தது. அவளாக இருக்கப் போய் அண்ணனையும் அன்னையையும் அழகாக சமாளித்து இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு வாழ்கிறாள்!
வேறு யாராக இருந்தாலும் இந்நேரம் தன் உடன் பிறந்தவன் நடு ரோட்டில் தான் நின்றிருக்க வேண்டும் என்று நினைத்தவள்,
“நீங்க இல்லேன்னா எனக்கு பெரிய பலமே இல்ல அண்ணி” என்று கூற, ஆதரவாக அவளின் தோளினை அழுத்திக் கொடுத்தாள் கவிரத்னா!
***************
