தேர்வை முடித்து வெளி வரும் வரையிலுமே வேறு எதுவும் சிந்தனையிலில்லை என்றாலும் வெளியே செல்லும் வேளை, கருவிழிகள் அங்குமிங்கும் உருளத்தான் செய்தன.
தலை திருப்பி நாலா திசையும் தேடியும் பார்த்தாள். தேடிய நபர், வார நாள் என்பதால் அவன் அலுவலக வேலையில் மூழ்கிப் போயிருந்தான். அவளுக்கு முடிவு அறிவிக்கப்படும் முன்னே, அவன் கட்டளையின் பெயரில் எபிக்கு தான் அறிவிக்கப்பட்டது. எதிர்பார்த்திருப்பான் போலும், புன்னகைத்துக் கொண்டான்.
“ரெண்டு நாள்ல ஃபீஸ் டீடெயில்ஸ் மெயில் பண்றதா சொல்லிடுங்க. நெக்ஸ்ட் பேட்ச்ல ஜாயின் பண்ண சொல்லிட்டு, ஜாயினிங் அன்னைக்கு ஃபீஸ் பே பண்ணினா போதும்ன்னு சொல்லிடுங்க.”
அதுவரையிலும் இருந்த நுகத்தைக் கழுத்திலிருந்து இறக்கியது போல் இருக்க, கண்கள் மூடி அவன் இருக்கையில் சாய்ந்து கொண்டான். முன்தினமே கேள்விகளை அவன் பார்த்தான். சற்றுக் கடினம் தான் என்று எண்ணிக் கொண்டாலும், அதில் தலையிடவில்லை. ‘பார்ப்போம்’ என்று விட்டுவிட்டான்.
நன்றாகப் படித்து நல்ல வேலையில் அமர்வாள் என்று தோணியது. அவள் முகம் இப்பொழுது எப்படி இருக்கும் என்று எண்ணியவன் முகத்திலும் மெல்லிய புன்னகை. பார்க்க ஆசை தான்! ஆனால் ஆசையை அடக்கவில்லை என்றால் அது எங்கு கொண்டு அவனை விடும் என்று அவனுக்குத் தெரியாதா? அதனால் ஆசையை ஒரு கோப்பை குளிர்ந்த நீர் பருகி, அவன் மடிக்கணினிக்குள் அடக்கிக் கொண்டான்.
அன்றும் சரி அதன் பின் அவள் கணினி மையம் வந்த போதும் சரி அவன் தள்ளித்தான் நின்று கொண்டான். பார்க்க விழையவில்லை. பார்க்க வேண்டும் என்ற ஆசை அவ்வப்போது நெஞ்சை நிறைத்தாலும் எண்ணத்தை ஒதுக்கி வைத்தான். நாட்களோடு அவளும் மனதை விட்டுச் சென்று விடுவாள் என்று தப்புக் கணக்கு போட்டான்.
அவனை முற்றிலும் ஆட்கொள்ள அடுத்த மாதம் ப்ராஜெக்டில் முக்கிய வெளியீடு ஒன்றிருக்க, அவன் உலகம் அவன் மடிக்கணினிக்குள் அடங்கிப் போக, அவள் உலகம் கல்லூரியும், கணினி மையமும் என்றானது.
கற்றுக் கொள்ள அதிகம் இருந்தது. ஆர்வம் இருந்தது. கற்றுக் கொடுக்க ஆட்கள் இருந்தனர். கற்றதை செய்து பார்க்க மென்பொருளோடு கணினி இருந்தது. வேறு என்ன வேண்டும்? பெண் வார தினங்களில் நான்கு முதல் ஏழு வரை அங்கு தான் சுற்றம் மறந்து கணினி முன் ஆர்வக் கடலில் நீந்திக் கொண்டிருந்தாள்.
மாதங்கள் இரண்டு சென்ற பின்னும் எபி அவள் கண்களில் படவில்லை. வந்த புதிதில் விழி அலைபாய்ந்தது உண்மைதான் என்றாலும் நாளடைவில் ‘அவன் அங்கு வேலையில் இல்லை’ என்று எண்ணிக் கொண்டு தேடுவதை நிறுத்தியிருந்தாள். இப்படியே போனால் அவன் மேல் உள்ள ஈர்ப்பும் காணாமல் போய் விடும் என்றெண்ணினாள்!
சனிக்கிழமைகளில் எப்பொழுதும் போல் எபி வந்தாலும் அம்மாவோடு அலுவலக வேலை என்று அதில் மட்டுமே கவனம் செலுத்தினான். மற்றபடி கோர்ஸ் முடிக்கும் தறுவாயிலிருப்பவர்களுக்கு விரிவுரை (கெஸ்ட் லெக்சர்) கொடுப்பான்.
அன்று வெள்ளிக் கிழமை, ப்ராஜெக்ட் டெலிவரி முடிந்திருக்க, அதிக வேலையில்லை என்பதால் நேரமே வந்தவன் நேரே மையம் வந்தான். முகத்தில் களைப்பு அப்பியிருந்தது.
“என்ன எபி ரொம்ப பிசியா?” வரவேற்பறை தாண்டும் வேளை, முதுகின் பின் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே திரும்பவும், எதிரில் கைப்பேசியை பார்த்துக் கொண்டு வந்தவள் மேல் இடித்து நின்றான். இருவரும் சுதாரித்தாலும் கைப்பேசியை அவள் தவற விட, விழப்போன கைப்பேசியை பிடித்திருந்தான்.
பார்க்கும் பொழுதெல்லாம் முட்டிக் கொள்ள வேண்டும் என்றிருக்கும் போல அவர்கள் எழுத்தில். மீண்டும் மாதங்கள் பின் கண்கள் சந்தித்தன.
அவனைப் பார்த்ததும் கண்கள் விரிந்து மின்ன, விழிகளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு முகம் காட்டிக் கொடுத்தது அவளின் இன்ப அதிர்வை.
எதிர்பாரா சந்திப்பால் சிலையென நின்றிருந்தவன் இதயம் வேகமெடுத்தது. “விழி” என்ற முணுமுணுப்பு அவளுக்கு நன்றாகவே கேட்டது. ஏனோ இருவருக்குமே நகர விருப்பமில்லை.
காணுவதற்கரிய காட்சியைப் புறம் தள்ள மனம் விரும்புவதில்லை. அவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். உயிர் உருகி ஊனோடு கலக்க நான்கு விழிகளும் கலந்து நின்றன. இதய ஒலியே நாதமாக மாற இமைக்க மறந்து நின்றது சில வினாடிகளே…
இது வெறும் ஈர்ப்பு தானா? அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஒரு வருடமில்லை… ஒரு ஜென்மம் கழித்துப் பார்த்தாலும் அவன் பதிக்கும் தடம் ஒருவராலும் பதிக்க முடியாது என்பது அவளுக்கு திண்ணம்.
“அலர்…”
சத்தம் வந்த திசை நோக்கின நான்கு விழிகளும். மாதவன் கையசைத்துக் கொண்டிருந்தான் வரவேற்பறையில். இவன் இவளைப் பார்த்து நெற்றி சுருக்கவும், “அண்ணா” என்றாள் தன்னிச்சையாக. முகம் தெளியவில்லை என்றதும், “பெரியப்பா பையன்” என்றாள்.
கைப்பேசியை கொடுத்தவன் சின்ன தலையசைப்போடு சென்று விட்டான். அவன் சென்று விட்டான்… அவளால் நகர முடியவில்லை. பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. சின்ன சுணக்கம்… அவன் வம்பும் செய்யவில்லை, நமுட்டு சிரிப்பும் சிரிக்கவில்லை. ஏனாம்? ஏதோ உள்ளுக்குள் குடைந்தது.
அவனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது. தனக்குத் தான் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை! பெயர் கூட…!
“அலர்…” மீண்டும் மாதவன் அழைக்க, அண்ணனை நோக்கிச் சென்றவள் முகத்தில் தெளிவில்லை. நான்கு அடி எடுத்து வைத்தவள் நின்று திரும்பிப் பார்த்தாள். அவன் அறையின் மூலையில் கைப்பேசியில் யாரோடோ பேசிக் கொண்டிருந்தான். பார்வை இவளைத் தழுவி நின்றிருந்தது.
மாதவன் முன் வந்து நின்றவள் மனம் முழுவதும் ‘அவன் ஏன் தன்னை அன்னியப் பார்வை பார்க்கின்றான்’ என்பது தான். ‘சிரிக்க கூட மாட்டானாமா?’ ‘இத்தனை நாள் எங்கு போனானாம்?’ கோபமாக வந்தது.
“என்ன டா எப்பிடியோ இருக்க?” வாடிய முகத்தை மாதவன் கண்டு கொண்டான்.
“ரொம்ப டையர்ட் ண்ணா…”
“வாரம் பூரா இங்கேயே கிடக்காத. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வா. சரியா?”
“ம்ம் சரி…ண்ணா. என்ன ண்ணா… இன்னைக்கு? எனக்கு நாளைக்கு க்ளாஸ் இருக்கே”
“அதுக்கு தான் பார்த்துட்டு போக வந்தேன். இனி மேல் எல்லா வாரமும் இப்படித்தான்! சாப்பிடப் போலாமா? பசிக்குது…”
முன்பு போல் அலர்விழியால் மாதவனோடு வீட்டிற்குச் செல்ல முடிவதில்லை. அதனால் மாதவனின் புது முடிவிது!
“நீ இந்நேரம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கண்ணா?”
“வெள்ளிக் கிழமன்னு சீக்கிரம் வந்து, ஃப்ரெண்சோட சுத்திட்டு, க்ரிக்கெட் விளையாடிட்டு வரேன். சொல்லு படிப்பு எப்பிடிப் போகுது?”
“நல்லாப் போகுது! வேல பிடிச்சிருக்கா? உன் திறமைக்கு வேற தேடுண்ணா.”
“வினோ ஆஸ்ட்ரேலியா வர சொல்லிக் கூப்பிடறான். நானும் போலாம்ன்னு பாக்கறேன்.”
பேசிக்கொண்டே சென்றனர். ஏதோ ஒரு காலத்தில் ஒன்றாய் உண்டு, ஒன்றாய் புரண்டு, ஒன்றாய் அடி வாங்கியிருந்தாலும், இடையே ஏழெட்டு வருடப் பிரிவு. ஆனால் இன்று அந்தப் பிரிவு ஒன்றுமில்லாமலே போனது.
சில உறவுகள் அப்படித்தான், அதிகம் ஆழம் கொண்டது. என்ன தேடினாலும் காரணங்கள் கண்டறிய முடிவதில்லை. எப்படிப் பிரித்தாலும், இதயங்கள் பிரிவதில்லை. அலர்விழி வாழ்வில் இருக்கும் மாதவனுக்கு மட்டுமல்ல உள்ளே மெல்ல நுழைந்து கொண்டிருக்கும் மற்றவனுக்கும் இது பொருந்தும்.
அந்த வாரம் என்னனென்ன நடந்தது, அவள் தேவைகள், அவள் விடுதி, கல்லூரிப் படிப்பு, அவள் ரகளைகள் என்று உண்ணும் வேளையில் அனைத்தையும் கேட்டுக் கொண்டான். இப்படி சிரத்தை எடுத்துக் கொள்பவனை தோழனாய், அண்ணனாய், குட்டி வயது அப்பாவாய் நினைப்பதில் தவறில்லையே.
அவனுக்கும் அப்படித் தானே… அலர்விழியை அவனால் சித்தப்பா மகளாய் பார்க்க முடிவதில்லை. அவனுக்கே அவனுக்கு மட்டும் சொந்தமான அவனின் செல்ல தங்கையாகிப் போனாள். உண்டு முடித்ததும் விடுதியில் விட்டுச் சென்றான்.
விடுதியில் சிறிது நேரம் அரட்டைக் கச்சேரி, தொலைக்காட்சி, சௌமி என்று நேரம் கடத்திவிட்டு மெத்தையில் விழுந்தவள் எண்ணம் முழுவதும் எபி. ‘அவனைப் பற்றித் தெரிந்திருந்தால் கூட அவனையே மனம் சுற்றாதோ? அவனுக்கு சென்டரில் என்ன வேலை? இத்தனை நாள் எங்கு சென்றான்? விடுப்பில் இருந்திருப்பானோ? நாளை வருவானா? பார்க்க முடியுமா?’ பல நாட்களுக்குப் பின் மீண்டும் மனம் அளவில்லாமல் அலைபாய்ந்தது.
முதல் முறை ஒரு சனிக்கிழமை தானே மையத்தில் பார்த்தாள். அதனால் நாளை கண்டிப்பாக அவன் வருவான் என்று தோன்றவுமே மனம் சற்று அமைதிபட்டது.
‘நாளைக்கு மட்டும் பார்த்துட்டு, அவன் என்னைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்சதும் அவனை மறந்திடணும்! அதுக்கப்புறம் அவன நினைக்கவே கூடாது.’ கங்கணம் கட்டிக் கொண்டவள் புரண்டு கொண்டே இருந்தாளே ஒழிய தூங்கினாளில்லை.
உறக்கம் அவளுக்கு மட்டும் அல்ல… அவள் நினைவாக இருந்தவனுக்கும் காத தூரம் சென்றிருந்தது.
அலுவலகத்தில் அவனைக் கட்டிப் போடும் அளவிற்கு வேலையிருந்தாலும் அலர்விழியை அவன் பார்ப்பதைத் தவிர்த்தான் என்பது தான் உண்மை. அதனாலேயே மையத்திற்கு வந்த போதும் அவள் இருந்த திசைப் பக்கம் போக முற்படவில்லை.
வார நாள் என்பதால் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. அத்தனை அருகில் அவளைப் பார்த்தவனுக்கோ, அடங்கியிருந்த தெளிந்த நீரில் கல்லைப் போட்டது போன்றாகி விட்டது. இன்று ஒட்டு மொத்த களைப்பிலிருந்தவனுக்கு கவனம் எதிலும் இல்லை. அவள் கண்களிலிருந்த களைப்பு தான் அவன் கவனத்தில் பதிந்தது.
‘எதுக்கு இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்றா? உடம்ப கெடுத்துப்பா போல இருக்கே’ என்று நினைத்தவன், ‘தள்ளி நின்னே அவ மேல கவனம் வைக்கணும்.’ என்ற முடிவெடுத்து கண் மூடினான்.
கண்கள் மூடிய மறு நொடி நித்திரை வயப்படுபவனுக்கு நித்திரை வர மாட்டேன் என்று படுத்தி எடுத்தது.
பார்க்கக்கூடாது என்று முடிவெடுப்பதும்… முடிவை மறந்து பார்க்கத் தவிப்பதும்… பார்த்ததும் தன்னை மறப்பதும்… பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இதயம் துடிப்பதும்… தூங்க முடியாமல் புரண்டு கொண்டே இருப்பதும்… காதல் மனதின் முதல் அறிகுறியாமே?
அறிகுறி இருபக்கமும் கொழுந்து விட்டு எரிகிறது என்பது அவர்கள் இருவருமே விரும்பாத உண்மை!
தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
தள்ளி போக நினைக்கும் வேளை மோதி நிற்பதும், ஒன்றி நிற்க நினைக்கையில் தள்ளிப் போவதும் இயற்கையின் நியதி போலும்! அந்த நியதி இவர்களுக்கும் சாலப் பொருந்தும்!