09 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 9

 

ணம் மட்டுமே கொள்கையாகவும் பிரதானமாகவும் கொண்டு முன்னேறி வரும் பல தனியார் மருத்துவமனைகளை இன்று சென்னையில் பார்க்கலாம். அதில் சேவை எண்ணமின்றி பணி புரியும் பல மருத்துவர்களும் அப்படித்தான். அவர்கள் எப்பொழுது, எங்கு அவர்கள் மனித நேயத்தை இழந்தார்கள் என்று கேட்டால், அது அவர்களுக்கு விளங்காத கேள்விகளில் ஒன்று. 

“அட்மிட் பண்ணிடுங்க கண்டிப்பா காப்பாத்திடலாம். கொஞ்சம் செலவாகும் பரவாலியா?”வில் ஆரம்பிக்கும் அவர்கள் பகல் கொள்ளை. அதன் பின் வாழ வேண்டிய ஜீவனைப் பிணமாக்கி… அந்த பிணத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசக் கூசுவதில்லை இவர்களுக்கு. சமுதாயத்தில் covid19ஐக் காட்டிலும் அதிகமாகப் பரவி வரும் வைரஸ் வகை இவர்கள். இன்னும் ‘இதற்கு/இவர்களுக்கு’ மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை என்பது அவலம். 

இதுவும் அப்படிப்பட்ட ‘பிரபலமான’ மருத்துவமனைகளில் ஒன்று! வரவேற்பறையில் ஆரம்பித்து அங்கிருக்கும் கழிவறை வரையிலுமே சுவிஸ் குளுமையை உணரலாம்.  அனைத்து இடங்களிலுமே விதிவிலக்குள் உண்டு. இந்த மருத்துவமனையிலும் சிலர் விதிவிலக்காக இருந்தனர். 

மருத்துவரின் அறையில் இரு ஜீவன்கள் தங்கள் ஜீவனைக் கண்களில் தேக்கி மருத்துவர் கூறப் போகும் தகவலுக்காகக் காத்திருக்க, மருத்துவன் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து அமர்ந்திருந்தான். 

“என்ன டாக்டர்?” 

கையிலிருந்த ரிப்போர்ட்டை மேசை மீது வைத்தவன் முகத்தில் அப்பட்டமான குழப்பம், “யாரு சொன்னா உங்களுக்கு ப்ரெயின்ல ட்யூமர் இருக்குன்னு?” 

“ஏன் டாக்டர்?” 

“இல்ல, அவங்கள திரும்பவும் படிக்க அனுப்பலாம்ன்னு தான்,” சிரித்தான். 

“டாக்டர்?” 

“நல்லா இருக்கீங்க மிசஸ்.மோஹன். உங்க ட்யூமர் போனது… போனது தான். திரும்பவும் எல்லாம் வளரல. கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு நிம்மதியா வேலையப் பாருங்க..” 

மோகன் தம்பதியருக்கு எப்படி நன்றி கூறுவதென்று தெரியவில்லை. இதோ… இதே மருத்துவமனையில் தான் வேறு ஒரு நரம்பியல் நிபுணர் கூறினார், இருபத்தி ஒன்பது வருடங்கள் முன் வெட்டிப் போட்ட கட்டி மூளையில் மீண்டும் வந்து விட்டதாய். 

“உங்க வைஃப் பிழைக்கணும்னா… உடனே ஒரு மாசத்துக்குள்ள சர்ஜரி பண்ணனும். லேட்டானா கண்டிப்பா செத்துப் போயிடுவாங்க, அப்புறம் அழுது பிரயோஜனம் இல்ல.” என்று அந்த மருத்துவன் கூறவே, நடுங்கி நின்ற தம்பதியரை, “டாக்டர். பிரவீன் குமாரை ஒரு தரம் பார்த்துடுங்களேன்,” என்று இவர்கள் நண்பன் கூற இதோ இன்று இங்கு டாக்டர். பிரவீன் குமார், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் முன். 

நன்றி தெரிவித்த தம்பதியினர் சென்றதும் அவன் பார்வை கைக்கடிகாரத்தில். களைத்துப் போயிருந்தான். கண்களை கசக்கிக் கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தவன் மூளை மட்டும் களைப்பு என்றால் என்ன என்று கேட்டு நின்றது. 

அம்மா, அப்பா, அக்கா என்று சராசரி குடும்பம் அவனுடையது. சிறு வயதிலேயே அக்காவின் மூளையில் கட்டி. குடும்பம் பட்ட பாட்டை கண் கூடாய்ப் பார்த்த நாட்கள் அவை. அது பதித்த தடமாக இருக்கலாம், மூளையும் நரம்பு மண்டலத்தையும் பற்றிப் படித்து தேர்ச்சி பெற்றான். 

அவன் ராசியா இல்லை முயற்சியா தெரியவில்லை, அவன் தொட்டு, பிழைக்காத நபர் இன்று வரை இல்லை.  தலைக்கனம் என்றால் என்னவென்று தெரியாது. இனிமையான குணம். வலி உணர்ந்து வைத்தியம் செய்வான். பணத்தின் மேல் நாட்டமில்லை என்பதால் இருக்கலாம்! 

அவன் விருப்பம் எல்லாம் மருந்து, மருத்துவம் மற்றும் குடும்பம்! இதை தவிர அவனுக்கு எதிலுமே பற்றில்லை என்று கூறலாம். 

கையிலிருந்த ‘ஸ்மார்ட்’ கைக்கடிகாரம் ஒளிர்ந்தது. அதில் தெரிந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவன், கோட்டையும் ஸ்டெத்தையும் கையிலெடுத்துக் கொண்டு ‘சிஸ்டர்’ என்ற அழைப்போடே அவனுக்கான வார்டை நோக்கிச் சென்றான். 

அவன் வரவிற்காகவே தலையில் கட்டோடு காத்திருக்கும் கண்கள் அனேகம். அதில் பக்தியும் நன்றியுணர்ச்சியும் மண்டிக் கிடக்கும். எதிரில் இருக்கும் நோயாளிகளின் எல்லா வித உணர்ச்சிக்கும் அவன் கொடுக்கும் ஒரே பதில், அழகான புன்னகை. 

அவன், “சீக்கிரம் சரி ஆகிடும்,” என்று கூறி மென்மையாக கையில் தட்டி செல்லும் ஒற்றைச் செயல் பல உள்ளங்களை அமைதி படுத்தியுள்ளது. 

அறை விட்டால், கன்றிச் சிவந்து போகும் நிறம், பார்க்க பழையப் படங்களில் வரும் ரகுமான் சாயல். மென்மையான குரல். 

ரௌண்ட்ஸ் முடிந்தது. நேரம் மதியத்தைத் தாண்டி மாலையைத் தொட்டிருந்தது. பாவம் பார்த்து வயிற்றுக்கு வஞ்சம் வைக்காமல் உள்ளே ஒற்றை வெஜ்-சாண்ட்விச்சை இறக்கினான். மற்ற உயிரினங்களின் பாடு சகிக்க முடிவதில்லை அதனால், பால், மாமிசம் பிடிப்பதில்லை. 

உடல் ‘இன்று போதும் என்னை விட்டுவிடேன்’ என்று மெல்ல சப்தம் எழுப்பியது. அதற்குள்ளாக எல்லாம் கிளம்பி விட முடியாதே… ஒரு அறுவை சிகிச்சைக்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான். 

ஒரு முறை நெட்டி முறித்தவன் பார்வை அவன் முன்னிருந்த நோயாளியின் ரிப்போர்ட்டின் மீது. மூன்று மணி நேரம் தான். அதன் பின் சென்று விடலாம்’ என்று உடலுக்கு ஆறுதல் கூறினான் மருத்துவன். 

நோயாளிக்கு Stroke எனப்படும் பக்கவாதம். பக்கவாதம் பல காரணங்களால் ஏற்படும். இவருக்கு அடைப்பு!  தலைக்கு குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் தமனிகளில் ஒன்றான உறக்கநாடியில்(carotid artery) அடைப்பு இருக்கவே அதற்கு கரோடிட் எண்டார்டெரெக்டோமி (Carotid Endarterectomy Surgery) எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 

முன் கழுத்தில் துளையிட்டு உறக்கநாடியைத் திறந்து செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு மொத்தம் இரண்டு மணி நேரமே தேவைப்படும். அத்தனை கடினமான அறுவை சிகிச்சை  இல்லை என்றாலும், நோயாளியின் வயது எழுபத்தி எட்டு என்பதோடு அவருக்கு இதயக் கோளாறும் இருக்க, இது சற்று கடினமாக மாறிப் போனது. தவறாகிப் போனால் பக்கவாதம், மாரடைப்பு, இறப்பு என்று எது வேண்டுமானாலும் நிகழலாம். 

கண்கள் மூடி இரண்டு நிமிடங்கள் தன்னை அமைதிப் படுத்திக் கொண்டான். அறுவை சிகிச்சை அறையில் நின்றிருந்தவனுக்கு உடல் களைப்பு மறந்து போனது. நேரம் காலம் பார்க்க முடிவதில்லை மருத்துவனால். இஷ்டப் பட்டுச் செய்வதால் பிரவீனுக்கு இதில் கஷ்டம் இல்லை. 

அடுத்த மூன்று மணி நேரமும் மிகுந்த கவனத்தோடு பொறுமையாகச் சென்றது பிரவீனிற்கு. ஆனால் அவன் பொறுமை அமராவதிக்கு இல்லை. அமராவதி, பிரவீனின் தாய்! மணி ஏழைத் தொடவும், “டேய் குமாரு… பொண்ணு வீட்டுல இருக்கோம், இன்னும் எவ்வளவு நேரம் டா..?” கைப்பேசியில் அழைத்து விட்டார்.

அப்பா, கரிகாலன் இருக்கும் இடம் தெரியாது. மூத்தவள் சிவகாமி, பிரவீனைக் காட்டிலும் ஆறு வருடம் மூத்தவள். இன்று பத்து வயதில் ஒரு மகனும், ஏழு வதில் ஒரு மகளும் அவளுக்கு. 

“வந்துடுறேன் மா… இங்க இருந்து பக்கம் தான்” 

மருத்துவமனையில் தங்கும் வசதியிருக்க, அங்கேயே குளித்துக் கிளம்பிப் பெண் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறான்.  அம்மா, அப்பா, அக்கா, அக்கா பிள்ளைகள், சித்தி, சித்தப்பா என்று அவன் பக்கமிருந்து ஒரு பட்டாளமே அமர்ந்திருந்தது. 

திருமணம் பற்றிய பேச்சு எழுந்து சில மாதங்கள் ஆகிறது. அவனுக்கு ஏனோ அதிலெல்லாம் விருப்பம் வரவில்லை. அம்மா, அக்கா, சித்தியின் தொல்லை தாங்காமல் ஒரு வழியாய் வருடங்களுக்குப் பிறகு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான். 

அவனுக்கு இதயத்தில் நம்பிக்கை இல்லை… அவனைப் பொறுத்தவரை எல்லாமே மூளை சம்பந்தப்பட்டது. அதனால் தானோ என்னவோ ஆசை, பாசம், ரசனை, காதல், காமம் இப்படியான காரியங்களில் நேரத்தை வீணடிப்பதில்லை. 

பெண்ணைப் பார்க்க வேண்டும், காதல் வயப்பட வேண்டும், திருமணம் புரியவேண்டும், ஒன்றி ஓருயிர் ஈருடலாய் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லாததினாலோ என்னவோ ‘யாரையேனும் பாருங்கள்’ என்று விட்டு விட்டான்! 

‘பெண் பார்க்கத் தானே… இதற்கு எதற்கு இத்தனை ஆட்கள்?’ –  இது பிரவீனின் எண்ணம். 

தனியே எங்கேனும் பார்த்துப் பேசினால் போதும் என்று அவன் நினைக்க அமராவதிக்கு அது போதவில்லை. 

“என்ன பிரவீன் லேட்?” – சித்தி 

“வேற ஒரு டாக்டர் பண்ண வேண்டிய சர்ஜரி சித்தி… அவரால முடியல” 

இந்த சித்தி என்பவர், அம்பிகா. அம்மாவின் இரத்த பந்தம்! அம்பிகா, அமராவதியின் இரட்டை என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். இருவரும் வேறுபாடுள்ள இரட்டையர் (Fraternal twin) வகை. ஒருவர் கிழக்கு என்றால் மற்றவர் மேற்கு! இரயில் தண்டவாளம் போல்… சேர்ந்தே இருப்பார்கள்.. ஆனால் ஒரு விடயத்திலும் ஒரே கொள்கை இருந்ததில்லை. 

பார்க்கவும் சரி பழகவும் சரி அத்தனை இனிமை அம்பிகாவிடம். அம்பிகாவின் கணவன் தான் திருநாவுக்கரசு, மாதவனின் தாய் மாமன், பாக்கிய லக்ஷ்மியின் ஒரே அண்ணன்!

தாய், வேறுபாடுள்ள இரட்டை என்பதாலோ என்னவோ… அம்பிகாவிற்குப் பிறந்ததும் வேறுபாடுள்ள இரட்டையர். அம்பிகாவின் மூத்த மகன், வினோத் குமார், ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருக்க, அவரின் மகள் அர்ச்சனா, அருங்காட்சியகவியலை பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கிறாள். 

கணவன்(திருநாவுக்கரசு) அவ்வப்போது வெளியூர் சென்று வர, அம்பிகாவின் தனிமையின் பொழுதெல்லாம் அமராவதியோடு தான். அதனால் பிரவீன் அவர் பெறாத மகன்! அவனுக்குச் சித்தி என்றால் என்றுமே ஸ்பெஷல் தான். அம்மாவை எதிர்த்துக் கூட பேசுவான். சித்தியிடம் மண்டியிட்டு விடுவான்… அவருக்கும் அப்படித்தான்! பிரவீன் என்றுமே அவருக்கு மற்ற பிள்ளைகளை விட ஒரு படி மேல்! 

“ஆப்பரேஷன் சக்சஸ் தானே?”- அம்பிகா 

“என்ன சித்தி கேள்வி? உங்கப் பையன் கிட்ட இப்படி கேக்கலாமா?” 

இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். அம்பிகாவின் புன்னகையில் சற்றுப் பெருமையும் எட்டிப் பார்த்தது உண்மை.

தேநீர், பலகார சம்பிரதாயம் முடிய, பெண்ணின் படிப்பு, வேலை என்று நேர்முக காணல் ஆரம்பமாயிருக்க, மருத்துவரின் அம்மா, அமராவதி அவர் கெத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் சபையில். 

“என்ன பண்றா பொண்ணு?” 

“ஐ.ஏ.ஸ். ட்ரை பண்றேன்.” 

பெண் மாவட்ட ஆட்சியர் ஆகும் நோக்கத்தோடு யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வை முடித்து விட்டு பெர்சனாலிட்டி தேர்வுக்குக் காத்திருக்க… மாப்பிள்ளையின் தாய்க்கு அது புரிந்ததாகத் தெரியவில்லை! அவருக்கு அவள் அடக்கமில்லாமல் பதில் கூறியது பிடித்தமில்லை போலும்… முகம் சுளித்தார், 

“படிச்ச பொண்ணுங்கிறதால சட்டுன்னு சபையில பேசிடுற!! போகட்டும்! படிச்ச பொண்ணு தான் வேணும்னு சொல்லிட்டான். படிக்கிறத படிச்சு முடி! ஆனா வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். எங்க அந்தஸ்துக்கு பொண்ணு வேலைக்குப் போறது சரி வராது. வீட்ட பொறுப்பா பாத்துப்பியா?” 

பெண் அவள் அப்பாவைப் பார்த்தாள். கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை என்றதும் அமராவதிக்குப் பிடிக்கவில்லை. முகத்தில் கடுமை ஏறியது. 

“நான் கேட்டா எதுக்கு மா அங்க பார்க்கிற? வீட்ட பொறுப்பா பார்த்துப்பியா?”  

‘பாத்துக்காட்டி ஓட அது என்ன நாய் குட்டியா?’ வாய் துருதுருத்தாலும், “பாத்துப்பேன்…” என்றாள் சுரத்தையே இல்லாமல். 

படித்திருக்க வேண்டுமாம்… வேலைக்குப் போக கூடாதாம்! சபையில் பேசக் கூடாதாம்! ஆனால் பதில் உரைக்க வேண்டுமாம்! ‘லூசா இந்தப் பொம்பளை?’ – இது பெண். 

“ரொக்கம் எவ்வளவு? நகை எவ்வளவு போடுவீங்க?” கேள்விகளும் நின்ற பாடில்லை. “அம்மா… ம்ப்ச்!” என்று கடுகடுத்தவனுக்கு கேள்விகளும் பிடிக்கவில்லை, அம்மாவின் கோரிக்கைகளும் பிடிக்கவில்லை. ஆனாலும் வெளி ஆட்கள் முன் அம்மாவிடம் என்ன கூற முடியும்? 

‘இது எதற்காம்? இதில் அவர்கள் அந்தஸ்து அடி வாங்காதாமா?’ – இது திருநாவுக்கரசு. திருநாவுக்கரசு அம்பிகாவை முறைத்து தள்ளிக் கொண்டிருந்தார். அவருக்கு வரக் கொஞ்சம் கூட விருப்பமில்லை. “ஏன் மா… எதுவுமே பைனலைஸ் ஆகல. இதுக்கு எதுக்கு நான்?” என்று நழுவப் பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை! “பிரவீனும் நம்ம மகன் தான்!” என்று மனைவி அவர் வாயை அடைத்து விட்டார்! 

அமராவதியின் கேள்விக் கணைகள் நின்ற பாடில்லை! பெண் வீட்டார் நெளிந்தனர்! பெண்ணிற்கு எரிச்சல் எட்டிப் பார்த்தது. மாப்பிள்ளை பார்க்க இவ்வளவு மென்மையாகவும் வசீகரமாகவும் இல்லை என்றால், போங்கடா என்றிருப்பாள் வருங்கால கலெக்டர். 

அம்மா இப்படியிருக்க, மகன் வாய் திறந்தான் இல்லை. 

பெண் பேசினாள். “கலக்டர் ஆகணும் எனக்கு! வேலைய விடறதுக்காக நான் ராப்பகலா படிக்கல. அதுக்காக குடும்பப் பொறுப்பை தட்டிக் கழிக்க மாட்டேன். என் கடமையை நான் கண்டிப்பா செய்வேன்,” பொறுமையாக பெண் கூற, அமராவதி முருங்கை மரம் ஏற, பெண்ணின் பொறுமை கரைய, “நான் அவர்ட்ட தனியாப் பேசணும்.” என்றாள். 

“இவ்வளவு பேர் இருக்க சபையில வச்சு பையன் கூட தனியாப் பேசணும்ன்னு சொன்னா என்ன அர்த்தம்?” அம்மா குரல் எழுப்ப, 

“என்ன தப்பா கேட்டுட்டேன்? முதல்ல பேசினா தானே பிடிக்குதான்னு தெரியும். பேசி பிடிச்சா தானே அடுத்து பேசணும்…” சத்தம் எல்லாம் எழுப்பவில்லை. தன்மையாக தான் அவள் பக்கம் நியாயமென்று தோன்றிய கோரிக்கையை பெண் முன் வைத்தாள். 

அம்மா ‘அதெல்லாம் முடியாது’ என்பது போல் குரல் எழுப்பினார். அவர் பேச, பெண் பதில் கொடுக்கவென பேச்சு நின்றபாடில்லை. 

அதுவரை சுவரையும், தரையும், சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து விட… அவனும் பேசத் தான் எழுந்து கொள்கிறான் என்று அனைவரும் நினைக்க… 

“அப்போ நாங்க கிளம்பறோம். இவங்க எங்க வீட்டுக்கு சரிபட்டு வர மாட்டாங்க. அவங்கள தப்புன்னு சொல்லலை. எங்க வீட்டுக்கு ஒத்துப் போக மாட்டாங்கன்னு சொல்றேன். எனக்கு ரொம்பவும் பொறுப்பான வேலை. அதிகப்படியான களைப்போட வீட்டுக்கு வருவேன்… அப்போ எனக்கு வீட்டுல நிம்மதி வேணும். அதனால கூடக்கூடப் பேசற பொண்ண என்னால கல்யாணம் பண்ணிட்டு அவஸ்தைப் பட முடியாது. எனக்கு சத்தமா கூடக் கூட பேசறது எல்லாம் சரிவராது.” 

பெண்ணைப் பார்த்தவன், “உங்களுக்கும் சத்தம் போடுற எங்க அம்மாவையும், அமைதியாப் போற என்னையும் கண்டிப்பா ஹாண்டில் பண்ண முடியாது. உங்களுக்கும் வாழ்க்கை ஒரு போராட்டத்தோட கஷ்டமா போயிடும்! சிரமத்துக்கு மன்னிக்கணும்,” என்றவன் வெளியே கிளம்பி விட்டான். 

“தம்பி…” பின்னோடு போக இருந்த அப்பாவை பெண் தடுத்தாள்.  “அப்பா அந்த அம்மாக்கு மருமக வேண்டாம். வரதட்சனையோட வர ரோபோ வேலைக்காரி வேணும்! அவருக்கு வீட்டோட இருக்க அமைதியான பொண்ணு வேணும்ன்னு பாக்கிறார். அவர் சொல்றது சரி தான். எனக்கு அங்க ஒத்து வராது! அவங்களே வான்னு கூப்பிட்டாலும், எனக்கு அந்த வீடு வேண்டாம் பா. வேலியில இருக்க ஓணான் அங்கேயே இருக்கட்டும்,”  என்று அவள் உள்ளே சென்றுவிட… 

“என்ன டா?” என்றார் சித்தி இயலாமையோடு. 

“ப்ச்… சித்தி. விடுங்க!” என்றான், நொந்து போனவனாய்.

“இந்த காலத்துல அப்படி ஒருத்திய இவன் பார்க்க போறதும் இல்ல… இவனுக்கு கல்யாணம் ஆகப் போறதும் இல்ல,” இது அப்பா! 

“உன் அம்மாக்கு தான் உலகம் தெரியலை, உனக்கு என்ன டா? படிச்ச பொண்ணு பெரியவங்க சொன்னாங்கன்னு எதுக்கும் தலை ஆட்டிட்டே நிப்பாளா? அவ ஒண்ணும் தப்பா கேக்கலியே… எல்லாம் இவ தான் ஓவராப் பேசிட்டா! நல்ல அழகான, தைரியமான பொண்ணு! போடா பிரவீன்!” அம்பிகா திட்டிக் கொண்டே வந்தார்.

“அவங்க கோபம் நியாயமானது தான்! இருந்தாலும் அம்மாவ நம்மளால மாத்த முடியாது. அப்படி இருக்கும் போது   சட்டுன்னு கோபம் வர பொண்ணைக் கல்யாணம் பண்ணி காலம் பூரா ரெண்டு பேரும் அவஸ்தைப் பட முடியாது. எனக்கு அமைதியா அனுசரிச்சு மரியாதை தெரிஞ்சு குடும்பத்துக்கு ஒத்துப் போற பொண்ணு தான் சரிப்படும்!” 

 “குனிஞ்ச தல நிமிராம, சொல்லறதுக்கு எல்லாம் தலையாட்டுற மாதிரி படிச்ச பொண்ண ஆடர் குடுத்து தான் செய்யணும்!” என்று  அக்கா கூறவுமே ‘ஏன் அப்படி ஒரு பெண் கிடைக்க மாட்டாளா என்ன?’ அவன் கேட்டுக் கொண்டான்! அவன் கேள்விக்குப் பதிலாய் ‘அப்படி ஒரு பெண்’ அவன் கண் முன் வந்து நின்றாள். அவள் குனிந்த தலை நிமிராமல், அவள் அண்ணன் கூறியதற்கெல்லாம், “ம்ம்.. சரி ண்ணா” என்றாள்.

“கண்ணுக்கு மையிடாதே,” என்றான் இவன்… அவள், “சரி,” என்றாள்.

“இதை சாப்பிடு,” என்றான் இவன், அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று முகம் காட்டினாலும் “சரி,” என்று வாயில் போட்டுக் கொண்டாள்.

ஆண்கள் அவள் முன் நின்றிருந்தாலும், அவளோ ஒருவரையும் கவனிக்காமல், குனிந்த தலை நிமிராமல் அண்ணன் அருகிலேயே நின்று கொண்டிருந்தாள். 

அவள் தான்! அவள் மட்டும் தான் அவனுக்கு, அவன் வாழ்விற்கு சரியாக வருவாள் என்று புத்தி எடுத்துக் கொடுத்தது. 

“அம்மா எனக்கு இனி மேல் நீங்க பொண்ணு பாக்க வேண்டாம். நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ண நான் காட்டுறேன். நீங்க கல்யாணம் பண்ணி வைங்க. அவ படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகும், அதுவரைக்கும் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க!” என்றவனை மற்ற ஜீவன்கள் அதிர்ச்சி குறையாமல் பார்த்தனர். 

அவன் சிந்தனையை நிரப்பிய சாந்த சொரூபி… அமைதியின் திரு உருவம்… எதிர்த்துப் பேசத் தெரியாத பூமாதேவி… அப்படி எல்லாம் அவர்கள் குடும்பத்திற்கு செட் ஆக மாட்டாள் என்று பிரவீனிடம் யார் கூறுவது?! 

அவன், ‘தலை நிமிராத அப்பாவி’ என்று நினைப்பவள் அடிப்பாவி ரேஞ்சிற்கு ஒருவனை சைட் அடிப்பதை யார் அவனுக்குக் காட்டுவது?

error: Content is protected !!
Scroll to Top