Skip to content
அத்தியாயம் 10
அந்தரத்தில் நீளமான குழாய் ஒன்று படுத்துக் கிடக்க, கீழே கிடக்கும் சிறிய பந்தொன்று எம்பிக் குதித்து குழாய் வாய் வழியே நுழைந்து வெளி வர வேண்டும். குழாயும், பந்தும் கூட அவள் தான் உருவாக்க வேண்டும். இது தான் அன்று அலர்விழிக்கு கணினி மையத்தில் கொடுக்கப்பட்ட வகுப்பு பாடம்.
ஆறு மணி நேரம் முடிந்தது. ஒன்றும் நடப்பதாகத் தெரியவில்லை. தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட, “என்ன அலர்… நீயே முழிச்சா என் கதி என்ன?” அருகே இருந்த ஸ்ருதி புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கோ, புத்தகத்திலிருந்து ஒரு தாள் திரும்ப வேண்டும்! ம்ம்கூம்.. பக்கம் அசைய மறுத்து நின்றது.
மணி ஏழைத் தொடவும், “தல வலிக்குது பா. நான் கிளம்பறேன், நாளைக்கு பாப்போம். நீயும் கிளம்பு நாளைக்கும் முடியாட்டி சார் கிட்ட கேப்போம்,” கூறியவள் கிளம்பியிருக்க, அலர்விழியால் பாதியில் எழுந்திருக்க முடியவில்லை.
பந்து எம்பிக் குதித்தது, ஆனால் பந்தால் குழாயின் உள்ளே நுழைய முடியவில்லை. வடிவம் மாறினாலே ஒழிய பந்தால் சிறிய குழாயினுள் நுழைய முடியாது! ஏனோ பந்தின் வடிவம் மாற மறுத்தது.
மணி ஏழரை ஆகவும் அங்கு வந்த அவளது வகுப்பு ஆசிரியர் சிறிது நேரம் எதை எதையோ மாற்றி மாற்றி முயன்றார். பின் என்ன நினைத்தாரோ நேரம் பார்த்தவர், “கிளம்புங்க அலர்விழி, நாளைக்கு என்னன்னு பாக்கறேன்,” என்று கூறிவிட்டுக் கிளம்ப, அவளுக்கு நகரும் நோக்கமில்லை.
அவளும் விடாமல் இதையும் அதையும் மாற்றிக் கொண்டிருந்தாள். ம்ம்ஹூம்!
மணி எட்டு. பின்னால் அரவம் கேட்டுத் திரும்ப, அவன் நின்றிருந்தான். பேன்ட் பாக்கெட்டுகள் இரண்டிலும் இரு கைகளை விட்டுக்கொண்டு, வாயில் சவ்வு மிட்டாய் அரைத்துக் கொண்டிருந்தான். கண்கள் இரண்டும் எதிரில் இருந்த கணினி திரையில்.
திரும்பியவள் திரும்பிய வாக்கிலேயே அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “என் முகத்தில ஏதாவது கோட் எழுதி ஒட்டி இருக்கா அலர்விழி?” ஒட்டாத த்வனியில் அவன் கேட்கச் சட்டென்று கோபம் வந்துவிட்டது அவளுக்கு. அவனிடமிருந்து வந்த ‘அலர்விழி’ என்ற அழைப்பே பிடிக்கவில்லை அவளுக்கு. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “ம்கும்!” முகம் சுளித்துத் திரும்பிக் கொண்டாள். “ஆமா இவன பாக்கு வெத்தல வச்சு கூப்பிட்டேன் பாரு. வந்து நின்னு கத்திகிட்டு!” வாய் சத்தமில்லாமல் முணுமுணுத்தது.
இன்று நேற்று இல்லை… கடந்த ஒரு மாதமாகவே பாராமுகம் தான். மாதம் முன்பு.. ‘இடித்து விட்டு கண்களால் கபளீகரம் செய்தவனா இவன்?’ என்று இவளால் நம்ப முடியாத அளவிற்குப் பார்வை உதிர்த்தான் மறு நாள் முதலே.
இவன் ஒருவருக்கும் வகுப்பு எடுப்பதில்லை என்பது வரை தெரிந்தது. நினைக்கும் வேளை வருவான்… இங்கும் அங்கும் வயதிற்குச் சம்பந்தமே இல்லாத தோரணையில் நிற்பான்… கூர்ந்து பார்ப்பான்… சில நேரங்களில் மேல் போக்காய் நோட்டம் விடுவான்.. ஆசிரியர்களைக் கேள்வி கேட்பான். சிலரிடம் கடுமை காட்டியும் பார்த்திருக்கிறாள். இன்முகத்தோடு பேசினாலும் ஒரு அடி தள்ளி வைப்பான். இளம் முகம் என்றாலும் ஆழமும், அழுத்தமும் நிறைந்த பார்வை அவனைத் தனியே காட்டியது. பேச்சிலும் செயலிலும் அப்படி ஒரு நிதானம்.
இவனுக்கா இத்தனை நிதானம்? ஒரே நொடியில் கழுத்தை நெறித்தவனா இவன்? இவனால் கடுமை காட்ட முடியுமா? முகத்தில் துப்பிய பின்னும் குறுநகை புரிந்தவனா இவன்? அவன் இயல்பை புரியாமல் குழம்பித் தவித்த நாட்கள் ஏராளம்!
யாரிவன்? தெரியவில்லை. ‘மேனேஜ்மென்ட் சைட், நான்-டீச்சிங் ஸ்டாப் போல… மேனேஜரா இருப்பானோ!’
அவன் ஒரு மாதமாகக் காட்டிய அலட்சியம் அவனைப் பற்றி விசாரிக்க விடவில்லை. ‘நீ யாரா வேணா இரு… போடா,’ என்று தள்ளி வைத்தாலும், அவன் பார்க்காத வேளை வெட்கமே இல்லாமல் அவனைப் பார்த்து நிற்பாள். கொச்சை மொழியில் கூற வேண்டுமென்றால்.. எக்கச்சக்கமாக ஜொள்ளி, சைட் அடித்தாள்!
எதிரில் யாரைப் பார்த்தாலும் அழகான புன்னகை சிந்துபவன் ஏனோ இவளை மட்டும் தவிர்த்தான். அப்படியே எதிர் எதிரே பார்க்க நேர்ந்தால்… அலர்விழி என்ற ஒரு ஜீவன் தன் எதிரில் இருப்பது போலவே காட்டிக் கொள்ள மாட்டான், உடனே கைப்பேசியில் அவனுக்கு அவசர வேலை வந்துவிடும்! பெண் அடிவாங்கிப் போனாள்.
ஒரு புன்முறுவல் சிந்தி இருந்தால் கூட இப்படி இவளை ஆக்கிரமித்திருக்க மாட்டான். அவன் பாராமுகம் அவளுக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது தெரியாமலே அதையே செய்து வருகிறான்.
அவனுக்கும் அப்படி ஒன்றும் அது எளிதாயிருக்கவில்லை. ‘அவள் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அவளைப் பற்றி நினைக்கூடாது!’ என்ற தீர்மானத்தின் படி சுற்றித் திரிந்தாலும் அவளைப் பார்த்தாலே எகிறி குதிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்த அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. எங்கு அவளுக்கும் அவனைப் பிடித்து போனால், என்னாகுமோவென்று முகத்தில் வெறுமை பூசிக் கொண்டான்.
அலர்விழியின் அயரா உழைப்பும் அவளின் அறிவுத் திறனும் அவனை அதிகமாகக் கவர்ந்தன. அவள் வகுப்பைச் சேர்ந்த யாருக்கு என்ன சந்தேகம் வந்தாலும் முதல் ஆளாய் சென்று நிற்பாள். அதிகம் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், எதையும் நேரத்தோடு முடிக்கும் திறமையும் அவளிடம் இருக்க, இன்று ஏனோ அமர்ந்த இடத்தில் அமர்ந்தே இருந்தாளே ஒழிய முடித்த பாடில்லை!
எட்டாகியும் கிளம்பவில்லை! மனம் தாளாமல் வந்து நிற்கிறான்! “ப்ரோக்ராம எக்சிக்யூட் பண்ணுங்க பார்ப்போம்…” எபி கூற, மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள். ‘இவனுக்கு என்ன தெரியுமாம்?’ என்ற பார்வை.
கணினியைப் பார்த்த அவன் விழிகள் அவள் விழிகளில் வந்து நின்றன. அவன் பார்வை அவளை இம்முறை கபளீகரம் செய்யவில்லை. வாஞ்சையாய் வருடவில்லை. உதட்டில் மந்தகாச சிரிப்பில்லை. அவள் மாணவி அவன் ஆசான் போன்ற தோற்றம்.
நீண்ட பெருமூச்சோடு அவள் கணினித் திரையைப் பார்த்துத் திரும்ப… நின்றிருந்த மூச்சை அவனும் வெளியே விட்டான். ‘அம்மாடி இது என்ன டா அவஸ்தை’ என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
பந்து தரையில் இருக்க… சற்று மேலே படுத்த வாக்கிலிருந்த குழாய்க்குள் போக மறுத்தது. காரணம் அதால் உறு மாற முடியவில்லை. அது செல்லும் திசையும் அதற்கு அவள் எழுதியிருந்த ஏரணம்(logic) தவறு.
அவள் எதிரில் இருந்த மேசை மேலிருந்து நோட்டுப் புத்தகத்தை எடுத்தவன், குனிந்த வாக்கில் நின்று கொண்டு, பந்தையும் குழாயும் வரைந்து அவள் செய்திருப்பதும், என்ன செய்தால் என்ன நடக்கும் என்றும் விளக்க ஆரம்பித்தான்.
பெண் மீண்டும் விழி விரித்தாள். இன்று வரை ஒருவருமே இத்தனை நேர்த்தியாய், விளக்கமாய், புரியும்படி பேசியதே இல்லை எனலாம்! அவள் எப்படி கேள்வி கேட்டாலும் பதில் வைத்திருந்தான். கரைத்துக் குடித்திருப்பான் போலும்! அவன் வாசம்… சுவாசம்… குரல்… அசைவு… கம்பீரம்… வசீகரம்… அறிவு என்று எல்லாம் பெண்ணவளை புரட்டிப் போட, அவனிடம் சரணாகதி ஆகும் நிலையை எய்திருந்தாள் மங்கை.
அவள் சந்தேகங்கள் எல்லாம் முடியவும், “எங்க தப்புன்னு தெரியுதா?” என்று அவளிடமே கேட்டான். பிழறிப் போன இடத்தைக் காட்டினாள். என்ன மாற்றம் தேவை என்று கூறிவிட்டு தன் முகத்தின் அருகிலிருந்த அவன் முகம் பார்க்க…
“ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என்மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…”
கன்னி நெஞ்சம் கவிதை வாசிக்க, அவள் ரயில் பெட்டி மேல் ஆடிக் கொண்டிருந்தாள்!
அவனுக்கும் அதே நிலை தான். குனிந்து கணினித் திரையை பார்ப்பவனுக்கு அவள் அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டிருப்பது தெரியாதா என்ன? அவனுக்கும் ஆசை தான்… விழியோடு விழி கலக்க…
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ…. முடிவும் முடிவும் நீ….
அவள் இதயத்திற்கு ஈடுகொடுக்கும் படி அவன் இதயமும் தாளம் படித்தது. விழுந்தால் மூழ்கிப் போவது நிச்சயம். அவன் உணர்வு அப்பட்டமாக அவனுக்குப் புரிந்தது. இந்த ராட்சசப் பெண்ணிடம் தன்னைத் தொலைத்து விட்டது அவனுக்கு நன்கு தெரிந்தது.
ஆனால் அவள் பார்வையின் அர்த்தம்? திரும்பி அவளைப் பார்க்கவில்லை. அவளும் பார்வையைத் திருப்பவில்லை. திரையைப் பார்த்து கொண்டே கேட்டான் “ஏதாவது தெரியணுமா விழி?” என்று!
அவன் வாசம் அவள் நுரையீரல் வரை சென்று அவளை முற்றிலும் ஆட்கொண்டிருக்க மூச்சை இழுத்துவிட்டவள், “ம்ம்… என்ன ஷாம்பூ? என்ன பெர்ஃபியூம்?” கிறங்கி தான் போயிருந்தாள்.
அவனுக்கு வெட்கம் வந்தது அவள் கேள்வியில். “கம் அகெயின்… என்ன?” என்றவனின் வெட்கம் கலந்த புன்முறுவலும் அழகுதான்.
மிக அருகில் குனிந்து நின்றிருந்தவன் மேலிருந்து மிதமான மயக்கும் வாசனை. காலையில் உபயோகித்த நறுமண திரவியத்தின் வாசம் இரவு வரை வருகிறது என்றால் அது நல்ல ப்ராண்ட் என தெரியும்! அது என்ன என்று தெரியவில்லை! கேட்டு விட்டாள்!
அடர்த்தியான கேசம்… குனிந்திருந்தவன் நெற்றியில் கொத்தாய் வழுவழுவென விழுந்திருக்க… பெண் நினைத்ததை உளறியிருந்தாள்.
அவளுக்கே அவள் உளறியது சிரிப்பைத் தர, “நோ… நத்திங்,” என்று சிரித்த முகமாய் முடித்து விட்டாள்.
அவள் பார்வையை உணராதவன் போல் எழுந்து நின்று கொண்டான். “சொன்னத நாளைக்கு செஞ்சு பாரு. நேரம் ஆச்சு.. இப்போ கிளம்பு விழி!”
பன்மை என்னானது எபி? அவன் உணரவில்லை. உள்ளுக்குள் இருக்கும் படபடப்பைக் காட்டாமல் இருப்பதிலேயே கவனம் சென்றிருக்க, விளிப்பு அவன் கவனத்தில் இல்லை. அவளும் கவனிக்காமல் இருப்பாளா என்ன? ‘விழி’ என்ற அவனின் அழைப்பு அவள் பரவசத்தைக் கூட்டியது.
“ம்ம்…” கூறியவள் எழுந்து நின்று கொண்டே கணினியை அணைக்க ஆரம்பிக்கவும்,
‘இருட்டி விட்டதே… அண்ணன் சனிக்கிழமை வரமாட்டானே! தனியே போய் விடுவாளா?’ “எப்படிப் போவ?” என்ற கேள்விக்கு திரும்பி முகம் பார்த்தாள். தள்ளி நின்றிருந்தவன் கைப்பேசியை நோண்டிக் கொண்டே கேட்க, அவள் அவனைப் பார்த்து நின்றாளே ஒழிய, பதில் உரைக்கவில்லை.
பதிலில்லாமல் போகவே கைப்பேசியிலிருந்து அவன் முகம் உயர்த்தி அவளைப் பார்க்கவும், கால்சட்டையின் பின் பாக்கெட் இரண்டிலும் கைகள் விட்டு, ‘சார் முகம் பார்க்க மாட்டாரோ?’ என்ற பார்வையோடு தலை சாய்த்து அவள் நின்றிருந்த தோரணை, தன்னால் அவனை உசுப்பேற்றியது.
“அது என்ன எப்பவும் ஃபோன பார்த்துகிட்டே? முகம் பார்த்துப் பேச மாட்டீங்களா?”
‘அடிப்பாவி இன்னைக்கு வரைக்கும் கண்ணாலேயே உருட்டி மிரட்டினான்னு பார்த்தா… எப்படிப் பேசறா பாரு!’ எழுந்த சிரிப்பை மறைத்து சற்று நெருங்கினான். “என்ன? என்ன சொன்ன?” என்றான் சற்று மிரட்டலாய்.
அவள் பின் நகரவில்லை. ‘பயப்படுறாளா பாரேன்! ரௌடி டி நீ!’ கண் பார்த்து, “சரி, இப்போ சொல்லு” என்றான். மூச்சுக் காற்று பெண்ணைத் தீண்டியது. அருகில் நின்றவனை கண்கள் விரிய தலை நிமிர்த்தி பார்த்து நின்றாள்.
மிக அருகில் அவள் முகம். விரிந்த விழிகளுக்குள் அவன் பிம்பம். அடக்கி வைத்திருந்த மனம் சிறகில்லாமல் பறக்க, பார்த்து நின்றவளின் கன்னம் ஏந்தி திறந்திருந்த இமைகளை இதழால் மூட ஆசை பிறந்தது.
பிறந்த ஆசைக்கு சமாதி கட்ட அவன் வாய்க்குள் மெல்ல சவ்வுமிட்டாய் இடம் மாற ஆரம்பித்தது. அவள் பார்க்க விரும்பிய.. காத்திருந்த அதே வசீகரிக்கும் மந்தகாசப் புன்னகை அவனிடம்.
“என்ன சொல்லணும்?” என்றவள் இதழும் மெல்ல விரிய ஆரம்பிக்க… இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.
கண்கள் மின்ன, முகம் முழுவதும் சிரிக்க, “என்ன சொல்லணும்? நீங்க ரொம்ப ஸ்டைலிஷ்ன்னா? என் கழுத்துல கை வைக்கிற அளவுக்கு உங்களுக்கு தைரியம்ன்னா? உங்க பிடி ரொம்ப ஸ்ட்ராங்-னா? உங்க ஸ்மைல் ரொம்ப அட்ராக்டிவ்ன்னா? பார்வைக்கு மட்டும் இல்ல நீங்க உண்மையாவே ஸ்மார்ட்னா? ஆனா இதெல்லாம் என்னை எந்த விதத்துலயும் பாதிக்கலன்னா? இதுல எத சொல்லணும்?” புருவம் அசைத்து, விழிகள் நாட்டியமாடக் கேட்டவள், என்ன அடக்கியும் புன்னகையின் மிகுதியால் இழுத்துப் பிடித்திருந்த இதழ் துடித்தது.
கண்களிலிருந்து பெண்ணவள் இதழுக்கு இடமாறிய அவன் பார்வை அவனை ஏதோ செய்தது. இம்முறை கன்னம் தாங்கி, அசைந்து கொண்டிருக்கும் இதழை மூட வேண்டும் என்ற விபரீத ஆசை பிறந்தது.
வடிவமைத்த பந்து எம்பிக் குதித்ததோ இல்லையோ… எபியின் சின்ன இதயம் எம்பிக் குதிக்கத் தயாரானது. பரவசம் மாறாமல், “கிளம்பு விழி!” என்றான் காதருகே குனிந்து கிசுகிசுப்பாய்… எழும்பாத குரலில், மந்தகாசம் குறையாமல்.
விழி, விழி பிதுங்கி மதி மயங்கி, எச்சில் விழுங்கி நின்றாள்.
பின்னந்தலையைக் கோதிக் கொண்டே சென்றவன் முகம் முழுவதும் ஆனந்தக் களியாட்டம். ‘விழி… என் ரௌடி பேபி டி நீ!’ பிதற்றியது அவன் மனம்!
அன்றைய இரவில், நிலவின் தனிமை கலைந்திருக்கும் என்பது திண்ணம்.
error: Content is protected !!